கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

பழைய பாகுபலிகள்... என்ன கவனிக்கணும்?

2016 ஃபோர்டு எண்டேவர் 3.2 Titanium + (65,000கிமீ)
பிரீமியம் ஸ்டோரி
News
2016 ஃபோர்டு எண்டேவர் 3.2 Titanium + (65,000கிமீ)

யூஸ்டு கார்: டூஸான் To எண்டேவர்

மாருதி சுஸூகிக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனம், ஹூண்டாய்தான்!

இந்த நிறுவனத்தின் விலை அதிகமான மாடலாக இருக்கும் மூன்றாம் தலைமுறை டூஸான், ஒரு 5 சீட்டர் எஸ்யூவி/சாஃப்ட் ரோடர் ஆகும். பவர்ஃபுல் டீசல் இன்ஜின், அதிக சிறப்பம்சங்கள், நீட்டான டிசைன், அதிக இடவசதி, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 4 வீல் டிரைவ் ஆப்ஷன் என ஆல்ரவுண்டர் திறனுடன் கூடிய இந்த காரில், டீசல் - ஆட்டோமேட்டிக் கூட்டணி அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

2016 ஹூண்டாய் டூஸான் 2.0 GLS (40,000கிமீ) - 17.5 லட்ச ரூபாய் (உத்தேச விலை)
2016 ஹூண்டாய் டூஸான் 2.0 GLS (40,000கிமீ) - 17.5 லட்ச ரூபாய் (உத்தேச விலை)

மிட்சைஸ் எஸ்யூவியின் சைஸில் இருப்பதால் (4.5 மீட்டர்), டூஸானை நெரிசல்மிக்க நகரச்சாலைகளில் பயன்படுத்துவது சுலபம்தான். இந்த காரின் Premium Assurance பேக்கேஜ் உடன், ஹூண்டாயின் பரந்து விரிந்த டீலர் நெட்வொர்க் சேரும்போது, இதன் பராமரிப்பு குறித்துப் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை.

எலெக்ட்ரானிக் டெயில்கேட் மற்றும் பார்க்கிங் பிரேக், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், டிரைவிங் மோடுகள் ஆகியவை, இது ஒரு லக்ஸூரி கார் என்பதை உறுதிப்படுத்துகின்றன. டூஸானின் வெளிப்புறம்போலவே உட்புறமும் ப்ரீமியமாக இருந்தாலும், இந்த வகை கார்களில் கிடைக்கக்கூடிய அந்த ஸ்பெஷல் ஃபீலிங், இங்கே மிஸ்ஸிங் என்பது நெருடல்.

ஹூண்டாய் டூஸான் 2.0 GLS
ஹூண்டாய் டூஸான் 2.0 GLS

ஒருவேளை டேஷ்போர்டின் டிசைன், இதைவிடப் பாதி விலையில் கிடைக்கக்கூடிய வெர்னாவை நினைவுபடுத்தும்படி அமைந்திருப்பதுதான் காரணமோ! மேலும் இந்த டூஸான் நம் நாட்டில் அறிமுகமான புதிதில் வெளிவந்த மாடல் என்பதால், இங்கே சன்ரூஃப் - 4WD - வயர்லெஸ் சார்ஜிங் - வாய்ஸ் ரெகக்னைஸன் மற்றும் iBlue உடனான டச் ஸ்க்ரீன் சிஸ்டம் போன்ற சில ப்ரீமியம் வசதிகள் இருக்காமல் போகலாம். ஆனால் பொருள்களை வைக்க ஸ்டோரேஜ் ஸ்பேஸ், பின்பக்கத்தில் மூன்று பேருக்கான இடம் என கேபின் படு பிராக்டிக்கல் ரகம். 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், டெக்னிக்கல் அம்சங்களில் ஜெர்மானிய எஸ்யூவிகளுக்குச் சவால் விடுகிறது (185bhp/40kgm). எனவே நகரச் சாலைகளைத் தாண்டி, நெடுஞ்சாலைகளில் க்ரூஸ் செய்வது நல்ல அனுபவத்தைத் தருகிறது.

லக்ஸூரி கார்

பெரிய 62 லிட்டர் டேங்க் உள்ளதால், ஃபுல் டேங்க்கில் குறைந்தது 700 கி.மீ கியாரன்ட்டி. பெரிய 513 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருப்பதால், மூன்றாவது வரிசை இருக்கையை இங்கே எதிர்பார்க்கக் கூடாது. 172மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்தான் என்பதால், டூஸான் ஒரு சாஃப்ட் ரோடர் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஃபோர்டு எண்டேவர்

ஆஃப் ரோடு பிரியர்களிடையே பலத்த ஆதரவு இருப்பதால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் எண்டேவர் நன்மதிப்பையே பெற்றிருக்கிறது. டூஸானைப்போலவே இதுவும் 2016-ம் ஆண்டுதான் இந்தியாவில் அறிமுகமானது. கார் பார்க்க பல்க்காக இருந்தாலும், வெளிச்சாலை தெளிவாகத் தெரியும் திறன் மற்றும் எடை குறைவான ஸ்டீயரிங் ஆகியவை, இந்த XL சைஸ் எஸ்யூவியின் சுலபமான ஓட்டுதலுக்குத் துணைநிற்கின்றன. பாடி ஆன் ஃப்ரேம் கட்டுமானம் மற்றும் 225 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடனான சஸ்பென்ஷன் உண்டு என்பதால், எந்தவிதமான நிலப்பரப்பிலும் எண்டேவரைத் தைரியமாகச் செலுத்தக் கூடிய நம்பிக்கை தானாக வந்துவிடுகிறது.

2016 ஃபோர்டு எண்டேவர் 3.2 Titanium + (65,000கிமீ) - 22.5 லட்ச ரூபாய் (உத்தேச விலை)
2016 ஃபோர்டு எண்டேவர் 3.2 Titanium + (65,000கிமீ) - 22.5 லட்ச ரூபாய் (உத்தேச விலை)

3.2 லிட்டர், 5 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் - 4 வீல் டிரைவ் - 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி ஒன்றுசேர்ந்து, சிறப்பான ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு வழிவகை செய்கின்றன. பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் பார்க்கிங், ஆம்பியன்ட் லைட்டிங், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஆஃப் ரோடு மோடுகள் போன்ற ப்ரீமியம் வசதிகளுடன், மூன்றாவது வரிசை இருக்கைகள் இருப்பதும் வரவேற்கத்தக்க விஷயம். இப்படி சொகுசான அனுபவம் தரும் எண்டேவரின் எடை 2,000 கிலோவைத் தாண்டுவதால், அதிக மைலேஜை இங்கே எதிர்பார்க்க முடியாது (நகரம்: 7 கி.மீ, நெடுஞ்சாலை: 10.3 கி.மீ).

ஹூண்டாயுடன் ஒப்பிடும்போது ஃபோர்டு டீலர்களின் எண்ணிக்கை குறைவுதான். என்றாலும் வழக்கமான வருடாந்திர சர்வீஸுக்கு வெறும் 7,000 ரூபாய் மட்டுமே ஆகும். இந்த நிறுவனத்தின் காஸ்ட்லி மாடல் என்ற அடிப்படையில் பார்த்தால் (மஸ்டாங் தவிர்த்து), இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய அம்சமே!

ஃபோர்டு எண்டேவரில் என்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

4 வருட எண்டேவரின் காப்பீட்டுத் தொகை மட்டுமே, சுமார் 20-30 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். எனவே யூஸ்டு கார் மார்க்கெட்டில் நீங்கள் பார்க்கும் மாடல், முறையான இன்ஷூரன்ஸைக் கொண்டிருப்பது நலம். பலதரப்பட்ட சாலைகளிலும் இந்த XL சைஸ் எஸ்யூவி ஓட்டப்பட்டிருக்கலாம் என்பதால், டயர் மற்றும் சஸ்பென்ஷனின் கண்டிஷனைச் சரிபார்க்கவும் (காரின் அடிப்பகுதியையும் சேர்த்துதான்). ஆஃப் ரோடர் என்பதால், பிரேக்குகளின் தேய்மானத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஹூண்டாய் போலவே ஃபோர்டும் ‘Total Maintenance/Service Package’ ஒன்றை எண்டேவருக்கு வழங்கியிருக்கிறது.

பழைய பாகுபலிகள்... என்ன கவனிக்கணும்?

எனவே அது வாங்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். இதனால் காரின் பராமரிப்புச் செலவுகள், உங்களின் பர்ஸுக்கு வெடி வைக்காது. மேலும் அதை காரின் அடுத்த உரிமையாளருக்கும் டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ள முடியும் என்பது செம!

யூஸ்டு கார்

கடந்த ஆண்டில் எண்டேவரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஃபோர்டு களமிறக்கியது என்பதால், நீங்கள் அதனைக் குறிப்பிட்டு, காரின் விலையில் கூடுதலாகத் தள்ளுபடியைக் (ஒரு லட்ச ரூபாய் வரை) கேட்டுப் பெறலாம்.