கார்ஸ்
Published:Updated:

பழைய ஸ்டார்... ஏ-ஸ்டார் கார்... வாங்கலாமா?

மாருதி சுஸூகி ஏ–ஸ்டார்
பிரீமியம் ஸ்டோரி
News
மாருதி சுஸூகி ஏ–ஸ்டார்

பழைய கார்: மாருதி சுஸூகி ஏ–ஸ்டார்

கார் : மாருதி சுஸூகி ஏ–ஸ்டார் பெட்ரோல்

மாடல்: 2010 முதல் 2014

விலை: சுமார் 1.5 – 1.75 லட்சம்

ப்ளஸ்: பராமரிப்பு, விலை, காம்பேக்ட் சைஸ், மைலேஜ், உதிரி பாகங்கள் கிடைப்பதில் தொந்தரவு இருக்காது.

மைனஸ்: கட்டுமானம், சொகுசு, வசதிகள், பூட் ஸ்பேஸ், பின் பக்க லெக்ரூம், உயரம் குறைவானவர்களுக்கு விசிபிலிட்டி குறைவு.

‘ஸ்விஃப்ட் மாதிரியே இருக்க வேண்டும்’ என்று பார்த்துப் பார்த்து மாருதி டிசைன் செய்ததுதான் ஏ–ஸ்டார். ஸ்விஃப்ட் கொஞ்சம் ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் வலம் வந்தது; அதே ஸ்டைலில் காம்பேக்ட்/பட்ஜெட் ஹேட்ச்பேக்கில் வலம் வந்ததுதான் ஏ–ஸ்டார்.

‘கையில் காசு ரொம்பவும் கம்மியா இருக்கு; ஓர் அற்புதமான குட்டி ஹேட்ச்பேக் வேண்டும்’ என்பவர்களுக்கு ஏ–ஸ்டார் நல்ல ஆப்ஷன் என்று சொல்லலாம். அதற்கான காரணங்கள் பல உண்டு. அது என்னனு பார்க்கலாம்.

ஏ–ஸ்டார், ஃபெயிலியரான கார்தான். ஆனால், பழைய கார் மார்க்கெட்டில் ஹிட் அடித்துக் கொண்டிருக்கிற கார். அண்மையில் ஒரு மாருதி ட்ரூ வேல்யூ ஷோரூமுக்குப் போனபோது, ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து வந்த கார், அடுத்த கால்மணி நேரத்தில் விற்றுப் போனது ஆச்சரியமான விஷயம். முன்பு ஏ–ஸ்டார் லாஞ்ச் ஆனபோது, ஏ–ஸ்டார் வாடிக்கையாளர்களுக்கென டிரைவ் / ராலி நிகழ்ச்சிகளெல்லாம் ஏற்பாடு செய்யும் மாருதி. அதில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்களைப் பார்த்தால், அது ஃபெயிலியர் ஆன கார் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

வரலாறு

2008–ல்தான் முதன் முதலில் ஏ–ஸ்டாரை லாஞ்ச் செய்தது மாருதி. வெளிநாடுகளில் இது சுஸூகி ஆல்ட்டோ, செலெரியோ, பிக்ஸோ என்று பல பெயர்களில் விற்பனையாகிக் கொண்டிருந்தது. நம் ஊரில் வெறும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்களை மட்டுமே தயாரித்து வந்தது மாருதி. இதன் ஆட்டோமேட்டிக் வெர்ஷன், ஏற்றுமதி மாடல்களில் இருந்தது.

விற்பனையில் டல் அடிக்கவும் இல்லை; பெரிதாகச் சொல்லியடிக்கவும் இல்லை ஏ–ஸ்டார். காரணம், இது ஃபுல்லி லோடட் ஹேட்ச்பேக் இல்லை. முக்கியமாக, பாதுகாப்பில் கொஞ்சம் ஏ–ஸ்டார் பல்லிளித்தது. அதாவது, வசதிகளில் ஏ–ஸ்டார் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தவில்லை. இதன் சிங்கிள் ஏர்பேக் கொண்ட டாப் மாடல்கூட, பாதுகாப்பில் பெரிய நம்பிக்கை ஏற்படுத்தவில்லை.

ஆனால், மைலேஜில் பட்டையைக் கிளப்பியது. கூடவே பராமரிப்பு. இவைதான் ஏ–ஸ்டாரின் பலங்கள். ‘விலைக்கேற்ற தரமான கார்’ என்று பெயரெடுப்பதில் மாருதி கார்கள் கில்லி. அந்த வகையில் எஸ்திலோவுக்குப் பிறகு, ஏ–ஸ்டார்தான் வேல்யூ ஃபார் மணிக்குப் பெயர் போன கார். அந்த நேரத்தில் ஹூண்டாய் இயான், சொந்த நிறுவனத்தின் வேகன்–ஆர் போன்ற கார்களே ஏ–ஸ்டாரின் விற்பனையைக் குலைத்தன. 2014–ல் எஸ்திலோ மாதிரியே இதன் விற்பனையை நிறுத்தியது மாருதி.

வசதிகள் குறைவுதான்; ஆனால் ஓகே!
வசதிகள் குறைவுதான்; ஆனால் ஓகே!

ஏ–ஸ்டார் என்ன ப்ளஸ்… மைனஸ்?

இதன் காம்பேக்ட் சைஸ்தான் இதன் பெரிய ப்ளஸ். சிட்டிக்குள் வளைத்து நெளித்து ஓட்ட அற்புதமாக இருக்கும் இதன் ஹேண்ட்லிங். இதன் ஸ்போர்ட்டியான ஸ்டீயரிங்கில் நல்ல ஃபீட்பேக் கிடைக்கும். நெடுஞ்சாலையில் இதை ஓட்டும்போது, சில நேரங்களில் ஃபோர்டு ஃபிகோ போன்ற ஹேட்ச்பேக்குகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இதன் ஃபன் இருக்கிறது.

ஹேண்டியான இதன் கியர்பாக்ஸும் அருமை. இதன் லோ பானெட்டும், உயரம் தாழ்வான இருக்கைகளும் உயரம் குறைவானவர்களுக்குக் கொஞ்சம் எட்டிப் பார்த்தே ஓட்டுவதுபோல் இருக்கும். இதன் லோ மவுன்டட் கிரில்லும், ஹை மவுன்டட் ஹெட்லைட்ஸும் இரவில் நல்ல விசிபிலிட்டியைக் கொடுக்கின்றன. நீங்கள் நாள்பட்ட ஏ–ஸ்டாரை வாங்கப் போகிறீர்கள் என்றால்… ஹெட்லைட் பவரை மாற்றிக் கொள்வது நல்லது. ரிலே கிட் போட மறக்காதீர்கள்!

இதன் ஸ்டைல் ஒரு மாதிரியான ஆட்டிட்யூடில் அசத்துகிறது. சில மருத்துவர்கள், இந்த ஏ–ஸ்டார் காரை வாங்கி வலம் வந்திருக்கிறார்கள். இதன் ‘பாப்–அப்’ டர்னிங் லைட்கள், உயரமாக மவுன்ட் செய்யப்பட்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டருக்குள் இன்டக்ரேட் ஆகியிருப்பது ஸ்டைலாகவே இருக்கும். இது குட்டி காராக இருந்தாலும், இதன் வீல் ஆர்ச்சுகளுக்கும், அந்த குவார்ட்டர் கிளாஸ் விண்டோவுக்கும் நன்றாகவே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் டிசைனர்கள். இதன் குவார்ட்டர் கிளாஸ், கிட்டத்தட்ட முக்கோண வடிவில் ஒரு எஸ்யூவியை நினைவுபடுத்துகிறது.

சின்ன கார் என்பதால், இதன் கதவுகள் ரொம்பச் சிறுசு. ‘ஏதோ கபோர்டு டோர் மாதிரியே இருக்கு’ என்று கமென்ட் எல்லாம் செய்திருக்கிறார்கள். அதனால், உள்ளே போய் வருவது கொஞ்சம் டாஸ்க் ஆகவே இருக்கும். வயதானவர்களுக்குப் பெரிய டாஸ்க்தான். உயரமும் குறைவாக இருப்பதால், உயரமானவர்களுக்கு ஹெட்ரூம் கம்மி. இதன் பூட் ஸ்பேஸும் ரொம்பக் குறைவு. வெறும் 129 லிட்டர்தான்.

அதேபோல் பின் பக்கப் பயணி, சொகுசையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. லெக்ரூம் மிகவும் குறைவாகவே இருக்கும். இதன் ப்ளஸ்ஸும் டிசைன்தான்; மைனஸும் டிசைன். ஆம், சிலருக்கு ஏ–ஸ்டாரின் முன் பக்கம் ரொம்பப் பிடிக்கும்; அதே சிலருக்கு பின் பக்கம் பிடிக்காது என்கிறார்கள். ஆனால், 2009 காலகட்டங்களில் நியூ ஆல்ட்டோ எனும் பெயரில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாகும் இந்த ஏ–ஸ்டாருக்கு, ஜெர்மனியில் நல்ல ரசிகர் பட்டாளம் இருந்தது.

இது ஒரு ஃப்ரன்ட் வீல் டிரைவ் கார். நெடுஞ்சாலைகளில் இதை 120–க்கு மேல் விரட்டிப் போகலாம். ஆனால், இதன் நிலைத்தன்மையும், பாதுகாப்பும் கொஞ்சம் சந்தேகத்துக்கு உரியவையே! ஒரு ஹெவி வெஹிக்கிளின் முன்பு வேகமாகப் போனால்… இதன் ஆட்டம் கொஞ்சம் மிரளத்தான் வைக்கும்.

தாழ்வான இதன் சீட்கள், உயரம் குறைவானவர்களுக்கு நல்ல விசிபிலிட்டியை அளிக்காது. அதேபோல், டேஷ்போர்டையும் உயரமாக டிசைன் செய்திருப்பார்கள்.

ஆனால், இதன் ஸ்டீயரிங் ஃபீட்பேக் அற்புதமாக இருக்கும். இந்த எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங், நெடுஞ்சாலைகளில் கிச்சென இறுக்கமாகவும், சிட்டிக்குள் லைட் வெயிட்டாகவும் கையாள அற்புதமாக இருக்கும் ஏ–ஸ்டார். இதன் காம்பேக்ட் அளவும், சிட்டிக்குள் புகுந்து புறப்பட்டு வர ஏதுவாக இருக்கும். பார்க்கிங் தொந்தரவுகள் இருக்காது.

ஓட்டுவதற்கு ஃபன்னாகவே இருக்கிறது இன்ஜின்!
ஓட்டுவதற்கு ஃபன்னாகவே இருக்கிறது இன்ஜின்!
சின்ன வீல்கள் ஓகே!
சின்ன வீல்கள் ஓகே!
சீட்கள் தாழ்வாக இருக்கின்றன.
சீட்கள் தாழ்வாக இருக்கின்றன.
பழைய ஸ்டார்... ஏ-ஸ்டார் கார்... வாங்கலாமா?

இதன் சஸ்பென்ஷன் செட்அப்பும் ஓகே! முன் பக்கத்துக்கு இண்டிபெண்டன்ட் செட்அப்பும், பின் பக்கத்துக்கு டார்ஷன் பீம் செட்அப்பும் உண்டு. இந்த முன் பக்கம் ஸ்விஃப்ட்டில் இருக்கும் அதே சொகுசான சஸ்பென்ஷன் செட்டிங். அதனால் கவலை இல்லை. ஆனால், பின் பக்கம் கொஞ்சம் பவுன்ஸ் ரைடிங் கிடைப்பது உண்மை. அதேபோல், முன் பக்கம் டிஸ்க் பிரேக்ஸ் உண்டு. உங்களுக்கு டாப் வேரியன்ட்டான ZXi கிடைத்தால்.. அதிர்ஷ்டம். இதில் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக உண்டு.

என்ன கவனிக்கணும்?

கிளட்ச்தான் இதில் முதலில் கவனிக்க வேண்டியது. இறுக்கமாக… அல்லது தொய்வாக இருக்கிறதா என்று கவனியுங்கள். எப்படி இருந்தாலும்… கிளட்ச் காலியாகப் போகிறது என்று அர்த்தம்.

ஸ்டீயரிங் ஃபீட்பேக்கைச் சரி செய்யுங்கள். பள்ளங்களில் இறக்கும்போது ‘தடால் தடால்’ எனக் கேட்கக் கூடாது. சஸ்பென்ஷன் புஷ் ஏதும் காலியாகி இருந்தால்… செலவு குறைவு. சஸ்பென்ஷனில் கோளாறு என்றால்… உதிரிபாகம் கிடைப்பது ஈஸி. காரணம், ஸ்விஃப்ட்டின் பல உதிரி பாகங்கள் ஏ–ஸ்டாருக்குப் பொருந்தலாம். அதனால், கவலை இல்லை. இதன் கியர்பாக்ஸிலும் கவனம் இருக்கட்டும்.

ஏ–ஸ்டார் வாங்கலாமா?

சிட்டிக்குள் ஓட்ட, ஒரு காம்பேக்ட்டான கார் வேண்டும் என்பவர்கள்… முதன் முதலில் கார் வாங்கி ஓட்டப் பழகுபவர்கள்… வெறும் 1.50 முதல் 1.75 லட்சம் பட்ஜெட்டில் கார் வாங்க நினைப்பவர்கள் மட்டும் கை தூக்குங்கள்! 2 லட்சம் சொல்லும் டீலர்களிடம்கூட கறார் காட்டினால்… 1.5 லட்சத்துக்கு அசத்தலான ஏ–ஸ்டாரை உங்கள் வீட்டில் நிறுத்தலாம்.

பழைய ஸ்டார்... ஏ-ஸ்டார் கார்... வாங்கலாமா?