Published:Updated:

Innova Crysta: இனோவா காரில் இனி டீசல் கிடையாது; இனோவாவில் புது மாடல் Hycross வருது!

Innova Crysta

இனோவா டீசலுக்கு டொயோட்டா முற்றுப்புள்ளி வைத்ததற்கு ஒரு முக்கியமான காரணம் இதுதான். அதாவது, 2023–க்குப் பிறகு இனோவாவில் ஹைபிரிட் மாடல்களைக் கொண்டு வரப் போகிறதாம் டொயோட்டா.

Innova Crysta: இனோவா காரில் இனி டீசல் கிடையாது; இனோவாவில் புது மாடல் Hycross வருது!

இனோவா டீசலுக்கு டொயோட்டா முற்றுப்புள்ளி வைத்ததற்கு ஒரு முக்கியமான காரணம் இதுதான். அதாவது, 2023–க்குப் பிறகு இனோவாவில் ஹைபிரிட் மாடல்களைக் கொண்டு வரப் போகிறதாம் டொயோட்டா.

Published:Updated:
Innova Crysta
ஒரு கார் பெட்ரோல் பங்க்குக்குள் நுழைந்தால்… ‘பெட்ரோலா, டீசலா சார்’ என்பார் பங்க் ஊழியர். இதுவே ஒரு இனோவா கார் பங்க்கில் நுழைந்தால்… நேராக டீசல் லைன்அப்பில் நிறுத்தச் சொல்லிக் கையசைப்பார் ஊழியர். அந்தளவுக்கு இனோவா என்றாலே டீசல்தான் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். காரணம், இனோவாவில் டீசல்தான் பிரபலம். ‘பெட்ரோல்ல இனோவா கார் இருக்கா என்ன’ என்பார்கள்.

டிரைவர்கள்; தனவான்கள்; அரசியல்வாதிகள் என்று எல்லோரது சாய்ஸுமே ‘தட தட’ டீசல் இனோவாவாகத்தான் இருந்தது. அப்படிப்பட்ட இனோவாவின் டீசல் மாடலின் புக்கிங்குகளைத் தடாலடியாக நிறுத்தச் சொல்லி, இந்தியாவில் உள்ள தனது அத்தனை டீலர்களுக்கும் அறிவிப்பு செய்திருக்கிறது டொயோட்டா. ஆம், இனோவாவில் இனி டீசல் மாடல் வரப் போவதில்லை. ஆரம்பகட்டமாக, தனது வலைதளத்திலிருந்து டீசல் புக்கிங்குகளுக்கான விஷயங்களை நீக்கியிருக்கிறது.

சென்னையில் உள்ள ஒரு மிகப் பெரிய டொயோட்டா ஷோரூம் மேலாளரைத் தொடர்பு கொண்டு, இது உண்மையா என்று விசாரித்தபோது, ‘‘சொன்னால் நம்பமாட்டீர்கள், இந்த அறிவிப்பு வெளியான நேற்றிலிருந்தே தொடர்ந்து எங்கள் ஷோரூமுக்கு மட்டுமே 50 புக்கிங்குகள் வந்தன. எல்லாவற்றையும் கேன்சல் செய்து விட்டோம்!’’ என்று வருத்தத்தோடு சொன்னார்.

ஏன் இந்தத் திடீர் முடிவை எடுத்தது டொயோட்டா?

ஏற்கெனவே மாசுக் கட்டுப்பாட்டைத் தீவிரமாக வலியுறுத்தி வந்த மத்திய அரசு, 2020–ல் BS-6 நார்ம்ஸைக் கொண்டு வந்த பிறகு, பல நிறுவனங்கள் டீசல் மாடலை நிறுத்தி விட்டன. அதாவது, இந்த BS-6 நார்ம்ஸைத் தாண்டி ஒரு கார் தயாரிப்பு நிறுவனம், 80% பெட்ரோல் வாகனங்களும், 20% மட்டுமே டீசல் வாகனங்களும் தயாரிக்க வேண்டும் என்பதுதான் அரசின் வேண்டுகோள். ஆனால், டொயோட்டாவுக்கு மட்டும் தனி விதிவிலக்கு உண்டு. ஏனென்றால், டொயோட்டாவின் டீசல் இன்ஜின் பற்றியும், அதன் தரமும் பற்றியும் உலகுக்கே தெரியும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மற்றொரு விஷயம் – BS-6 –க்கு ஏற்றபடி டீசல் இன்ஜின் ப்ளாட்ஃபார்மை மாற்ற வேண்டுமென்றால், செலவு எகிறியது. இதனாலேயே பல நிறுவனங்கள், எங்களுக்கு அந்த 20%கூட வேண்டாம் என்று டீசல் கார்களையே நிறுத்தி விட்டன. அப்படித்தான் டஸ்ட்டரில் டீசலை ரெனோ நிறுத்தியபோதும் கதறினார்கள்; மாருதியில் புகழ்பெற்ற ஃபியட்டின் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின் நின்றபோதும் சோகமான மெளனம் நிலவியது வாடிக்கையாளர்கள் மத்தியில். ஆனால், நிறுவனங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. போனா போகட்டும் என்று ஒன்றிரண்டு டீசல் வேரியன்ட்களை வைத்திருக்கின்றன ஹூண்டாய், மஹிந்திரா, டாடா போன்ற நிறுவனங்கள்.

இனோவா க்ரிஸ்ட்டா
இனோவா க்ரிஸ்ட்டா

ஆனால், டொயோட்டா மட்டும் 60% டீசல் கார்களைத் தயாரித்துக் கொண்டிருந்தது. இப்போது தடாலென டீசல் இனோவா புக்கிங் செய்ய வந்தவர்களுக்கு, இப்படி ஒரு அதிர்ச்சிச் செய்தியைச் சொல்லியிருக்கிறது டொயோட்டா. இந்த ஆகஸ்ட் மாதம் வரை புக் செய்தவர்களுக்கு மட்டும்தான் இனோவா டீசல் கிடைக்க வாய்ப்புண்டு. அதற்குமே சிப் தட்டுப்பாடு, இன்ஜின் தயாரிப்புப் பற்றாக்குறை என்று டெலிவரி கொடுக்க சிரமப்படுகிறதாம் டொயோட்டா. இப்போது டொயோட்டாவில் 2.7லி பெட்ரோல் இன்ஜின் மட்டும்தான் புக் செய்ய முடியும்.

ஆனால், இனோவா டீசலுக்கு டொயோட்டா முற்றுப்புள்ளி வைத்ததற்கு ஒரு முக்கியமான காரணம் இதுதான். அதாவது, 2023–க்குப் பிறகு இனோவாவில் ஹைபிரிட் மாடல்களைக் கொண்டு வரப் போகிறதாம் டொயோட்டா. அதற்கான ஆயத்தங்களை இப்போதே பெங்களூருவில் உள்ள தனது பிடதி தொழிற்சாலையில் தொடங்கி விட்டதாம். காரணம், இந்தியாவில்… இல்லை உலகிலேயே ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவது டொயோட்டதான். மாருதியின் புத்தம் புது கிராண்ட் விட்டாராவுக்கே தனது ஹைபிரிட்டைத்தான் கொடுத்து உதவியிருக்கிறது டொயோட்டா.

டொயோட்டா
டொயோட்டா

ஹைபிரிட் தொழில்நுட்பம் என்பது மைலேஜுக்கும் சிக்கனத்துக்கும் பெயர் பெற்றது. டொயோட்டா ஹைரைடர் ஹைபிரிட் காரின் மைலேஜ் சுமார் 26–க்கும் மேல் என்கிறார்கள். ஒரு காஸ்ட்லி காரில் இத்தனை மைலேஜ் என்பது சாதாரண விஷயமில்லைதானே!

அதற்கான முன்னெடுப்பாக, இனோவாவில் ஹைக்ராஸ் (Hycross) என்றொரு மாடலை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில்… இல்லை முடிந்தால் இந்தத் திருவிழாக் காலத்திலேயே லாஞ்ச் செய்யவிருக்கிறதாம் டொயோட்டா. இந்த ஹைக்ராஸ், டொயோட்டாவின் ஃபெமிலியரான TNGA-C எனும் ப்ளாட்ஃபார்மில் ரெடியாக இருக்கிறது. இது பெட்ரோல் ஹைபிரிட்டில் மட்டும்தான் வரும்.

ஆரம்பத்தில் ஹைபிரிட்… அப்புறம் எலெக்ட்ரிக்… இதுதான் டொயோட்டாவின் திட்டமும்கூட! அப்படியென்றால், இந்த ஃபார்ச்சூனர்… லெஜெண்டர், ஹைலக்ஸ்… இந்த டீசல் வண்டிகளுக்கும் இதே கதிதானா!