கார்ஸ்
Published:Updated:

அதிகம் ரேஞ்ச் தரும் டாப் 10 எலெக்ட்ரிக் கார்கள்!

எலெக்ட்ரிக் கார்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
எலெக்ட்ரிக் கார்கள்

சர்வே: எலெக்ட்ரிக் கார்கள்

பெட்ரோல்/டீசல் கார்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை – எலெக்ட்ரிக் கார்கள். டிசைன், தொழில்நுட்பம், ஓட்டுதல், பிக்–அப், பெர்ஃபாமன்ஸ், பாதுகாப்பு, கம்ஃபர்ட் என்று எல்லா ஏரியாக்களிலும் சொல்லியடித்தாலும், ‘வீட்டுக்குப் போயிருமா… வழியிலேயே நின்னுடுமா’ என்று எலெக்ட்ரிக் கார்களை ஓட்டும்போது, ஒரு பதற்றமான பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். இப்படியான ரேஞ்ச் பதற்றம்தான் எலெக்ட்ரிக் கார்களின் தீராத பிரச்னை. அதற்காகத்தான் கார் நிறுவனங்கள், தங்கள் கார்களில் ஹெவியான பேட்டரியை வழங்கி வருகின்றன. நெக்ஸானில் கொஞ்சம் பவர்ஃபுல் பேட்டரி பொருத்தி எக்ஸ்டெண்டட் ரேஞ்ச் கொடுக்கும் மாடல்களை லாஞ்ச் செய்தது டாடா. இது ஸ்கூட்டர்களுக்கும் பொருந்தும். ஐக்யூபில் பெரிய பேட்டரி பொருத்தி ரேஞ்ச்சை அதிகப்படுத்தி இருந்தது டிவிஎஸ்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கும் முடிவில் இருப்பவர்களை ரேஞ்ச்தான் யோசிக்க வைக்கிறது. அவர்களுக்காக இந்தப் பக்கம். அதாவது, இந்தியாவில் அதிக ரேஞ்ச் தரும் எலெக்ட்ரிக் கார்கள் என்னென்ன? இந்த மாதம் – டாப்–10 எலெக்ட்ரிக் ஸ்போ்ட்ஸ் கார்கள் பற்றிய லிஸ்ட்! ஓரளவு ரியல் டைமுக்கு நெருக்கமான WLTP (Worldwide Harmonized Light Vehicles Test Procedure) டெஸ்ட்டின் படி க்ளெய்ம் செய்யப்படும் ரேஞ்ச்சும் கொடுக்கப்பட்டாலும்… கூடவே ரியல் டைம் ரேஞ்ச்சின் படியும் இந்த டாப்–10 சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது.

பென்ஸ் EQS
பென்ஸ் EQS


#1

மெர்சிடீஸ் பென்ஸ் EQS 


WLTP ரேஞ்ச்: 677 கிமீ 

ரியல் டைம் ரேஞ்ச்: சுமார் 650 கிமீ

பேட்டரி: 107.8kWh
பவர்: 523bhp

டார்க்: 855Nm

சார்ஜிங்: 30 நிமிடங்களில் 10% – 80% சார்ஜிங்

விலை: சுமார் 1.7 கோடி முதல் 2.7 கோடி வரை

இந்த பென்ஸ்தான் இந்த லிஸ்ட்டில் முதல் இடம் பிடிக்கிறது. சிங்கிள் சார்ஜுக்கு 857 கிமீ என்றால், இதன் பேட்டரி பேக் மற்றும் பெர்ஃபாமன்ஸை யூகித்துக் கொள்ளுங்கள். நாம் இந்த பென்ஸ் EQS காரை முதன் முறையாக ஓட்டும்போது, அசந்தே போனோம். காரணம், இதன் பெஃர்பாமன்ஸ் மற்றும் தொழில்நுட்பங்கள், வசதிகள், சொகுசு, பாதுகாப்பு எல்லாமேதான்! இதன் பவர் 523bhp. டார்க் 855Nm. பெர்ஃபாமன்ஸில் வெறித்தனம் காட்டுகிறது. இதிலுள்ள 56 இன்ச் M-BUX ஹைப்பர் ஸ்க்ரீன் டச் ஸ்க்ரீன் சிஸ்டம்… தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம். இங்கிருக்கும் கார்களிலேயே… இல்லை இந்தியாவிலேயே… ஏன் உலகிலேயே ஏரோடைனமிக் டிராக் ஃபோர்ஸில் பக்காவான அளவைக் கொண்ட கார் இதுதான். ஏரோ டைனமிக்ஸ் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இதன் கதவுகளைக்கூட ஃப்ளஷ் டைப்பில் செய்திருப்பது ஆஹா! 9 காற்றுப்பைகளும், பல அடாஸ் தொழில்நுட்பங்களும், பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்கும்… இந்தக் காரை இந்தியாவின் பாதுகாப்பான எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் செடானாக்கி இருக்கிறது. என்ன, இதன் விலைதான் கோடிகளைத் தாண்டுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். இறக்குமதி வெர்ஷனான AMG-spec EQS 53 மற்றும் லோக்கல் அசெம்பிள் மாடலான EQS 580 என 2 வேரியன்ட்களில் கிடைக்கிறது இந்த பென்ஸ். நாம் இங்கே ரேஞ்சில் கில்லியாகச் சொல்வது – உள்ளூர்த் தயாரிப்பான EQS 580. இதன் அராய் ரேஞ்ச் 857 கிமீ என்றால், சிங்கிள் சார்ஜில் கிட்டத்தட்ட மதுரை போய்விட்டு ரிட்டர்ன் வந்து விடலாம். இதன் WLTP ரேஞ்ச் – 677 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறது பென்ஸ். இது கிட்டத்தட்ட ரியல் டைம் ரேஞ்சை நெருங்கும் என்பது ஆறுதல். இருந்தாலும், இதன் ரியல் டைம் சார்ஜிங் பற்றி வாசகர்களிடம் விசாரித்து வருகிறோம். அநேகமாக இது 625 கிமீ–யைத் தாண்டுகிறது என்று நமக்குத் தெரிந்த வரையில் தகவல்கள் கிடைக்கின்றன. 

பிஎம்டள்பியூ i7
பிஎம்டள்பியூ i7

#2

பிஎம்டள்பியூ i7

WLTP ரேஞ்ச்: 625 கிமீ 

ரியல் டைம் ரேஞ்ச்: சுமார் 580 கிமீ

பேட்டரி: 101.7kWh

பவர்: 544bhp

டார்க்: 745Nm

சார்ஜிங்: 30 நிமிடங்களில் 10% – 80% சார்ஜிங்

விலை: சுமார் 2.5 கோடி 


பிஎம்டபிள்யூவின் க்ளாஸ் மற்றும் மாஸ் ஸ்டைல் பற்றி உங்களுக்குத் தெரியும். நீளமான ஆலப்புழா படகுபோல, சாலையில் மிதந்தபடியே செல்வது பெட்ரோல்/டீசல் கார்களிலேயே சொகுசான அனுபவம் தரும். இந்த 7 சீரீஸ் எலெக்ட்ரிக் அதுக்கும் மேல! 7 சீரிஸ் செடானின் ஐசி இன்ஜின் வெர்ஷனுக்கும் இதற்கும் தோற்றத்தில் பெரிய வித்தியாசமெல்லாம் இருக்காது. முன் பக்கம் அந்தப் பெரிய கிட்னி கிரில்லில் அந்த i பேட்ஜ் இருந்தால், அது எலெக்ட்ரிக். அட, இன்டீரியர்கூட அதே 7 சீரிஸ் மாடலைத்தான் ஒத்து இருக்கிறது. இதற்குக் காரணம், 7 சீரிஸ் தயாரிக்கப்படும் அதே CLAR ஆர்க்கிடெக்ச்சர் ப்ளாட்ஃபார்மில்தான் இது ரெடியாகிறது. பிஎம்டபிள்யூவே சொல்கிறது: ‘‘இது ஒரு பேட்டரி பொருத்தப்பட்ட 7 சீரிஸ்!’’ என்று. 

இதன் XDrive 60 வேரியன்ட்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், (இதுதான் இந்தியாவுக்கான மாடல்) இதன் பவர் 544bhp மற்றும் 745Nm டார்க். சின்ன கார்களே டூயல் மோட்டார்கள் கொடுக்கும்போது, இந்தப் பெரிய பிஎம்டபிள்யூவில் இரட்டை மோட்டார்கள் இல்லாமலா! இதிலிருக்கும் பேட்டரி பென்ஸ் EQS–யைவிடக் கொஞ்சம்போலத்தான் குறைவு. 101.7kWh சக்தி கொண்ட இதன் லித்தியம் பேட்டரியை, 30 நிமிடங்களில் 20% – 80% சார்ஜ் போட்டு விடலாம். 

இதன் WLTP ரேஞ்ச்: 625 கிமீ என்கிறது பிஎம்டபிள்யூ. ரியல்டைமில் இது சுமார் நிச்சயம் 580 – 590 கிமீ கிடைக்கும். உலகின் சொகுசு எலெக்ட்ரிக் கார்களில் முன்னணி வகிக்கும் இந்த i7–யைச் சாலைகளில் ஓட்ட வேண்டுமென்றால், சுமார் 2 கோடி ரூபாயை எடுத்து வைக்க வேண்டும். 

பிஎம்டள்பியூ i4
பிஎம்டள்பியூ i4

#3


பிஎம்டள்பியூ i4


WLTP ரேஞ்ச்: 590 கிமீ 

ரியல் டைம் ரேஞ்ச்: சுமார் 520 கிமீ

பேட்டரி: 83.9kWh

பவர்: 340bhp

டார்க்: 430Nm

விலை: சுமார் 81 லட்சம் முதல் 86 லட்சம் வரை


பிஎம்டபிள்யூவின் iX மாதிரி இல்லை இந்த i4. அதாவது, எலெக்ட்ரிக்குக்காகப் பிரத்யேகமாக உருவாகாமல், இதுவும் 7 சீரிஸின் எலெக்ட்ரிக் வெர்ஷன்போல, 4 சீரிஸ் கிராண் கூபேவின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது இந்த i4. இந்த 4 சீரிஸ் Gran Coupe–வை இந்தியாவில் நீங்கள் பெரிதாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இது வெளிநாடுகளில் ஓடிக் கொண்டிருக்கும் மாடல். ஆனால், சட்டென்று இதைப் பார்ப்பதற்கு, ஃபெமிலியரான 3 சீரிஸ் மாடலைப் பார்ப்பதுபோல்தான் இருக்கும். இந்த 4 டோர் கூபே, 3 சீரிஸை அடிப்படையாக வைத்துத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இந்த i4, eDrive 40 எனும் ரியர் மவுன்ட்டட் மோட்டாரில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆம், இது ஒரு ரியர் வீல் டிரைவ் எலெக்ட்ரிக் கார். இந்த எலெக்ட்ரிக் மோட்டாரின் பவர் 340bhp மற்றும் 430Nm டார்க். இதிலுள்ள பேட்டரியும் சளைத்ததில்லை. செஞ்சுரி அடிக்க சுமார் 17kWh தான் குறைவு. இதன் பேட்டரி சக்தி 83.9kWh கொண்டிருக்கிறது. இந்த i4–ன் WLTP ரேஞ்ச்படி 590 கிமீ–யை க்ளெய்ம் செய்கிறது பிஎம்டபிள்யூ. அப்படியென்றால், ரியல் டைமில் இதன் ரேஞ்ச் சுமார் 500 கிமீ–யையாவது தாண்டும். 

வழக்கம்போல் விலையிலும் பிஎம்டபிள்யூ வாய் பிளக்க வைத்து விட்டது. சுமார் 74 முதல் 78 லட்சம் வரை இதன் எக்ஸ் ஷோரூம் விலையை பொசிஷன் செய்திருக்கிறது பிஎம்டபிள்யூ. இது பெரிய 5 சீரிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் காரான M340i கார்களின் விலைக்குச் சமம். ஆனால் என்ன, சத்தமில்லாத ஸ்போர்ட்ஸ் காராக ஜொலிக்கிறது இந்த i4.

கியா EV6
கியா EV6

#4

கியா EV6

அராய் ரேஞ்ச்: 708 கிமீ

WLTP ரேஞ்ச்: 528 கிமீ 

ரியல் டைம் ரேஞ்ச்: சுமார் 500 - 520 கிமீ

பேட்டரி: 77.4kWh

பவர்: 229bhp

டார்க்: 350Nm

சார்ஜிங்: 18 நிமிடங்களில் 10% – 80% 

விலை: சுமார் 66 – 70 லட்சம்

கியாவின் முதல் எலெக்ட்ரிக் ஃப்ளாக்ஷிப் மாடல் இந்த EV6. டிசைன் ஆஃப் தி இயர், யூரோ என்கேப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் எனப் பல விருதுகளை வாங்கியிருக்கும் இந்த EV6, இந்தியாவில் சும்மா சொல்லக்கூடாது; நல்ல ரசிகர் வட்டத்தைப் பெற்றிருக்கிறது. குறைந்த ஏரோடைனமிக் டிராக் ஃபோர்ஸ் அளவு கொண்ட தொழில்நுட்பம், ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள், கார் முழுதும் பெரிய டச் ஸ்க்ரீன், மெமரி மற்றும் வென்டிலேட்டட் சீட்கள், 14 ஸ்பீக்கர் செட்அப் கொண்ட மெரிடியன் சரவுண்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் சார்ஜிங், சன்ரூஃப் என அடடா… பெரிய நிறுவனங்களே கொடுக்க மறந்த வசதிகளை இதில் கொடுத்திருக்கிறது கியா. வெறும் 18 நிமிடங்களில் 10% முதல் 80% சார்ஜிங் ஏற்ற முடியும் என்பது ஸ்பெஷல். 50kW சார்ஜர் என்றால், 80 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது.

பேட்டரிக்கு வரலாம். இதில் 77.4kWh சக்தி கொண்ட பேட்டரி உண்டு. இதன் பவர் 229bhp மற்றும் 350Nm டார்க். ஆல்வீல் டிரைவ் மற்றும் ரியர் வீல் டிரைவ் என 2 வேரியன்ட்களில் வருகிறது இந்த EV6. நம்முடைய தேர்வு ஆல்வீல் டிரைவ்தான். இதன் செயல்பாடு அப்படி. இருந்தாலும், இதன் ரேஞ்ச்தான் அற்புதம். இதன் அராய் ரேஞ்ச் 708 கிமீ. WLTP டிரைவ் சைக்கிளின் ஓட்டுதலின்படி, இதன் ரேஞ்ச் 528 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறது கியா. நாம் இதன் பல வாசகர்களைச் சந்தித்துக் கேட்டதில் இதன் ரியல் டைம் ரேஞ்ச் சுமார் 500 – 520 கிமீயாக இருக்கிறது. என்ன, இதன் விலைதான் பலரும் உச் கொட்டுகிறார்கள். இறக்குமதி செய்து ஓட்ட வேண்டும் என்பதால், இதன் விலை 70 லட்சத்தைத் தொடுகிறது. 

ஆடி இ–ட்ரான் GT (e-Tron GT)
ஆடி இ–ட்ரான் GT (e-Tron GT)

#5


ஆடி இ–ட்ரான் GT (e-Tron GT)


WLTP ரேஞ்ச்: 481 – 500 கிமீ 

ரியல் டைம் ரேஞ்ச்: சுமார் 420 – 440 கிமீ

பேட்டரி: 93kWh

பவர்: 475 – 646bhp

டார்க்: 630Nm 

விலை: சுமார் 1.80 – 2.2 கோடி

போர்ஷேவில் டைக்கான் (Taycan) என்றொரு எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் மாடல் கார் தெரியுமா… அதைப்போலவே இதுவும் ஒரு எலெக்ட்ரிக் ப்ளாட்ஃபார்மில் பிறந்த கார்தான். இந்த ஆடி e-Tron GT – மொத்தம் 2 வேரியன்ட்களில் வருகிறது. ஸ்டாண்டர்டு மாடல் – இதன் பவர் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அதாவது, ஆடிக்கு இது குறைவுதான். 475bhp மற்றும் 630Nm டார்க் கொண்டிருக்கிறது இது. இதில் பூஸ்ட் மோடு என்றொன்று உண்டு. இதில் 530bhp பவர் வெளிப்படும் வரை இந்த இ–ட்ரானை ஓட்டலாம். இந்த ஸ்டாண்டர்டு மாடலே தெறி காட்டும். இதில் RS என்றொரு ரேஸ் மாடல் வேறு இருக்கிறது. இதன் பவர் 646bhp. இந்த இரண்டு மாடல்களிலுமே இருப்பது 93kWh சக்தி கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் என்பதைக் கவனிக்க வேண்டும். அதனால் ரேஞ்ச்சில் பெரிய வித்தியாசம் இருக்காது என்று நினைத்தால்… அதில்தான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. 

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த ஆர்எஸ் மாடலில் 2 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் அதாவது 2ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. ஆக்ஸிலரேஷன்களுக்கு ஷார்ட்டான முதல் கியர், நல்ல மைலேஜுக்கு… அதாவது ரேஞ்சுக்கு இரண்டாவது கியர். இது லாங் ரேஷியோ கொண்டிருக்கும். அதனால், ஸ்டாண்டர்டு இ–ட்ரான் மாடலுக்கு 500 கிமீ–யும்; RS e-Tron மாடலுக்கு 483 கிமீ–யும் WLTP டிரைவ் சைக்களின்படி ரேஞ்ச் க்ளெய்ம் செய்கிறது பிஎம்டபிள்யூ. கியாவைவிட அதிக சக்தி கொண்ட பேட்டரி பேக் இருந்தும், இது ரேஞ்சில் 5–வது இடத்தைப் பிடிப்பதற்குப் பல ஓட்டுதல் காரணங்கள்தான் முன்நிற்கின்றன. 

ஸ்டன்னிங்கான மயக்கும் டிசைன், சத்தம் போடாமல் சாலைகளில் பறக்கும் திறன், சொகுசான பயணம் என்று இந்த இ–ட்ரானை ஓட்டுவதற்கு சுமார் 170 லட்சங்கள் முதல் 194 லட்சங்கள் வரை எடுத்து வைக்க வேண்டும். 

போர்ஷே டைக்கான் (Taycon)
போர்ஷே டைக்கான் (Taycon)

#6

போர்ஷே டைக்கான் (Taycon)

WLTP ரேஞ்ச்: 484 கிமீ 

ரியல் டைம் ரேஞ்ச்: சுமார் 410 கிமீ

பேட்டரி: 79.2 - 93.4kWh

பவர்: 408 – 761bhp

டார்க்: 1,050Nm 

விலை: சுமார் 1.65 – 2.42 கோடி


இந்த எலெக்ட்ரிக் கார்கள் லிஸ்ட்டில், வெறித்தனமான டார்க் மற்றும் பிக்–அப்பில் டாப்–10–க்கான போட்டி வைத்தால்… நிச்சயம் இந்த போர்ஷே டைக்கான்தான் வெற்றி பெறும். இதன் குவிந்து விழும் கும்மென்ற டார்க்தான் இந்த போர்ஷேவின் ஸ்பெஷல். 1,050Nm என்றால், இதன் ஸ்போர்ட்டினெஸ் எப்படி இருக்கும்? இந்த போர்ஷே டைக்கானில் இரண்டு பாடி ஸ்டைல்கள் உண்டு. டைக்கான் செடான் மற்றும் டைக்கான் க்ராஸ் டூரிஸ்மோ எஸ்டேட். மொத்தமாக 7 வேரியன்ட்களில் இந்த டைக்கானை வாங்கலாம். இது ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல்வீல் டிரைவ்களில் வருகிறது. ஸ்டாண்டர்டான ரியர் வீல் டிரைவ் கொண்ட டைக்கான், 408bhp பவரை வெளிப்படுத்துகிறது. இது லட்சங்களில் புரளும் கம்யூட்டிங் பார்ட்டிகளுக்கு செட் ஆகும். இதுவே கோடிகளில் புரளும் ஸ்போர்ட்டினெஸ் பார்ட்டிகளுக்கு டர்போ எஸ் வேரியன்ட் இருக்கிறது. இதன் பவரை நோட் செய்து கொள்ளுங்கள். 761bhp. இதுதான் இந்தியாவின் அதிக பவர்ஃபுல் எலெக்ட்ரிக் கார் என்று சொல்லலாம். பார்ப்பதற்கும் இது அச்சு அசல் ஸ்போர்ட்டி கார் மாதிரியே தோற்றமளிப்பதும் அருமை. 0–100 கிமீ–யை வெறும் 2.6 விநாடிகளில் இது கடக்கும். 0–160 கிமீ–க்கு வெறும் 6 விநாடிகளில் பறக்கும். இது அமெரிக்காவின் டெஸ்லா கார்களுக்கு இணையான வேகம். 

இதிலேயே 2 பேட்டரி பேக் கொடுக்கிறது போர்ஷே. 79.2kWh மற்றும் 93.4kWh பேட்டரி சக்தி கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக்குகள். இதில் 79.2தான் குறைந்த வேரியன்ட். டாப் எண்டான டர்போ மற்றும் எஸ் வேரியன்ட்களில் இருப்பது 93.4kWh. இத்தனை பெரிய பேட்டரியை 50kW சார்ஜரில் சார்ஜ் செய்தால், சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. ஆச்சரியமாக, இந்த இரண்டுக்குமே ஒரு WLTP ரேஞ்ச்சை க்ளெய்ம் செய்கிறது போர்ஷே. 484 கிமீ. நமது மும்பை வாசகர் ஒருவரிடம் விசாரித்ததில், இது சுமார் 410 கிமீ வரை ரியல் டைம் ரேஞ்ச் தருவதாகச் சொல்கிறார். 

ஹூண்டாய் அயனிக் 5 (Ionic 5)
ஹூண்டாய் அயனிக் 5 (Ionic 5)

#7

ஹூண்டாய் அயனிக் 5 (Ionic 5)


WLTP ரேஞ்ச்: 481 கிமீ 

ARAI ரேஞ்ச்: 631 கிமீ

ரியல் டைம் ரேஞ்ச்: சுமார் 400 கிமீ

பேட்டரி: 72.6kWh

பவர்: 217bhp

டார்க்: 350Nm 

விலை: சுமார் 52 லட்சம்


ஒரு ஃப்யூச்சரிஸ்ட்டிக்கான காரைக் கொண்டு வந்து அசத்தியிருக்கிறது ஹூண்டாய். 2022–ன் World Car of the Year, World Car of the Design விருதுகளைப் பெற்ற அயனிக் 5–க்கு வாழ்த்துகள். கோனாவைத் தாண்டி அப்டேட் ஆக நினைப்பவர்களுக்கு இந்த அயனிக் 5 செம சாய்ஸாக இருக்கும். காரணம், இதன் Killer Price என்று சொல்வார்களே… அப்படிப்பட்ட ஒரு மலிவு விலை கன்டென்ட்தான் இந்த அயனிக் 5. சுமார் 50 லட்சத்துக்குள் (கியா EV6–யை ஒப்பிடும்போது மலிவு பாஸ்!) இப்படி ஒரு பெர்ஃபாமன்ஸ் எலெக்ட்ரிக் கார் என்பது சூப்பர். காரணம், கியா போல் இல்லாமல் இது லோக்கலாக அசெம்பிள் செய்யப்படுவது முக்கியக் காரணம். 

இதில் இருப்பது 72.6kWh லித்தியம் அயன் பேட்டரி பேக். இது EV6 போல ஆல்வீல் டிரைவ் மாடலில் கிடைக்கவில்லை. வெறும் ரியர் வீல் டிரைவ் மாடலில் மட்டும் வருகிறது அயனிக் 5. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 217bhp பவரையும், 350 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 0–100 கிமீ–யை வெறும் 7.6 விநாடிகளில் தொடும் இந்த அயனிக் 5. Walk Through கேபின், ஸ்லைடிங் சென்டர் கன்சோல், 12.3 இன்ச் டூயல் ஸ்க்ரீன், வென்டிலேட்டட் சீட்ஸ் என்று வசதிகளைத் தாண்டி, பிராக்டிக்காலிட்டியிலும் இது கலக்குகிறது. இதன் பூட் ஸ்பேஸ் 527 லிட்டர். இது தவிர பானெட்டிலும் ஒரு 57 லிட்டர் ஸ்டோரேஜ் கொடுத்திருக்கிறார்கள். இதன் WLTP சைக்கிள் ரேஞ்ச் – 481 கிமீ. அட, அராயிலும் இது டெஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது. 631 கிமீ. ரியல் டைமில் இந்த அயனிக் சுமார் 400 கிமீ ரேஞ்ச் தருகிறது என்று தகவல். 

ஜாகுவார் ஐ–பேஸ் (i-Pace)
ஜாகுவார் ஐ–பேஸ் (i-Pace)

#8


ஜாகுவார் ஐ–பேஸ் (i-Pace)


WLTP ரேஞ்ச்: 480 கிமீ 

ரியல் டைம் ரேஞ்ச்: சுமார் 360 கிமீ

பேட்டரி: 90kWh

பவர்: 400bhp

டார்க்: 696Nm 

விலை: சுமார் 1.26 கோடி முதல் 1.35 கோடி


ஜாகுவார் என்றால், யாருக்குத்தான் பிடிக்காது. கடவுளையே ஓட்டுவதுபோல் இருக்கும் இந்த ஜாகுவாரின் இன்னொரு குட்டிக் கடவுள்தான் இந்த i-Pace. இந்தச் சுத்தமான எலெக்ட்ரிக் காரில் இருக்கும் பேட்டரி பேக்கை வைத்துப் பார்த்தால்…. நியாயப்படி இந்த i-Pace கார், இந்தப் போட்டியில் 5–வது இடத்துக்குள் வந்திருக்க வேண்டும். இதில் இருப்பது 90kWh பேட்டரி பேக். ஆனால், பவர்ஃபுல்லான ஓட்டுதலும், வெறித்தமான பிக்–அப்பும் இதை ஒரு ஓட்டுதல் காராக மாற்றியிருக்கின்றன. டூயல் மோட்டாரில் இருந்து வெளிப்படும் இதன் பவர் 400bhp. 696Nm டார்க் என்பது, ஆஹா ரகம்! மொத்தம் S, SE, HSE என 3 வேரியன்ட்களில் இந்த ஜாகுவார் i-Pace கிடைக்கிறது. இதன் மினிமலிஸ்ட்டிக் கேபின் டிசைன், டூயல் டச் ஸ்க்ரீன், பனோரமிக் சன்ரூஃப் என இந்த 2,200 கிலோ எடை கொண்ட காரை, ஒரு பக்கா எஸ்யூவியாக டிசைன் செய்திருக்கிறது ஜாகுவார். இதன் ஆப்ஷனலாக 56 மிமீ வரை உயர்த்திக் கொள்ளக்கூடிய (230 மிமீ வரை கிரவுண்ட் கிளியரன்ஸை உயர்த்திக் கொள்ளலாம்) ஏர் சஸ்பென்ஷன் இந்த எஸ்யூவியின் இன்னும் ஒரு பெரிய ப்ளஸ். 

எஸ்யூவியாக இருந்தாலும், இந்த i-Pace – பேஸில்– அதாவது வேகத்தில் குறை வைக்காது. 0–100 கிமீ–யை வெறும் 4.8 விநாடிகளில் கடக்கிறது. இதன் WLTP ரேஞ்ச் – 480 கிமீ. ரியல் டைமில் இதன் ரேஞ்ச் சுமார் 360 கிமீ–யாக இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். பின் பக்கம் இடவசதிக் குறைபாடும், அதிகப்படியான விலையும், குறைந்த ரேஞ்சும் இந்த ஜாகுவார் i-Pace–யை இந்தப் போட்டியில் பின்னுக்குத் தள்ளிவிட்டன.

பிஎம்டபிள்யூ iX
பிஎம்டபிள்யூ iX

#9

பிஎம்டபிள்யூ iX 

WLTP ரேஞ்ச்: 425 கிமீ 

ரியல் டைம் ரேஞ்ச்: சுமார் 345 – 360 கிமீ

பேட்டரி: 76.6kWh

பவர்: 326bhp

டார்க்: 630Nm 

விலை: சுமார் 1.31 கோடி 


பிஎம்டபிள்யூவின் பார்ன் இன் எலெக்ட்ரிக்கில் பிறந்த இந்த iX கார்தான், இதன் முதன் எலெக்ட்ரிக் கார். CLAR ஆர்க்கிடெக்ச்சருடன் Carbon Core Technology ப்ளாட்ஃபார்மில் பிறந்த இந்த iXதான் பிஎம்டபிள்யூவின் ஃப்ளாக்ஷிப் எஸ்யூவியும் கூட. இது CBU முறையில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் எஸ்யூவி. 22 இன்ச் பெரிய வீல்கள்தான் இதன் பெரிய பலம். இந்தியாவில் கன்வென்ஷனலான காயில் ஸ்ப்ரிங்குகள்தான்; வெளிநாடுகளில் உள்ள iX–ல் இருப்பது ஏர் ஸ்ப்ரிங்குகள். இது ஒரு ரியர் வீல் டிரைவ் எஸ்யூவி. 

326bhp பவர் கொண்ட இதன் டாப் ஸ்பீடு சுமார் 200 கிமீ. இது போட்டி கார்களைவிட அதிகம். இதிலுள்ள பேட்டரி பேக் 76.6kWh சக்தி கொண்ட லித்தியம் அயன் பேட்டரி. இதை 50kW DC சார்ஜரில் சார்ஜ் செய்தால், 1.20 மணி நேரத்துக்குள் 80% ஏறிவிடும். இந்த பேட்டரிக்கு 8 ஆண்டுகளும், 1.6 லட்சம் கிமீ–யும் வாரன்ட்டி கொடுக்கிறது பிஎம்டபிள்யூ. iX–ன் WLTP ரேஞ்ச் – 425 கிமீ. ஆனால், உண்மையில் இதன் ரியல் டைம் ரேஞ்ச் சுமார் 345 கிமீ  முதல் 360 கிமீ இருக்கும். 2,400 கிலோ எடையில், கார்பனிலும், ஹை ஸ்ட்ரென்த் ஸ்டீல் உலோகத்திலும் கட்டுமானத்தில் கிண்ணென இருக்கும் அதேநேரத்தில், விலையிலும் கிண்ணென இருப்பது இதன் மைனஸ். CBU முறை என்பதால், இதன் விலை சுமார் 1.30 கோடியைத் தாண்டுகிறது. ஆனால், சத்தமில்லாமல் ஒரு எலெக்ட்ரிக் ஆல்ரவுண்டர் எஸ்யூவி வேண்டுமென்றால், பிஎம்டபிள்யூவின் iX–யைத் தைரியமாக நாடிப் போகலாம்.

மெர்சிடீஸ் பென்ஸ் EQB
மெர்சிடீஸ் பென்ஸ் EQB

#10


மெர்சிடீஸ் பென்ஸ் EQB

WLTP ரேஞ்ச்: 423 கிமீ 

ரியல் டைம் ரேஞ்ச்: சுமார் 340 – 355 கிமீ

பேட்டரி: 76.6kWh

பவர்:292bhp

டார்க்: 520Nm 

விலை: சுமார் 97 லட்சம்



முதலின் இந்த பென்ஸுக்கு ஒரு கைக்குலுக்கல். காரணம், உங்களுக்கு 7 சீட்டரில் ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவி வேண்டும் என்றால், இப்போதைக்கு நீங்கள் மெர்சிடீஸ் ஷோரூமுக்குப் போய், இந்த EQB–யைத்தான் உங்கள் லிஸ்ட்டில் டிக் அடிக்க வேண்டும். ஆனால், இந்த 3–வது வரிசை, குழந்தைகளுக்குத்தான் சரியாக இருக்கும் என்பதை மறக்காதீர்கள். இது GLB எஸ்யூவியை அடிப்படையாக வைத்து டிசைன் செய்யப்பட்டிருக்கும் எஸ்யூவி. அதாவது, இது ஒரு பார்ன்–இன் எலெக்ட்ரிக் கார் இல்லை. ICE இன்ஜின் காரை எலெக்ட்ரிக்காக கன்வெர்ஷன் செய்யப்பட்டிருக்கும் எஸ்யூவி. அதாவது, B க்ளாஸ் மாடல் எலெக்ட்ரிக்காக வேண்டும் என்றால், அதுதான் EQB. பெரிய குடும்பம் சொகுசாகப் பயணிக்க என பிராக்டிக்கல் வசதிகளில் சொல்லியடிக்கும் இந்த EQB, விலை கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது. இதன் விலை சுமார் ஒரு கோடியை நெருங்குகிறது. இறக்குமதி என்பதால், இந்த அதிகப்படியான விலை. 

இது ஒரு ஆல்வீல் டிரைவ் எஸ்யூவி. இதிலுள்ள லித்தியம் அயன் பேட்டரி பேக் 66.5kWh சக்தி கொண்டிருக்கிறது. இதில் 100kW ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் உண்டு. இது வெறும் 32 நிமிடங்களில் 10% – 80% வரை சார்ஜிங் ஏறும் என்பது அட! WLTP சைக்கிளின் படி இதன் ரேஞ்ச், 425 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறது மெர்சிடீஸ். ரியல் டைமில் இதன் ரேஞ்ச் சுமார் 340 கிமீ முதல் 355 கிமீ வரை கிடைக்கிறது என்கிறார்கள். இதன் பவர் மற்றும் டார்க் விஷயங்களுக்கும் குறைச்சல் இல்லை. இந்த டூயல் மோட்டார் வெளிப்படுத்தும் சக்தி இதுதான்; 292bhp பவர் மற்றும் 520Nm டார்க். ஒரு பெரிய குடும்பத்துக்கான ஃபேமிலி எஸ்யூவி ஜீனில் இருக்கும் இந்தக் காரில் ஒரு ஸ்டன்னிங் லுக் இல்லாததும், அதிகப்படியான விலையும் இதன் மைனஸாக இருக்கின்றன. 

(அதிக ரேஞ்ச் தரும் பட்ஜெட் எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் லிஸ்ட் பற்றி அடுத்தடுத்த மாதங்களில் பார்க்கலாம்!)