கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

4 லட்சத்துக்கு ஸ்கார்ப்பியோ வாங்கலாமா?

ஸ்கார்ப்பியோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்கார்ப்பியோ

பழைய கார் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ!

கார்: மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மாடல்: 2009 - 2012

விலை: ரூ. 4 – 4.75 லட்சம்

இன்ஜின்: 2.2லிட்டர் MHawk டீசல்

கியர்: 5 ஸ்பீடு மேனுவல்

பவர்: 120bhp

ப்ளஸ்: 7 சீட்டர், ரோடு பிரசன்ஸ்

மைனஸ்: பாகங்களின் ரீப்ளேஸ்மென்ட் செலவு

‘காசும் கம்மியா இருக்கணும்; காரும் பெருசா இருக்கணும்னு சொன்னா எப்படிங்க!’ என்று சில விஷயங்களில் நம்மிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுவார்கள் பழைய கார் மார்க்கெட்டில். ஆனால், அதற்கும் ஆப்ஷன் இருக்கிறது. மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ அப்படி ஓர் ஆப்ஷன்தான். உங்கள் பட்ஜெட் 4 முதல் 5 லட்சத்துக்குள்தான் இருக்கிறது; எஸ்யூவி வேண்டும் என்பவர்கள் பழைய டஸ்ட்டருக்குப் போவார்கள். ஆனால், அது 5 சீட்டர். 7 சீட்டருக்கு என்றால் இருக்கவே இருக்கு ஸ்கார்ப்பியோ!

வரலாறு

முதன் முதலில் 2002–ல்தான் ஸ்கார்ப்பியோ லாஞ்ச் ஆனது. மொத்தம் இரண்டே வேரியன்ட்களில். மஹிந்திராவில் எப்போதுமே பெட்ரோல் ஆப்ஷனே இருக்காது. (லேட்டாக வந்த பெட்ரோலும் நின்று போனது தனிக்கதை!) ஸ்கார்ப்பியோவிலும் அப்படித்தான்; வெறும் டீசல்தான். ஆனால், மிரட்டலான அதன் ரஃப் அண்ட் டஃப் தோற்றமும், 2.6 லி டீசல் இன்ஜினின் டர்போ செயல்பாடும், சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்அப் கொண்ட இதன் ஆஃப்ரோடு தன்மையும் எஸ்யூவி பிரியர்களை மிகவும் கவர்ந்தது.

பிறகு 2006–ல் ஒரு ஃபேஸ்லிஃப்ட். 2007–ல் MHawk எனும் ஸ்கார்ப்பியோ வந்தது. இது பழசைவிட சிசியில் குறைவாக இருந்தது. அதாவது, 2.2லிட்டர் டீசல் இன்ஜின்தான். ஆனால் இது பவரில் மிரட்டியது. பிறகு 2014–ல் ஒரு ஃபேஸ்லிஃப்ட் மற்றும் 2017–ல் ஜெனரேஷன் மாற்றம் என வந்தது. இங்கே நாம் பார்க்கப் போவது MHawk 2.2லிட்டர் மைக்ரோ ஹைபிரிட் இன்ஜின். இது 2013 வரை வந்ததால், ஆண்டுக்கு ஏற்ப சில ஆயிரங்கள் விலை வித்தியாசம் வரும்.

4 லட்சத்துக்கு ஸ்கார்ப்பியோ வாங்கலாமா?
4 லட்சத்துக்கு ஸ்கார்ப்பியோ வாங்கலாமா?

என்ன ப்ளஸ்?

7 சீட்டர் என்பதுதான் ஸ்கார்ப்பியோவின் முக்கியமான ப்ளஸ். 3–வது வரிசை, பெரியவர்களுக்கு சூட் ஆகாது. இருந்தாலும், இது பயணிக்க ஓகேவாகத்தான் இருக்கும். இன்டீரியர் ரொம்பவும் பந்தாவாகவும் இருக்காது; சுமாராகவும் இருக்காது. காருக்கு ஏற்றபடி ஹார்டு பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தி இருப்பார்கள்.

ஸ்கார்ப்பியோவில் இன்னொரு ப்ளஸ் – இதன் டிரைவிங் பொசிஷன். சில எஸ்யூவிகளின் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தாலே பயமாக இருக்கும். உதாரணத்துக்கு, ஃபோர்டு எக்கோஸ் போர்ட்டின் பானெட் எங்கே முடிகிறது என்றே தெரியாமல், பலர் பயந்துகொண்டே கார் ஓட்டுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்கார்ப்பியோவில் ரோடு பிரசன்ஸும் விஸிபிலிட்டியும் டிரைவிங் பொசிஷனும் பக்காவாக இருப்பதால், சுமார் 1.75 டன் எடையுள்ள காரை ஓட்டப் போகிறோம் என்கிற பயம் இல்லாமல் இருக்கும்.

இதன் 2.2 லிட்டர் MHawk இன்ஜினின் ஓட்டுதல் அற்புதம். ஆஃப்ரோடு தன்மைக்கு ஏற்ப இதன் செயல்பாடுகள் எஸ்யூவி பிரியர்கள் அனைவருக்கும் பிடிக்கும். தமிழ்நாட்டில் தெங்குமரஹடா போன்ற காட்டுப்பகுதிக்குள் டூர் அடிக்க ஜீப், எஸ்யூவிகள் தவிர வேறெந்த கார்களுக்கும் அனுமதியில்லை. ‘ஸ்கார்ப்பியோ கார் இருக்கா’ என்றுதான் நுழைவுவாயிலில் கேட்பார்கள். அந்தளவு பெயர் வாங்கிய ஸ்கார்ப்பியோவை ஆஃப்ரோடு என்றால், நம்பி வாங்கலாம். மற்றபடி எல்லாமே மெக்கானிக்கல் பாகங்கள் என்பதால், மேனுவலாக எல்லாமே அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருக்கும். இதன் எர்கானமிக்ஸ் ஓகேதான். ஸ்கார்ப்பியோவில் மிச்சிலின் டயர்கள் பொருத்தி ஓட்டியவர்கள் இதை சிலாகிக்கிறார்கள். ஆனால், இது கொஞ்சம் காஸ்ட்லி. 7,500 ரூபாய் வரலாம் ஒரு டயர்.

4 லட்சத்துக்கு ஸ்கார்ப்பியோ வாங்கலாமா?
4 லட்சத்துக்கு ஸ்கார்ப்பியோ வாங்கலாமா?
4 லட்சத்துக்கு ஸ்கார்ப்பியோ வாங்கலாமா?

என்ன இருந்திருக்கலாம்?

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ். இதில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் கிடையாது என்பதைக் கவனிக்க வேண்டும். (நடுவே டிஸ்கன்டினியூ செய்துவிட்டது மஹிந்திரா.)

மேலும் நெடுஞ்சாலையில் ஸ்கார்ப்பியோவில் பாடி ரோல் அச்சமும் உண்டு. சட்டென யு–டர்ன் செய்வது, அதிவேகங்களில் கார்னரிங் செய்வது, நெடுஞ்சாலை நிலைத்தன்மை போன்றவை கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தலாம். மற்றபடி இதன் ஸ்டீயரிங் ஃபீட்பேக் அருமை. ஏபிஎஸ் இல்லை என்பதால், பிரேக்கிங்கில் கவனம் தேவை.

மல்ட்டி லிங்க்கைவிட இதன் லீஃப் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன், எப்படிப்பட்ட கரடுமுரடு சாலைகளையும் தாங்கும் என்றாலும், பின் பக்கப் பயணிகள் தூக்கிப் போடுவதாகவும் குறை சொல்கிறார்கள். ஸ்பீடு பிரேக்கர்களில் கார் தரையில் இடிக்காது; ஆனால், பின்னால் அமர்ந்திருப்பவர்கள் கூரையில் இடிக்கலாம். அதேநேரம் இந்த சஸ்பென்ஷன் செட்–அப்தான் அற்புதமான ஆஃப்ரோடு அனுபவத்தை வழங்குகிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் வெறித்தனம் விரும்புபவர்கள், 4 வீல் டிரைவ் ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இதில் டாப் எண்ட்தான் கிடைக்கும். விலையும் எகிறும்.

பராமரிப்பு, மைலேஜ்

ஸ்கார்ப்பியோவில் முக்கியக் குறையாகப் பார்க்கப்படுவது, இதன் மைலேஜ்தான். இதன் ரியல் டைம் மைலேஜ் – 10 கிமீ முதல் 12 கிமீ வரை என்கிறார்கள் இதைப் பயன்படுத்தியவர்கள். (2.6லிட்டர் என்றால், இன்னும் மைலேஜ் அடிவாங்கும்.) நெடுஞ்சாலையில் 14 கிமீ மைலேஜ் தந்தால், அந்த ஸ்கார்ப்பியோவைக் கொண்டாடுங்கள். 60 கிமீ டேங்க் என்பதால், அடிக்கடி பங்க்கில் நிறுத்தத் தேவையில்லை.

ஸ்கார்ப்பியோவில் பெரும்பாலும் மெக்கானிக்கல் பாகங்கள்தான் அதிகம். அதனால் எலெக்ட்ரிக்கலில் பெரிதாக வேலை இருக்காது. ஆனால், இதன் சர்வீஸ் காஸ்ட்டைப் பற்றி பலருக்குப் பலவித கருத்துகள் உண்டு. பாகங்களின் ரீப்ளேஸ்மென்ட் கொஞ்சம் கையைக் கடிப்பதாகச் சொல்கிறார்கள்.

நீங்கள் வாங்கப் போகும் ஸ்கார்ப்பியோவுக்கு, எப்படியும் 10 வயதுக்கு மேல் ஆகியிருப்பதால், 1 லட்சம் கிமீ–யைத் தாண்டியிருக்கும். அதனால் ஏசி, க்ளட்ச், ஸ்டீயரிங், சஸ்பென்ஷன் செட்அப் என்று பல விஷயங்களில் கவனம் தேவை. க்ளட்ச் மாவு போல் அரைத்தால், அசெம்பிளி மாற்ற வேண்டிய நேரம். சரியாகப் பராமரிக்கப்படாத ஸ்கார்ப்பியோக்களைத் தயவு தாட்சண்யம் இன்றி மறுதலித்து விடுங்கள். மே 2012–நவ 2013–க்குள்ளான தயாரிப்பு மாடல் என்றால், ப்ரஷர் ரெகுலேட்டிங் வால்வில் ரீகால் செய்தது மஹிந்திரா. அது சரி செய்யப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்த்து ஓகே செய்யுங்கள்.

நீங்கள் டெல்லி போன்ற மாநகரங்களில் இருந்தால் இது சரியான ஆப்ஷன் இல்லை. அங்கே கறும்புகை அடிக்கும் 10 ஆண்டுகள் பழைய டீசல் கார்கள் ஓட அனுமதி இல்லை. காரணம், ஸ்கார்ப்பியோவில் இன்னொரு குறையாகப் பார்க்கப்படுவது – சைலன்ஸரில் இருந்து வரும் கறுப்புப் புகை. இதிலும் கவனம் தேவை. 2.5 மற்றும் 2.6 லிட்டர் இன்ஜினில்தான் இந்தக் குறையைப் பெரிதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் கவனம்.

குறைவான செலவில் மோசமான சாலைகளில் போக வேண்டும்; கெத்தாக இருக்க வேண்டும் என்றால் ஸ்கார்ப்பியோவை டிக் அடித்து, ஒரு 5 ஆண்டு காலத்துக்கு ஓட்டலாம்.