ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

ஆக்டிவ் வாங்க சரியான நேரம்!

ஹூண்டாய் i20 ஆக்டிவ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹூண்டாய் i20 ஆக்டிவ்

யூஸ்டு கார்: ஹூண்டாய் i20 ஆக்டிவ்

கிராஸ் ஹேட்ச்பேக்ஸ்.... காம்பேக்ட் எஸ்யூவிகளின் வருகைக்குப் பிறகு, இவை அதிகம் கவனம் ஈர்க்கவில்லை. ஆனால், வழக்கமான ஹேட்ச்பேக்குகளுடன் ஒப்பிடும்போது, இவற்றுக்குக் கொஞ்சம் கெத்தான டிசைன் மற்றும் கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் உண்டு.

ஹூண்டாயின் i20 ஆக்டிவ், அதற்கான உதாரணம். இடவசதி, சிறப்பம்சங்கள் என அசத்தும் இந்த க்ராஸ் ஹேட்ச்பேக்கை, யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்குவதற்கு இது நல்ல தருணம். ஏனெனில், தற்போது விற்பனையில் இருக்கும் எலீட் i20, BS-6 அவதாரத்தில் கிடைக்கிறது என்றாலும், i20 ஆக்டிவின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே, இதன் விலை முன்பைவிடக் குறையும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. புதிய i20 வரும்போது, இந்த க்ராஸ் ஹேட்ச்பேக்கின் விலை இன்னும் சரிவடையலாம்.

இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்

2015-ம் ஆண்டு அறிமுகமான i20 ஆக்டிவ்-ன், கிரவுண்ட் கிளியரன்ஸ் 190மிமீ. முன்பக்க - பின்பக்க Faux Skid Plates, பக்கவாட்டு பாடி கிளாடிங், ரூஃப் ரெயில் என வழக்கமான ஹேட்ச்பேக்கைவிட இதில் கட்டுமஸ்தான அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

ஹூண்டாய் i20 ஆக்டிவ்
ஹூண்டாய் i20 ஆக்டிவ்

இதில் கொடுக்கப்பட்டிருந்ததும் i20-ல் இருந்த அதே 4 சிலிண்டர் பெட்ரோல் - டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள்தான். இவை வெளிப்படுத்திய 83bhp/90bhp பவர் மற்றும் 11.5kgm/22kgm டார்க்கில் எந்த மாறுதலும் இல்லை. இரண்டிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தான் என்பதுடன், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லை. 1,396சிசி CRDi டீசல் இன்ஜின் ஸ்மூத்தாகத் செயல்படுகிறது. விரட்டியும் ஓட்ட முடிகிறது. பவர் டெலிவரி சீராக இருப்பதுடன், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்தத் துல்லியமாக உள்ளது.

குறைவான வேகம் - அதிக கியர் காம்போவிலும் இன்ஜின் பிரச்னையில்லாமல் இயங்குவதால், நெரிசல்மிக்க நகரச்சாலைகளிலும், பரந்து விரிந்த நெடுஞ்சாலைகளிலும் இந்த க்ராஸ் ஹேட்ச்பேக்கை ஓட்டுவது சுலபம். (டீசல் i20 ஆக்டிவ்-ன் அராய் மைலேஜ் 21.19கிமீ).

1,197 சிசி `Kappa’ பெட்ரோல் இன்ஜின், டீசலைப் போலவே சைலன்ட்டாக இருப்பதுடன், நகரப்புறப் பயன்பாட்டுக்கு ஏற்றபடி பர்ஃபாமன்ஸும் அமைந்திருக்கிறது. ஆனால் வேகமான நெடுஞ்சாலைகளுக்கான பவர் இல்லை. பெட்ரோல் i20 ஆக்டிவ், அராய் கணக்குப்படி 17.19 கிமீ மைலேஜ் தருகிறது.

ஓட்டுதல் அனுபவம்

கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸுக்காக சஸ்பென்ஷன் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், வழக்கமான i20 போலவே இதன் ஓட்டுதல் அமைந்திருக்கிறது.

ஸ்டீயரிங் எடை குறைவாக இருப்பதால், கையாளுமையில் போதுமான ஃபீட்பேக் கிடைக்கவில்லை. பாடி ரோல் தெரிந்தாலும், அது அசெளகரியத்தைத் தரவில்லை. மென்மையான செட்-அப்பில் இருக்கும் சஸ்பென்ஷன், குறைவான வேகத்தில் சிறப்பான ஓட்டுதலுக்கு வழிவகுக்கிறது. ஆனால், கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது சஸ்பென்ஷன் இயங்குவதை உணரமுடிகிறது. 285 லிட்டர் பூட் ஸ்பேஸ் செம!

கேபின் மற்றும் வசதிகள்

i20 போலவேதான் i20 ஆக்டிவின் கேபினும்! டேஷ்போர்டின் ஃபிட் அண்டு ஃபினிஷ் மற்றும் கேபினின் தரம் சூப்பர். 2015-ல் 3 வேரியன்ட்களில் வந்த i20 ஆக்டிவ் (Base, S, SX), 2018-ம் ஆண்டில் வெளியான ஃபேஸ்லிஃப்ட்டில் 2 வேரியன்ட்டாகச் சுருங்கிவிட்டது (S, SX). ஆனால் டாப் வேரியன்ட்டான SX, டூயல் டோன் ஆப்ஷனுடன் வந்தது. இதர ஹூண்டாய் கார்களைப்போலவே, இந்த க்ராஸ் ஹேட்ச்பேக்கிலும் அதிக வசதிகள். SX-ல் 6 காற்றுப்பைகள், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், LED DRL, கார்னரிங் லைட்ஸ், 16 இன்ச் அலாய் வீல்கள், வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை அதற்கான உதாரணங்கள்.

ஹூண்டாய் i20 ஆக்டிவ்
ஹூண்டாய் i20 ஆக்டிவ்

i20 ஆக்டிவ் எப்படிப்பட்ட கார்?

நம்பகத்தன்மை, கட்டுபடியாகக் கூடிய உதிரிபாகங்களின் விலை, பரந்துவிரிந்த டீலர் நெட்வொர்க், குறைந்த பராமரிப்புச் செலவு ஆகியவை இதன் ப்ளஸ். உற்பத்தி நிறுத்தப்பட்ட மாடல் என்றாலும், உதிரிபாகங்கள் கிடைப்பதில் பெரிதாகச் சிக்கல் இருக்காது.

ஏனெனில் i20 இன்னும் தயாரிக்கப் படுவதை நினைவில் கொள்ளவும். பவர்ஃபுல்லான 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி, இந்த ஸ்டைலான காரின் குணத்துக்குப் பொருந்துகிறது. இது நல்ல மைலேஜ் தருவதுடன், ஓட்டுவதற்கும் சிறப்பாக இருக்கிறது. i20 ஆக்டிவ் நிறுத்தப்பட்ட போது, டாப் வேரியன்ட்டான 1.4 SX மாடலின் விலை 11.71 லட்ச ரூபாயாக இருந்தது. பெட்ரோல் மாடலின் மைலேஜ், நகரத்தில் 9-12 கி.மீ மட்டுமே தருவதாகத் தகவல் வந்திருக்கிறது.

i20 ஆக்டிவில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

யூஸ்டு கார் மார்க்கெட்டில் கார்களைப் பார்க்கும்போது, இந்த விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வது நலம். க்ளட்ச் ஸ்லிப் ஆவது போல இருந்தாலோ, அல்லது க்ளட்ச் பெடல் `சவசவ’ எனத் தெரிந்தாலோ, க்ளட்ச் அசெம்ப்ளியை மாற்ற வேண்டும் என அர்த்தம். புதிய க்ளட்ச்சின் விலை, டீசல் மாடலில் கொஞ்சம் அதிகம்தான்;

குறைவான வேகங்களில் செல்லும்போது, பிரேக் பெடல் பயன்படுத்தக் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்பது, இந்த காரில் பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. எனவே, நீங்கள் பார்க்கும் காரை, ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்துவிடுவது நலம். டாப் வேரியன்ட்களில் இருக்கும் டச் ஸ்க்ரீன் சீராக இயங்குகிறதா என்பதைப் பார்க்கவும். ஒருவேளை Screen Freezing அல்லது Screen Lag தெரிந்தால், சாஃப்ட்வேர் அப்டேட்டில் பிரச்னை.

ஆக்டிவ் வாங்க சரியான நேரம்!

விலை விபரங்கள்

இன்ஜின் மற்றும் வேரியன்ட்டைப் பொருத்து விலை வேறுபடும். எனவே 5-7 லட்ச ரூபாய்க்குள் காரை வாங்குவது நல்ல முடிவாக இருக்கும். 2018-ம் ஆண்டில் வெளிவந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலைப் பொறுத்தவரை, டாப் வேரியன்ட்களில் 6 காற்றுப்பைகள், வயர்லெஸ் சார்ஜிங் என அதிகப்படியான வசதிகள் உண்டு. யூஸ்டு கார் மார்க்கெட்டில் டீசல் i20 ஆக்டிவ் (1.4 SX)-க்கு அவ்வளவு டிமாண்ட் இல்லை என்பதால், 6 லட்ச ரூபாய்க்குக் காரை வாங்குவது நலம். தயாரிப்பில் இல்லை என்பதால், இன்னும் கூட விலையில் பேரம் பேசலாம்.