Published:Updated:

பழைய ஜீப்... பராமரிப்பில் சீப் இல்லை!

யூஸ்டு கார்: ஜீப் காம்பஸ்

பிரீமியம் ஸ்டோரி

கியாவுக்கு செல்ட்டோஸ் எப்படியோ, ஜீப்புக்கு காம்பஸ் அப்படி. ஆம், கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் வெளியான இந்த மிட்சைஸ் எஸ்யூவி, ஒரு எஸ்யூவிக்கான அடிப்படை விஷயங்களைக் கச்சிதமான அளவில் கொண்டிருந்தது. எனவே, நாளடைவில் இதன் விலை கணிசமாக அதிகரித்தாலும், Made In India காம்பஸ் மீதான வரவேற்பு குறையவே இல்லை. நீட்டான டிசைன் மற்றும் ஜீப் பிராண்டிங் ஆகியவற்றைத் தாண்டி, சொகுசான ஓட்டுதல் அனுபவத்தில் இது நிகழ்த்திய மாயாஜாலம் தெரிந்ததே! இதனாலேயே ஆன் ரோடு தவிர ஆஃப் ரோடிங்கிலும் இந்த மிட்சைஸ் எஸ்யூவியைப் பார்க்க முடிகிறது. இப்போது 20 லட்ச ரூபாயில் தொடங்கி (டர்போ பெட்ரோல் மேனுவல்), 30 லட்ச ரூபாய் வரையிலான (டர்போ டீசல் ஆட்டோமேட்டிக்) சென்னை ஆன் ரோடு விலையில் காம்பஸின் BS-6 மாடல் கிடைக்கும் சூழலில், அதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச அளவில் தற்போது டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. எனவே யூஸ்டு கார் மார்க்கெட்டில், 3 ஆண்டுகள் பழைய அல்லது 30,000 கிமீ ஓடிய கார்களை அதிகமாகப் பார்க்கலாம். இதன் டீசல் டாப் வேரியன்ட்டை உத்தேசமாக 15-18 லட்ச ரூபாய்க்கு வாங்க முடியும் என்பது செம! ஏனெனில் அதைப் புதிதாக வாங்கியபோது, அதன் உரிமையாளர் 6-8 லட்ச ரூபாய் கூடுதலாகக் கொடுத்திருப்பார். ஒரு திடமான - பிராக்டிக்கலான எஸ்யூவியின் தேடலுக்கான விடை இங்கே!

பழைய ஜீப்... பராமரிப்பில் சீப் இல்லை!

இன்ஜின் - கியர்பாக்ஸ்

162bhp பவர் - 25kgm டார்க்கை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், ஃபியட் கார்களில் நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகியதுதான். நீங்கள் சிட்டிக்குள் காரைப் பயன்படுத்துவீர்கள் என்றால், 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலை நீங்கள் வாங்குவது நலம். ஆனால் பெரிய & கனமான எஸ்யூவியில் சிறிய பெட்ரோல் இன்ஜின் இருப்பதால், எதிர்பார்த்தபடியே மைலேஜில் பின்தங்கி விடுகிறது பெட்ரோல் காம்பஸ். நகரத்தில் சராசரியாக ஒற்றை இலக்கங்களில்தான் மைலேஜ் கிடைக்கும் என்பதுடன், காரை விரட்டி ஓட்டினால் மைலேஜ் இன்னும் குறைந்து விடுகிறது. எனவே மாதாந்திரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் பட்சத்தில், டீசல் மாடலை நீங்கள் பரிசீலிக்கலாம். இதில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், 173bhp பவர் - 35kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. பவர்ஃபுல் பெர்ஃபாமன்ஸைக் கொண்டிருந்தாலும், போதுமான மைலேஜும் இங்கே கிடைக்கிறது. நகரத்தில் 11-12 கிமீயும், நெடுஞ்சாலைகளில் 15-16 கிமீயும் மைலேஜ் தரக்கூடிய காம்பஸ், ஆஃப் ரோடிங் பிரியர்களுக்கான 4 வீல் டிரைவ் சிஸ்டத்தையும் கொண்டிருந்தது (ஆஃப் ரோடு மோடுகளும் உண்டு). 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடனான BS-6 ட்ரெய்ல்ஹாக் மாடல் சமீபத்தில்தான் வந்தது என்பதால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் இதைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம்தான். மற்றபடி வெளிப்புறத்தைப் போலவே, கேபினும் வழக்கமான டிசைனைக் கொண்டிருக்கிறது. ஆனால் தரத்தில் எந்தச் சமரசமும் இல்லை என்பதுடன், அதில் போதுமான வசதிகளும் இடம் பிடித்திருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பழைய ஜீப்... பராமரிப்பில் சீப் இல்லை!

காரில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

காம்பஸை ஒரு ஜெனரல் சர்வீஸ் செய்வதற்கு, உத்தேசமாக 10,000 - 12,000 ரூபாய் தேவைப்படும். இது மிட்சைஸ் எஸ்யூவிதான் என்றாலும், உதிரிபாகங்களின் விலை கொஞ்சம் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவும். 4 வீல் டிரைவ் கொண்ட மாடல்கள் Rough Usage செய்யப்பட்டிருக்கும் என்பதால், அதை வாங்கும்போது கவனமாக இருத்தல் அவசியம். ஏனெனில், ஏதேனும் இடர்பாடு இருந்தால், அது பர்ஸைப் பதம் பார்த்துவிடும். எனவே காரின் அடிப்பகுதி, பம்பர்கள், 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவற்றை செக் செய்யும்போது, அவை லீக் ஆகாமல் இருக்கிறதா என்பதைப் பார்த்து விடவும். ஆரம்ப கட்டத்தில் வந்த காம்பஸின் தரத்தில் சில பிரச்னைகள் இருந்தன என்பதுடன், Early க்ளட்ச் Wear - மந்தமான டச் ஸ்க்ரீன் ரெஸ்பான்ஸ் - டீசல் பம்ப் ஃபெயிலியர் போன்ற சிக்கல்களும் இந்த ஜீப் தயாரிப்பில் இருக்கின்றன. இவற்றைச் சரிசெய்வது என்பது கொஞ்சம் காஸ்ட்லியான சமாச்சாரம்தான்; பெட்ரோல் - மேனுவல் மாடல்களின் க்ளட்ச் Springy ஆக இருந்தன என்பதால், பெரும்பாலானோர் அந்தப் பெடல் மீது கால்வைத்திருந்தால் கூட, அது க்ளட்ச்சின் தேய்மானத்தை அதிகரித்திருக்கும் (Early க்ளட்ச் Wear). மேலும் பெட்ரோல் - ஆட்டோமேட்டிக் மாடல்களைப் பொறுத்தவரை, கியர்பாக்ஸின் கண்டிஷன் சிறப்பாக இருத்தால் மட்டுமே, அந்தக் காரை மேற்கொண்டு பார்ப்பது நல்லது. நீங்கள் பார்த்திருக்கும் டீசல் மாடலை ஓட்டும்போது அதன் ஆக்ஸிலரேஷன் சீராக இல்லாவிட்டாலோ அல்லது வேகம் பிடிப்பதில் சுணக்கம் தெரிந்தாலோ, டீசல் பம்ப் காலி என அர்த்தம். இதைச் சரி செய்ய 35,000 ரூபாய் செலவாகும்.

பழைய ஜீப்... பராமரிப்பில் சீப் இல்லை!

ஜீப் காம்பஸ் - சில தகவல்கள்

இந்த மிட்சைஸ் எஸ்யூவியை இருமுறை ரீ-கால் செய்திருக்கிறது ஜீப். செப்டம்பர் 2017 – நவம்பர் 2017 வரையிலான காலத்தில் தயாரிக்கப்பட்ட 1,200 கார்களில், பாசஞ்சர் காற்றுப்பைகளில் தளர்வாக இருந்த Fasterner-கள் மாற்றித் தரப்பட்டன. மேலும் டிசம்பர் 2017 – நவம்பர் 2018 காலகட்டத்தில் தயாரான 2 வீல் டிரைவ் டீசல் மாடல்களில் இருக்கும் Powertrain Control Module அமைப்பின் மென்பொருள் அப்டேட் தரப்பட்டது. இவையெல்லாம் நீங்கள் பார்க்கும் காரில் செய்ய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்யவும். தவிர இந்த 3 ஆண்டுகளில், காம்பஸில் சில ஸ்பெஷல் எடிஷன்கள் வந்திருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் காம்பஸின் BS-6 வெர்ஷனுடன் ஒப்பிடும்போது, யூஸ்டு கார் மார்க்கெட்டில் இருக்கக் கூடிய மாடல்களும் அதே தோற்றம் – இன்ஜின்/கியர்பாக்ஸ் – வசதிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன என்பதால், சிறப்பான கண்டிஷனில் இருக்கும் பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவது நிச்சயம் நல்ல முடிவுதான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு