Published:Updated:

8 லட்சத்துக்குள் பழைய எஸ்-க்ராஸ்... நல்ல டீல்!

யூஸ்டு கார்: மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ்

பிரீமியம் ஸ்டோரி

மிட்சைஸ் எஸ்யூவி பிரிவில், நல்ல மைலேஜ் - சிறப்பான இடவசதி - குறைவான ரன்னிங் காஸ்ட் போன்ற அளவுகோல்களில் நல்ல மதிப்பெண்களைப் பெறும் கார்களில், மாருதி சுஸூகியின் எஸ்-க்ராஸ் நிச்சயம் ஒன்று. BS-6 காரணமாக, தற்போது இது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது. எனவே யூஸ்டு கார் மார்க்கெட்டில், எஸ்-க்ராஸ் டீசல் மாடல்கள் கிடைப்பது, கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. இந்த ப்ரீமியம் காரை அங்கிருந்து வாங்குவதற்கு முன்பு, அதில் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பார்க்கலாம். சுமார் 7-9 லட்ச ரூபாய்க்குக் கிடைத்தால், உங்கள் காரை நீங்கள் நல்ல விலைக்கு வாங்கி விட்டீர்கள் என எடுத்துக் கொள்ளலாம்.

மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ்
மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ்

எஸ்-க்ராஸ்: வரலாறு

கடந்த 2015-ம் ஆண்டில் க்ரெட்டாவுக்குப் போட்டியாக அறிமுகமானது எஸ்-க்ராஸ். மாருதி சுஸூகியின் ப்ரீமியமான நெக்ஸா ஷோரூம்களில் விற்பனைக்கு வந்த முதல் மாடல் என்ற பெருமை இதற்குண்டு. இதில் இருக்கும் ஃபியட்டின் 1.6 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் (120bhp - 4 சிலிண்டர்), இதற்கு வேகப்போட்டியில் முதலிடத்தைப் பிடிக்க உதவும். பின்னர் 2017-ம் ஆண்டில், எஸ்-க்ராஸின் முதல் ஃபேஸ்லிஃப்ட் மாடல் களம் கண்டது. அதில் எதிர்பார்த்தபடியே, டிசைன் - வசதிகள் - இன்ஜின்/கியர்பாக்ஸ் ஆகியவற்றில் மாற்றங்கள் இருந்தன. அதில் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் நிறுத்தப்பட்டு, 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் மட்டுமே வழங்கப்பட்டது. 90bhp பவர் - 20kgm டார்க்கை வெளிப்படுத்திய இந்த 4 சிலிண்டர் இன்ஜினில், SHVS தொழில்நுட்பம் புதிதாகச் சேர்க்கப்பட்டது. இதனால் முன்பைவிட எஸ்-க்ராஸின் பெர்ஃபாமன்ஸ் குறைந்தாலும், அராய் மைலேஜில் கார் முன்னிலை பெற்றது (24கிமீ). Mild Hybrid System-ல் இருந்த ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம், Brake Energy Regeneration, Integrated Starter Generator Motor ஆகியவை இதற்கான காரணிகள். தற்போதைய BS-6 மாடலிலும், இந்த வசதிகள் கிடைப்பது ப்ளஸ்.

கேபின் மற்றும் சிறப்பம்சங்கள்

காரின் உட்புறத்தில் கறுப்பு நிற ப்ளாஸ்டிக் இருந்தாலும், அவை இதர மாருதி சுஸூகி கார்களில் இருப்பதைவிடத் தரமாக இருப்பது செம. சென்டர் கன்சோலில் இருக்கும் Gloss Black & Satin Aluminium like Trim ஆகியவை, கேபினுக்கு ப்ரீமியம் ஃபீலைத் தருகின்றன. அதனுடன் டாப் வேரியன்ட்டான Alpha-வில் இருக்கும் Leatherette Upholstery, அருமை! முன்பக்க இருக்கைகள் அகலமாக இருப்பதுடன், போதுமான சப்போர்ட்டையும் தருகிறது. பின்பக்க இருக்கைகளில் 3 பேர் உட்காருவதும் சுலபம்தான். எஸ்-க்ராஸின் பூட் ஸ்பேஸ் 375 லிட்டர். 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பது நன்மையே!

8 லட்சத்துக்குள் பழைய எஸ்-க்ராஸ்... நல்ல டீல்!

விலை அதிகமான Alpha வேரியன்ட்டில் LED DRL உடனான LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED டெயில் லைட்ஸ், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி உடனான புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், Rain Sensing வைப்பர்கள், இண்டிகேட்டர்கள் உடனான எலெக்ட்ரிக் மிரர்கள் போன்ற வசதிகள் இருக்கின்றன. பயணிகள் பாதுகாப்புக்கு 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், EBD, ISOFIX, ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா போன்ற அம்சங்கள் இருக்கின்றன. என்றாலும், போட்டி கார்களில் இருக்கும் சன்ரூஃப், Side மற்றும் Curtain காற்றுப்பைகள், வென்டிலேட்டட் சீட்கள், 6 ஸ்பீடு மேனுவல்/DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், Shark Fin Antenna, 360 டிகிரி கேமரா போன்ற லேட்டஸ்ட் வசதிகள் மிஸ்ஸிங்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்?

நீங்கள் பார்க்கும் காரை, கரடுமுரடான சாலைகளில் ஓட்டிப் பாருங்கள். அப்போது சஸ்பென்ஷனிலிருந்து ஏதேனும் சத்தம் வந்தாலோ அல்லது சஸ்பென்ஷன் அடிவாங்குவது போலத் தோன்றினாலோ, சஸ்பென்ஷனின் Bushing மாற்றவேண்டிய நேரம் வந்துவிட்டது என அர்த்தம். இதனை மாற்றுவது அவ்வளவு காஸ்ட்லி இல்லை. டாப் வேரியன்ட்களில் இருக்கும் டச் ஸ்க்ரீன், ஸ்மூத்தாக இருக்கிறதா என்பதை செக் செய்யவும். ஏனெனில், ஆண்ட்ராய்டு ஆட்டோ சரியாக வேலை செய்யாததாகவும், தமது மொபைலை டச் ஸ்க்ரீனுடன் Pair செய்வது கடினமாக இருப்பதாகவும், டச் ஸ்க்ரீன் Lag ஆவதாகவும் இந்த காரை வைத்திருப்பவர்கள் கூறுகிறார்கள். மற்றபடி காரின் பயன்பாட்டால் தேய்மானம் அடையக் கூடிய டயர்கள் - பிரேக்ஸ் ஆகியவற்றின் கண்டிஷனை உறுதி செய்யவும். சிலர் காரை இயக்கும்போது க்ளட்ச்சிலேயே காலை வைத்திருப்பார்கள் என்பதால், க்ளட்ச் மற்றும் Pressure Plate நல்ல நிலையில் இருக்கிறதா என்பதைப் பார்க்கவும். காரின் பாடி பேனல்களில் Scratch அல்லது Damage தேன்பட்டால், அதனைச் சரிபடுத்த அதிகத் தொகை செலவாகும் என்பது நினைவில் இருக்கட்டும்.

8 லட்சத்துக்குள் பழைய எஸ்-க்ராஸ்... நல்ல டீல்!

யூஸ்டு கார் மார்க்கெட்டில், இந்த காருக்கு என்ன விலை கொடுக்கலாம்?

2017-ம் ஆண்டில் வெளியானபோது, 8.49- 11.29 லட்ச ரூபாய் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) விலைக்கு எஸ்-க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனை செய்யப்பட்டது. BS-6 மாடலும் இதே தோற்றத்தில் இருப்பதால், இன்ஜின்/கியர்பாக்ஸ் ஆப்ஷனைத் தாண்டி யூஸ்டு காரில் பெரிய வித்தியாசம் தெரியாது என்பது நைஸ். யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஓரளவுக்குப் புதிய மாடலாக அறியப்படும் எஸ்-க்ராஸ், 7-9 லட்ச ரூபாய்க்கு வாங்குவது நல்ல முடிவு. ஆனால் புதிய BS-6 மாடலின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையே 8.40 லட்சத்தில் தொடங்குவதால், 8 லட்ச ரூபாய் என்பது சரியான மதிப்பாக இருக்கும்.

மிட் வேரியன்ட்டான Zeta-விலேயே போதுமான வசதிகள் இருந்தாலும், டாப் வேரியன்ட்டான Alpha-வை வாங்குவது நலம். எஸ்-க்ராஸின் Depreciation மதிப்பு குறைவாக இருப்பதால், விலையில் பேரம் பேசுவது என்பது கடினமாகவே இருக்கும். மற்றபடி இதர மாருதி சுஸூகி தயாரிப்புகளைப்போலவே, இதன் உதிரிபாகங்கள் கட்டுபடியாகக்கூடிய விலையிலே கிடைக்கின்றன. மேலும் இந்தியா முழுவதும் பரந்துவிரிந்த டீலர் நெட்வொர்க் இருப்பதால், காரின் பராமரிப்பும் எளிதுதான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு