3 to 4 லட்சம் பட்ஜெட்... பெரிய்…ய கார் சன்னி! பழசு வாங்கும்போது என்ன கவனிக்கணும்?

பழைய கார்: நிஸான் சன்னி

கார் : நிஸான் சன்னி பெட்ரோல்/டீசல்
மாடல்: 2014 – 2018
விலை: 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை
ப்ளஸ்: ரீசேல் விலை, டீசல் மைலேஜ், இன்ஜின், பூட் ஸ்பேஸ், இன்டீரியர் இடவசதி, லெக்ரூம்
மைனஸ் : பார்க்கிங், பிரேக்கிங் ஃபெயிலியர், USB போர்ட் இல்லாதது, பேனல்களுக்கான இடைவெளிகள்
பெரிய்..ய்ய… கார்! இப்படித்தான் சன்னிக்கு விளம்பரம் செய்து அறிமுகப்படுத்தியது நிஸா்ன் நிறுவனம். 2011-ல் ஏதோ ஒரு மாதத்தில் சன்னியை எடுத்துக் கொண்டு மோட்டார் விகடன் சார்பாக, நாம் கிரேட் எஸ்கேப் போன போது, பலர் ஆச்சரியப்பட்ட விஷயமும்… ‘எவ்ளோ பெரிய்…ய கார்’ என்பதுதான். இந்த மாதம் நிஸான் சன்னியை யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
வரலாறு
2011– செப்டம்பரில்தான் சன்னியை முதன் முதலில் இந்தியாவில் லாஞ்ச் செய்தது நிஸான். முதலில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் மட்டும்தான் சன்னி வந்தது. ஆனால், அப்போதெல்லாம் டீசல்களுக்குத்தான் மார்க்கெட்டில் செம மவுசு. அதைப் புரிந்து கொண்டு டீசலையும் மார்க்கெட்டில் இறக்கியது நிஸான். அதாவது, அப்போது சுமார் 6.99 லட்சத்தில் பெட்ரோலையும், 7.99 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் டீசலையும் பொசிஷன் செய்தார்கள். கூடவே இதில் XL பெட்ரோல் வேரியன்ட்டில் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் 8.91 லட்சம் வந்தது. இத்தனை பெரிய நீ…ளமான சன்னி கார் மார்க்கெட்டில் பெரிதாக இறங்கியும் அடிக்கவில்லை; அவ்வளவாகச் சோடையும் போகவில்லை. இருந்தாலும் ஹிட் அடித்துக் கொண்டிருந்த ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் எக்ஸென்ட், மாருதி சியாஸ் போன்றவற்றுடன் போட்டி போட முடியாமல்… 2020–ல் இதன் தயாரிப்பை நிறுத்தியது நிஸான். இப்போது நாம் பார்க்கப் போகும் மாடல் 2014–க்கு மேற்பட்ட ஃபேஸ்லிஃப்ட்.
என்ன ப்ளஸ்… என்ன மைனஸ்?
சன்னியின் முதல் ப்ளஸ்ஸே – அதன் பெரிய்…ய சைஸ்தான். இதில் 5 பேர் வரை மிகத் தாராளமாக இடித்து உரசாமல் பயணிக்கலாம் என்பது ஸ்பெஷலாக இருந்தது. அதிலும் பின் பக்கப் பயணிக்குக்கூட நல்ல தாராளமான லெக்ரூம் கிடைப்பது அந்த செக்மென்ட்டில் வேறெதிலும் இல்லாத ஓர் அம்சம். அதனாலேயே இது ஒரு சாஃபர் டிரைவன் காராக ஜொலித்தது. கூடவே இது டாக்ஸி மார்க்கெட்டிலும் களம் இறங்கியதால், அதுகூட ஒரு மைனஸ் ஆகிப் போனது.



மார்க்கெட்டில் பல கார்கள் ஷார்ப் லுக்கில் கலக்க… இதன் கொழுக் மொழுக் டிசைன் உங்கள் வீட்டினருக்குப் பிடிக்கிறதா என்று கேட்டுக் கொள்ளுங்கள். இதன் கேபின் தாராளமாக இருக்கும். ஆனால், ஒரு 10 லட்சம் ரூபாய் காருக்குண்டான ப்ரீமியம் தரம், இதில் இருக்குமா என்பது தெரியவில்லை. இதன் டாப் எண்ட் மாடலில்கூட யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் இருக்காது என்பதைக் கவனியுங்கள். நீங்கள் பாட்டுக் கேட்டுக் கொண்டே போகும் லாங் டிரைவ் பார்ட்டி என்றால், இதைக் கவனிக்க வேண்டும். அதேபோல், இதன் ஏசி வென்ட்கள், சட்டென கூலிங் ஆகும் என்றாலும், இது சின்ன மைக்ராவில் இருந்து பெறப்பட்டது என்பது காஸ்ட் கட்டிங் சமாச்சாரம் என்பதையும் கவனிக்க. இதன் ஆடியோ சிஸ்டமும் சுமார் ரகமே! ஆக்ஸ் மற்றும் சிடி வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம்.
இதில் ரியர் ஏசி வென்ட் இருந்தாலும், பெரிய கார் என்பதால்… பின் பக்க புளேயாருக்கு அதிக வேலை வைப்பதாகவும் சொல்கிறார்கள். அதாவது, பின் பக்கப் பயணிகள் கூலிங் ஆவதில் டென்ஷன் ஆகிறார்களாம். மேலும் பெரிய விண்டோ கிளாஸ் என்பதால், கோடை காலங்களில் சட்டென கூலிங் பரவுவதும் சாத்தியம் இல்லை என்கிறார்கள். ஆனால், ஏசியைப் பற்றிக் குறையில்லை. ஆனால், இந்தப் பெரிய விண்டோ கிளாஸ்தான் விசாலமான கேபினைத் தருகிறது. நிஜமாகவே இதன் இடவசதிதான் வரம்! இதன் பெரிய பூட் ஸ்பேஸும் 490 லிட்டர் என்பது வாவ்! 5 பேருக்கும் லக்கேஜ் நிரப்பிக் கொள்ளலாம்.
இதன் மிட் வேரியன்ட் கிடைத்தால்கூட வாங்கிக் கொள்ளலாம். அதிலேயே ஸ்டீயரிங் மவுன்டட் கன்ட்ரோல்கள் கிடைக்கும். இதன் சாஃப்ட் சஸ்பென்ஷன் அருமையாகவே இருக்கும். மோசமான சாலைகளை நன்றாக உள்வாங்குவதில் சன்னி, அருமை. அதேபோல், சிட்டிக்குள் இதன் லைட் வெயிட் ஸ்டீயரிங்கும் கலக்கலாகவே இருக்கிறது. நெடுஞ்சாலை களில்தான் ஃபீட்பேக் கொஞ்சம் சுமாராக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதன் பெட்ரோல்/டீசல் மாடல் எது கிடைத்தாலும் நீங்கள் பார்க்கலாம். இரண்டுமே 1.5 லிட்டர் NA இன்ஜின்தான். பலரது சாய்ஸ் – டீசல்தான். டஸ்ட்டர் போன்ற கார்களில் இருக்கும் அதே டீசல் இன்ஜினின் பெர்ஃபாமன்ஸ் அசத்தல் ரகம். இதன் மைலேஜ், சுமாராக நெடுஞ்சாலைகளில் 20 கிமீ–யைத் தாண்டுவதாகச் சொல்கிறார்கள். சிலருக்கு 23 கிமீ தருவதாகவும் புளகாங்கிதம் அடைகிறார்கள். இதன் 85 bhp பவர் நெடுஞ்சாலைகளிலும் கெத்து காட்டுகிறது. என்ன, இதில் மலையேற்றங்களின்போது டீசலில் டர்போ லேக்தான் படுத்தி எடுக்கும்.
இதன் பெட்ரோல் வேரியன்ட், ரிஃபைன்மென்ட்டுக்குப் பெயர் பெற்ற இன்ஜின். டீசல் அளவு இதில் டர்போ லேக்கும் படுத்தி எடுக்காது; மைலேஜிலும் அசத்தாது. டிராஃபிக்குகளில் இந்த பெட்ரோல், சுமார் 14 கிமீ வரை மைலேஜ் தருகிறதாக சன்னி வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள். இதுவே நெடுஞ்சாலையில் 15 – 16 கிமீ வரை தருகிறது பெட்ரோல் சன்னி. ஆனால், இரண்டுமே 130 – 140 கிமீ வரை பறப்பதில் கெட்டி! இதுவே பெண்கள் என்றால், இதன் CVT கியர்பாக்ஸைப் பார்க்கலாம். ஓட்டுதலில் இது அற்புதமாக இருக்கும். ஆனால், இது மிட் வேரியன்ட்டில் மட்டும்தான் என்பதால், ஸ்டைலிஷ்ஷான டெயில் லைட்டுகள் மற்றும் அலாய் வீல் மிஸ் ஆகும். ஆனால், டீசலில் ஆட்டோ மேட்டிக் கிடைக்காது; 5 ஸ்பீடு மேனுவல் மட்டும்தான்.
என்ன கவனிக்கணும்?
சன்னி கார் வாங்கும்போது, முதலில் டீலை அடித்துப் பேசுங்கள். இதன் அடிப்படை XE பெட்ரோல் மாடல் என்றால், 3.5 லட்சத்துக்கு மேல் போக வேண்டாம். டாப் எண்ட் என்றால், 4.5 லட்சம் வரை பேசலாம். மைலேஜ் வேண்டும் என்றால், டீசலுக்குப் போய் விடுங்கள்.
டெஸ்ட் டிரைவ் கேட்டு ஓட்டும்போது, ‘தட் தடால்’ என்று சஸ்பென்ஷனில் சத்தம் வந்தால்... புஷ் போன்ற சில சமாச்சாரங்கள் போயிருக்கின்றன என்று அர்த்தம். இதன் CVT கியர்பாக்ஸில் லேக் தெரிவதாகத் தெரிந்தால்… சட்டென சர்வீஸ் ஹிஸ்டரியைப் புரட்டுங்கள். இதன் வைப்பரில் 6 வகையான ஸ்பீடு ஆப்ஷன் கொடுத்திருக்கிறார்கள். அது முறையாக வேலை செய்கிறதா என்பதைக் கவனிக்கலாம். ஏற்கெனவே பேனல் இடைவெளிதான் சன்னியின் மைனஸ். அதையும் நோட் பண்ணுங்கள். ஆடியோ சிஸ்டத்தைச் சோதனை போடுங்கள்.
பிரேக்கிங், சன்னியின் இன்னொரு சுமாரான அம்சம். பிரேக்கிங் பேடுகள் நன்றாக இருக்கின்றனவா என்று சடர்ன் பிரேக் அடித்துச் சோதனை போடலாம். சன்னி விற்பனை நிறுத்தப்பட்ட கார் என்றாலும், இன்னும் சர்வீஸில் குறை வைக்கவில்லை நிஸான். இதன் பராமரிப்புச் செலவும் பெரிதாகக் கையைக் கடிக்கவில்லை. இதன் டீசல் ஃபில்ட்டர் சுமார் 800 ரூபாய்; ஆயில் ஃபில்ட்டர் சுமார் 400 ரூபாய்; ஏசி ஃபில்ட்டர் 300 ரூபாய்தான். ஒரு தடவை பாகங்கள் மாற்றாமல் சர்வீஸ் விட்டால்… இதன் பராமரிப்புச் செலவு 4,000 ரூபாய் வரும். இது இந்தப் பெரிய காருக்கு ஓகேதான்.
உங்களது 4 பேர் கொண்ட குடும்பம்… எல்லோருக்கும் லக்கேஜ் ஏற்றி… பெரிய்…ய டூர் அடிக்க வேண்டும் என்றால்… 4 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் நல்ல மைலேஜில் நல்ல கார் இந்த சன்னி!