கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

பழைய இக்னிஸ்... எவ்வளவுக்கு வாங்கலாம்?

மாருதி சுஸூகி இக்னிஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மாருதி சுஸூகி இக்னிஸ்

யூஸ்டு கார்: மாருதி சுஸூகி இக்னிஸ்

க்னிஸ்... கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்த ஹேட்ச்பேக், வழக்கமான வடிவமைப்புக்குப் பெயர்பெற்ற மாருதி சுஸூகி கார்களிலேயே வித்தியாசமான தோற்றத்துடன் கூடிய மாடலாக இருக்கிறது.

இந்த காரின் பின்பக்க பில்லர், அதற்கான சிறந்த உதாரணம். இதனாலேயே அனைவருக்கும் பிடிக்கும்படி இதன் டிசைன் அமையாமல் போனது சோகம். நேர் கோடுகள் மற்றும் வளைவுகளால் ஆன கார்களுக்கு மத்தியில், ஸ்போர்ட்டியான பாக்ஸ் போலக் காட்சியளித்த இக்னிஸ், மில்லினியல்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்ட காராகும். என்றாலும், பிராக்டிக்காலிட்டி விஷயத்தில் இது நல்ல மதிப்பெண்களைப் பெறுவதும் கவனிக்கத்தக்கது. டால் பாய் க்ராஸ் ஓவர் போன்ற வடிவம் காரணமாக, போதுமான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் கிடைத்து விடுகிறது. மேலும் நம் ஊர்ச் சாலைகளைச் சமாளிக்கும்படியான சஸ்பென்ஷன் காரணமாக, சொகுசான ஓட்டுதல் அனுபவம் கிடைப்பது போனஸ். எக்கச்சக்க ஆக்சஸரீஸ்களும் இதற்கு உண்டு.

பழைய இக்னிஸ்... எவ்வளவுக்கு வாங்கலாம்?
பழைய இக்னிஸ்... எவ்வளவுக்கு வாங்கலாம்?

கேபின் மற்றும் சிறப்பம்சங்கள்

ஐரோப்பிய கார்களை நினைவுபடுத்தும் வெளிப்புறம் போலவே, இக்னிஸின் உட்புற மும் ஸ்டைலாக அமைக்கப்பட்டுள்ளது. டாப் வேரியன்ட்டான ஆல்ஃபாவில் கிடைக்கக்கூடிய 7 இன்ச் ஸ்மார்ட் ப்ளே டச் ஸ்க்ரீன் சிஸ்டம், சென்டர் கன்சோலின் நடுவே பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இதற்குக் கீழே இருக்கக்கூடிய க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், புளூடுத் ஸ்பீக்கர் போன்ற பாணியில் காட்சி தருவது செம. பெரிய ஸ்பீடோமீட்டருடன் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் தெளிவாக உள்ளது. மென்மையான முன்பக்க இருக்கைகள், முதுகுக்குத் தேவையான சப்போர்ட்டை வாரி வழங்குகின்றன. மற்றபடி LED DRL உடனான LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், 15 இன்ச் அலாய் வீல்கள், பார்க்கிங் சென்சாருடன் கூடிய ரிவர்ஸ் கேமரா, எலெக்ட்ரிக் மிரர்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட், பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், EBD, ISOFIX என அதிக வசதிகள் இருப்பது ப்ளஸ். ஆனால் டூயல் டோன் ஃபினிஷில் இருக்கும் டேஷ்போர்டு ப்ரீமியமாகக் காட்சியளித்தாலும், சில இடங்களில் பிளாஸ்டிக் தரம் சுமார் ரகம்தான். பாடி கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள பாகங்கள், அதைக் குறையாகத் தெரியாதவாறு பார்த்துக் கொள்கின்றன. ரியர் ஏசி வென்ட், பின்பக்க ஆர்ம் ரெஸ்ட், Shark Fin Antenna ஆகியவை இல்லாதது நெருடல்தான்.

பழைய இக்னிஸ்... எவ்வளவுக்கு வாங்கலாம்?
பழைய இக்னிஸ்... எவ்வளவுக்கு வாங்கலாம்?

இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்

1.2 லிட்டர் கே-சீரிஸ் NA பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் DDiS டர்போ டீசல் என 4 சிலிண்டர் இன்ஜின்களைக் கொண்டிருந்தது இக்னிஸ். இவை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வந்தன. தற்போது டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட இக்னிஸை வாங்க முடியாது என்பதால், உங்கள் மாதாந்திரப் பயன்பாடு 2,000 கிமீக்கும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் டீசல் இக்னிஸை யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்கலாம். மற்றபடி விரட்டி ஓட்டுவதற்கு ஏதுவான பெட்ரோல் இன்ஜினே, இந்த காரின் தோற்றத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது. சராசரியாக 15கிமீ வரை மைலேஜ் தரக்கூடிய பெட்ரோல் இக்னிஸின் பராமரிப்புச் செலவுகள், இதர மாருதி சுஸூகி கார்களைப் போலவே கட்டுபடியாகக்கூடிய அளவில்தான் உள்ளன. AMT பொருத்தப்பட்ட மாடல், மேனுவல் வெர்ஷனைவிடக் கொஞ்சம் குறைவான மைலேஜைத் தரும் என்றாலும், நெரிசல்மிக்க நகரச்சாலையில் காரை ஓட்டுவது சுலபமாக இருக்கும்.

காரில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

நம்பகத்தன்மையான காராகவே இருந்தாலும், இக்னிஸிலும் சில பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன. நீங்கள் பார்க்கும் மாடலில், பவர் விண்டோஸ் மற்றும் எலெக்ட்ரிக் மிரரின் ஸ்விட்ச்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதை உறுதி செய்யவும். மேலும் டச் ஸ்க்ரீன் Lag/Freeze ஆகாமல் இயங்குகிறதா என்பதைச் சரி பார்க்கவும் (Software Update செய்துவிடலாம்). கவர்ச்சியாக இருக்கும் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தின் ப்ளாஸ்டிக் ஸ்விட்ச்கள், உடையாமல் இருப்பது அவசியம். கேபினில் இருக்கும் பாடி கலர் பேனல்கள் வெளுத்துப் போகாமல் இருப்பது நலம்.

மாருதி சுஸூகி இக்னிஸ்
மாருதி சுஸூகி இக்னிஸ்

தவிர, காரின் அடிப்பகுதி மற்றும் பாடி பேனல்களில் கீறல்கள் மற்றும் Dent ஏதும் இருக்கிறதா என்பதை செக் செய்துவிடவும். அந்த உப்பலான வீல் ஆர்ச்களையும் மறக்காமல் கவனிக்கவும். ஒருவேளை AMT மாடலாக இருந்தால், கியர் மாறுவது திணறல் இல்லாமல் ஒரே சீராக இருக்க வேண்டும். இதனுடன் Hill Start-ன் போதும் அது திறம்பட இயங்க வேண்டும். இல்லையெனில், அதில் ஏதோ பிரச்னை இருக்கிறது என அர்த்தம் (பர்ஸுக்கு வெடி வைக்கப்படலாம்).

மாருதி சுஸூகி இக்னிஸ்
மாருதி சுஸூகி இக்னிஸ்

விலை

2019-ம் ஆண்டுக்குப் பிறகு வெளிவந்த கார்களில், சில பாதுகாப்பு வசதிகள் தவிர, ரூஃப் ரெயில் மற்றும் பின்பக்க ஸ்பாய்லர் சேர்க்கப்பட்டன. யூஸ்டு கார் மார்க்கெட்டில் இக்னிஸைப் பார்க்கும்போது, இந்த விஷயத்தைக் கவனத்தில் கொள்ளவும். இது அறிமுகமாகி வெறும் 3 ஆண்டுகளே ஆகியிருக்கிறது என்பதால், பெரும்பான்மையான மாடல்கள் Extended வாரன்ட்டியில் இருப்பதற்கான சாத்தியம் அதிகம்! எனவே 4-4.5 லட்ச ரூபாய் வரை, இந்த ஹேட்ச்பேக்குக்கு வழங்கலாம். ஆனால் இந்த ஆண்டு இக்னிஸின் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமாகிவிட்டதால், இதன் விலையைக் கொஞ்சம் குறைத்துப் பேசியும் கேட்கலாம். AMT மாடல்களின் விலை, எப்படிப் பார்த்தாலும் மேனுவல் வெர்ஷன்களைவிட அதிக விலையில்தான் போகும். இதர மாருதி சுஸூகி கார்களைப் போல இந்த காருக்கான டிமாண்ட், யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதிகமாக இல்லை. எனவே, இருக்கும் மாடல்களில் பிரச்னை இல்லாத காராகத் தேடிப்பிடித்து வாங்குவது நல்லது.