ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

இந்தியாவின் டாப் - 10 பாதுகாப்பான கார்கள்!

பாதுகாப்பான கார்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பாதுகாப்பான கார்கள்

டாப் 10 பாதுகாப்பான கார்கள்

என்னதான் ஸ்டைலா இருக்கட்டும்; மைலேஜ் அதிகமாகவே தரட்டும்; எனக்குப் பாதுகாப்புதாங்க முக்கியம்.

சேஃப்டி ஃபர்ஸ்ட்’’ என்று சொல்லும் வாடிக்கையாளர்கள் பலர் உண்டு. அவர்கள் சொல்வதுதான் சரியும்கூட! காற்றுப்பைகள், ஏபிஎஸ், EBD, ஆல்வீல் டிஸ்க், ட்ராக்ஷன் கன்ட்ரோல் என எத்தனை பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், காரின் பில்டு குவாலிட்டி என்றொரு விஷயம் இருக்கிறது.

சேஃப்டி ஃபர்ஸ்ட்
சேஃப்டி ஃபர்ஸ்ட்

குளோபல் என்கேப் இதைத்தான் சோதனை செய்கிறது. குளோபல் என்கேப்பின் க்ராஷ் டெஸ்ட்டில் ஒரு கார் எத்தனை ஸ்டார் வாங்குகிறது, எத்தனை பாயின்ட்ஸ் எடுக்கிறது என்பதுதான், பாதுகாப்பின் முதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஸ்டார் ரேட்டிங் இருப்பதைப்போல், கார்களுக்கும் ஸ்டார் ரேட்டிங் உண்டு. டம்மியான உருவ பொம்மைகளை வைத்து, நிஜ காரை மோதவிட்டு - இளைஞர்களுக்கு, குழந்தைகளுக்கு இந்த காரில் எவ்வளவு பாதுகாப்பு என்று பிட்டுப் பிட்டு வைக்கிறது குளோபல் என்கேப். NCap-ன் க்ராஷ் டெஸ்ட்டில் இந்தப் பத்து கார்கள்தான் இப்போதைக்கு இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்! இதில் டியாகோ, டிகோர், அல்ட்ராஸ் தவிர மற்ற எல்லாமே பழைய மாடல்கள் என்பதையும் சொல்லிக் கொள்கிறோம்.

டாடா டியாகோ, டாடா டிகோர் - விலை: ரூ. 5.5 – 8.5 லட்சம், ஸ்டார் ரேட்டிங்: 4/5 (இரண்டுக்குமே)

முதலில் டாடாவுக்குக் கைகுலுக்கி விடுங்கள். ஹேட்ச்பேக், காம்பேக்ட் செடான் இரண்டு கார்களிலும் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கி அசத்திவிட்டது டாடா. டியாகோ, டிகோர் இரண்டு கார்களுமே பாயின்ட்டுகளிலும் ஒரே அளவு. (12.52/17). குழந்தைகள் பாதுகாப்பிலும் இரண்டுமே 3 ஸ்டார் ரேட்டிங். (34.15/49). க்ராஷ் டெஸ்ட்டின்போது, இரண்டிலுமே Isofix குழந்தைகள் சீட் மவுன்ட் இல்லாததைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை குளோபல் என்கேப் நிறுவனம்.

டாடா டியாகோ
டாடா டியாகோ

`விலை குறைந்த, அதிகம் பாதுகாப்பான ஒரு ஹேட்ச்பேக் கார் வேண்டும்’ என்று மோட்டார் கிளினிக்கில் யாருக்கேனும் கேள்வி கேட்கும் யோசனை இருந்தால், அவர்களுக்கு டியாகோவை ரெக்கமண்ட் செய்கிறோம். டிகோர் செடானின் விலை சுமார் 7.15-ல் இருந்து ஆரம்பிக்கிறது.

ஃபோர்டு ஆஸ்பயர்: விலை: ரூ. 6.5 – 10 லட்சம் ஸ்டார் ரேட்டிங்: 3/5

2017-ல்தான் ஆஸ்பயரை க்ராஷ் டெஸ்ட் செய்தார்கள். 3 ஸ்டார் ரேட்டிங் வாங்கியது ஆஸ்பயர். இதில் ஒரு விஷயம் என்னவென்றால், சீட்பெல்ட் ப்ரீடென்ஷனர், ஏபிஎஸ் போன்ற சின்னப் பாதுகாப்பு அம்சங்கள்கூட அப்போது இல்லை. Isofix குழந்தைகள் சீட் மவுன்ட்கூட இல்லாத ஆஸ்பயர், குழந்தைகள் பாதுகாப்பில் 2 ஸ்டார் வாங்கியதும் ஆச்சரியம்தான். (14.22/49). பிறகு, சில பாதுகாப்பு வசதிகளுடன் 2018-ல்தான் ஆஸ்பயரின் ஃபேஸ்லிஃப்ட் வந்து, டெஸ்ட் செய்யப்பட்டது. இதன் ஸ்கோர் அத்தனை மோசமாக இல்லை. டிசையருக்குப் போட்டியாக இருக்கும் ஆஸ்பயர், இப்போது BS-6 இன்ஜினில் கிடைக்கிறது.

ஃபோர்டு ஆஸ்பயர்
ஃபோர்டு ஆஸ்பயர்

மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா- விலை: ரூ. 8.5–13.5 லட்சம் ஸ்டார் ரேட்டிங்: 4/5

மாருதி கார்களில் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய பிரெஸ்ஸா பற்றித்தான் இப்போது ஊரெல்லாம் பேச்சு. அதுவும் பாயின்ட்டுகளைக் கவனியுங்கள். (12.51/17). ஆனால், குழந்தைகள் பாதுகாப்பில் 2 ஸ்டார்தான் வாங்கியிருக்கிறது பிரெஸ்ஸா. (49-க்கு 17.93தான்).

மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா
மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா

18 மாதக் குழந்தை பொம்மையை வைத்துச் சோதனை செய்தபோது, குழந்தையின் தலையிலும் தோள்பட்டைகளிலும் செம அடி. அதனால்தான் இந்த குறைந்த ஸ்டார் ரேட்டிங். இரட்டைக் காற்றுப்பைகள், ஏபிஎஸ், EBD, Isofix குழந்தைகள் சீட் மவுன்ட் போன்றவை எர்டிகாவில் இப்போது ஸ்டாண்டர்டு பாதுகாப்பு வசதிகள்.

மாருதி சுஸூகி எர்டிகா - விலை: ரூ. 9.5 -13 லட்சம் ஸ்டார் ரேட்டிங்: 3/5

சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் கரன்ட் ஜெனரேஷன் எர்டிகா, அடல்ட்ஸ் சேஃப்டியில் (9.25/17) 3 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. ரேட்டிங் 3-ஆக இருந்தாலும், பாயின்ட்ஸ் கன்னாபின்னாவெனக் குறைந்ததற்குக் காரணம் இருக்கிறது. டெஸ்ட்டின்போது, பாடி ஷெல், ஃபுட்போர்டு போன்றவை ஸ்டெபிலிட்டியில் சொதப்பியதும், கோ-டிரைவரின் சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர் சரியாக வேலை செய்யாததும்தான் காரணம்.

மாருதி சுஸூகி எர்டிகா
மாருதி சுஸூகி எர்டிகா

அதேநேரம் குழந்தைகள் பாதுகாப்பில் 3 ஸ்டார் வாங்கி அசத்திவிட்டது எர்டிகா. இரட்டைக் காற்றுப்பைகள், ஏபிஎஸ், சீட் பெல்ட் ரிமைண்டர்ஸ், Isofix குழந்தைகள் சீட் மவுன்ட், ரியர் பார்க்கிங் சென்ஸார் எனக் கலக்கும் பெட்ரோல் எர்டிகாவில் CNG வேரியன்ட்டும் உண்டு.

ஃபோக்ஸ்வாகன் போலோ - விலை: ரூ.7.65 –11.75 ஸ்டார் ரேட்டிங்: 4/5

ஃபோக்ஸ்வாகன் என்றாலே பில்டு குவாலிட்டிதான் என்று சின்னக் குழந்தையைக் கேட்டாலே சொல்லிவிடும். ஆனால், பாதுகாப்பில் கஞ்சத்தனம் காட்டும் ஃபோக்ஸ்வாகனைச் சுட்டிக்காட்டவும் தவறக்கூடாது. ஏபிஎஸ், சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற அடிப்படைப் பாதுகாப்பு வசதிகள்கூட அதில் இல்லை.

ஃபோக்ஸ்வாகன் போலோ
ஃபோக்ஸ்வாகன் போலோ

அப்படி இருந்தும் ஃபோக்ஸ்வாகன் போலோ 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருக்கிறது என்றால், அதன் கட்டுமானத்தை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். பெரியவர்கள் பாதுகாப்பில் 17-க்கு 12.54 பாயின்ட்ஸும், குழந்தைகள் பாதுகாப்பில் 49-க்கு 29.91 பாயின்ட்ஸும் (3 ஸ்டார்) வாங்கியிருக்கிறது போலோ. டெஸ்ட்டில் Isofix குழந்தைகள் சீட் மவுன்ட்கூட இல்லாமல் இருந்த போலோவில் இப்போது இது ஸ்டாண்டர்டு ஆகியிருக்கிறது. மேலும் டாப் மாடலில் ட்ராக்ஷன் கன்ட்ரோல், ESC, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் கேமரா-சென்ஸார் என்று கலக்குகிறது போலோ.

மஹிந்திரா மராத்ஸோ - விலை: ரூ. 11.5–16.5 லட்சம் ஸ்டார் ரேட்டிங்: 4/5

பாதுகாப்பு விஷயத்தில், `மேட்-இன் இந்தியாவா’ எனும்போது, மராத்ஸோவை யாரும் நம்பவில்லை. ஆனால், Made in India எம்பிவி செக்மென்ட்டில், 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய முதல் கார், மராத்ஸோ என்பது மஹிந்திராவுக்கு மட்டுமில்லை; நமக்கும் பெருமை. அடல்ட் சேஃப்டியில் 17-க்கு 12.85 பாயின்ட்ஸும், குழந்தைகள் பாதுகாப்பில் 49-க்கு 22.22 பாயின்ட்ஸும் எடுத்துள்ளது மராத்ஸோ.

மஹிந்திரா மராத்ஸோ
மஹிந்திரா மராத்ஸோ

குழந்தைகள் விஷயத்தில் 2 ஸ்டார் ரேட்டிங்தான். இரட்டைக் காற்றுப்பைகள், ஏபிஎஸ், சீட் பெல்ட் ரிமைண்டர், ப்ரீ-டென்ஷனர், Isofix குழந்தைகள் சீட் மவுன்ட் என எல்லா வசதிகளையும் பேஸ் வேரியன்ட்டிலேயே தருகிறது மஹிந்திரா. ஆம், இப்போதைக்கு எர்டிகாவை விட, லாஜியை விட பாதுகாப்பான எம்பிவி என்றால், மராத்ஸோதான். மராத்ஸோவில் BS-6 மாடல் வந்தால், இன்னும் விலை ஏறலாம்.

ரெனோ டஸ்ட்டர் - விலை: சுமார் ரூ. 9.5- 12 லட்சம் ஸ்டார் ரேட்டிங்: 3/5

பார்ப்பதற்கு கும்மென்று இருக்கும் டஸ்ட்டர், மூன்று ஸ்டார் ரேட்டிங்குடன் டாப்-10 லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கிறது. அதாவது, அடல்ட் சேஃப்டியில்தான் 3 ஸ்டார். (9.0/17) இதுவே குழந்தைகள் பாதுகாப்பில் 2 ஸ்டார்கள்தான். (17.75/49). 2017-ல் டிரைவர் காற்றுப் பை மட்டும் கொண்ட டஸ்ட்டரை வைத்து க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது.

ரெனோ டஸ்ட்டர்
ரெனோ டஸ்ட்டர்

இதில் காற்றுப்பைகளே இல்லாத மாடல் `ஜீரோ’ ஸ்டார் ரேட்டிங் பெற்றது வருத்தத்துக்குரிய விஷயம். இப்போது பெட்ரோல் மாடலில் மட்டும்தான் கிடைக்கும் டஸ்ட்டரில் முன் பக்கம் இரட்டைக் காற்றுப்பைகள், ஏபிஎஸ், பாதசாரிகள் பாதுகாப்பு விதிகள், இபிடி, ரியர் பார்க்கிங் சென்ஸார்ஸ் போன்ற வசதிகளைச் சேர்த்திருக்கிறது ரெனோ.

டாடா அல்ட்ராஸ் - விலை: ரூ. 6.15–10.75 லட்சம் ஸ்டார் ரேட்டிங்: 5/5

டாடாவை இனி பாதுகாப்பு விஷயத்தில் சந்தேகப்பட வேண்டியதில்லை என்பதை நிரூபிக்க வந்த அடுத்த மாடல், அல்ட்ராஸ். பெரியவர்கள் பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் (16.13/17) வாங்கிய அல்ட்ராஸ், குழந்தைகள் பாதுகாப்பில் 3 ஸ்டார்தான் (29/49) வாங்கியிருக்கிறது. அதற்குக் காரணம், பின் பக்க பேக்ரெஸ்ட் சொதப்பியதுதான்.

டாடா அல்ட்ராஸ்
டாடா அல்ட்ராஸ்

3 வயதுக் குழந்தை பொம்மையை வைத்துச் சோதனை செய்ததில், குழந்தை பொம்மை காரின் இன்டீரியரில் மோதி, தலையில் காயம் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டுகிறது குளோபல் என்கேப். இரட்டைக் காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி, ரியர் பார்க்கிங் சென்ஸார், சீட் பெல்ட் ரிமைண்டர், Isofix குழந்தைகள் சீட் மவுன்ட் போன்றவை அல்ட்ராஸில் ஸ்டாண்டர்டு. சந்தேகம் இல்லை – மார்க்கெட்டில் இப்போதைய பாதுகாப்பான ஹேட்ச்பேக் – அல்ட்ராஸ்தான்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300
மஹிந்திரா எக்ஸ்யூவி300

மஹிந்திரா எக்ஸ்யூவி300 - விலை: ரூ. .10.5 – 14.5 லட்சம் ஸ்டார் ரேட்டிங்: 5/5

குளோபல் என்கேப் டெஸ்ட்டின்படி, இந்தியாவின் பாதுகாப்பான கார் – மஹிந்திராவின் எக்ஸ்யூவி300தான். பெரியவர்கள் பாதுகாப்பில் ஸ்கோர் அள்ளிவிட்டது இந்தச் சின்ன எக்ஸ்யூவி. (16.42/17). சில கார்கள், சாதாரண ரேட்டிங்கிலேயே திணற, குழந்தைகள் பாதுகாப்பிலேயே 4 ஸ்டார் வாங்கி தலை நிமிர வைத்திருக்கிறது எக்ஸ்யூவி300. (49/37.44). அது மட்டுமில்லை; கடைசியாக குளோபல் என்கேப்பின் ‘Safer Choice’ எனும் விருதையும் வாங்கிவிட்டது இந்த எஸ்யூவி. W4, W6 – இவை இரண்டும்தான் பேஸ் வேரியன்ட்கள். இவற்றிலேயே இரட்டைக் காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி, ரியர் டிஸ்க் பிரேக்ஸ், Isofix குழந்தைகள் சீட் மவுன்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், ரியர் பார்க்கிங் சென்ஸார் போன்றவை ஸ்டாண்டர்டு. டாப் மாடல்களான W8, W8 (O)-வில் 7 காற்றுப்பைகள், முன் பக்க பார்க்கிங் சென்ஸார், ESP, TPMS, ரியர் பார்க்கிங் கேமரா என்று இந்தியாவின் பாதுகாப்பான எஸ்யூவியாக வலம் வருகிறது எக்ஸ்யூவி 300.

டாடா நெக்ஸான்- விலை: ரூ. 8.5–14.25 லட்சம் ஸ்டார் ரேட்டிங்: 5/5

நெக்ஸானை எஸ்யூவி என்றுதான் அழைத்தார்கள். காம்பேக்ட்டாக இருந்தாலும், எஸ்யூவிபோலவே எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடியது நெக்ஸான். பாதுகாப்பிலும்தான். முதன் முதலாக டெஸ்ட் செய்யப்பட்டபோது, 4 ஸ்டார் வாங்கியது (13.56/17) நெக்ஸான். உற்சாகமான டாடா, சில அப்கிரேடுகளுடன் இரண்டாவது ரவுண்டு டெஸ்ட்டுக்கு அனுப்பியது. இப்போது 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய இந்தியாவின் முதல் கார், டாடா நெக்ஸான். (16.06/17). சைடு இம்பாக்ட், அதாவது பக்கவாட்டு க்ராஷ் சோதனையிலும் (UN95) சொல்லியடித்துவிட்டது நெக்ஸான். குழந்தைகள் பாதுகாப்பில் 3 ஸ்டார். (25/49). டூயல் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ், Isofix குழந்தைகள் சீட் மவுன்ட் எல்லாவற்றையும் ஸ்டாண்டர்டு ஆக்கிவிட்டது டாடா. டெஸ்ட் செய்யப்பட்டது ஃபேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய மாடல் என்பதை நினைவில் கொள்ளவும். இனி பாதசாரிகள் பாதுகாப்பிலும் பட்டையைக் கிளப்ப வருகிறது நெக்ஸான்.

டாடா நெக்ஸான்
டாடா நெக்ஸான்