Published:Updated:

2 முதல் 2.5 லட்சம் பட்ஜெட்… ஆம்னி, விலைக்கேற்ற வேன்தான்… ஆனால்?

மாருதி சுஸூகி ஆம்னி
பிரீமியம் ஸ்டோரி
மாருதி சுஸூகி ஆம்னி

பழைய கார் மார்க்கெட்: மாருதி சுஸூகி ஆம்னி

2 முதல் 2.5 லட்சம் பட்ஜெட்… ஆம்னி, விலைக்கேற்ற வேன்தான்… ஆனால்?

பழைய கார் மார்க்கெட்: மாருதி சுஸூகி ஆம்னி

Published:Updated:
மாருதி சுஸூகி ஆம்னி
பிரீமியம் ஸ்டோரி
மாருதி சுஸூகி ஆம்னி

கார்: மாருதி சுஸூகி ஆம்னி (பெட்ரோல்)  மாடல்: 2013 – 2015  விலை: சுமார் 2 – 2.5 லட்சம்

மைலேஜ்: 14 கிமீ (ஆவரேஜாக)  ப்ளஸ்: விலை, பராமரிப்பு, ரீ–சேல், பயன்பாடு, யுட்டிலிட்டி

மைனஸ்: வசதிகள், பாதுகாப்பு, இன்ஜின் சூடு, நெடுஞ்சாலை நிலைத்தன்மை

‘புஷ்பா’ அல்லு அர்ஜூன் தயவில் மாருதி ஆம்னி மீண்டும் பலரின் கவனம் ஈர்த்திருக்கிறது. `அடக்கமான வெற்றி’ என்பார்களே… அது ஆம்னிக்குப் பொருந்தும். ‘பாதுகாப்பு இல்லை; வசதிகள் இல்லை; ஸ்பீடாகப் பறக்க முடியலை’ என்று எத்தனை குறைகள் இருந்தாலும், ஆம்னிக்கு என்று விற்பனைப் பட்டியலில் ஓர் இடம் உண்டு. ‘7 –8 பேர் குடும்பத்தோட போகணும்; விலை குறைவாக இருக்கணும்’ என்பவர்களுக்கு ஆம்னி சிறந்த ஆப்ஷனே! (இப்போது ஆம்னி இல்லை!) அப்படிப்பட்ட ஆம்னிக்குப் பழைய கார் மார்க்கெட்டிலும் அந்த அடக்கமான ஆர்ப்பரிப்பு உண்டு.

‘ரெண்டு வருஷம்தான் காரைப் பயன்படுத்தப் போறேன்; கார் ஓட்டப் பழகப் போறேன்’ என்று 2 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கார் வாங்க பழைய கார் ஷோரூமைச் சுற்றி வருபவர்களுக்கு… ஆம்னி சரியான தேர்வாக இருக்கும்.

ஆம்னியை கார் என்று யாரும் சொல்லிக் கேட்டதில்லை. பெரும்பாலும் வேன் என்றுதான் இதை மார்க்கெட்டில் சொல்கிறார்கள். 1984–ல்தான் முதன் முதலில் லாஞ்ச் ஆனது ஆம்னி. 800 சிசியில், வெறும் 34.2bhp–யில் பட்ஜெட் மார்க்கெட்டில் சக்கைப் போடு போட்டது. ஆர்ப்பாட்டமான வெற்றி; அடக்கமான வெற்றி – இரண்டுக்குமே மாருதி நிறுவனத்திடம் விடை இருக்கும். இதில் ஆம்னி இரண்டாவது ரகம். ஒவ்வொரு மாதமும் டாப்–10 லிஸ்ட்டில் இடம் பிடிக்கத் தவறியிருந்தாலும், 6,000 – முதல் 7,000 கார்கள் வரை விற்பனையானது ஆம்னி. சில மாதங்களில் டாப்–10–லும் இடம் பெறும்.

இதன் சைடு ஸ்லைடிங் கதவுகள்தான் ஆம்னியின் தனியடையாளம். அப்படிப்பட்ட ஆம்னி, அக்டோபர் 2019–ல் மத்திய அரசு கொண்டு வந்த பாதுகாப்புச் சட்டங்களை எதிர்கொள்ள முடியாமல், 2020–ல் இதன் தயாரிப்பை நிறுத்தியது மாருதி சுஸூகி. தயாரிப்பு நிறுத்தப்படும்போது ஆம்னிக்கு வயது 35. அதற்குப் பதிலாகத்தான் இப்போது ஈக்கோ எனும் வேனை விற்பனை செய்கிறது மாருதி.

என்ன ப்ளஸ்…?

வழக்கம்போல், இந்த மாருதி காரின் பலம் இதன் விலையும் பராமரிப்பும்தான். இது விற்பனையான சமயம், புத்தம் புது காரின் விலை 3.15 லட்சம்தான். மிட் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு இதை விட வேறென்ன வேண்டும்.? இதில் 5 சீட்டர் தவிர்த்து 8 சீட்டர் ஆப்ஷனும் கொடுத்தது இன்னும் மகிழ்ச்சி! சரக்குகளை சுலபமாக ஏற்றி இறக்க முடியும் என்பதால் – ஆம்னியை சிறு வணிகர்கள் கொண்டாடுவதைப் பார்க்க முடியும். இதில் பின்னால் உள்ள பென்ச் சீட்டை எடுத்துவிட்டால்… இடவசதி பெருகும் – ஸ்கூல் வேன், ஆம்புலன்ஸ் என்று இப்போதும் ஆம்னி சர்வீஸ் செய்து கொண்டுதான் இருக்கிறது. இதன் ரைடிங் பொசிஷன் செளகரியமாகவெல்லாம் இருக்காது. ஆனால், காரை ஓட்டுவதற்குத் தெளிவான விசிபிலிட்டி கிடைக்கும். இதன் கியர் பொசிஷன் ஓட்டுவதற்கு வாகாக இருப்பதாகச் சொல்வார்கள். கார்களைப் போல் இதில் முன் பக்கம் பானெட் நீளமாக இல்லாததால், காரின் முகப்பு எங்கே முடியும் என்று தெரிவதால்… புதிதாகக் கார் ஓட்டப் பழகுபவர்களுக்கு இது செம பிராக்டிக்கலாக இருக்கும்.

இன்ஜின், மைலேஜ்

பெர்ஃபாமென்ஸை எல்லாம் இந்த ஆம்னியில் எதிர்பார்க்க முடியாது. இதில் இருப்பது 800 சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின். அதனால், அதிர்வுகளுக்குக் குறைவிருக்காது. ஆனால், இந்த செக்மென்ட்டில் ஓரளவு ரிஃபைன்மென்ட் இந்த ஆம்னியில் உண்டு என்பதைச் சொல்லியாக வேண்டும். இதன் பவர் 38bhp தான். எனவே நெடுஞ்சாலையில் பறப்பதையெல்லாம் எதிர்பார்க்கப்புடாது. இதன் டார்க்கும் வெறும் 5.9kgmதான். ஆனால், சிட்டிக்குள் 7 பேரை ஏற்றிக் கொண்டு போனாலும் இதன் இழுவைத் திறன் பக்கா என்பதே பலரின் கருத்து.

இதில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். மாருதிக்கு இதை 1000 சிசியாக்கி, 4 சிலிண்டர் ஆக்கி, 5 ஸ்பீடு கியர் ஆக்கி அழகு பார்க்க ஆசை என்பதாக ஒரு தகவல் வந்தது. ஆனால், பாதுகாப்பு நார்ம்ஸைச் சந்திக்க முடியாமல் ஆம்னி நின்று போனது சோகம்.

ஹைவேஸில் இதை 80 கிமீ வேகத்துக்கு மேல் ஓட்டுவது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயம். ஆனால், நகர்களில் சந்து பொந்துகளுக்குள் பைக்கைப்போல் நுழைந்துவர இதன் காம்பேக்ட்டான பாக்ஸ் டிசைன், செமயாக இருக்கும்.

3 சிலிண்டர் என்பதால், இதன் மைலேஜ் பெரிதாகக் கையைக் கடிக்காது. ஆம்னியின் சராசரி மைலேஜ் – சுமார் 18 கிமீ கிடைப்பதாகச் சொல்கிறார்கள். சிட்டிக்குள் இதன் மைலேஜ் – 13.5 கிமீ.

ஆம்னி எல்பிஜி கிட்டோடும் வந்தது. பெட்ரோல் போட்டு மாள முடியாதவர்கள், எல்பிஜி கிட் வந்தால்… கவனித்து எடுக்கவும். ஏனென்றால், இது ஃபேக்டரி ஃபிட்டிங் எல்பிஜி கிட்டாக இருக்காத பட்சத்தில்… இதில் ரிஸ்க் அதிகம்.

2 முதல் 2.5 லட்சம் பட்ஜெட்…
ஆம்னி, விலைக்கேற்ற வேன்தான்… ஆனால்?
2 முதல் 2.5 லட்சம் பட்ஜெட்…
ஆம்னி, விலைக்கேற்ற வேன்தான்… ஆனால்?
2 முதல் 2.5 லட்சம் பட்ஜெட்…
ஆம்னி, விலைக்கேற்ற வேன்தான்… ஆனால்?
2 முதல் 2.5 லட்சம் பட்ஜெட்…
ஆம்னி, விலைக்கேற்ற வேன்தான்… ஆனால்?
2 முதல் 2.5 லட்சம் பட்ஜெட்…
ஆம்னி, விலைக்கேற்ற வேன்தான்… ஆனால்?


என்ன எதிர்பார்க்கக் கூடாது?

ஆம்னியில் என்ன மைனஸ் என்று குழந்தையிடம் கேட்டால்கூடச் சொல்லும். ஆம், பாதுகாப்புதான் ஆம்னியின் முக்கியமான மைனஸ். சென்ட்ரல் லாக்கிங் கூட இதில் இருக்காது என்பதைக் கவனிக்க வேண்டும். சிட்டிக்குள் வளைந்து நெளிந்து போகப் பயன்படும் இதன் பாக்ஸ் டிசைன்தான், நெடுஞ்சாலையில் இதற்கு வில்லனாகிப் போனது. 80 கிமீ–க்கு மேல் சீர்குலையும் இதன் ஏரோடைனமிக்ஸ் டிசைனும், குறைவான எடையும் பாடி ரோலை வரவழைத்து, கொஞ்சம் பயத்தையும் கூடவே வரவழைக்கும்.

மேலும், வழக்கமான கார்களில் இருப்பதுபோல் இதில் இன்ஜின் முன்பக்கம் இல்லாமல் – காருக்குள்ளே பொசிஷன் செய்திருப்பதால்… காருக்குள்ளே இன்ஜின் சூடு தெரிகிறது. அதிலும் முன் பக்கப் பயணிகள்தான் பாவம். லாங் டிரைவிங்குக்கு ஆம்னி செட் ஆகாது என்பது பலரது கருத்து. அது நிஜமும்கூட! ஓட்டுவதற்கு இதன் ரைடிங் பொசிஷன் பக்காதான்; ஆனால் பானெட் இல்லாததால் சின்ன விபத்தில்கூட காரின் முன்பக்கத்தில் டென்ட் விழ வாய்ப்புண்டு. அதற்காக பம்பர்கள் போட்டு ஓட்டும் சிலர் இருக்கிறார்கள்; இது தப்பு. (படத்தில் பம்பர்கள் இருக்கு!)

2 முதல் 2.5 லட்சம் பட்ஜெட்…
ஆம்னி, விலைக்கேற்ற வேன்தான்… ஆனால்?


இதன் பிரேக்கிங் ரேஷியோவும் சரிசமமாக வழங்கப்படாததாகச் சொல்கிறார்கள். இதில் டிஸ்க் இல்லை; ஏபிஎஸ்–ஸும் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். எமர்ஜென்ஸி பிரேக்கிங்கில் இது கொஞ்சம் பீதியைக் கிளப்பலாம். அதேபோல், ஆம்னியில் வசதிகளையும் எதிர்பார்க்கக் கூடாது. அதிகபட்சமாக ஏசி, பவர் ஸ்டீயரிங், ஆஃப்டர் மார்க்கெட்டிங் ஸ்டீரியோ செட்–அப் இருந்தால்… கையெடுத்துக் கும்பிடலாம்.

ஃப்யூல் ஹோஸ் பிரச்னைக்காக 2001–ல் மாருதி ஆம்னியை ரீ–கால் செய்தது. ஆகஸ்ட் – டிசம்பர் 2000–ல் ரெடியான சுமார் 76,000 கார்கள் ஃப்ரீ ஆஃப் காஸ்ட்டில் சர்வீஸ் சென்டருக்குப் போய் வந்தன. ஆனால், நாம் இங்கே பார்க்கப் போவது 2013 – 2015 மாடல் என்பதால்… கவலை இல்லை. தயாரிப்பு நிறுத்தப்பட்டாலும், ஆம்னிக்கு உதிரி பாகங்களைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதும் பெரிய ப்ளஸ்! மேலும், விற்பனையில் ஈக்கோவின் சில பாகங்கள் ஆம்னிக்கு செட் ஆகும் என்பதும் மகிழ்ச்சியான விஷயம்!

‘நல்ல மைலேஜ் வேணும்; விலை 2 லட்சத்துக்குள் இருக்கணும்; இடவசதி வேணும்’ என்று சொல்லும் மிட் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சின்ன… இல்லை, பெரிய வேண்டுகோள்.

‘ரேஷ் டிரைவ் பண்ணமாட்டேன்; பாதுகாப்பு வசதிகள் குறைவான இந்த காரை ரொம்பவும் கவனமாக ஓட்டுவேன்’ என்று சபதம் எடுத்துவிட்டு இந்த ஆம்னி வேனை உங்கள் நண்பனாக்குங்கள்! சந்தோஷமாகவே இருக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism