கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

3.5 லட்சத்துக்கு பிரியோ… ப்ளஸ் என்ன… மைனஸ் என்ன?

ஹோண்டா பிரியோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஹோண்டா பிரியோ

பழைய கார்: ஹோண்டா பிரியோ

கார்: ஹோண்டா பிரியோ Petrol

மாடல் : 2012

விலை : சுமார் 3.5 – 4.0 லட்சம்

ப்ளஸ் : க்யூட்டான ஸ்டைல், பட்டர் ஸ்மூத் இன்ஜின் ரிஃபைன்மென்ட், கேபின் இடவசதி, ஆட்டோமேட்டிக் ஃபன் டு டிரைவிங்

மைனஸ் : பின் பக்க விண்ட்ஷீல்டு, ஆட்டோமேட்டிக் மைலேஜ், குறைவான பூட் இடவசதி, சுமாரான பில்டு குவாலிட்டி, வசதிகள்

காம்பேக்ட் கார்களில் போலோவுக்குப் பிறகு ஹோண்டாவின் பிரியோவைப் பார்த்தால், யாருக்குமே பிடிக்காமல் இருக்காது. இதன் ஏரோ டைனமிக் வடிவமும், க்யூட்டான டிசைனும் நிச்சயம் கவரும். பழைய கார் மார்க்கெட்டில் ஹோண்டா பிரியோ வாங்கினால் லாபம் உண்டா… என்ன கவனிக்கணும் என்பதைப் பார்க்கலாம்.

வரலாறு

B செக்மென்ட்டில் அப்போது மாருதி, ஹூண்டாய்தான் ராஜாக்கள். இதைக் கவனித்த ஹோண்டா, இந்தியாவில் ஸ்விஃப்ட் போல, தாய்லாந்தில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த பிரியோ எனும் குட்டிக் காரை இந்தியாவில் இறக்கிவிட முடிவு செய்தது.

அப்போது, 2011 மார்ச் மாதம் ஜப்பானில் சுனாமி. பிரியோவின் ரிலீஸ் தள்ளிப் போனது. ஒருவழியாக 2011 செப்டம்பரில் 4.2 லட்சம் எனும் எக்ஸ்- ஷோரூம் விலைக்கு வந்தது பிரியோ.

ஆனால், வெளியாகி ஏழே ஆண்டுகளில், அதாவது 2018–ம் ஆண்டு இதன் விற்பனை குறைந்ததால்… 2019–ல் சத்தமில்லாமல் பிரியோவை நிறுத்தியது ஹோண்டா. ஆனால், இந்த இடைப்பட்ட காலங்களில் பிரியோ, காம்பேக்ட் வாடிக்கையாளர்களின் மனதில் இடம் பிடித்ததற்குப் பல காரணங்கள் உண்டு.

3.5 லட்சத்துக்கு பிரியோ…
ப்ளஸ் என்ன… மைனஸ் என்ன?
3.5 லட்சத்துக்கு பிரியோ…
ப்ளஸ் என்ன… மைனஸ் என்ன?

என்ன ப்ளஸ்…என்ன மைனஸ்?

பிரியோவை ஓட்டினால், அலுப்பே தெரியவில்லை என்பார்கள் வாடிக்கையாளர்கள். இதற்குக் காரணம், இதன் பட்டர் ஸ்மூத்தான இன்ஜின் ரிஃபைன்மென்ட்தான். ஜாஸிடம் இருந்து பெறப்பட்ட 1.2 லிட்டர் i-VTEC இன்ஜின், 6,000rpm–ல் 88bhp பவரைக் கொடுக்கிறது. இதன் டார்க் 109Nm. இது இந்தக் குட்டி காரை சிட்டி காராக்கியது மட்டுமில்லாமல், இதன் ஏரோ டைனமிக் டிசைன் – நெடுஞ்சாலைகளில் பறக்கவும் ஜாலியாக இருக்கும். இதன் 0–100 கிமீ பெஃர்பாமன்ஸ், ஸ்விஃப்ட்டை விட வெறும் 2 விநாடிகள்தான் குறைவு என்பதே இதற்குச் சாட்சி. இதன் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் இன்னும் ஓட்டுதலில் உற்சாகமாக இருக்கும்.

இது 3,610 மிமீ நீளம் கொண்டிருக்கிறது. அதாவது, ஒரு சப் காம்பேக்ட் கார். இதன் நீளம் குறைவுதான். ஆனால், இதுதான் சிட்டிக்குள் சட்டென `யு’ டர்ன் அடிக்க ஏதுவாக இருக்கும். வெறும் 9 மீட்டரில் இதைத் திருப்பி விடலாம் என்பது ப்ளஸ். இதன் இன்னொரு பெரிய ப்ளஸ் என்றால், இதன் கேபின் இடவசதியைச் சொல்லலாம். இத்தனை சின்ன காராக இருந்தாலும், இதன் உள்ளே அத்தனை இடவசதி இருக்கும்.

இந்த டிசைன் பலருக்குப் பிடிக்கும்; சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். உங்களுக்கு ஒரு யூனிக்கான டிசைன் கொண்ட, அழகான கார் வேண்டுமென்றால், பிரியோவைத் தேர்ந்தெடுக்கலாம். முழுக்க முழுக்க கண்ணாடியாலான இதன் பின் பக்க விண்ட்ஷீல்டு, நிறைய பேரைக் கவர்ந்தது. இதன் தடிமன் 5 மிமீ இருக்கும். இந்தக் கண்ணாடியால், இந்தக் குட்டி காரை ரிவர்ஸ் கேமரா இல்லாமல் ரிவர்ஸ் எடுத்து, பார்க்கிங் செய்வது செம எளிதாக இருக்கும்.

ஆனால், இதுவேதான் இந்த பிரியோவின் மைனஸும் கூட! ஆம், விபத்தின்போது சாதாரண கார்களைவிட இதில் ஏற்படும் சேதாரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எனவே, கவனமாக ஓட்ட வேண்டும்.

விபத்து ஏற்படும்போது, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கண்ணாடி உதிரி பாகங்களுக்கு, சொற்பத் தொகையை மட்டுமே இழப்பீடாக வழங்கியதால்… பலரும் இதில் அதிருப்தியடைந்தனர்.

சில வாடிக்கையாளர்கள், ‘பொம்மை கார் மாதிரி இருக்கு’ என்கிறார்கள். சிலர், ‘செம யூனிக் ஸ்டைலா இருக்கு!’ என்று புளகாங்கிதம் அடைகிறார்கள். உங்கள் விருப்பம் என்ன என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும்.

பிரியோவில் E, S, VX என்று 3 வேரியன்ட்கள் உண்டு. இதில் ஆட்டோமேட்டிக்கில் VX வேரியன்ட் வருவதால், போதுமான வசதிகள் உண்டு. மற்றபடி வசதிகளில் மற்ற வேரியன்ட்கள் கொஞ்சம் சுமார்தான். இதன் S MT வேரியன்ட்டில், டிரைவர் சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாது. இதனால், உயரம் குறைவானவர்கள் பிரியோவை ஓட்டுவது கொஞ்சம் டஃப் டாஸ்க் ஆக இருக்கலாம். அதேபோல், ரியர் சைடு மிரர்களுக்கு ஆட்டோமேட்டிக் அட்ஜெஸ்ட் எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. மற்றபடி ஸ்விஃப்ட் VXi-ல் இல்லாத ஆக்ஸ் போர்ட், யுஎஸ்பி போன்ற வசதிகள் இருக்கும். இதன் டாப் எண்டில் மட்டும் பனி விளக்குகளும், ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல்கள் போன்றவை இருக்கும்.

இதன் ஸ்டீயரிங், லேசாக இருந்தாலும், பிரியோவின் கிளட்ச் மிகவும் டைட் ஆக இருப்பதாக அப்போதே ஒரு குறை உண்டு வாடிக்கையாளர்களிடம்.

 கேபின் இட வசதி அருமையாக இருக்கும். ஆனால், S MT வேரியன்ட்டில், 
டிரைவர் சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாது.
கேபின் இட வசதி அருமையாக இருக்கும். ஆனால், S MT வேரியன்ட்டில், டிரைவர் சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாது.

இதன் இன்னொரு மைனஸ் – இதன் குறைவான பூட் ஸ்பேஸ். வெறும் 175 லிட்டர்தான். இதிலும் சிலர் சப் வூஃபர் போன்ற ஆக்சஸரீஸ்கள் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதில் ஒரே ஒரு சூட்கேஸை மட்டும் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

இதன் மைலேஜ் பற்றியும் பெரிதாகப் பயப்படத் தேவையில்லை. 1 லிட்டர் பெட்ரோலுக்கு ஹைவேஸில் சுமார் 22 கிமீ தருவதாகச் சொல்லும் பிரியோ வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதுவே நகரத்துக்குள் 14 – 16 கிமீ வரை தருவதாகவும் சொல்கிறார்கள். இந்த ரியல் டைம் மைலேஜ், அராய் மைலேஜை நெருங்குகிறது என்பது ஆச்சரியம்.

என்ன கவனிக்கணும்?

ஏற்கெனவே சொன்னதுபோல், இதன் கிளட்ச்சில் அப்போதே இறுக்கம் பற்றிக் குறை கூறப்பட்டது. எனவே, நீங்கள் வாங்கப் போகும் காரில் கிளட்ச்சைச் சோதனையிட மறக்காதீர்கள். ரொம்பவும் இறுக்கமாகவும் இருக்கக் கூடாது; தளர்வாகவும் இருக்கக் கூடாது.

இதன் சஸ்பென்ஷன், இறுக்கமாக செட் செய்திருப்பார்கள். பிரியோவின் சஸ்பென்ஷன் ஓகே ரகம்தான். இருந்தாலும், ஒரு பள்ளத்தில் இறக்கிச் சோதனை போடலாம். ‘டப் டம் டமால்’ என்று அதிர்வுகள் பயமுறுத்தாமல் இருக்க வேண்டும். ஸ்டீயரிங்கிலும் ஒரு கை வைத்துக் கொள்ளுங்கள். ஆட்டம் காணாமல் இருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள்.

இதன் ஆட்டோமேட்டிக் மாடலில், கியர்பாக்ஸ் கொஞ்சம் தொய்வடைவதாகச் சொல்கிறார்கள். ஆட்டோமேட்டிக் மாடல் வாங்குகிறவர்கள், இதைக் கவனிக்க வேண்டும்.

சில கார்களில் ஆஃப்டர் மார்க்கெட் ஆக்சஸரீஸ்கள் பொருத்தியிருப்பார்கள். அதிலும் ஒரு கவனம் வையுங்கள். சிலர், எலெக்ட்ரிக் பாகங்களில் கை வைத்திருப்பார்கள். அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

மற்றபடி, ஹோண்டாவின் தரம் பற்றிச் சந்தேகிக்கத் தேவையில்லை. பிரியோவைக் குறை கூறியபடி யாரும் சர்வீஸ் சென்டர் பக்கம் வந்ததாக நினைவில்லை என்பதே உண்மை. நீங்கள் பிரியோவை வாங்கும்போது, ஒரு ஆத்தரைஸ்டு டீலர்ஷிப் மூலம் இதற்கான உதிரி பாகங்கள் கிடைக்கிறதா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

பிரியோவுக்கு பழைய சந்தையில் கொஞ்சம் ரீ–சேல் மதிப்பு குறைவுதான். கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, விலையை அடித்துப் பேசலாம். 3.5 லட்சம் பட்ஜெட்டில், சிட்டிக்குள் ஓட்ட ஓர் அற்புதமான குட்டிக் காராக இருக்கும் பிரியோ.

3.5 லட்சத்துக்கு பிரியோ…
ப்ளஸ் என்ன… மைனஸ் என்ன?