ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

இந்தியாவின் குறைந்த விலை கார்கள்!

 கார்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்

விலை குறைவான கார்கள்

இதற்கு முன்பும் ஆட்டோமொபைல் துறை, பல சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. இப்போது சோதனை, வைரஸ் வடிவில். ஆட்டோமொபைல் வல்லுநர்களுடன் பேசியபோது, கொரோனாவுக்குப் பிறகான லைஃப்ஸ்டைல் மாற்றத்தில் விலை குறைவான வாகனங்களுக்கு முன்னுரிமை இருக்கும் என்றார்கள். சேமிப்பின் முக்கியத்துவம் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில், அந்தந்த செக்மென்ட்டின் விலை குறைவான வாகனங்களைப் பார்க்கலாமா?

கார்களிலேயே விலை குறைவானது இதுதான்

திகாரப்பூர்வமாக விற்பனை நிறுத்தப்படவில்லை என்றாலும், ஒரு கார் கூட விற்பனையாகாமல் இருப்பதால், டாடா நானோவை நாம் இந்தப் போட்டியில் இருந்து ஒதுக்கிவிடுவோம்.

தற்போது கார் சந்தையிலேயே விலை குறைவான கார் என்றால், அது மாருதி ஆல்ட்டோ 800. இதன் விலை 3.70 லட்சம் ரூபாய்.

மாருதி ஆல்ட்டோ
மாருதி ஆல்ட்டோ

ஆல்ட்டோ 800 வாங்கினால், 4 பேர் காரில் போகலாம் என்பதோடு, இதில் டூயல் டோன் இன்ட்டீரியர், பவர் விண்டோ, பவர் ஸ்டீயரிங், ஹீட்டருடன் ஏசி, இம்மொபைலைஸர், டிரைவர் ஏர்பேக், சீட்பெல்ட் ரிமைண்டர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், முன்பக்கம் டிஸ்க் பிரேக், ஏபிஎஸ் போன்ற வசதிகள் உண்டு.

47bhp பவர் கொண்ட மூன்று சிலிண்டர் இன்ஜினும், லிட்டருக்கு 22 கி.மீ மைலேஜும் கிடைக்கும். பார்க்க சோப்பு டப்பா போல இருந்தாலும் ஆல்ட்டோ செல்லாத இடங்களே கிடையாது. இமயமலையில்கூட ஆல்ட்டோ ராஜ்ஜியம்தான்.

ஃபிகோவும் நியோஸும் செம சாய்ஸ்!

ருப்பதிலேயே சிக்கலான விஷயம் என்றால், அது விலைகுறைவான ஹேட்ச்பேக்கைக் கண்டுபிடிப்பதுதான். காரணம், விலை குறைவாக இருக்கும் எல்லா காருமே ஹேட்ச்பேக் மாடலில்தான் இருக்கிறது. எஸ்-ப்ரெஸ்ஸோ, ஆல்ட்டோ, ஸ்விஃப்ட், வேகன்-ஆர் என மாருதியிலும், சான்ட்ரோ, ஐ10, ஐ20 என ஹூண்டாயிலும் ஹேட்பேக் கார்களுக்குப் பஞ்சமே இல்லை. இங்கே மைக்ரோ, மினி, ப்ரீமியம் ஆகிய பதங்களை எல்லாம் விட்டுவிட்டு, உங்களுக்கு முழு ஹேட்ச்பேக் அனுபவத்தைத் தரும் கார்களை மட்டுமே எடுத்துக்கொண்டோம்.

ஃபிகோ
ஃபிகோ

அந்த வகையில் விலை குறைவான கார் என்றால் அது கிராண்ட் ஐ10 நியோஸ். இதன் விலை 6.02 லட்சம் ரூபாய். ஃபோர்டு ஃபிகோவைக்கூட நம் பட்டியலில் எடுத்துக் கொள்ளலாம். நியோஸைவிட வெறும் 5,000 ரூபாய் வித்தியாசத்தில்தான் இருக்கிறது ஃபிகோ. நியோஸ் வாங்கினால் பின்பக்கம் நல்ல இடவசதி, அசத்தலான இன்டீரியர் கிடைக்கும். இன்ஃபோடெயின்மென்ட் வசதி எதுவும் கிடைக்காது.

ஃபோர்டு ஃபிகோவின் கேபின் அவ்வளவு விசாலமாக இல்லையென்றாலும், தரம் அருமையாக இருக்கும். உற்சாகமான 96bhp இன்ஜின் உண்டு. அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங் போன்ற வசதியும் வரும். இங்கேயும் இன்ஃபோடெயின்மென்ட் கிடையாது. ஆனால், ஒரு லட்சம் ரூபாய் வித்தியாசத்தில் அடுத்த வேரியன்ட்டில் பல வசதிகள் கிடைத்துவிடுவது சிறப்பு.

வென்யூதான் மலிவு எஸ்யூவி!

ஸ்யூவி என்றால் மற்ற நாடுகளைப் பொறுத்தவரை காடு, மலை, சாலைகளையெல்லாம் சர்வசாதாரணமாகக் கடக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் எஸ்யூவி என்றால், சாலையில் பார்க்கக் கம்பீரமாக இருக்கவேண்டும். ஆஃப்ரோடு தேவையில்லை. ஓரளவுக்கு மலைப் பாதையில் சென்றால்கூடப் போதும். சிக்கனமாகச் சொல்லவேண்டும் என்றால் க்ராஸ்ஓவர் திறமையோடு, பெரிய காருக்கான லுக் தேவை. அந்த அடிப்படையில் பார்த்தால், உங்களுக்கு இந்தியாவில் ஒரு எஸ்யூவி வாங்க 7.75 லட்சம் போதுமானது.

வென்யூ
வென்யூ

ஹூண்டாய் வென்யூதான் உங்களுக்கு இப்போதைக்குக் குறைவான விலையில் கிடைக்கும் எஸ்யூவி. 83bhp பவர் மற்றும் 11.6Kgm டார்க் தரும் 1.2 லிட்டர் இன்ஜின் இதில் இருக்கிறது. டிரைவர் மற்றும் பாஸஞ்சர் ஏர்பேக், ஆட்டோ டிம்மிங் மிரர், Isofix, சீட்பெல்ட் ரிமைண்டர், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் போன்றவை வருகின்றன. இன்ஃபோடெயின்மென்ட் வசதிகள் எல்லாம் வேண்டும் என்றால் 2 லட்ச ரூபாய் கூடுதல் விலை போட்டு S வேரியன்ட்டை வாங்கவேண்டும்.

ஆராவா... டிகோரா? உங்கள் சாய்ஸ்!

செடான் என்றாலே பெரிய கார் என்ற மனநிலையை மாற்றியமைத்தவை காம்பாக்ட் செடான் கார்கள். மாடல்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்குத்தான் இருக்கும். அதில் விலை குறைவான கார், சமீபத்தில் வந்த ஹூண்டாய் ஆரா. ஆராவின் விலை அறிமுக விலைதான். விலை ஏறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. நியோஸின் செடான் வடிவம்தான் ஆரா. அதனால், பூட் ஸ்பேஸ் தவிர, வேறு எதுவுமே மாறவில்லை.

டிகோர்
டிகோர்

டாடா டிகோர் எடுத்துக்கொண்டால், இந்த விலையில் கிடைக்கும் ஒரே 4 ஸ்டார் கார். டிகோரில் 84bhp பவர் தரும் 4 சிலிண்டர் இன்ஜின் இருக்கிறது. விலை குறைவான வேரியன்ட்டிலேயே எல்லா டோர்களிலும் பவர் விண்டோஸ், அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரியர் ஹெட்ரெஸ்ட், ஸ்டீயரிங்கில் ஆடியோ கன்ட்ரோல், 2 காற்றுப்பைகள், ஹர்மான் ஆடியோ சிஸ்டம் போன்றவை வந்துவிடுகின்றன.

கூட்டுக்குடும்பத்துக்கு ஏற்ற எம்பிவி!

ஹேட்ச்பேக் ஒரு சின்னக் குடும்பத்துக்கு ஏற்ற சரியான கார் என்றால், எம்பிவி ஒரு பெரிய குடும்பத்துக்கான கார். 7 பேர் செல்ல கார் வேண்டும் என்றால், நீங்கள் குறைந்தபட்சம் 9 லட்சம் செலவு செய்யவேண்டும். இந்தத் தொகைக்கு கையோடு ஒரு மாருதி எர்டிகாவை ஓட்டிச்செல்லலாம்.

மாருதி எர்டிகா
மாருதி எர்டிகா

ஹார்ட்டெக் பிளாட்ஃபார்ம், K15 ஸ்மார்ட் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் வருகிறது. 103bhp இன்ஜின், லிட்டருக்கு 19 கி.மீ மைலேஜ், அசத்தல் ரகம். விலை குறைவான வேரியன்ட்டில் கூட ப்ரொஜக்டர் ஹெட்லைட், LED டெயில் லைட், டூயல் டோன் இன்டீரியர், 60:40 விகிதத்தில் மடித்துக்கொள்ளக்கூடிய சீட், மூன்று வரிசைக்கும் ஹெட்ரெஸ்ட், பவர் விண்டோஸ், ஸ்டீயரிங் அட்ஜெஸ்ட்மென்ட், கூல்டு கப் ஹோல்டர் என பல வசதிகள் வந்துவிடும். டூயல் ஏர்பேக், ஆட்டோ டோர் லாக், Isofix, சீட் பெல்ட் ரிமைண்டர் என பல பாதுகாப்பு வசதிகளும் வந்துவிடுகின்றன.

ஹூண்டாயில் பர்ஃபாமன்ஸா? யெஸ்... நியோஸ்!

ர்ஃபாமன்ஸ் விரும்பிகளுக்குப் பிடித்த மாதிரியான கார்கள், முந்தைய விலை குறைவான BS-4 வெர்ஷன்களில் நிறையவே இருந்தன. ஆனால் BS-6 வந்தபிறகு, அவை எல்லாமே காலாவதியாகிவிட்டன. டியாகோ JTP, பெலினோ RS, புன்ட்டோ அபார்த் என எதுவுமே அப்டேட் ஆகவில்லை. போலோ GT Line, விலை கொஞ்சம் அதிகம். குறைந்த விலையில் பர்ஃபாமன்ஸ் தேவை என்பவர்களுக்கு, இப்போது இருக்கும் ஒரே சாய்ஸ் கிராண்ட் i10 நியோஸ் டர்போதான். 'ஹூண்டாயில் எப்படி பாஸ் பர்ஃபாமன்ஸ் கார்’ எனஷாக் ஆகவேண்டாம்! ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்டில் கிடைக்கும் இதில் இருப்பது, ஹூண்டாயின் 1.0 லிட்டர் T-GDi - 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின். 100bhp பவர் - 17.2kgm டார்க் ஆகியவற்றோடு, 20.3 கிமீ அராய் மைலேஜையும் தருகிறது.

நியோஸ்
நியோஸ்

வென்யூவில் இருக்கும் அதே டர்போ பெட்ரோல் இன்ஜின்தான். (120bhp), ஆனால் கிராண்ட் i10-ல் இது குறைவான 100bhp டியூனிங்கிலேயே வருகிறது. ஆனால் வென்யூவில் 7 ஸ்பீடு DCT; கிராண்ட் i10 நியோஸில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான். டர்போ பெட்ரோல் இன்ஜின் தேவையென்றால், காரில் பல விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டியது வரும். கிராண்ட் i10 டர்போவின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.68 லட்சம்.

 எம்பிவி
எம்பிவி

6 லட்சத்துக்கு 7 பேர் போகலாம்!

சில இனோவேஷன் கார்களையும் நாம் மறக்கக் கூடாது. உதாரணத்துக்கு, ரெனோ ட்ரைபர். இது முழுமையான எம்பிவி இல்லையென்றாலும், 6 லட்ச ரூபாய் காரிலேயே 7 பேர் ஏற்றிக் கொண்டு போகலாம். 4 மீட்டருக்குட்பட்ட எம்பிவி-யை வடிவமைப்பது அட்டகாசமான இனோவேஷன்தானே! அதனால்தான் இந்தக் கைக்கு அடக்கமான விலை. இன்னொரு ஆப்ஷனும் இருக்கிறது. அது போர்டு ஃப்ரீஸ்டைல். ஆஃப்ரோட்டிலும் சரி, சாலையிலும் சரி உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். 7 லட்சம் ரூபாய்க்கு வலுவான போட்டியாளர் இல்லாத கார்.

தாறுமாறான டிரைவுக்கு தாரும் கூர்க்காவும்!

குறைவான விலையில் ஆஃப்ரோடில் பறக்க ஒரு எஸ்யூவி வேண்டுமா? உங்களுக்கு இப்போதைக்கு எந்த ஆப்ஷனும் இல்லை. மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா தவிர. பழைய தார் ஜீப், பொலேரோவின் ப்ளாட்ஃபார்மில் செய்யப்பட்டது. ஆனால் இப்போது புதிய ப்ளாட்ஃபார்மில் தாரைத் தயாரிக்க உள்ளது மஹிந்திரா. இந்த நிறுவனத்தின் mStallion டர்போ பெட்ரோல் இன்ஜின் இங்கே புதுவரவு. இது 190bhp பவர் மற்றும் 38kgm டார்க்கைத் தருவது செம. கூடவே 2.2 லிட்டர் 140bhp டர்போ டீசல் இன்ஜினும் தாரில் உண்டு. இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை எதிர்பார்க்கலாம். ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி உடனான டச் ஸ்க்ரீன், MID உடனான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல்கள், 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், முன்பை விட ப்ரீமியமான இருவரிசை சீட்கள், ரிவர்ஸ் கேமரா, எலெக்ட்ரிக் மிரர்கள் என ஏகப்பட்ட வசதிகள் தாரில் வரப்போகின்றன. முன்பு 9 லட்சத்தில் ஆரம்பித்த தாரின் விலை, இனி 15 லட்சம் வரை போகலாம்.

கூர்க்கா
கூர்க்கா

BS-4 அவதாரத்திலேயே தாரைவிட ஃபோர்ஸ் கூர்க்கா, BS-6 மாடலில் கிட்டத்தட்ட தாரின் விலைக்குச் சரிசமமான போட்டியாக இருக்கும். ஹெட்லைட், பம்பர், கிரில், 16 இன்ச் அலாய் வீல்கள் தொடங்கி இன்டீரியர் வரை ஏகப்பட்ட மாற்றங்கள் உண்டு. கேபினில் இருக்கும் பவர் விண்டோக்கள் மற்றும் டச் ஸ்க்ரீன் அதற்கான உதாரணம். புதிய பிளாட்ஃபார்மில் தயாராகி (புதிய லேடர் ஃபிரேம் மற்றும் காயில் ஸ்ப்ரிங்), 90bhp பவரைத் தரும் 2.6 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினோடு 4 வீல் டிரைவ் ஆப்ஷனோடு வரவிருக்கிறது.