கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட டாப்–10 கார்கள்!

அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட டாப்–10 கார்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட டாப்–10 கார்கள்

இதையெல்லாம் அமெரிக்கச் சாலைகளில் ஓட்டக் கூடாது!

நீங்கள் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’, ‘டெத் ரேஸ்’ போன்ற ரேஸ் ஹாலிவுட் படங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படி தடை செய்யப்பட்ட ஸ்ட்ரீட் ரேஸ் போட்டிகளைத் தாண்டி, தடை செய்யப்பட்ட கார்களும் உலகில் உண்டு. பொதுவாக, கார்கள் சாலையில் ஓட்டத் தடை செய்யப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதிகப்படியான எக்ஸாஸ்ட் சத்தம், ஓவரான பவர், தேவையில்லாமல் பொருத்தப்பட்ட டர்போ சார்ஜர், பொருத்தமில்லாத எடை (கம்மியாகவும் இருக்கக் கூடாது / குறைவான எடையும் இருக்கக் கூடாது), பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் உருவாக்கப்பட்டது, பாதசாரிகளைப் பயமுறுத்தும் டாப் ஸ்பீடு என்று பல வகைகளைக் காரணம் காட்டித் தடை செய்யப்படுவதுண்டு. அவை நிச்சயம் சூப்பர் கார்களாகத்தான் இருக்கும். அப்படி அமெரிக்காவின் NHTSA (The National Highway Traffic Safety Administration) அமைப்பின் மூலம், சாலைகளில் ஓட்டத் தடை செய்யப்பட்ட மோசமான கார்களில் முக்கியமான சூப்பர் கார்கள் இவை.

 Lamborghini Sesto Elemento
Lamborghini Sesto Elemento

லம்போகினி செஸ்ட்டோ எலிமென்ட்டோ

Lamborghini Sesto Elemento

மிக மிக எடை குறைந்த காரணத்துக்காக இது தடை செய்யப்பட்டிருக்கிறது. லேசான எடை கொண்ட கார்பன் ஃபைபர்களாலும், தேங்காய் நார்களாலும் உருவாக்கப்பட்டதால், இதைச் சாலையில் ஓட்டத் தடை செய்திருக்கிறது அமெரிக்க அரசு. இந்த காரைச் செல்லமாக ‘Sixth Element’ என்கிறார்கள். இதன் 360 கிமீ டாப் ஸ்பீடும் இன்னொரு காரணம். இதைச் சாலையில் ஓட்டினால்… டிரைவர் மற்றும் பயணிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால் இதைச் சாலையில் ஓட்டத் தடா!

TVR Sagaris
TVR Sagaris

டிவிஆர் சகாரிஸ்

TVR Sagaris

பிரிட்டன் நாட்டின் டாப் மோஸ்ட் வான்டட் மற்றும் தடை செய்யப்பட்ட கார் இந்த சகாரிஸ். இதில் 400bhp பவர் இருக்கிறது. டிவிஆர் நிறுவனத்துக்குப் பெயர் பெற்றுக் கொடுத்த இந்த ஸ்போர்ட்ஸ் காரைத் தடை செய்ததற்கு முக்கியக் காரணம் – இதன் பாதுகாப்பு வசதிகள். போதுமான பாதுகாப்பு வசதிகள்… முக்கியமாக காற்றுப்பைகள் தேவையான அளவு இல்லாதது போன்றவற்றால் இதைச் சாலையில் ஓட்டத் தடை செய்திருக்கிறார்கள். 0–60 கிமீ–யை வெறும் 3.5 விநாடிகளில் கடக்கும் இதன் கன்னாபின்னா ஆக்ஸிலரேஷனும், 2,500 பவுண்டுகளுக்குள் (1,100 Kg) குறைந்த எடை கொண்ட இதன் கட்டுமானமும் தடாவுக்கு முக்கியக் காரணங்கள்.

TVR Tuscan
TVR Tuscan

டிவிஆர் டஸ்கன்

TVR Tuscan

நீங்கள் ‘Sword Fish’ ஹாலிவுட் படம் பார்த்திருந்தீர்கள் என்றால்… டஸ்கனைப் பற்றித் தெரிந்திருக்கும். டிவிஆர் நிறுவன கார்களை 1996 முதல் 2006 வரை தடை செய்திருந்தார்கள் அமெரிக்காவில். இதன் எக்குத்தப்பான ரேட் ஆஃப் ஆக்ஸிலரேஷன், காற்றுப்பைகள் இல்லாதது, ஏபிஎஸ் கூட இல்லாமல் இதை ரெடி செய்திருப்பது போன்றவையும் டஸ்கனை சாலையில் ஓட்ட முடியாததற்கு முக்கியக் காரணங்கள். அமெரிக்காவின் NHTSA (The National Highway Traffic Safety Administration) அமைப்பின் மூலம் தடை செய்யப்பட்ட முக்கியமான கார்களில் டஸ்கனும் ஒன்று.

Lotus Elise Series 1
Lotus Elise Series 1

லோட்டஸ் எலைஸ் சீரிஸ்

Lotus Elise Series 1

லோட்டஸ் நிறுவனத்தின் ஏதாவது ஒரு தயாரிப்பு மாடலைத் தடை செய்துவிடும் NHTSA. அப்படி ஒரு மாடல்தான் இந்த எலைஸ் சீரிஸ் 1 மாடல் கார்கள். முக்கியக் காரணம், இதன் எடை 1,600 பவுண்டுகூட இல்லாதது. அதாவது, 725 கிலோவைவிடக் குறைவு. நம் ஊர் ஆல்ட்டோவின் எடைக்கு நிகரான ஒரு சூப்பர் காரை நினைத்துப் பாருங்கள். நெடுஞ்சாலையில் 3 இலக்க வேகங்களில் இதன் நிலைத்தன்மை சுமார் ரகம் என்று கருதியது NHTSA. மேலும் இதில் ரூஃப் மற்றும் விண்டோக்களும் இல்லாதது இன்னும் சில முக்கியக் காரணங்கள்.

பகானி ஹுயேரா ஆர்
பகானி ஹுயேரா ஆர்

பகானி ஹுயேரா ஆர்

Pagani Huayra R

2014–ல் லாஞ்ச் செய்யப்பட்டது இது. வேர்ல்டு க்ளாஸ் சூப்பர் கார்களில் இந்த பகானி ஹுயேரா R-க்கு முக்கிய இடமுண்டு. இதன் ஸ்டன்னிங்கான டிசைன் எல்லோருக்கும் பிடித்தாலும், இதன் பேய் வேகம், சாலைப் பாதுகாப்புக்கு எதிரியாகக் கருதப்படுகிறது. இதன் 6,000 சிசி கொண்ட V12 இன்ஜினின் பவர் 850bhp. இதன் டாப் ஸ்பீடு 248 mph. அதாவது, சுமார் 399.9 கிமீ. இதுவும் ஒரு அண்டர் வெயிட் கார்தான். 2,314 LBS… அதாவது சுமார் 1,049 கிலோ எடைதான் இந்த சூப்பர் காருக்கு. காற்றுப் பை கைடு லைன்களுடன் ஒத்து வராததால், இதைச் சாலையில் ஓட்டத் தடை செய்துவிட்டது NHTSA.

மெக்லாரன் 

P1 GT-R
மெக்லாரன் P1 GT-R

மெக்லாரன்

P1 GT-R

ட்ராக்குக்காகவே ஒரு பேய்த்தனமான காரை ரெடி செய்தது பிரிட்டிஷ் ஆட்டோ நிறுவனமான மெக்லாரன். அதுதான் இந்த P1 GT-R. ஃபெராரியில் FXX K என்றொரு சூப்பர் கார் உண்டு. அதற்குப் போட்டியாகத்தான் மெக்லாரன் இதை லாஞ்ச் செய்தது. இதில் 3.8 லி ட்வின் டர்போ இன்ஜின் இருக்கிறது. இதன் ஏரோ டைனமிக் முயற்சியில் கொஞ்சம் முன்னேற்றம் கண்டாலும், எடையில் சொதப்பியது இது. இந்த P1 GT-R ஸ்போர்ட்ஸ் காரை ட்ராக்கில் ஓட்டத் தாராளமாக அனுமதி கிடைக்கும். மொத்தமே 45 கார்கள்தான் இந்த யூனிட்டைத் தயாரித்திருக்கிறது. இதற்கு முந்தைய சாந்தமான P1 எனும் மெக்லாரன் ஓனர்களைக் குறிவைத்து இந்த GT-R–யைத் தயாரித்தது – மெக்லாரனுக்கு ஏமாற்றமே!

Nissan Skyline R-34 GT-R
Nissan Skyline R-34 GT-R

நிஸான் ஸ்கைலைன் R-34 GT-R

Nissan Skyline R-34 GT-R

ஜப்பானில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுதும் விற்பனை செய்யப்படும் கார்களை JDM (Japan Domestic Cars) கார்கள் என்பார்கள். இந்த JDM காரை, ‘கார்களின் காட்ஸில்லா’ (Godzilla) என்று செல்லமாக அழைப்பார்கள். இதன் பவர், அரசாங்க விதிமுறைகளுக்கு ஒத்து வரவில்லை. வெறும் ஷோவுக்காக வேண்டுமானால் இதை வாங்கலாம். இருந்தாலும் இதை அமெரிக்காவில் இறக்குமதி செய்வது ரொம்ப ரொம்பக் கஷ்டம். அப்படியே வாங்கி, சாலையில் ஓட்டினாலும் ஆண்டுக்கு 2,500 மைல்களுக்கு மேல் உங்கள் ஓடோமீட்டர் தாண்டக் கூடாது.

Alfa Romeo 8C  Spider Roadster
Alfa Romeo 8C Spider Roadster

ஆல்ஃபா ரோமியோ 8C ஸ்பைடர் ரோட்ஸ்ட்டர்

Alfa Romeo 8C Spider Roadster

‘வேறெதுவும் வேண்டாம்; இதன் ஃபார்முலா–1 கார் மாதிரியான காதைக் கிழிக்கும் எக்ஸாஸ்ட் சத்தத்தை மட்டும் குறைத்தால் போதும்’ என்ற NHTSA–வின் வேண்டுகோளை இத்தாலியைச் சேர்ந்த ஆல்ஃபா ரோமியோவால் ஏற்க முடியவில்லை. இதன் விலை சுமார் 3.14 லட்சம் அமெரிக்க டாலர்கள். மொத்தம் 500 யூனிட்கள் தயார் செய்திருந்தாலும், அனைத்தையும் விற்றுத் தீர்த்து விட்டது ஆல்ஃபா ரோமியோ. ஸ்பைடர் போன்ற தோற்றத்தில், AR ரசிகர்களிடம் இந்த ஸ்பைடர் கார் மேல் தனிக் காதல் உண்டு. காரை ஆன் செய்தாலே ‘வ்வ்ர்ர்ரூம்’ சத்தம் போடும் எக்ஸாஸ்ட் பீட்டும், 5 லிட்டர் இன்ஜினும், 441bhp பவரும்தான் இந்த ரோமியோவின் ஸ்பெஷல்.

போர்ஷே 959
போர்ஷே 959

போர்ஷே 959

Porsche 959

உலகின் 4வீல் டிரைவ் சூப்பர் கார்களில் இதுவும் ஒன்று. இந்த 2.8 லிட்டர், ட்வின் டர்போ இன்ஜின் செட்அப்பின் பவர் 444 bhp. இந்த 959 காரை, க்ராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்த 4 யூனிட்களைக் கேட்டது அமெரிக்க NHTSA. ‘நான்கு கார்களை எதுக்கு வேஸ்ட் பண்ணணும்’ என்று போர்ஷே, அமெரிக்காவுக்குத் தர ஒப்புக் கொள்ளவில்லை. இதுவே இதைச் சாலையில் ஓட்ட முடியாததற்குக் காரணம். மேலும், இதிலுள்ள டர்போ சார்ஜர், எக்ஸாஸ்ட் சிஸ்டம் உமிழும் புகை போன்றவை எமிஷன் நார்ம்களில் பாஸ் ஆகாததால், இதை NHTSA தடை செய்திருக்கிறது. ஆனாலும் என்ன, ‘ஐரோப்பாவில் நாங்கதான் பாஸ் Boss’ என்று கெத்தாக இருக்கிறது போர்ஷே.

நோபில் எம்600
நோபில் எம்600

நோபில் எம்600

Noble M600

பிரிட்டிஷ் கம்பெனியான Noble நிறுவனத்தின் முக்கியமான சூப்பர் கார்களில் ஒன்று இந்த M600. இத்தாலியின் ஃபெராரியை இன்ஸ்பயர் செய்து இதை டிசைன் செய்திருப்பதாக நோபிலே ஒப்புக் கொண்டிருக்கிறது. அதேபோல் ஃபெராரிக்குப் போட்டியாகவும் வந்தது இந்த M600. இதில் இருப்பது 650bhp பவர் கொண்ட 4.4 லிட்டர் V8 இன்ஜின். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு லாஞ்ச் செய்யப்பட்ட இது ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ், இஎஸ்பி போன்ற பாதுகாப்பு வசதிகளில் பாஸ் ஆகாததால், அமெரிக்காவில் இதை இறக்குமதி செய்யத் தடை. இன்னொரு முக்கியக் காரணம் – இதன் விலை. அமெரிக்காவில் இந்தக் காரின் விலைக்கு ஒரு சின்னக் குடியிருப்புப் பகுதியையே வாங்கி விடலாமாம்.