
அறிமுகம்: டொயோட்டா இனோவா ஹைக்ராஸ்

அடிக்கடி டொயோட்டா இப்போதெல்லாம் தலைப்புச் செய்திகளில் அடிபடுகிறது. முதலில் இனோவா டீசலின் தயாரிப்பை நிறுத்தப் போவதாகச் சொன்னது; பிறகு அதை மறுத்தது; இப்போது மறுபடியும் இனோவா டீசலின் விற்பனை எந்த ஷோரூம்களிலும் இல்லை. பெட்ரோல் மட்டும்தான்.
இந்த நிலையில் இனோவாவின் புது வெர்ஷனின் டீஸரை வெளியிட்டிருக்கிறது டொயோட்டா. அதற்குப் பெயர் டொயோட்டா இனோவா ஹைக்ராஸ். டீஸரை வெளியிட்ட கையோடு நவம்பர் 25–ல் இருந்து இதன் புக்கிங்கையும் தொடங்கிவிட்டது டொயோட்டா. நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது, சில ஆயிரம் ஹைக்ராஸ்கள் புக்கிங்குகள் நடந்திருக்கலாம்.
இந்தோனேஷியாவில் Zenix என்ற பெயரில் இதன் அறிமுகம் நடந்ததைத் தொடர்ந்து, இந்த ஹைக்ராஸ் காரின் அறிமுகம் பற்றிப் பார்க்கலாம்.
பெயரில் இனோவா எனும் பேட்ச் இருந்தாலும், இது டொயோட்டாவின் புத்தம் புது மாடல். இப்போது விற்பனையில் இருக்கும் இனோவா க்ரிஸ்ட்டா, IMV Architecture–ல் ரியர்வீல் டிரைவ் செட்அப் கொண்ட, லேடர் ஆன் ஃப்ரேமில் தயாரிக்கப்படும் எம்யூவி. ஆனால், அப்படியே எதிர்ப்பதமாக இந்த ஹைக்ராஸ், ஃப்ரன்ட் வீல் டிரைவாக… மோனோகாக் சேஸி ப்ளாட்ஃபார்மில் ரெடியாகி வரவிருக்கிறது. இது டொயோட்டாவின் மாடுலர் TNGA-C ப்ளாட்ஃபார்மில் ரெடியாகிறது. இப்போதைய கரன்ட் ஜெனரேஷன் மாடலான கொரோலா இந்த ப்ளாட்ஃபார்மில்தான் தயாராகி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. லேடர் ஆன் ஃப்ரேம் கட்டுமானத்தைவிட, இந்த மோனோகாக் சேஸி தயாரிப்பில் கேபின் ரூம் கொஞ்சம் தாராளமாகக் கிடைக்கும். மேலும், இது க்ரிஸ்ட்டாவைவிட இன்னும் ஒரு ப்ரீமியம் கார் லுக்கில் கலக்கும்.
இப்போது எஸ்யூவிகளுக்குத்தான் வாடிக்கையாளர்களிடம் மரியாதை. அந்த ட்ரெண்டில்தான் இணைகிறது டொயோட்டா. ஆம், இதை ஒரு எஸ்யூவி செக்மென்ட்டில்தான் களமிறக்குகிறது டொயோட்டா. 3 வரிசை எம்பிவி வாடிக்கையாளர்களைத் தாண்டி, எஸ்யூவி விரும்பிகளுக்கும் பிடிக்கும் வகையில் இந்த ஹைக்ராஸ் கிண்ணென்ற கட்டுமானத்தோடும், நல்ல ஸ்டைலிங்கோடும் வரவிருக்கிறது. இதை இனோவா க்ரிஸ்ட்டாவைவிட பெரிதாகக் கொண்டு வருவதுதான் டொயோட்டாவின் திட்டம். சுமார் 4.7 மீட்டர் நீளத்தில், படகுபோல் இருக்கும் இந்த ஹைக்ராஸின் வீல்பேஸ் 2,850 மிமீ. இதனால், இடவசதிக்குப் பஞ்சமே இருக்காது.
இது வரை வெளிவந்த படங்களை வைத்துப் பார்க்கும்போது, இதன் மூக்கு மற்றும் முகப்புப் பகுதி, ஒரு எஸ்யூவியையே இன்ஸ்பயர் செய்து பண்ணப்பட்டிருப்பது தெரிகிறது. நல்ல பல்க்கியான கிரில், உயர்த்தி வைக்கப்பட்ட பானெட் என்று வெளிநாடுகளில் விற்பனையாகும் கொரோலா க்ராஸ் எனும் எஸ்யூவியையே மாதிரியாக எடுத்து டிசைன் செய்திருக்கிறார்கள்.
இதில் சில பாடி கிளாடிங்குகள், பக்கவாட்டு ஃபெண்டர்கள் (இது வெளிநாடுகளில் விற்பனையாகும் வெலோஸ் - Veloz எனும் காரின் இன்ஸ்பிரேஷன்) என்று எஸ்யூவி ஸ்டைலிங்குக்காக மிகவும் போராடியிருக்கிறது டொயோட்டா. அதேநேரம், நடப்பு இனோவா க்ரிஸ்ட்டாவின் லுக்கும் கிடைக்க வேண்டும் என்பதிலும் மெனக்கெட்டிருக்கிறது டொயோட்டா. இதன் பக்கவாட்டு ஷோல்டர் லைன்கள் மற்றும் ப்ரொஃபைலைப் பார்க்கும்போது, க்ரிஸ்ட்டா மாதிரிதான் இருக்கிறது.

பல வசதிகளையும் இந்த ஹைக்ராஸில் எதிர்பார்க்கலாம். இதற்கு முந்தைய… அல்லது நடப்பு இனோவாக்களில் இருக்கும் வசதிகளைத் தாண்டி பல ப்ரீமியம் ஃப்யூச்சர்களை இதில் தரவிருக்கிறது டொயோட்டா.
முதலில் இதிலுள்ள சென்டர் கன்சோல், மல்ட்டி லேயர்டு டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், லேட்டஸ்ட் ஜெனரேஷன் மாடலான Voxy எனும் குளோபல் எம்பிவியில் இருந்து எடுத்திருக்கிறார்கள்.
இதன் டாப் எண்ட் மாடலில் பனோரமிக் சன்ரூஃப், ஃபுல் எல்இடி லைட்டிங், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், HVAC கன்ட்ரோல்கள் கொண்ட பெரிய டச் ஸ்க்ரீன் சிஸ்டம் (எத்தனை இன்ச் என்பது தெரியவில்லை), ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ப்ரீமியமான லெதர் சீட்கள், ஒயர்லெஸ் சார்ஜிங் என்று ஏகப்பட்ட வசதிகள். இதில் இதன் இரண்டாவது வரிசை சீட்களுக்கு, டொயோட்டாவின் ஃபேவரைட்டான Ottoman Function என்று சொல்லக்கூடிய வசதியும் இருக்கும். இந்த வசதி, ஓனர்களின் கம்ஃபர்ட்டுக்காகவே வடிவமைக்கப்பட்டது. இந்த சீட்களில் ஸ்லைடிங் ஆப்ஷன் இருக்கும். அதாவது, பக்கவாட்டில்… நேரே என்று நம் வசதிக்கேற்ப ஸ்லைடு செய்து லெக்ரூம், தொடைக்கான சப்போர்ட், முதுகுக்கான சப்போர்ட்டை அதிகரித்துக் கொள்வது என்று பல விஷயங்கள் செய்து கொள்ளலாம். அதாவது கிட்டத்தட்ட செமி ஸ்லீப்பர் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
மேலும், இதில் 3 வரிசைகளுக்கும் தனித் தனி ஏசி வென்ட்கள் இருக்கும். வென்டிலேட்டட் சீட்கள் நிச்சயம் இருக்கும். ஆனால், இது முன் பக்கத்துக்கு மட்டும்தானா… அல்லது பின் வரிசைக்குமா என்பது தெரியவில்லை.
பவர்ட்ரெயின்களைப் பொருத்தவரை – இந்த ஹைக்ராஸ் மாடலிலும் டீசல் இருக்காது என்று நம்பப்படுகிறது. வெறும் பெட்ரோலில் மட்டும்தான் வரும். டொயோட்டாவின் பார்வை இப்போதெல்லாம், ஹைபிரிட் மீதுதான் இருக்கிறது. ஹைரைடர்தான் இந்தியாவின் முதல் ஸ்ட்ராங் ஹைபிரிட் மாடல். ஹைரைடரைத் தொடர்ந்து, ஹைக்ராஸும் இந்த ஸ்ட்ராங் மார்க்கெட்டில் இடம் பிடிக்கும்.
இதில் 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இதன் கூடவே 2.0லிட்டர் NA இன்ஜினும் எக்ஸ்ட்ரா ஆப்ஷனாக இருக்கும். மற்றபடி இதன் பவர்/டார்க் விவரங்கள் தெரியவில்லை.
சாதா இனோவாவே ஆன்ரோடு விலை, கிட்டத்தட்ட 28.5 லட்சத்தை நெருங்கும் வேளையில், இந்த இனோவா ஹைக்ராஸில் வசதிகள் வேறு எக்கச்சக்கம் என்பதால், நிச்சயம் விண்ணைத் தொடும் விலையில்தான் இருக்க வேண்டும். சுமார் 30 லட்சம் விலைக்குள் இதை பொசிஷன் செய்தால் டொயோட்டாவுக்குக் கோட்டான கோடி நன்றி தெரிவிக்கலாம். இந்த ஜனவரி மாதம் வரை காத்திருப்போம்.
