Published:Updated:

போலோ வாங்கும்போது இரண்டு விஷயங்களில் கவனமாக இருங்க!

போலோ GT
பிரீமியம் ஸ்டோரி
போலோ GT

பழைய கார்: ஃபோக்ஸ்வாகன் போலோ GT

போலோ வாங்கும்போது இரண்டு விஷயங்களில் கவனமாக இருங்க!

பழைய கார்: ஃபோக்ஸ்வாகன் போலோ GT

Published:Updated:
போலோ GT
பிரீமியம் ஸ்டோரி
போலோ GT

கார் : ஃபோக்ஸ்வாகன் போலோ GT

மாடல்: 2014 – 2016

பட்ஜெட்: சுமாராக 4 – 6 லட்சம்

இன்ஜின்: 1.5லி பெட்ரோல் / 1.5 லி டீசல்

பவர் : 90 / 100 / 110bhp

கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் DSG

ப்ளஸ் : கட்டுமானத் தரம், ஃபன் டு டிரைவ், நெடுஞ்சாலை நிலைத்தன்மை

மைனஸ்: பராமரிப்புச் செலவு, குறைவான கி.கிளியரன்ஸ், க்ளட்ச் வியர்

போலோ வாங்கும்போது இரண்டு விஷயங்களில் கவனமாக இருங்க!

போலோவில் பெரிய வசதிகளை யெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அதற்காக அதை பட்ஜெட் கார் என்றும் சொல்ல முடியாது. காரணம், அதன் பிராண்ட்! ஃபோக்ஸ்வாகன் எனும் இந்தப் பெயரே இதன் தரத்தையும், ஓட்டுதலையும், கட்டுமானத்தையும் பறைசாற்றும். அதனாலேயே போலோ, மார்க்கெட்டில் ப்ரீமியம் ஹேட்ச்பேக்காகவே உலா வருகிறது. அதிலும் சாதா போலோவைவிட GT போலோவில் எல்லோமே டோஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கும். பழைய கார் மார்க்கெட்டில், இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கை பட்ஜெட் பார்ட்டிகள் வாங்கலாமா… வாங்கினால் என்ன கவனிக்க வேண்டும்?

வரலாறு

போலோவுக்கு இப்போது 12 வயசாகிறது. 2010 ஆட்டோ எக்ஸ்போவில்தான் போலோவை லாஞ்ச் செய்தது ஃபோக்ஸ் வாகன். புனேவில் உள்ள சக்கானில் தயாரா கும் ஃபோக்ஸ்வாகனின் லோக்கலைஸ்டு கார், இந்த போலோதான். இதன் வாழ்நாளில் பல மாற்றங்களையும், சுமார் 10 வகையான இன்ஜின் ஆப்ஷன்களையும் பெற்றிருக்கிறது போலோ. இதில் பெர்ஃபாமன்ஸ் பார்ட்டிகளுக்கானதுதான் GT எனும் வேரியன்ட். இதுவரை சுமார் 2.5 லட்சத்துக்கும் மேல் போலோக்களை விற்றிருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.

எந்த மாடல்? என்ன டிசைன்?

நாம் பார்க்கப் போகும் இந்த GT TSI மற்றும் TDI மாடல் 2013–ல் வந்தது. 2014–ல் மொத்தமாக போலோவில் சில மாற்றங்களைச் செய்தார்கள். ஏற்கெனவே போலோவின் டிசைன் பார்ப்பவர்களை யெல்லாம் கவரும். செல்லக் குழந்தை மாதிரியான இதன் தோற்றமும், சிட்டிக்குள் சட்டு புட்டு என புகுந்து புறப்படும் இதன் சுறுசுறுப்பும் வாகன ஓட்டிகளுக்கு நிச்சயம் பிடிக்கும். இந்த மாடலில் முன் பக்கம் மற்றும் பின் பக்கம் பம்பர்கள், புது ஹெட்லைட் அசெம்பிளி, டெயில் லைட் க்ளஸ்ட்டர், கிண்ணென்ற புதிய 15 இன்ச் அலாய் வீல்கள், பின் பக்கம் ஸ்போர்ட்டியான ஸ்பாய்லர், மிரர் கேப்களுக்குக் கறுப்பு என்று மேலும் கலக்கலாக இருந்தது புது போலோ. பின் பக்கம் டெயில் கேட்டிலும், முன் பக்கம் கிரில்லும், C பில்லர் ஹவுஸிங்கிலும் அந்த GT என்கிற பேட்ஜ் இருந்தாலே அது பெர்ஃபாமன்ஸ் போலோ என்று கொள்க!

உள்ளே…

உள்பக்கமும் மொத்தமாக மாற்றியிருந்தார்கள். 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் பியானோ பிளாக் இன்செர்ட்டுகள், கறுப்பு மற்றும் பீஜ் கலர் டூயல் டோனில் டேஷ்போர்டு இருந்தால்… நீங்கள் பார்த்தது 2014 சாதா போலோ.

ஜிடியில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலைப்பாடுகள் செய்திருப்பார்கள். உள்ளே ஆல் பிளாக் தீமில் ஸ்போர்ட்டியான டேஷ்போர்டு, சென்டர் கன்சோலில் கிளாஸியான கறுப்பு வேலைப்பாடுகள், இங்கேயும் GT எனும் ஸ்கஃப் பிளேட்டுகள் என்று நீங்கள் பார்த்தால்.. அது ஃபேஸ்லிஃப்ட் மாற்றம் கொண்ட போலோ GT. இதன் கட்டுமானத்தைப் பற்றியும் தரம் பற்றியும் சந்தேகமே படாதீர்கள். பவர் விண்டோக்கள், ஏசி, ஹெட்லைட்ஸ் போன்றவை வேலை செய்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும்.

பெர்ஃபாமன்ஸ் போலோ!

ஓட்டுதல் விரும்பிகளின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் போலோவாகத்தான் இருக்கும். இந்த GT–யில் TSI, TDI என்று இரண்டு வேரியன்ட்கள் உண்டு. GT TSI என்றால் பெட்ரோல்; GT TDI என்றால் டீசல். இரண்டிலுமே டர்போ உண்டு. நீங்கள் வாங்கப் போவது 90bhp, 230Nm என்றால், அது ஸ்டாண்டர்டு போலோ என்று அர்த்தம். இதில் டார்க் 250Nm. கியர்பாக்ஸ் பழசில் இருப்பது மாதிரியே 5 ஸ்பீடு மேனுவல்தான் இருக்கும். பெர்ஃபாமன்ஸில் அதற்காக ஸ்டாண்டர்டு போலோவையும் குறை சொல்லிவிட முடியாது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

‘இரண்டு GT–களில் பவர் எதுங்க அதிகம்’ என்று கேட்டால்… இரண்டுமே இரட்டை ஹீரோக்கள் மாதிரி ஒன்றை ஒன்று முந்த முடியாமல் தவிக்கும். TDI, 0-100 கிமீ வேகத்தை 11.52 விநாடிகளில் கடந்தால்…TSI–க்கு 11 விநாடிகள்தான் ஆகின்றன. அதாவது, பெரிய வித்தியாசம் இல்லை. வேகப் போட்டியில் பெட்ரோல் முந்துகிறது. இதற்காகவே, கோபம் கொண்ட ஃபோக்ஸ்வாகன் டீசல் பார்ட்டிகளுக்காகவே இதன் 110bhp பவரையும் கொண்டு வந்தது. உங்களுக்கு 110bhp பவர் போலோ கிடைத்தால் விடாதீர்கள்!

க்விக் ஷிஃப்ட்டுக்குப் பெயர் பெற்ற DSG கியர்பாக்ஸை ஓட்டுவதே ஒரு வரம். இந்த பெட்ரோலை ஓட்டிப் பார்த்தால்.. அத்தனை அற்புதமாக இருக்கும். மேனுவலும் சும்மா சொல்லக் கூடாது. பவர் குறையாமல், போலோவைப் பின்தங்காமல் பார்த்துக் கொள்கிறது.

இதில் 100bhp மாடல் என்றால், அதில் DSG–க்குப் பதில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் இருக்கலாம். இதில் 1.0லிட்டர் 3 சிலிண்டர் TSI இன்ஜின். இது DSG–க்குப் பிறகு வந்த மாடல்! இது உங்கள் சாய்ஸ்!

வசதிகள்

ஏற்கெனவே சொன்னபடி பெரிதாக வசதிகளில் மயக்கி விடாது போலோ. ஆனால், போதுமான வசதிகள் உண்டு. புளூடூத்துடன் 2 Din ஆடியோ சிஸ்டம், (டச் ஸ்க்ரீன் இருந்தால் லேட்டஸ்ட் மாடல்; பட்ஜெட் அதிகமாகலாம்), ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், இரட்டைக் காற்றுப்பைகள், ABS உடன் EBD, 15 இன்ச் அலாய் வீல்கள் உண்டு. போட்டியாளர்களைவிட வசதிகளில் பின் தங்கினாலும் – பில்டு குவாலிட்டியிலும் ஃபிட் அண்ட் ஃபினிஷிலும் போலோ வேற லெவல்!

போலோ வாங்கும்போது இரண்டு விஷயங்களில் கவனமாக இருங்க!
போலோ வாங்கும்போது இரண்டு விஷயங்களில் கவனமாக இருங்க!

மைலேஜ் டீசலா… பெட்ரோலா?

ஹைவேஸ் டிரைவிங்கும், வேகத்தில் பறப்பதும் டீசலில் வாவ்! சிட்டிக்குள் இதன் மைலேஜ்தான் பெட்ரோலைவிட தன் பக்கம் வர வைத்தது வாடிக்கையாளர்களை! டீசல் போலோவின் ரியல் டைம் மைலேஜ் நகரத்துக்குள் சுமார் 15 – 16 கிமீ தருவதாகச் சொல்கிறார்கள் வாடிக்கையாளர்கள். நெடுஞ்சாலையில் 18 – 19 கிமீ தருகிறது டீசல் போலோ.

இதுவே பெட்ரோலில் மைலேஜ் விஷயத்தில் மிகவும் பின்தங்குகிறது போலோ. இது நகரத்துக்குள் 10 –11 கிமீதான் தருவதாகச் சொல்கிறார்கள். இதில் GT TSI–யின் பவர் கூடிய வெர்ஷன், சிலருக்கு சிங்கள் டிஜிட்டில் மைலேஜ் தருவதாகவும் புலம்புபவர்கள் இருக்கிறார்கள்.

என்ன கவனிக்கணும்?

வழக்கம்போல், 50,000 கிமீ–க்கு மேல் ஓடிய போலோ என்றால், கிளட்ச் வியரில் கவனம் வையுங்கள். ‘சர்ர்ர்க்’ என்று உள்ளே போனாலோ… நன்கு மிதித்தாலும் உள்ளே போகச் சிரமப்பட்டாலோ…Worn out கிளட்ச் என்று அறிக! கிளட்ச் மற்றும் ப்ரஷர் பிளேட்டுக்கு, மொத்தமாக 12,000 முதல் 13,000 வரை ஆகலாம்.

DSG கியர்பாக்ஸில், டவுன்ஷிஃப்ட்டு களின்போது கொஞ்சம் ஜெர்க் இருப்பதாகவும் சொல்கிறார்கள். காரை நெடுஞ்சாலையில் விட்டு கியர்ஷிஃப்ட் ஸ்மூத்தாக இயங்குகிறதா என்று பாருங்கள். இதில் உள்ள மெக்கட்ரானிக்ஸ் யூனிட்டில்தான் பிரச்னை என்கிறார்கள். இது கொஞ்சம் காஸ்ட்லி. சொல்லப்போனால், இதற்காகத்தான் டார்க் கன்வெர்ட்டரை ஃபோக்ஸ்வாகன் அப்பேட் செய்ததாகவும் பேச்சு அடிபடுகிறது. பள்ளமான சாலை களில் இறக்கிப் பாருங்கள். சஸ்பென்ஷன் புஷ்களில் வேலை இருக்கிறதா… மாற்றம் செய்ய வேண்டுமா என்பதையும் கவனிக்க வேண்டும். GT பெர்ஃபாமன்ஸ் வேரியன்ட் என்ப தால், வெறித்தனமாக ஓட்டியிருப்பார்கள் முந்தைய ஓனர்கள். அதனால் டயர்களையும் சோதிக்கவும்.

போலோ வாங்கலாமா?

போலோ வாங்கும்போது, முதலில் ஸ்டாண்டர்டு போலோ கிடைத்தால் அதைப் பார்க்கவும். என்ன, ஓர் ஆண்டு பழையதாக இருக்கும். GT என்பது பெர்ஃபாமன்ஸ் விரும்பிகளுக்கானது. தரம், ஓட்டுதல், ஜிவ்வென நெடுஞ்சாலையில் பறப்பது, கட்டுமானம் என எல்லாம் ஓகேதான்.

பழைய போலோவில் முக்கியமாக 2 விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பட்ஜெட் பார்ட்டிகள் என்றால், மைலேஜ் விரும்புவார்கள். அவர்களுக்குப் பெட்ரோலை ரெக்கமண்ட் செய்யப் போவதில்லை. இதன் சிங்கிள் டிஜிட் மைலேஜ் கவலையான விஷயம். ஆனால், டீசல் அற்புதமான மைலேஜைத் தருகிறது. மேலும் போலோ வாங்கும்போது கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் – இதன் பராமரிப்புச் செலவு மட்டுமே! 15,000 கிமீ–க்கு சர்வீஸ் இன்டெர்வல் இருந்தாலும், இதன் பராமரிப்பு கையைக் கடிக்காது; குதறும் என்பதைக் கவனிக்கவும்!

Scoop News

போலோவின் தயாரிப்பை ஃபோக்ஸ்வாகன் நிறுத்தப் போவதாகவும் ஒரு செய்தி அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

போலோ வாங்கும்போது இரண்டு விஷயங்களில் கவனமாக இருங்க!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism