ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
கார்ஸ்
Published:Updated:

குட்டிக் குடும்பத்துக்கு ஏற்ற குட்டி கார் இக்னிஸ் வாங்கலாமா?

மாருதி சுஸூகி இக்னிஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மாருதி சுஸூகி இக்னிஸ்

பழைய கார்: மாருதி சுஸூகி இக்னிஸ்

குட்டிக் குடும்பத்துக்கு ஏற்ற குட்டி கார் இக்னிஸ் வாங்கலாமா?
குட்டிக் குடும்பத்துக்கு ஏற்ற குட்டி கார் இக்னிஸ் வாங்கலாமா?
குட்டிக் குடும்பத்துக்கு ஏற்ற குட்டி கார் இக்னிஸ் வாங்கலாமா?

சில கார்கள் எல்லோருக்குமானதாக இருக்காது. ஆனால் சிலருக்கு ரொம்பவும் மனதுக்கு நெருக்கமாக, பிடித்தமான காராக இருக்கும். அப்படி பலரால் விரும்பப்படும்; சிலரால் வெறுக்கப்படும் கார் – மாருதி சுஸூகி இக்னிஸ். நமது மோட்டார் விகடனின் திருநெல்வேலி வாசகர்கள் சிலர் இந்தக் காரைச் சிலாகித்துச் சொல்வார்கள். மதுரை வாசகர் ஒருவர், ‘இந்த காரோட டிசைன் வீட்ல பிடிக்கல சார்’ என்று குறைபடுவார். இப்படிக் கலந்துகட்டி விமர்சனங்களைப் பெற்ற மாருதி இக்னிஸைப் பற்றித்தான் இந்த மாத பழைய கார் மார்க்கெட்டில் பார்க்கப் போகிறோம்.

வரலாறு

மாருதி சுஸூகி இக்னிஸ், அந்த நிறுவனத்தின் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில்… அதாவது அந்த விலையில்தான் 2017–ம் ஆண்டு லாஞ்ச் ஆனது. முதல் பார்வையிலேயே இது ஹேட்ச்பேக் மாடலா… அல்லது வேகன்–ஆர் போன்ற பிராக்டிக்காலிட்டி காரா… அல்லது குட்டி வேன் டைப் மாடலா என்று பலருக்கும் கேள்வி எழுந்தது.

ஹேட்ச்பேக்குகளுக்கு மாற்றாக… அங்கங்கே வளைவு நெளிவுகளுடன், நேர்கோடுகளுடன் கொஞ்சம் ஸ்போர்ட்டியான டிசைனில் இருந்தது இக்னிஸை, யூத்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்பியது மாருதி. ‘ஃப்யூச்சரடிஸ்ட்டிக் டிசைனில்’ நாம்தான் கில்லி’ என்று ஆணித்தரமாக நம்பியே இதைக் கொண்டு வந்தது மாருதி. ஆரம்பத்தில் ரிட்ஸ் என்றொரு ஹேட்ச்பேக்கின் பின் பக்கம் பலருக்கும் பிடிக்காமல் போனாலும்.. ஸ்விஃப்ட்டுக்கே டஃப் கொடுத்தது ரிட்ஸ். அதேபோல், இந்த இக்னிஸும் பல வாடிக்கையாளர்களைக் கவரும் என்று நினைத்தது மாருதி.

வேகன் ஆர் மாதிரியும் இருக்கக் கூடாது; வேன் மாதிரியும் இருக்கக் கூடாது… ஆனால் பாக்ஸ் டைப்பில் இருக்க வேண்டும் என்று கவனமாக இதன் டிசைனைச் செய்திருந்தது மாருதி டிசைன் டீம். அந்த வகையில் இதை ஒரு ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் பொசிஷன் செய்திருந்தது மாருதி. ஆம், இது மாருதி ஷோரூம்களில் கிடைக்காது; நெக்ஸாவில்தான் வாங்க வேண்டும். அப்போது 5.4 லட்சம் எனும் எக்ஸ் ஷோரூம் ஆரம்ப விலையில் விலை குறைந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்காக இக்னிஸை அறிமுகப்படுத்தியது மாருதி. ஆனால், இப்போது இதன் டாப் எண்ட் ஒரு பெலினோவுக்கு இணையாக இருக்கிறது. கூடவே, காலப்போக்கில் BS-6 நார்ம்ஸ்க்காக இதைக் காலி செய்துவிட்டதுதான் மாருதி செய்த தவறு. மேலும் ஓட்டுதல் விரும்பிகளுக்காக இதில் டர்போ பெட்ரோலும் இல்லை என்பது மைனஸ். ஆனால், நல்லவேளையாக பெண்களைக் கவரும்விதமாக AMT-ல் உண்டு இக்னிஸ். எம்டி, ஏஎம்டி – என இரண்டு இக்னிஸ்களைப் பற்றியும் பார்க்கலாம்.

இக்னிஸ் – ப்ளஸ் அம்சங்கள்

இதன் முக்கியமான ப்ளஸ் – சான்ட்ரோ மாதிரியான… இல்லை… அதைவிட அற்புதமான டால்பாய் டிசைன். அதனால், கேபின் இடவசதியிலும் பிராக்டிக்காலிட்டியிலும் கலக்குகிறது இக்னிஸ். மேலும், வயதானவர்கள் ஏறி இறங்க எளிதாக இருக்கிறது இதன் Ingress/Egress விஷயங்கள். வேகன்ஆரை இதற்காகவே பலர் விரும்புகிறார்கள்.

நீங்கள் பார்க்கும் மாடல் LED ப்ரொஜெக்டர் ஹெட்லாம்ப்ஸ் இருந்தால் டாப் எண்ட் என்று அறிக! யோசிக்கத் தேவையில்லை. பேரம் பேசலாம். காரணம், இந்த டாப் எண்டான Alpha வேரியன்ட்டில்… வசதிகள் அதிகம். 15 இன்ச் அலாய் வீல்கள், ஆப்பிள் கார் ப்ளே – ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி கொண்ட ஸ்மார்ட் ப்ளே சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், சென்சார்களுடன் ரியர் பார்க்கிங் கேமரா, முன் பக்கம் இரண்டு காற்றுப்பைகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி என்று இந்தக் காலத்துக்குத் தேவையான எல்லா வசதிகளும் உண்டு. லோ வேரியன்ட்களான Sigma, Delta போன்றவற்றில் வசதிகளைப் பெரிதாக எதிர்பார்க்க முடியாது.

இதன் இன்டீரியர், கொஞ்சம் கூலாகவே இருக்கிறது. கேபின் இடவசதி அதிகம் என்பதால்… டிரைவருக்கும்…கோ டிரைவருக்கும்… அட பின் பக்கப் பயணிகளுக்குமே நல்ல தாராளமான இடவசதி கிடைக்கிறது. டால்பாய் என்பதால்… ஹெட்ரூம்தான் சூப்பர்! இன்டீரியரில் சில பிளாஸ்டிக்குகள் புது காரிலேயே கொஞ்சம் தரம் குறைவுதான். பழை கார் என்பாதல்… பிளாஸ்டிக்குகளின் தரத்தை ரொம்ப எதிர்பார்க்கக் கூடாது.

நீண்ட பயணங்களுக்கு இதன் சீட்கள், சொகுசாகவே இருப்பதாகச் சொல்கிறார்கள். அதேபோல், சில கார்களில் பின் பக்கம் 3 பேருக்கு இடநெருக்கடியாக இருக்கும். ஆனால், இதில் 3 பேர் தாராளமாக அமர்ந்து செல்லலாம். இதன் க்ராஸ்ஓவர் ஸ்டைல் மற்றும் போதுமான கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்றவற்றால்… மேடு பள்ளங்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

குட்டிக் குடும்பத்துக்கு ஏற்ற குட்டி கார் இக்னிஸ் வாங்கலாமா?
குட்டிக் குடும்பத்துக்கு ஏற்ற குட்டி கார் இக்னிஸ் வாங்கலாமா?

மைலேஜுக்கு டீசல்… ஸ்மூத்னெஸ்ஸுக்கு பெட்ரோல்

ஏற்கெனவே சொன்னதுபோல், இக்னிஸின் டீசல் இன்ஜினை நிறுத்தி விட்டது மாருதி. ஆனால், எங்கேயாவது டீசல் இக்னிஸ் கிடைத்தால்… அதையும் பரிசலீயுங்கள். இதன் 1.3 லிட்டர் DDIS டீசல் இன்ஜின், ஓட்டுதலுக்கும் மைலேஜுக்கும் பெயர் பெற்றது. இது நல்ல மைலேஜ் கிடைக்கலாம். நகரத்துக்குள்ளே இந்த டீசல் இக்னிஸ் – சுமார் 16 கிமீ கிடைப்பதாகச் சொல்லும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஹைவேஸில் பட்டையைக் கிளப்பலாம். ஆனால், டர்போ லேக் இருக்கும் என்பதைக் கவனிக்க! மலையேற்றங்களில் இது சோம்பலை ஏற்படுத்தும்.

ஆனால், இப்போதைய ட்ரெண்ட் பெட்ரோல்தானே! மேலும் இக்னிஸின் பெட்ரோல் இன்ஜின் பெப்பினெஸ்க்கும் ஸ்மூத்னெஸ்க்கும் பெயர் பெற்றது. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், ரெவ் செய்வதற்குப் பக்காவாக இருக்கிறது. சிட்டிக்குள் இதன் டிரைவிங் அனுபவம் பக்காவாக இருக்கும். ஹைவேஸிலும் இதன் ரிஃபைன்மென்ட் பக்கா! 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஓட்டுதல் விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மைலேஜிலும் டீசலுக்கு இணையாகவே கிடைக்கிறது என்கிறார்கள். நமது ஃபீட்பேக்கைப் பொருத்தவரை 17 முதல் 22 கிமீ மைலேஜ் கிடைப்பதாக வெரைட்டியாகச் சொல்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

இதிலேயே AMT கியர்பாக்ஸ் வந்தால்.. அதையும் சோதனை போடுங்கள். கியர் போட விரும்பாதவர்களுக்கு… பெண்களுக்கு இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ், பெப்பியாகவே இருக்கும். என்ன, இதில் லேசாக மைலேஜில் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டியிருக்கும். அப்ஷிஃப்ட் மற்றும் டவுன்ஷிஃப்ட்களில் கொஞ்சம் தயக்கம் தெரிந்தால்.. நீங்கள் தயக்கம் காட்டத் தயங்காதீர்கள்! மேலும், இதன் பாக்ஸ்ஓவர் டிசைன், நெடுஞ்சாலைகளில் நிலைத்தன்மையைக் காலி செய்யும் என்பதால்… அதிக வேகங்களில் டர்ன் செய்யும்போது கவனம் தேவை.

இதெல்லாம் செக் பண்ணுங்க!

இந்த க்ராஸ்ஓவர் காரில் சில விஷயங்களைச் சோதனை போட மறந்து விடாதீர்கள். இதன் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் ஸ்டைலாக இருந்தாலும்… இது நாள்பட கொஞ்சம் லேக் தெரிவதாகச் சொல்கிறார்கள். சில நேரங்களில் அப்படியே Freeze ஆவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

மேலும் இதன் பவர் விண்டோ ஸ்விட்ச் பற்றியும் நமக்குக் குறை வந்தது. எனவே, பவர் விண்டோ ஸ்விட்ச்களை ஆன் செய்து பாருங்கள். சில தரம் குறைந்த பிளாஸ்டிக்குகளில் மிகவும் கவனம் தேவை. முக்கியமாக, க்ளைமேட் கன்ட்ரோல் பேடில் உள்ள ஸ்விட்ச்கள்… கொஞ்சம் முரட்டுத் தனமாகப் பயன்படுத்தினால்… உடைய வாய்ப்புண்டு. கூடவே, இதன் மற்ற எலெக்ட்ரானிக்ஸிலும் கவனம் தேவை. இக்னிஸைப் பார்வையிடும்போது, ஒரு மெக்கானிக்கை உடன் அழைத்துச் சென்று டென்ட்கள், ஸ்க்ராட்ச்கள் போன்ற அண்டர்பாடி சோதனைகளையும் செய்ய மறவாதீர்கள்! இதன் வீல் ஆர்ச்கள், வெளியே தெரியும்படி இருப்பதால்… ஸ்க்ராட்ச்கள் ஆக அதிகம் வாய்ப்புண்டு.

வாங்கலாமா?

இது விற்பனையில் சொதப்பினாலும், ஆஃப்டர் மார்க்கெட்டில் இக்னிஸுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. மற்ற மாருதி கார்களைப்போலவே இதன் பராமரிப்பும் பெரிதாக பர்ஸைப் பழுக்க வைக்கவில்லை என்கிறார்கள். ஆனால், ஏஎம்டி கியர்பாக்ஸ் மட்டும் கொஞ்சம் செலவு வைப்பதாகச் சொன்னார் ஒரு வாடிக்கையாளர்.

மற்றபடி இக்னிஸ் – ஒரு சொகுசான, பிராக்டிக்கலான, ஒரு குட்டிக் குடும்பத்துக்கு ஏற்ற அற்புதமான கார். இப்போது மார்க்கெட்டில் 4 லட்சம் முதல் 4.75 லட்சம் விலைக்குக் கிடைத்தால்… இது நல்ல டீல் என்றே சொல்லலாம். நமக்குத் தெரிந்து மாருதியின் ட்ரூ வேல்யூவிலேயே இதன் சர்வீஸ் ஹிஸ்டரி, பராமரிப்பு விஷயங்கள், ஆக்ஸிடென்டல் ஹிஸ்டரி போன்றவற்றைச் சோதனை போட்டு வாங்கினால்… ஒரு நல்ல அனுபவம் கிடைக்கலாம்! காரணம், இது ப்ரீமியம் ஹேட்ச்பேக்!