Published:Updated:

உலகின் டாப்–10 சூப்பர் ஆஃப்ரோடர்கள்!

டாப்–10 சூப்பர் ஆஃப்ரோடர்கள்
பிரீமியம் ஸ்டோரி
டாப்–10 சூப்பர் ஆஃப்ரோடர்கள்

உலகின் டாப்–10 ஆஃப்ரோடர்களின் லிஸ்ட்!

உலகின் டாப்–10 சூப்பர் ஆஃப்ரோடர்கள்!

உலகின் டாப்–10 ஆஃப்ரோடர்களின் லிஸ்ட்!

Published:Updated:
டாப்–10 சூப்பர் ஆஃப்ரோடர்கள்
பிரீமியம் ஸ்டோரி
டாப்–10 சூப்பர் ஆஃப்ரோடர்கள்

சாஃப்ட்டாக இருப்பதைவிட ரஃப் அண்ட் டஃப்பாக முரண்டு பிடிப்பதுதான் அட்வென்ச்சர் பிரியர்களுக்குப் பிடிக்கும். கார்களைப் பொருத்தவரையும் அப்படித்தான். ஆளே இல்லாத நெடுஞ்சாலைகளில் ஜிவ்வென்று செடான் கார்களில் 140 கிமீ பறப்பது எல்லோருக்கும் பிடித்த விஷயம்தான். ஆனால் – தட்டுத் தடுமாறியாச்சும் பாறைகளில் தவ்விச் செல்லும், விருட் விருட் என மலைகளில் சலிக்காமல் ஏறும், சேறு சகதிகளில் விழுந்து புரண்டு எழுந்திருக்கும், சில அடி நீர்களில் புகுந்து புறப்படும் 4 வீல் டிரைவ் கார்களில் பயணம் போகும்வரைதான் அந்த அனுபவம் பிடிக்கும். ஒரு தடவை ஆஃப்ரோடர்களில் பயணித்து விட்டால்… நீங்களும் அட்வென்ச்சர் விரும்பிகளாக மாறிவிடுவீர்கள். சாலைகள் முடியும் இடத்தில் பயணத்தைத் தொடங்கும் 4வீல் டிரைவ் ஜீப்களைத்தான் ஆஃப்ரோடர்கள் என்கிறோம். உங்களை அட்வென்ச்சர் விரும்பிகளாக மாற்ற வைக்கும்… உலகின் டாப்–10 ஆஃப்ரோடர்களின் லிஸ்ட் இது! சீட்பெல்ட்டை மாட்டி, சீட் ஹேண்டிலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஆடிக் கொண்டே படியுங்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
லேண்ட்ரோவர் டிஃபெண்டர்
லேண்ட்ரோவர் டிஃபெண்டர்

லேண்ட்ரோவர் டிஃபெண்டர்

நாடு: இங்கிலாந்து

விலை: சுமார் 1.25 கோடி

லேண்ட்ரோவர் எனும் பெயரைப் படிக்கும்போதே சிலருக்கு `கூஸ் பம்ப்ஸ்' வரும். 2020–ல்தான் இந்தக் கரடுமுரடு காரைக் கொண்டு வந்தது லேண்ட்ரோவர். ஏற்கெனவே இருந்த லேண்ட்ரோவருக்கு ரீப்ளேஸ்மென்ட்டாக, லேடர் ஃப்ரேமில் இருந்து மோனோ காக் எஸ்யூவியாக இந்த டிஃபெண்டர் வந்தது. எனவே பல வாடிக்கையாளர்கள், லேண்ட்ரோவர் அளவுக்கு இது தண்ணியில போகாது… பாறை ஏறாது... சகதியில் நீந்தாது என்றெல்லாம் நெகட்டிவ் கமென்ட்கள் விடுத்தனர். ஆனால், இது எல்லாவற்றையும் இந்த மோனோகாக் எஸ்யூவி செய்தது. இதன் அப்ரோச் மற்றும் டிப்பார்ச்சர் ஆங்கிள் 40 டிகிரி. அட, இதன் கிரவுண்ட் கிளியரன்ஸைக் கவனியுங்கள். 291 மிமீ!!! எந்த மேட்டைப் பற்றியும்… அட பாறையைப் பற்றியே கவலைப்படத் தேவையில்லை.

8 சிலிண்டர் மற்றும் 6 சிலிண்டர் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களில் இந்த டிஃபெண்டர் வருகிறது. மேலும் P400 எனும் பிளக்இன் ஹைபிரிட் மாடல்… 27 மைல்கள் ரேஞ்சுக்குப் பெயர் பெற்றது. இதன் D300 Inline டீசல் இன்ஜின் அதகளம் பண்ணும். 3 டோர் 90 மற்றும் 5 டோர் 110… ஹார்டு டாப், சாஃப்ட் டாப் என பல அம்சங்களில் கிடைக்கிறது டிஃபெண்டர். நேர்கோட்டில் இதன் ரைடு அண்ட் ஹேண்ட்லிங்கைவிட, சாலையே இல்லாத கோணல் மாணல் சாலைகளில் இதன் ஹேண்ட்லிங் வெறித்தனமாக இருக்கும். டிஃபெண்டர் இருந்தால், எதையும் டிஃபென்ஸ் செய்யலாம்.

ஜீப் ரேங்ளர்
ஜீப் ரேங்ளர்

ஜீப் ரேங்ளர்

நாடு: அமெரிக்கா

விலை: சுமார் 60 - 75 லட்சம்

கோடி ரூபாய்க்கு மேலானாலும் பரவாயில்லை என்று ரேங்ளரை இறக்குமதி செய்து வாங்கும் அட்வென்ச்சர் பிரியர்கள் நம்மூரில் இருக்கிறார்கள். ஆஃப்ரோடர்… இதற்கு மறுபெயர் ரேங்ளர் என்று சொல்லலாம். இதன் லேட்டஸ்ட் ஜென் மாடலை லோக்கலைஸ் செய்வதாகச் சொல்லி விலை குறைத்தது ஜீப். இந்த 7 ஸ்லாட் கிரில், உருளை வடிவ ஹெட்லைட்ஸ் போன்றவை, இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட ஒரிஜினல் வில்லிஸ் ஜீப்பில் இருந்து இன்ஸ்பயர் ஆனவை.

உடைந்த சாலைகள், மேடு பள்ளங்கள், ஏற்ற இறக்கங்கள், சேறு சகதி என்று எதைப் பற்றியும் ரேங்ளர் இருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை. முக்கியமாக, ரேங்ளரில் உள்ள ரூபிகான் என்றொரு 3 டோர் மாடல் இருக்கிறதே… இதன் ஆட்டம்… வெறித்தனமான ஆட்டம். 40 டிகிரி சாய்மானத்திலும் விழாத இதன் நிலைத்தன்மை, அண்டர்பாடியில் பிரேசிங் செய்யப்பட்ட டிசைன்… ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து போன்ற இறக்கங்களில் இறங்கினால்கூட பம்பர் கீழே இடிக்காத அளவு டிசைன் செய்யப்பட்டிருக்கும் இதன் அப்ரோச் ஆங்கிள் டிசைன்.. நான்கு ஆக்ஸில்களையும் லாக் செய்யக்கூடிய டிஃப் லாக் என்று ப்யூர் ஆஃப்ரோடராக ஜொலிக்கிறது ரேங்ளர்.

இதில் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் பிளக்–இன் ஹைபிரிட் ரேங்ளர்கள் லண்டனில் சக்கைப் போடு போடுகின்றன. இதன் டீசல் வெர்ஷனை இப்போதைக்கு இதன் வலைதளத்தில் இருந்து நீக்கியிருக்கிறது ஜீப். ரேங்ளரின் ஆஃப்ரோடு லெவல்… எல்லாத்துக்கும் மேலே!

டொயோட்டா லேண்ட்க்ரூஸர்
டொயோட்டா லேண்ட்க்ரூஸர்

டொயோட்டா லேண்ட்க்ரூஸர்

நாடு: ஜப்பான்

விலை: சுமார் 1.60 கோடி

இந்த லேண்ட்க்ரூஸர்தான் ஆஃப்ரோடுகளில் கொஞ்சம்… இல்லை.. பெரிய சூப்பர் சீனியர். பார்ப்பதற்கே கட்டுமஸ்தாக இருக்கும் இதைத் தூரத்தில் பார்த்தாலே பயமாக இருக்கும். பக்கத்தில் நெருங்க நெருங்க… மேடு பள்ளங்களுக்கே டர் அடிக்கும். இதுவும் பாடி ஆன் ஃப்ரேம் கட்டுமானத்தில் தயார் செய்யப்பட்ட கிண்ணென்ற எஸ்யூவி. இவன் எப்படிப்பட்ட பலசாலி என்றால்.. ஒரு பெரிய லாரி அல்லது ட்ரக்கையேகூட கம்பி கட்டி டோ செய்யும் அளவுக்கு இதன் கட்டுமானம் இருப்பதுதான் பெரிய ப்ளஸ். சாலைகள் ஒழுங்கற்று இருந்தால்தான் இந்த லேண்ட்க்ரூஸர் ஒழுங்காக ஓடும். இந்தியா, லண்டன், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் லேண்ட்க்ரூஸருக்கு ஒரு கூட்டமே உண்டு. இதன் டீசல் இன்ஜின் வெர்ஷன்தான் சக்கைப் போடு போடுகிறது. நீளமான ஆஃப்ரோடர் வேண்டும் என்றால், லேண்ட்க்ரூஸர்தான் பெஸ்ட் சாய்ஸ். ஆம், ஒரு 7 சீட்டர் கட்டுமரம் இது.

இந்த 2.8 லிட்டர் டர்போ டீசல் மாடலில் உள்ள ஏர் சஸ்பென்ஷன், மோசமான சாலைகளையும் சொகுசாக்கும் பயணிகளுக்கு! ஆனால், இதை ஒரு ஆடி, பென்ஸ் போன்ற மோனோகாக் எஸ்யூவிகளின் ரைடு அண்ட் ஹேண்ட்லிங்குக்கு இணையாக ஒப்பிடுதல் தவறு. இது ஒரு வித்தியாசமான பீஸ்ட்.

மெர்சிடீஸ் பென்ஸ் G க்ளாஸ்
மெர்சிடீஸ் பென்ஸ் G க்ளாஸ்

மெர்சிடீஸ் பென்ஸ் G க்ளாஸ்

நாடு: ஜெர்மனி

விலை: சுமார் ரூ.1.75 கோடி முதல் 2.5 கோடி வரை

இதுவும் சூப்பர் சீனியர்தான். சுமார் 40 ஆண்டுகளாக ஆஃப்ரோடிங் ஏரியாவில் கலக்குகிறது பென்ஸ் G க்ளாஸ். பழைய GTA எனும் வீடியோ கேமில் இதைப் பார்த்திருக்கலாம். நீங்கள் அலுங்காமல் குலுங்காமல்… பொத்தினாற்போல் உங்களை ஹைவேஸில் ஒரு கழுகுபோல் தூக்கிச் செல்லும் கார்கள் மட்டுமில்லை பென்ஸ். காடு மேடுகள்… ஓட்டை ஒடிசல் ரோடுகள் என்று எந்தச் சாலையிலும் பயணிப்பதற்கு ஒரு பென்ஸ் ஜீப் இருக்கிறது. அது பென்ஸின் G Wagon. இதைத்தான் டெக்னிக்கலாக G க்ளாஸ் என்கிறார்கள்.

லேட்டஸ்ட்டாக புத்தம் புது டிசைனில் ஃப்ரெஷ்ஷாக வந்திருக்கிறது பென்ஸ் G க்ளாஸ். லேடர் ஃப்ரேம் சேஸியில் கிண்ணென்று இருக்கும் இந்த பென்ஸைப் பார்க்கும்போது ஆஃப்ரோடு செய்ய வேண்டும் என்கிற உற்சாகம் யாருக்கும் வரும். இதன் முன் பக்க சஸ்பென்ஷன் முழுக்க முழுக்க இண்டிபெண்டன்ட். இதன் முழு செட்அப்பும் ஏஎம்ஜியால் உருவாக்கப்பட்டது. இதனால் லாக்கிங் டிஃப்ரென்ஷியல்ஸ் கிடைக்கிறது. சேறு சகதிகளில் சிக்கிக் கொள்ளும்போது, வீல்களின் ஆக்ஸில்களை டிஃப்ரென்ஷியல் லாக் செய்து கொண்டு விருட் என மேலெழலாம். இந்த பென்ஸ் G க்ளாஸ், சாஃப்ட்ரோட்டிலும் ஹேண்ட்லிங் செய்வதற்கு ஏற்ப, இதன் டைனமிக்ஸை மெருகுபடுத்தி இருக்கிறது மெர்சிடீஸ். இதற்கு இதன் ரேக் அண்ட் பினியன் ஸ்டீயரிங்கும் பெரிய கை கொடுக்கிறது.

நமக்கு இதன் G350d எனும் 6 சிலிண்டர் டீசல் கொண்ட இன்ஜின் பெர்சனலாகப் பிடிக்கும். இதிலேயே ட்வின் டர்போ சார்ஜ்டு V8 சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் கொண்ட மெர்சிடீஸ் பென்ஸ் AMG G63 ஜீப்பும் தெறி ரகம். ஆனால், இதை நீங்கள் வாங்க வேண்டுமென்றால்… அட்லீஸ்ட் ஒரு கால்பந்து, கிரிக்கெட் பிளேயராகவாவது இருக்க வேண்டும். இதன் விலை 1.75 கோடி முதல் 2.5 கோடி வரை!

ஃபோர்டு ரேஞ்சர் ரேப்டர்
ஃபோர்டு ரேஞ்சர் ரேப்டர்

ஃபோர்டு ரேஞ்சர் ரேப்டர்

நாடு: அமெரிக்கா

விலை: சுமார் 60 லட்சம்

உங்களுக்கு ஆல் டெரெய்ன்களிலும் பயணிக்கும் பாஹா வாகனங்கள் பற்றிப் பரிச்சயமா? ATV என்றால் உங்களுக்கு ஒருவேளை புரியலாம். அந்த ATV–யை இன்ஸ்பிரேஷனாக வைத்துத்தான் இந்த ஃபோர்டு ரேஞ்சர் ரேப்டர் எஸ்யூவியை டிசைன் செய்திருக்கிறார்கள். நம் ஊரில் இசுஸூ MUX ட்ரக் போல… இந்த ஃபோர்டு ரேஞ்சர் அமெரிக்காவில் மிகப் பிரபலம். ரேஞ்சர் மிக முக்கியமாக பாலைவனங்களில் செல்வதற்கேற்றபடி, டார்க் கொப்புளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ட்ரக். ஃபோர்டில் ஏற்கெனவே ரேஞ்சர் என்றொரு ஆஃப்ரோடர் உண்டு. அதன் அடுத்த வெர்ஷனான இந்த ரேப்டர், ரேஞ்சரைவிட நீளமாக, ரீ–இன்ஜீனியரிங் செய்யப்பட்ட ஆக்ஸில்கள், அப்ரேட்டட் ஸ்ப்ரிங்குகள் என்று கலக்குகிறது.

ஏற்கெனவே இருந்த லீஃப் ஸ்ப்ரிங்குகளை எடுத்துவிட்டு, Fox MotorSports டேம்ப்பர்கள் பொருத்தியிருக்கிறது ஃபோர்டு. கிரவுண்ட் கிளியரன்ஸையும் ரேஞ்சரிலிருந்து 30% ரேப்டரில் ஏற்றியிருக்கிறார்கள். இதனால், ஆழமான மணல்பகுதிகளிலும் டயர்கள் உள்ளே புதையாமல், மேலெழும்பிப் பறக்கும் வகையில் இதன் வடிவமைப்பு இருக்கிறது. லோடு அடிக்கும்போதும் ஸ்பீடாகப் போவதில் ரேப்டர், ‘வெலாசிராப்டர்’ டைனோசர் என்றே சொல்லலாம்.

இதில் குறை என்று பார்த்தால்… 2.0லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசலைச் சொல்கிறார்கள். இதன் விலை 85,400 அமெரிக்க டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 60 லட்ச ரூபாய். ஒரு கமர்ஷியல் வாகனத்துக்கு இந்த விலை அதிகம். ஆனால், ரஃப் டெரெய்ன்களைச் சமாளிப்பதில் ரேப்டர் புத்திசாலி.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி
லேண்ட்ரோவர் டிஸ்கவரி

லேண்ட்ரோவர் டிஸ்கவரி

நாடு: இங்கிலாந்து

விலை: சுமார் 1.25 கோடி

இந்த லேண்ட்ரோவர் டிஸ்கவரியை சாஃப்ட் ரோடு பார்ட்டிகள்தான் மிகவும் விரும்பி வாங்குகிறார்கள் என்கிறது ஒரு சர்வே. இது ஒரு ஃபேமிலி ஃப்ரெண்ட் 4வீல் டிரைவ் என்கிறார்கள் செல்லமாக. இதன் ரோடு பிரசன்ஸும், ஹைவேஸில் இதன் ஸ்டெபிலிட்டியும், ஹேண்ட்லிங்கும் ஆஹா! ஆனால், இதன் ஆஃப்ரோடு திறனைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்… ஆஹாஹா!

இது பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களிலும் இருக்கிறது. இரண்டுமே 6 சிலிண்டர்தான். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 215 மிமீ. Gravel எனும் சரளைக் கற்கள் முழுக்க நிறைந்த டெரெயினில் இந்த டிஸ்கவரி போன்ற கார்கள், சறுக்காமல்… நிலைகுலையாமல் ஓடுவதில் பெஸ்ட். இதன் ட்ராக்ஷன் அப்படி. மேலும் இதன் வாட்டர் வேடிங் ஆழம் சுமார் 900 மிமீ. அதாவது 90 செமீ வரை தண்ணீரிலும் புகுந்து புறப்பட்டு வரவல்லது. இதன் எல்லா மாடல்களிலும் ஏர் சஸ்பென்ஷன் இருப்பதால்… ஆஃப்ரோடு.. .சாஃப்ட்ரோடு என்று நம்மைப் பேதம் பார்க்காமல் சொகுசாக வைத்துக் கொள்கிறது டிஸ்கவரி. இதன் 4WD திறன், எல்லா ஆக்ஸில்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே பவரைக் கொடுப்பதால்… எக்ஸ்ட்ரா ட்ராக்ஷன் கிடைக்கிறது. இதனால் பனி, சகதி, சேறு, தண்ணீர், பாறை என்று எந்தச் சாலைகளிலும் நிலைகுலையாது டிஸ்கவரி. இதன் விலை சுமார் 1.15 கோடி முதல் 1.25 கோடி ரூபாய்.

பவுலர் புல்டாக் (Bowler Bulldog)
பவுலர் புல்டாக் (Bowler Bulldog)

பவுலர் புல்டாக் (Bowler Bulldog)

நாடு: இங்கிலாந்து

விலை: சுமார் 1 கோடி

பார்ப்பதற்கு ஏதோ Cowboy டிசைன் மாதிரி காமெடியாக இருக்கும் இந்த பவுலர் புல்டாக், ஒரு செமையான ஆஃப்ரோடு ட்ரக். ஜாகுவார் லேண்ட்ரோவர்தான் இதன் பேரென்ட் நிறுவனம். இதன் நிறுவனர் ஆண்ட்ரூ பவுலர். ஆஃப்ரோடுக்குப் பெயர் பெற்ற இந்த நிறுவனம், அவரின் பெயரிலேயே ட்ரக்குகளை உருவாக்க ஆரம்பித்து விட்டது. இது லண்டனில் மிகப் பிரபலம். இந்த புல்டாக்கை உலகின் Iconic Offroader என்கிறார்கள். ஒரு ராலி காரை அடிப்படையாக வைத்து டிசைன் செய்யப்பட்டிருக்கும் இதன் பவர் 567bhp. பெரிய ஏஎம்ஜி கார்களுக்கு இணையான பவர் இது. இதிலிருப்பது ரேஞ்ச்ரோவரில் இருக்கும் V8 ட்ரான்ஸ்ப்ளேன்டட் 5,000 சிசி இன்ஜின்.

இன்ஜின் மட்டுமில்லை; இதன் ரேக் அண்ட் பினியன் ஸ்டீயரிங்கும், பிரெம்போ பிரேக்ஸும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்டில் இருந்து பெறப்பட்டது. அப்படியென்றால், இதன் ஹேண்ட்லிங்கைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த சீட்களை Cobra Bucket Seats என்கிறார்கள். இது சாஃப்ட்ரோடிலேயே 130 கிமீ வேகம் பறக்கக் கூடியது. 4x4-யைப் பயன்படுத்தினால் 50 கிமீ–க்கு மேல் போக முடியாது. இதை ஆஃப்ரோடு செய்வது செம ஃபன்னாக இருக்கும். சுமார் 10 – 12 அடி உயரத்திலிருந்து கார் ஜம்ப் ஆனாலும், இதன் ஸ்ட்ரட்கள் இந்த காரை அப்படியே ஜம்மெனக் கீழிறங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ராலிகளில் கார்கள் ஜம்ப் ஆகும்தானே! அதற்காக இந்த டிசைன்.

இந்த 4 வீல் டிரைவ் ட்ரக்கை வைத்து வீலிங் பண்ணலாம்; ஸ்கிட் அடிக்கலாம்; புல்வெளிகளில் பறக்கலாம்; பாலைவனத்தில் மிதக்கலாம். அதுதான் பவுலர் புல்டாக்.

சுஸூகி ஜிம்னி
சுஸூகி ஜிம்னி

சுஸூகி ஜிம்னி

நாடு: ஜப்பான்

விலை: சுமார் 25 லட்சம்

நம் ஊருக்கு ஜிம்னி ‘அந்தா வருது; இந்தா வருது’ என்று ஜிமிக்கி வேலை காட்டுவது நமக்குத் தெரியும். இந்த ஜிம்னிதான் உலகின் மிகவும் லைட் வெயிட்டான ஆஃப்ரோடர். லேடர் ஃப்ரேம் சேஸியில் ஒரு கார் தயாராக வேண்டும் என்றால், குறைந்தது 1,500 கிலோவையாவது அது தாண்டிவிடும். ஆனால், இந்த லைட் வெயிட்டான 1,100 கிலோ எடை மட்டுமே கொண்ட குட்டி ஆஃப்ரோடரில் காடு, மேடு, மலை, பனி, மரங்கள் என்று எதில் வேண்டுமானாலும் புகுந்து வரலாம். இதன் லோ ரேஷியா 4வீல் டிரைவ் கியர்பாக்ஸ்… காரின் ட்ராக்ஷன் சக்தியைக் கொப்புளிக்கும். இதில் இத்தனைக்கும் டிஃப்ரன்ஷியல் லாக்குகள் கிடையாது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இது எடை குறைந்த ஆஃப்ரோடர் மட்டுமில்லை; உலகின் விலை குறைந்த ஆஃப்ரோடரும் இதுவே! இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 22 - 25 லட்சம் வரும்.

2 கோடி ரூபாய் லேண்ட்க்ரூஸருக்கும், 25 லட்ச ரூபாய் ஜிம்னிக்கும் போட்டி வைத்தபோது, ஒரு ஜீப் ரேங்ளர் போல் செயல்பட்டதாம் ஜிம்னி. இதன் 3 லிங்க் Rigid ஆக்ஸில் சஸ்பென்ஷன், மாறி மாறி வேலை பார்த்து அற்புதமான கிரிப்பையும் ஆஃப்ரோடு திறனையும் வழங்குகிறது. வழுக்கும் ஏரியாக்களில், வழுக்கும் டயர்களுக்கு தானாக பிரேக் அப்ளை ஆகி, மற்ற 2 வீல்களுக்கு டார்க்கை ரீ–டிஸ்ட்ரிப்யூட் செய்கிறது. இதன் டிப்பார்ச்சர்/ரேம்ப் பிரேக்ஓவர், அப்ரோச் ஆங்கிள்கள் முறையே 49/28/37 டிகிரிகள்.

ஃபோர்டு பிரான்க்கோ
ஃபோர்டு பிரான்க்கோ

ஃபோர்டு பிரான்க்கோ

நாடு: அமெரிக்கா

விலை: சுமார் 40 லட்சம்

நமது மோ.வி நடத்தும் கார் டிசைன் வொர்க்ஷாப்பின் ஹீரோ இந்த ஃபோர்டு பிரான்க்கோதான். பிரான்க்கோவைப் பார்த்தாலே பிடிக்கும். இதை ஒரு மாடர்ன் ஜீப் ரேங்ளர் என்றுதான் செல்லமாக அழைக்கிறார்கள். அமெரிக்கச் சாலைகளுக்காகவே ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்டது இந்த ஃபோர்டு பிரான்க்கோ. அதனாலேயோ என்னவோ – இது ஐரோப்பா, லண்டன் போன்ற நாடுகளுக்கு ஏற்ப வலது பக்க ஸ்டீயரிங்கில் இது விற்பனையில் இல்லை. ஐரோப்பாவில் வசிக்கும் பிரான்க்கோ பிரியர்கள், இதற்காகவே அரசாங்கத்துக்குக் கப்பம் கட்டி இதை இறக்குமதி செய்து ஓட்டுகிறார்களாம்.

ரேஞ்சர் பிக்அப் ட்ரக்கில் இருக்கும் அதே லேடர் ஃப்ரேம் சேஸிதான் இந்த பிரான்க்கோவிலும். இதில் லைவ் ரியர் ஆக்ஸிலும், இண்டிபெண்டன்ட் முன் பக்க சஸ்பென்ஷனும் இருக்கின்றன. ட்ரக்காகவும் இருக்கணும்; காராகவும் இருக்கணும் என்பதால், இதில் ஓப்பன் டைப்பும் உண்டு; ஹார்டு டாப் வசதியும் கொடுத்திருக்கிறார்கள். இதில் இன்லைன் V6, 4 சிலிண்டர் இன்ஜின் இருக்கிறது. பக்கா ஆஃப்ரோடராக மட்டுமே இருக்க வேண்டும் என்பதால், ஆன்ரோடு ரிஃபைன்மென்ட் பெரிதாக பிரான்க்கோவில் எதிர்பார்க்க முடியாது. இதன் அப்ரோச் மற்றும் டிப்பார்ச்சர் ஆங்கிள் இரண்டுமே 30 டிகிரி. இது ரேஞ்ச்ரோவர் கார்களுக்கு இணையாக சுமார் 850 மிமீ வாட்டர் வேடிங் தன்மையும் உண்டு. இதில் உள்ள ஹெவி டியூட்டி ஸ்டீயரிங் ரேக், எப்படிப்பட்ட பாறைகளில் சிக்கினாலும் ஜாலியாகத் திரும்புமாம். இதன் Fox 2.5 இன்ச் இன்டர்னெல் பைபாஸ் டேம்ப்பர்கள், ஆஃப்ரோடின் அற்புதம். இது அமெரிக்காவில் எல்லோராலும் விரும்பப்படும் விலை குறைந்த ஒரு ஆஃப்ரோடர். சுமார் 32,000 டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம் மட்டுமே! இதில் Raptor, Everglades, Wildtrak என்று பல வேரியன்ட்கள் உண்டு.

சாங்யாங் முஸோ கிராண்ட்
சாங்யாங் முஸோ கிராண்ட்

சாங்யாங் முஸோ கிராண்ட்

நாடு: தென் கொரியா

விலை: சுமார் 38 லட்சம்

4வீல் டிரைவ்: பார்ட் டைம்

சாங்யாங்… இந்தக் கொரியப் பெயரை எங்கேயோ கேள்விப்பட்ட பேர் மாதிரி இருக்கே என்கிறீர்களா? மஹிந்திரா ஷோரூமுக்குப் போனால்… கேட்பாரற்று ‘ரெக்ஸ்ட்டன்’ என்றொரு ஒரு எஸ்யூவி இருக்குமே! நம்மூரில்தான் இது எடுபடவில்லை. ஆனால், குளோபலாகத் திரியும் ஆஃப்ரோடர்களில் ரெக்ஸ்ட்டனுக்குப் பிறகு முஸோ கிராண்ட் என்றொரு எஸ்யூவி முக்கியமானது. கொரியாவைச் சேர்ந்த சாங்யாங் நிறுவனத்தின் இந்த ரெக்ஸ்ட்டனும், முஸோ கிராண்டும் பெஸ்ட் எர்கானமிக்ஸ் டிசைனுக்கான விருதை வாங்கிய கார்கள். முஸோ கிராண்ட், நம் ஊர் இசுஸூ, டாடா ஸெனான் மாதிரி ஒரு பக்கா லோடு அடிக்கும் ட்ரக். ஆனால், அதைவிட லேடர் ஃப்ரேம் சேஸியில் தயாரான ஒரு விலை குறைந்த ஆஃப்ரோடர். Quad Frame என்கிற கான்செப்ட்டில் இதை டிசைன் செய்திருக்கிறார்கள். சாலைச் சத்தங்களைக் குறைப்பதற்காகவும், விபத்தின்போது உள்ளே பயணிகளுக்குத் தாக்கத்தைக் குறைப்பதற்காகவும் இந்த இன்ஜீனியரிங் கான்செப்ட். இதன் கி.கிளியரன்ஸ் 220 மிமீ.

இதில் 201 bhp பவர் கொண்ட, 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் இருக்கிறது. 2.0 லிட்டர் பெட்ரோலும் உண்டு. பொதுவாக, சாலைகளில் ரியர் வீல் டிரைவில் ஓடும் முஸோவில், 4 வீல் டிரைவ் ஆப்ஷனை ஆன் செய்தால்… ஆஃப்ரோடராக அவதாரம் எடுக்கிறது. 4வீல் டிரைவிலேயே 4L, 4H என 2 மோடுகளை டிரைவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 4L கியர் மோடு, வேற லெவல் பண்ணும். மேடு பள்ளங்களில் விருட்டென எழும். இதில் 3 டன் வரை எடை கொண்ட வாகனங்களை Tow செய்யும்படி கிண்ணென, ஹை ஸ்ட்ரென்த் ஸ்டீல் உலோகத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது முஸோ. சில ரஃப் ஆன ரோடுகளில் பயணிக்கும்போது, இதில் உள்ள 5 லிங்க் ரியர் சஸ்பென்ஷன் செட்அப், மோசமான சாலைகளையும் சுகமான சாலைகளாக மாற்றுகிறது. ஆஃப்ரோடு டிரக் ஆச்சே… லாக்கிங் டிஃப்ரன்ஷியல் இல்லாமலா? வீல்கள் ஸ்லிப் ஆகும்போது, டிஃப் லாக் செய்தால்… ட்ராக்ஷன் கொப்புளிக்கிறது.

(ஆஃப்ரோடர்களின் அற்புதம் எப்பூடீ?)