Published:Updated:

11 லட்சத்துக்கு கும்முனு ஒரு எஸ்யூவி!

யூஸ்டு கார்: டாடா ஹெக்ஸா

பிரீமியம் ஸ்டோரி
ஹெக்ஸா... 2017-ம் ஆண்டு வெளியான இந்த டாடா எஸ்யூவி, விற்பனையில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஹெக்ஸாவின் Safari எடிஷன், எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரியவில்லை. கொடுக்கும் காசுக்கு, யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் இந்த கார், மதிப்புமிக்க தயாரிப்பாகவே இருக்கிறது.

புது நெக்ஸான் BS-6 வாங்கும் காசில், யூஸ்டு ஹெக்ஸாவை வாங்க முடியும் என்பது ப்ளஸ். இதன் டாப் வேரியன்ட்டே, யூஸ்டு கார் மார்க்கெட்டில் 13-14 லட்ச ரூபாய்க்குக் கிடைக்கிறது. இரண்டுமே எஸ்யூவிகள்தான் என்றாலும், நெக்ஸானில் இல்லாத 4 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 7 சீட் ஆப்ஷன்கள் ஹெக்ஸாவில் உண்டு. நல்ல கண்டிஷன் மற்றும் குறைவான கிமீ ஓடிய கார்கள், யூஸ்டு கார் மார்க்கெட்டில் தேடினால் கிடைக்கும்.

ஏனெனில், இனோவா போல அதிகளவில் இது விற்பனை ஆகவில்லை என்பதால், அதிக ஆப்ஷன்கள் இருப்பது கடினம்தான். தவிர, ஹெக்ஸாவின் மதிப்பும் ரீ-சேல் மதிப்பில் கொஞ்சம் பின்தங்கிவிடுகிறது.

இன்ஜின் - கியர்பாக்ஸ் மற்றும் இடவசதி எப்படி?

இந்த எஸ்யூவியில் இருக்கும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், 156bhp பவர் மற்றும் 40kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வந்தது ஹெக்ஸா. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் (G85), 4 வீல் டிரைவ் உடன் டாப் XT வேரியன்ட்டில் கிடைக்கிறது. இங்கே டிரைவிங் மோடுகளும் உண்டு. இதுவே 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் 2 வீல் டிரைவ் மட்டும்தான். ஆனால் XMA, XTA என இரு வேரியன்ட்களில் இது கிடைப்பது சிறப்பு. எனவே உங்களுக்கு 4 வீல் டிரைவ் வேண்டும் என்றால், மேனுவல் கியர்பாக்ஸ்தான் ஒரே ஆப்ஷன்.

டாடா ஹெக்ஸா
டாடா ஹெக்ஸா

இந்த 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்த வாட்டமாக இல்லை என்பதுடன், இயக்கமும் துல்லியமாக இல்லை என்பதும் நெருடல். க்ளட்ச் ஃபீட்பேக்கும் சிறப்பாக இல்லாதது மைனஸ். மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் டெட் பெடல் இல்லை என்பதுடன், டிரைவர் கால் வைப்பதற்கான இடமும் குறைவாகவே உள்ளது. டாப் வேரியன்ட்களில் 6 சீட் ஆப்ஷனும் இருந்தது. இதன் நடுவரிசையில் பெஞ்ச் சீட்டுக்குப் பதிலாக, 2 கேப்டன் சீட்கள் இருந்தன. எனவே கடைசி வரிசை இருக்கைக்குச் செல்வது, இந்த மாடலில் கொஞ்சம் சுலபம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹெக்ஸாவில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

மேனுவலுடன் ஒப்பிட்டால், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் செயல்பாடு செம ஸ்மூத். பவர்ஃபுல் 4 சிலிண்டர் இன்ஜினுடன், GM-ன் டார்க் கன்வெர்ட்டர் செம கூட்டணி அமைத்திருக்கிறது. தரமான மெட்டீரியல்களுடன் கேபின் தரமாக இருப்பதுடன், இதன் கட்டுமானத் தரமும் அசத்தல். சொகுசான சீட்கள், நீண்ட தூரப் பயணங்களுக்கு உத்தரவாதம் தருகின்றன. ஆனால் கறுப்பு நிற டேஷ்போர்டு, வெயில் காலங்களில் கேபினின் வெப்பநிலையை அதிகரித்துவிடுகிறது. மேலும் டேஷ்போர்டின் கீழ்ப்பகுதியில் இருக்கும் ப்ளாஸ்டிக்கின் தரம் சுமார்தான்.

நீங்கள் பார்க்கும் மாடல் பழையதாக இருந்தால், சில சந்தர்ப்பங்களில் இந்த ப்ளாஸ்டிக்ஸ் கடமுடா சத்தம் போடலாம். தவிர, டோர் லாக் மற்றும் பவர் விண்டோ ஸ்விட்ச்கள் செயலிழந்துவிடும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. இதிலிருந்த 7 இன்ச் டச் ஸ்க்ரீன், சீரற்ற ரெஸ்பான்ஸுக்குப் பெயர்பெற்றது. JBL சப் ஊஃபரில் கூடச் சில பிரச்னைகள் வந்திருக்கின்றன. எனவே, இவையெல்லாம் சரியாக இருக்கிறதா என்பதைச் செக் செய்யவும். அனைத்து இருக்கைகளையும் பயன்படுத்தும்போது, 128 லிட்டர் பூட் ஸ்பேஸ்தான் இருக்கும். இதுவே நடுவரிசை இருக்கையை மடிக்கும்போது, 671 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது. 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் செம!

மைலேஜ், பராமரிப்பு விஷயத்தில்

இந்த எஸ்யூவி எப்படி?

டாடாவின் காஸ்ட்லி மாடல் இதுதான். எனவே, உதிரிபாகங்கள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஒரு வருடம்/10,000 கிமீ என்றளவில் சர்வீஸ் இன்டர்வெல்லைக் கொண்டிருக்கும் ஹெக்ஸாவை ஒருமுறை சர்வீஸ் செய்ய, 7 முதல் 9 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். 3 வருட மாடலின் இன்ஷூரன்ஸுக்கு 15 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். ஹெக்ஸாவை அறிமுகப்படுத்தியபோது, 3 வருடம்/1 லட்சம் கி.மீ வாரன்ட்டியை வழங்கியது டாடா. எனவே யூஸ்டு கார் மார்க்கெட்டில் இருக்கக்கூடிய பெரும்பான்மையான மாடல்கள், வாரன்ட்டிக்குள்ளே இருப்பதற்கான சாத்தியம் அதிகம். மைலேஜ் விஷயத்தில், 2.2 டன் எடையுள்ள ஹெக்ஸா பர்ஸுக்குப் பாதகமே செய்கிறது.

டாடா ஹெக்ஸா
டாடா ஹெக்ஸா

அனைத்துவிதமான சாலைகளையும் சமாளிக்கும்படியான X2 லேடர் ஃபிரேம் - 4 வீல் டிரைவ் - திடமான கட்டுமானம் & சஸ்பென்ஷன் ஆகியவையே இதற்கான காரணம். மேனுவல் மாடல், சிட்டியில் 9-10 கிமீயும்... நெடுஞ்சாலையில் 12-13 கிமீ வரையும் சராசரியாக மைலேஜைத் தரும். இதுவே ஆட்டோமேட்டிக் மாடல் என்றால், நகரத்தில் 6-7கிமீ மற்றும் நெடுஞ்சாலையில் 10-11கிமீதான் மைலேஜ் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் மாடலில் டிரைவிங் மோடுகள் கிடையாது என்பதைக் கவனிக்கவும்.

விலை குறைவான

ஹெக்ஸாவும் இருக்கே!

ஹெக்ஸா, 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடனும் கிடைத்தது. இதில் இருப்பதும் அதே 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்தான் என்றாலும், குறைவான 150bhp பவர் மற்றும் 32kgm டார்க்கையே இது வெளிப்படுத்தியது. மேலும் 16 இன்ச் வீல்களே இந்த மாடலில் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றுடன் குறைவான டர்போ லேக்கும் சேரும்போது, வழக்கத்தைவிட அதிக மைலேஜை இது தரக்கூடும்.

டாக்ஸி மார்க்கெட்டுக்கு ஏற்ப, ஆரம்ப வேரியன்ட்டான XE-ல் மட்டுமே இந்த இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டது. எனவே அடிப்படையான வசதிகளைத் தவிர, பெரிதாக இங்கே எதிர்பார்க்க முடியாது. ஹெக்ஸா அறிமுகமான புதிதில், அதன் டாப் வேரியன்ட்களில் சிறிய 5 இன்ச் டச் ஸ்க்ரீன் (போல்ட்/ஜெஸ்ட் ஆகியவற்றில் இருந்த அதே சிஸ்டம்தான்) மற்றும் 19 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் இருந்தன. இவை சிறப்பான அனுபவத்தைத் தரவில்லை என்ற கருத்து எழுந்ததால், 2019-ல் டியாகோ/டிகோர் ஆகியவற்றில் இருந்த 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் மற்றும் சஃபாரியில் இருந்த 17 இன்ச் அலாய் வீல்களை ஹெக்ஸாவில் பயன்படுத்தியது டாடா. இதன் வசதிகளிலும் சிற்சில மாற்றங்கள் இருந்தன. 11 லட்சத்துக்கு கும்மென்று ஒரு பழைய எஸ்யூவி வாங்க வேண்டும் என்றால், ஹெக்ஸா இருக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு