கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

தேநீர் தேடி ஊட்டி வரை... பிஎம்டபிள்யூவில் ஒரு ரைடு!

பிஎம்டபிள்யூ X5
பிரீமியம் ஸ்டோரி
News
பிஎம்டபிள்யூ X5

பயணம்: பிஎம்டபிள்யூ X5

முகவரியற்றவர்களால் நிறைந்திருக்கும் நகரம், தேடல்களின் கூடாரம். இந்த தேடல்களின் சுழற்சியில் நம்மைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள சில விஷயங்கள் எல்லோருக்குமே தேவைப்படுகிறது.

சோர்வான நாள் ஒன்றில், அலுவலகத்துக்கு பிஎம்டபிள்யூ X5 வந்தது. சுறுசுறுப்பாக காரில் ஏறி முதலில் தேடியது ஒரு நல்ல டீக்கடையைத்தான். பிஎம்டபிள்யூவின் 4வீல் டிரைவ் எஸ்யூவி கார்கள் எல்லாமே X என்ற அடைமொழியோடு வருபவை. X1-ல் இருந்து ஆரம்பித்து X7 வரை நீள்கிறது இந்தப் பட்டியல். X2 மட்டும் இல்லை.

பிஎம்டபிள்யூ X5
பிஎம்டபிள்யூ X5

பிஎம்டபிள்யூ X5 காரின் ஆன்ரோடு விலை 1.01 கோடி ரூபாய். காரை ஸ்டார்ட் செய்யும்போதே, 10 ரூபாய் டீ குடிக்க ஒரு கோடி ரூபாய் காரில் செல்லவேண்டுமா என்று மனசு கேட்டது. அதனால் தேநீர் தேடி, தேயிலைத் தோட்டத்துக்கே காரை விரட்டினோம்.

சென்னையில் இருந்து பயணம் ஆரம்பித்தது. Tea sommelier எனும் தேநீர் வல்லுநரைத் தேடி முதலில் கோவைக்குச் சென்றோம். கோவைக்கு விழுப்புரம் - திருச்சி - சேலம் பாதையை பலர் தேர்ந்தெடுப்பார்கள். இந்தப் பாதை கொஞ்சம் குறுகலானது, சாலையும் சுமாராக இருக்கும் என்பதால், நாங்கள் கிருஷ்ணகிரி-தர்மபுரி-சேலம் பாதையைத் தேர்ந்தெடுத்தோம். 6 வழிச் சாலையில் பிஎம்டபிள்யூவைப் பறக்கவிடும் ஆசையில் ஆக்ஸிலரேட்டரைக் கொடுத்தால் 80 தாண்டியதும், `டிங்’ என மணி அடித்தது. 120 தாண்டியபோது தொடர்ந்து `டிங் டிங் டிங்’ என மணி அடித்துக்கொண்டே இருந்தது. ஸ்பீடு வார்னிங் சிஸ்டத்தின் பரிதாபங்கள்.

இந்த காரில் மொத்தம் மூன்று வேரியன்ட். 30d Sport, 30d Xline இரண்டுமே டீசல் மாடல்கள். நாங்கள் பயன்படுத்தியது Xline வேரியன்ட். 265bhp பவரும், 65kgm டார்க்கும் தருகிறது இதன் இன்ஜின். 100 கி.மீ வேகத்தை 6.5 நொடிகளில் தொட்டுவிடுகிறது. டீசல், மாஸ்டர் என்றால், பெட்ரோல் மான்ஸ்டர். 340bhp பவருடன் மிரட்டுகிறது M ஸ்போர்ட் பெட்ரோல் வேரியன்ட்.

தேநீர் தேடி
தேநீர் தேடி

X5 என்னதான் 245 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது என்றாலும், நம் ஊர் சாலையில் 120 மட்டுமே அதிகபட்சம் வேகம். லாரிகள் எதுவுமே லேன் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்பதால் வேகமாகச் செல்வதை விட பாதுகாப்பாக செல்வதற்கே முன்னுரிமை கொடுத்து காரை ஓட்டினோம். நகரத்தின் குறுகலான சாலையில், நெடுஞ்சாலையின் வேகமான சாலையில் இரண்டிலும் பிரேக் பர்ஃபாமன்ஸ் அசத்தல். தொட்டால் போதும் - கார் நின்றுவிடும். ஏபிஎஸ் என்கேஜ் ஆகிறதா என்பதே தெரியாத அளவுக்கு ஸ்மூத்தாகவும், நிலைத் தன்மையோடும் இருக்கிறது.

பிரேக் அடித்து நின்ற முதல் ஸ்டாப் கிருஷ்ணகிரி பைபாஸில் இருக்கும் ஒரு ஹோட்டல். `தேநீர் தேடி’ பயணத்தின் முதல் தேநீர் அந்த ஹோட்டலில்தான். காரை பார்க் செய்யும்போதும் சரி, எடுக்கும்போதும் சரி இதன் 360 டிகிரி கேமரா பாதுகாப்பாக உணரச் செய்தது. காரைச் சுற்றிலும் இருக்கும் சென்சார்கள் மிகவும் சென்சிட்டிவ். யார் காருக்கு அருகில் வந்து நின்றாலும் நம்மை அலெர்ட் செய்கிறது. திரையில் 360 டிகிரியில் தெரியும் காரின் எந்தப் பக்கத்தை க்ளிக் செய்தாலும், அந்தப் பக்கம் என்ன மாதிரியான இடையூறு இருக்கிறது; எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைத் துல்லியமாக காட்டுகிறது.

ஆட்டோமேட்டிக் பார்க்கிங், ஆட்டோமேட்டிக் ரிவர்ஸ் என காரை பார்க் செய்வது அவ்வளவு சுலபமாக இருந்தது. இதெல்லாம் இப்போ வரும் கியா காரிலேயே இருக்கே என்று கேட்கலாம். ஆனால், பிஎம்டபிள்யூவின் துல்லியம் ஆச்சரியப்பட வைக்கிறது. நெடுஞ்சாலை ஹோட்டலில் டீ குடித்துவிட்டு வெளியே வரும்போது, அருகில் இயற்கை விவசாயம் செய்யும் ஓர் உழவர் ஆவாரம்பூ டீ வைத்திருந்தார். இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுமாம். `சே, மிஸ் செஞ்சுட்டோமே’ என்று மனசு அடித்துக்கொண்டது.

அடுத்த ஸ்டாப் கோவை. கோவையில் தேநீர் வல்லுநர் நிர்மல் என்பவரைச் சந்தித்தோம். இன்ஜினீயரிங் படித்துமுடித்துவிட்டு, இப்போது டீ போர்டு ஆஃப் இந்தியாவுக்காக ஒரு டீக்கடையை நடத்தி வருகிறார். டீக் கடை இல்லை, அது ஒரு டீக் கடல் என்பது ஊட்டியில் இருக்கும் அந்தக் கடையைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. நிர்மலுடன் சேர்ந்து ஊட்டியில் இருக்கும் பிரபலமான இரண்டு தேயிலைத் தோட்டங்களைப் பார்க்கச்சென்றோம். முதலில் பில்லிமலை எஸ்டேட். பல ஏக்கராகப் பரந்துவிரிந்த அந்தத் தேயிலைக் காட்டில், பிஎம்டபிள்யூ கப்பல் போல எந்தச் சலனமும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது. சிட்டி, நெடுஞ்சாலை, ஆஃப்ரோடு, சாஃப்ட்ரோடு எல்லாவற்றையும் தாண்டி, தொடர்ந்து 500 கி.மீ பயணம் செய்த பின்பும் எந்தச் சிரமமும் இல்லாமல் வந்த X5 எங்களுக்கு ஆச்சர்யம் இல்லை. ஆனால், கரடுமுரடான பாறைகள் கொண்ட தோட்டத்தில் இரண்டு சக்கரங்கள் காற்றிலும், இரண்டு சக்கரங்கள் தரையிலும் நின்றபோதுதான் இதன் பன்முகத்தன்மை தெரிந்தது. ஏர் சஸ்பென்ஷன் சபாஷ் போட வைத்தது. ஒரு தொடுதலில் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸைக் கூட்டவும், குறைக்கவும் முடிகிறது.

காரின் உயரம் கூடும்போது பாடி ரோல் அதிகரிக்கிறது, ஸ்டீயரிங் ஃபீட்பேக் மற்றும் காரின் நிலைத்தன்மையில் வித்தியாசம் தெரிகிறது. காரின் உயரத்தைக் குறைக்கும்போது, பாடி ரோல் குறைந்து செடான் போன்ற சொகுசான டிரைவிங் அனுபவம் கிடைக்கிறது. நிலையான தன்மை முன்னேறி, ஸ்டீயரிங் துல்லியம் கிடைக்கிறது. ஆனால், வழக்கத்தைவிட கார் இறுக்கமாகச் செல்வதுபோல உணரமுடிகிறது. பாடி ரோல் கொஞ்சம்போல தெரிந்தாலும், சொகுசான டிரைவிங்கில் எந்தக் குறையும் இல்லை.

தேயிலைத் தோட்டத்தின் பங்களா, பிஎம்டபிள்யூவுக்கு நிகரான சொகுசு. இங்கு வந்தவுடன் குடித்த முதல் டீ, எங்களை இன்னொரு உலகத்துக்குக் கூட்டிச்சென்றது.

கிரீன் டீ என்றால் கசப்பு என்றுதான் விவரம் தெரிந்தவரை நினைத்திருந்தேன். ஆனால், அதை எல்லாம் அழித்துவிட்டு கிரீன் டீ என்றால் இதுதான் என நாக்கில் ஒட்டிக்கொண்டது இதன் ருசி.

தேநீருடன் பஜ்ஜி சாப்பிடுவது வழக்கம். ஆனால், இங்கே தேயிலையிலேயே பஜ்ஜி செய்து கொடுத்தார்கள். எல்லா தேயிலையிலும் பஜ்ஜி செய்ய முடியாதாம்.

அதற்காக இவர்களிடம் தனி இலைகள் இருக்கிறதாம். டீ சாப்பிட்ட உற்சாகத்தில் தேயிலைத் தொழிற்சாலைக்குச் சென்றோம்.

கிரீன் டீ மற்றும் பிளாக் டீ
கிரீன் டீ மற்றும் பிளாக் டீ

ஒரு மொட்டு, இரண்டு இலைகள். இதுதான் தேயிலைத் தொழிலாளர்களின் தாரக மந்திரம். மொட்டு White Tea எனும் வகைக்காக அனுப்பப்படுகிறது. கீழே உள்ள இரண்டு இலைகள் கிரீன் டீ மற்றும் பிளாக் டீ என இரண்டாகப் பிரித்து அனுப்பப்படுகின்றன. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் இவை எல்லாமே வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகின்றன. இந்த Two leaves on a bud என்ற தத்துவத்துக்குள் வராத இலைகள், தரம் குறைவானவை. பெரும்பாலும் இவைதான் நம் தெருக்கடைகளில் கிடைப்பவை. இந்த இலைகளின் விலை ஒரு கிலோ 500 ரூபாய் என்றால், வெளிநாடுகளுக்குச் செல்லும் இலைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.5000 முதல் 15000 வரை விற்கப்படுகின்றன. பில்லிமலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு அடுத்த டீ எஸ்டேட்டுக்குக் கிளம்பினோம். டீசல் போடுவதற்காக காரை ஓரங்கட்டி மூடியைத் திறந்து பார்த்தால், வழக்கமாக BS-6 வாகனங்களில் வரும் ஆட்ப்ளூ டேங்க் காணவில்லை. குழப்பம் வரவே, காரின் பானெட்டைத் திறந்து ஒரு முறை செக் செய்தோம் ஆட்ப்ளூ டேங்க், பானெட்டில் இருந்தது. எல்லா நாட்டிலும் இப்படித்தான் இருக்கிறதா என்று இணையத்தில் தேடிப் பார்த்தபோதுதான் ஆச்சர்யம். ஜெர்மனியில் விற்பனை செய்யப்படும் அதே கார்தான் இந்தியாவிலும். ஸ்டீயரிங் பொசிஷனைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், பானெட்டுக்குள் வரும் கிராஷ் பாரில் இருந்து, ரேடியேட்டர் டேங்க்கில் வரும் எழுத்துகள் வரை எந்த மாற்றமும் இல்லை. ஐரோப்பியத் தரத்தில் உருவாக்கப்பட்ட மாடலை அப்படியே கொடுத்திருக்கிறார்கள்.

டீசல் போட்டுவிட்டு நேரடியாக கிலென்டல் எனும் எஸ்டேட் சென்றோம். பில்லிமலை எஸ்டேட் தோற்றத்தில், பாப்லோ எஸ்கோபாரின் மெடிலின் தோட்டம் போல இருந்தால், கிலென்டல் எஸ்டேட் அதன் எதிர் கூட்டணி, காலி தோட்டம் போல இருந்தது. உள்ளே செல்வதே பெரிய டாஸ்க். தொழிற்சாலையில் என்ன நடக்கிறது என்பது இங்கே பார்க்க முடியவில்லை. ஆனால், இவர்களின் தேயிலைத் தோட்டம் அழகில் ஒரு படி மேலே. அந்தச் சாலை அப்பொழுதுதான் போடப்பட்டதுபோல செம ஸ்மூத்தாக இருந்தது. எஸ்ட்டேட்டின் கீழ்ப் பகுதியில் ஓர் அருவி.

பிஎம்டபிள்யூ X5
பிஎம்டபிள்யூ X5

தேயிலைத் தோட்டங்களைப் பார்த்து முடித்து அறைக்குச் செல்லும்போது 780 கி.மீ தூரம் பயணித்திருந்தோம். அசதி கொஞ்சமும் தெரியவில்லை. இதற்குக் காரணம் பிஎம்டபிள்யூவின் வென்ட்டிலேட்டட் சீட்ஸ் மற்றும் காரின் வசதிகள். காரின் மொத்த கன்ட்ரோல்களும் எலெக்ட்ரானிக் மூலம் இயங்குபவை. அதிலும், பெரும்பாலானவை ஆட்டோமேட்டிக். இதனால், பட்டனைத் தட்டும் வேலைகூட மிச்சம்தான். சீட்டில் இருக்கும் எலெகட்ரானிக் கன்ட்ரோல்கள் மூலம், சீட்டின் ஒவ்வோர் அங்குலத்தையும் உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளமுடியும்.

பின்வரிசைப் பயணிகளுக்கு ஒரே ஒரு குறை - சீட் ரெக்லைன் வசதி இதில் இல்லை. எம்ஜி ஹெக்டர் போன்ற விலை குறைவான காரிலேயே இந்த வசதி இருக்கும்போது, பிஎம்டபிள்யூவில் இல்லை என்பது ஏமாற்றம். கடைசியாக ஊட்டியில் இருக்கும் டீ போர்டு ஆஃப் இந்தியாவின் கடைக்குச் சென்றோம். மொத்தம் 80 வகையான தேநீர் வைத்திருந்தார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இவற்றை நீங்கள் அங்கேயே ருசிக்க மட்டுமில்லை; வாங்கிச் செல்லவும் முடியும். ஒவ்வொரு தேநீருக்கும் ஒரு செய்முறை உள்ளது. அதற்கான கொதி நிலை, நேரம் எல்லாம் பொறுத்துத்தான் ஒரு தேநீரின் சுவை மாறும் என்றார் நிர்மல். அப்படியே சில டீ வகைகளைச் செய்தும் காட்டினார்.

தேநீரை ருசித்து விட்டு காரை சென்னைப் பக்கம் செலுத்தினோம். இன்ஜினில், டர்போ லேக் என்பதே இல்லை. பிஎம்டபிள்யூவின் ZF 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்கை உலகின் சிறந்த கியர்பாக்ஸ்களில் ஒன்று என்று சொல்வது ஏன் என்பதை இந்த டிரைவிங் உணர்த்தியது. கியர் குறைவதும், கூடுவதும் கொஞ்சமும் தெரியவில்லை.

தேநீர் தேடி ஊட்டி வரை... பிஎம்டபிள்யூவில் ஒரு ரைடு!

யெஸ் பேங்க் போல லிமிட் எல்லாம் கிடையாது. பவர் தேவை என்று த்ராட்டிலில் கால் வைத்தால், போதும் என்று சொல்லும் வரை கிடைக்கிறது. 4 டிரைவிங் மோடுகள் இருக்கின்றன. ஸ்போர்ட் மோடு செம சுறுசுறுப்பு என்றாலும், எக்கோ மோடே போதுமான அளவுக்கு இருந்தது. பெரும்பாலும் காரை எக்கோ மோடில்தான் ஓட்டினோம்.

தேநீர் தேடி ஊட்டி வரை... பிஎம்டபிள்யூவில் ஒரு ரைடு!

டீ, சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைப்பதால் இந்தியாவில் அதை ஒரு சாதாரண பொருளாகவே பார்க்கிறார்கள். ஆனால், இந்தப் பயணம் எங்களுக்குத் தேநீரை ஒயின் அளவுக்கு ஒரு லக்ஸூரியான பானமாகக் காட்டியது. இதை பிஎம்டபிள்யூவுக்கும் பொருத்திப் பார்க்கலாம். இந்த காரின் பல வசதிகள் உங்களுக்கு இதைவிட விலை குறைவான காரிலேயே கிடைக்கும். ஆனால், பிஎம்டபிள்யூவின் லக்ஸூரி என்பது அனுபவித்துப் பார்க்கும்போதுதான் தெரியும்.