Published:Updated:

ஒரு கோடி ரூபாய் நகரும் பங்களா!

டொயோட்டா வெல்ஃபயர்
பிரீமியம் ஸ்டோரி
டொயோட்டா வெல்ஃபயர்

டொயோட்டா வெல்ஃபயரில் ஒரு சின்ன டிரைவ்!

ஒரு கோடி ரூபாய் நகரும் பங்களா!

டொயோட்டா வெல்ஃபயரில் ஒரு சின்ன டிரைவ்!

Published:Updated:
டொயோட்டா வெல்ஃபயர்
பிரீமியம் ஸ்டோரி
டொயோட்டா வெல்ஃபயர்

ஆன்ரோடு விலை: 110 லட்சம்

ப்ளஸ்: அல்ட்ரா சொகுசு, வசதிகள், ஓடும்போதே சார்ஜ் ஏறும் ஹைபிரிட் சிஸ்டம்

குறை: விலை

டொயோட்டா வெல்ஃபயர் என்பது புதிய கார் அல்ல! ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் கார்தான். முழுக் காராக அதாவது CBU-வாக வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் கார் அது. வலைதளங்களிலும் யூட்யூப் சேனல்களிலும் இது பற்றி விரிவாக விவாதம் நடைபெற்று அடங்கிவிட்டது. இந்த நிலையில் சுமார் ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்தக் காரை ஆற அமர, சென்னையில் இருந்து மாமல்லப்புரம் வரை ஓட்டிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

காரை நேரில் பார்த்ததும், `இவ்வளவு பெரிய காராக இருக்கிறதே!’ என்ற வியப்பு மோலோங்கியது. ஆம்! கிட்டத்தட்ட 5 மீட்டரை நெருங்கும் நீளம்; 1.85 மீட்டர் அகலம்; 1.9 மீட்டர் உயரம் என்று இருக்கும் இந்தக் கார், `இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’போல இருக்கிறது. பெரிய லிமோசின் டைப் கார் எம்யூவி என்பதால், இதன் டர்னிங் சர்க்கிள் விஷயத்தில் பயந்தேன். அந்த அளவுக்குப் பெரிதாக இல்லை. அதனால், கிழக்குக் கடற்கரைச் சாலை சிக்னல்களில் சுலபமாக யூ டர்ன் அடிக்க முடிந்தது. ஆனால் இதைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே பேச வேண்டியதில்லை! காரணம், இது போன்ற காரை வாங்குகிறவர்கள் பெரும்பாலும் தாங்கள் இதை ஓட்டப் போவதில்லை. காரை டிரைவர் ஓட்ட, இரண்டாவது வரிசையில் இருக்கும் பாஸ் சீட் அல்லது அதற்குப் பக்கத்தில் இருக்கும் கேப்டன் சீட் அல்லது டிரைவருக்குப் பக்கத்தில் இருக்கும் கோ டிரைவர் சீட் ஆகியவற்றில்தான் பெரும்பாலும் பயணிப்பார்கள். அதனால் அந்த சீட்டுகளைப் பற்றித்தான் அதிகம் பேச வேண்டும். ஆனால் அதைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் Self Charging Hybrid Electric Car என்ற இந்தக் காருக்கு ஏன் டேக் லைன் போடுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

பொதுவாக, எலெக்ட்ரிக் கார் என்றால் அதை சார்ஜ் செய்ய வேண்டியது நம் பொறுப்பு. ஆனால், இது ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார் என்பதால், இது ஓடும்போது தானாகவே தனக்கு உள்ளே இருக்கும் நிக்கல் மெட்டல் ஹைட்ரைடு பேட்டரியை சார்ஜ் செய்து கொள்கிறது. சார்ஜ் செய்வது 115bhp சக்தியையும், 198 Nm டார்க்கையும் கொடுக்கும் 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின். கார் எப்போது பேட்டரியில் ஓட வேண்டும்; எப்போது பெட்ரோல் இன்ஜினில் ஓட வேண்டும் என்பதை காரின் வேகம், ஆக்ஸிலேட்டர் பெடல் மற்றும் பிரேக் பெடல் மீது டிரைவர் செலுத்தும் அழுத்தம் ஆகியவற்றை வைத்து காரே முடிவு செய்து கொள்கிறது. பொதுவாக எலெக்ட்ரிக் கார் ஓட்டும்போது பாதி வழியில் பேட்டரி தீர்ந்துவிட்டால், என்ன செய்வது என்ற அச்சம் எழும். இது ஹைபிரிட் கார் என்பதால் அந்த அச்சம் இதில் கிடையாது.

ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால், சுமார் 2.8 டன் எடை கொண்ட இந்தக் கார், லிட்டருக்கு 16 கிமீக்கு மேல் மைலேஜ் கொடுக்கும் என்று அராயை மேற்கோள் காட்டி டொயோட்டா கூறியிருப்பதுதான். அதனால் வெல்ஃபயரைச் சுற்றுச்சூழலுக்குச் சிநேகிதமான கார் என்கிறது டொயோட்டா. காரின் மைலேஜ் அதிகமாகக் கிடைப்பதற்கு, இந்த ஹைபிரிட் தொழில்நுட்பம்தான் உதவி செய்கிறது.

சரி, இந்த பேட்டரி கடைசிவரை நன்றாக வேலை செய்யும் என்பதற்கு என்ன கேரன்ட்டி என்று கேட்டால், `8 வருடம் அல்லது 1,16,000 கிமீ வரை கேரன்ட்டி கொடுக்கிறது டொயோட்டா. ஆக, இந்தக் காரில் பேட்டரி கார்கள் மாதிரி சத்தம் இல்லாமல் பயணிக்கும் அதே வேளையில், பெர்ஃபாமன்ஸிலும் குறை வைக்கவில்லை.

ஒரு கோடி ரூபாய் நகரும் பங்களா!
ஒரு கோடி ரூபாய் நகரும் பங்களா!
ஒரு கோடி ரூபாய் நகரும் பங்களா!

சரி; ஒரு கோடி ரூபாய் கொடுத்து சொகுசு கார் வாங்க வேண்டுமானால், பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி என்றுதானே வாடிக்கையாளர் களின் கவனம் திரும்பும். பிறகு எந்தத் தைரியத்தில் டொயோட்டா இந்தக் களத்தில் வெல்ஃபயரை இறக்கியிருக்கிறது? மொத்தக் குடும்பத்தோடு வெளியூர் செல்ல விரும்பும் மேட்டுக்குடியினர், பயணம் செய்யும்போதே பாதி அலுவலக வேலையை முடித்துவிட வேண்டும் என்று நினைக்கிற பிசினஸ்மேன், ஓடும் காரிலேயே காலை நீட்டி ஓய்வெடுக்க நினைக்கும் செல்வந்தர்கள் ஆகியோரை மனதில் வைத்து இந்தக் காரை வடிவமைத்திருக் கிறது டொயோட்டா. பங்களாவின் பெரிய வராண்டா போல விசாலமாக இருக்கும் காரின் இரண்டாவது வரிசையில் இருக்கும் சுப்ரீம் கேப்டன் சீட்தான் வெல்ஃபயரின் ஹைலைட். காரில் இருக்கும் மற்ற சீட்டுகளைப்போலவே இதுவும் வென்ட்டிலேட்டட் லெதர் சீட்தான் என்றாலும், இதைக் கட்டில் அளவுக்குத் தட்டையாக்கிவிட முடிகிறது. விமானத்தில் இருப்பதைப்போல இந்த சீட்டுக்கு எனத் தனியாக ரீடிங் லைட், க்ளைமேட் கன்ட்ரோல் வென்ட் ஆகியவை மட்டுமல்ல; இதை எல்லாம் கன்ட்ரோல் செய்யும் திருகுகளும் பட்டன்களும் இந்த இருக்கையில் உட்காருகிறவரின் கைக்கு எட்டும் தூரத்தில் கொடுக்கப் பட்டிருக்கிறது. விமானத்தில் இருக்கும் சீட்டில் இருப்பதைப் போல ஆர்ம் ரெஸ்ட்டில் இருக்கும் ஒரு பட்டனைத் தட்டினால், கைக்கு அடக்கமான ஒரு டேப்லெட்டை வைத்து வேலை செய்யும் அளவுக்கு ஒரு டேபிள் தட்டு வருகிறது.

இந்த Boss சீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சீட்டிலும் ஏறக்குறைய இந்த வசதிகள் அனைத்தும் உண்டு. மூன்றாவது வரிசையில் மூன்று பேர் உட்காரலாம். நடுவில் ஆர்ம் ரெஸ்ட் வேண்டாம் என்றால், இரண்டு பேர் தாராளமாக உட்காரலாம். மூன்றாவது வரிசையில் இருக்கும் சீட்களுக்குப் போவதும் சிரமமாக இல்லை.

நகரும் பங்களா என்பதால் இரட்டை சன்ரூஃப், பவர்டு ஸ்லைடிங் டோர்ஸ், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றோடு இணைக்கப்பட்ட 13 இன்ச் டச் ஸ்கீரீன், 16 விதமாக மாறக்கூடிய ஆம்பியன்ட் லைட்டிங், 3 வரிசைகளுக்கும் தனித்தனியாக ஏசி வசதி அதாவது 3 ஜோன் ஏசி கன்ட்ரோல் என்று வசதிகளுக்குக் குறைவே இல்லை. 7 காற்றுப்பைகள், EBD, VSC (Vehicle Stability Control), HAC (Hill Start Assist Control) என பாதுகாப்பு வசதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயலாற்ற VDIM (Vehicle Dynamic Integrated Management) என்ற தொழில்நுட்பமும் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த வசதி, சொகுசு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் கொடுக்க முடியும் என்கிறவர்கள் வெல்ஃபயருக்கு ரைட் சொல்லலாம்.

ஒரு கோடி ரூபாய் நகரும் பங்களா!
ஒரு கோடி ரூபாய் நகரும் பங்களா!
ஒரு கோடி ரூபாய் நகரும் பங்களா!
ஒரு கோடி ரூபாய் நகரும் பங்களா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism