Published:Updated:

மைலேஜ் வேணுமா… வசதிகள் வேணுமா…? எந்த வெர்னா உங்கள் சாய்ஸ்?

வெர்னா
பிரீமியம் ஸ்டோரி
News
வெர்னா

பழைய கார் மார்க்கெட்: ஹூண்டாய் வெர்னா (2017–2020)

மைலேஜ் வேணுமா… 
வசதிகள் வேணுமா…?
எந்த வெர்னா உங்கள் சாய்ஸ்?

பட்ஜெட் குறைவாகத்தான் இருக்கிறது; ஆனால் வாங்கும் கார் கொஞ்சமாவது ப்ரீமியம் ரகத்தில் இருக்க வேண்டும் என்றால், ஹூண்டாய் மற்றும் ஹோண்டாவைத் தவிர வேறெதுவும் ஆப்ஷன் பெரும்பான்மையாக இல்லை. ஹூண்டாயில் அப்படி ஒரு ப்ரீமியம் காராக வெர்னாவைச் சொல்லலாம். இப்போது 15 லட்ச ரூபாய்க்கு ஹூண்டாய் வெர்னா நமது ஸ்டேட்டஸ் சிம்பலைக் கூட்டும் கார் என்பது உண்மை. அப்படிப்பட்ட வெர்னாவை, பழைய கார் மார்க்கெட்டிலும் தேடிப் பிடித்து வாங்கினால், அதே ஸ்டேட்டஸைத் தக்க வைத்துக் கொள்ளலாம். தற்போது ஒரு புது ஹூண்டாய் வெர்னாவின் விலை – 11 லட்சத்தில் இருந்து 16 லட்சம் வரை விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதையே பழைய கார் மார்க்கெட்டில் 8 – 10 லட்ச ரூபாய்க்கு செமத்தியான 2017– 2020 மாடல் வெர்னாக்களை வாங்கலாம்.

வெர்னா… எந்த மாடல்?

ஃப்ளூயிடிக் எனும் டிசைனில் வெர்னாவைப் பார்த்தாலே யாருக்கும் ஆசை வரும். ஆகஸ்ட் 22 – 2017–ம் ஆண்டுதான் ஹூண்டாய், தனது வெர்னாவின் 3–rd ஜெனரேஷன் மாடலை வெளியிட்டது. அப்போது இதன் எக்ஸ் ஷோரூம் விலை 8 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை இருந்தது. ஆனால், இப்போதும் மார்க்கெட்டில் வெர்னாவின் பழைய செகண்ட் ஜெனரேஷன் மாடலுக்கே 6 – 7 லட்சத்துக்கு செம டிமாண்ட் இருக்கிறது என்பதுதான் உண்மை. நாம் இப்போது பார்க்கப் போகும் மாடல் 2017–2020 மாடல் வரை தயாரான மாடல் என்பதால், கொஞ்சம் மாடர்ன் ஆகவும் இருக்கும்; விலையும் கொஞ்சம் கிராக்கியாகவே இருக்கும்.

வெர்னாவில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுமே உண்டு. அதாவது – பெட்ரோல், டீசல். இரண்டுமே 1.6 லிட்டர் என்பதுதான் ஸ்பெஷல். இதில் டீசலில்தான் வழக்கம்போல் பவரும் டார்க்கும் அதிகம். டீசல் இன்ஜின் 128bhp மற்றும் 26kgm டார்க்கை வெளிப்படுத்தினால், பெட்ரோல் இன்ஜின் 123bhp மற்றும் 15.1kgm டார்க்கைக் கொண்டதாக இருக்கிறது. பவரில் இரண்டுக்கும் மிகப் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. வெறும் 5bhp பவர்தான் அதிகம். இரண்டு இன்ஜின்களிலுமே 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கின்றன. நமது சாய்ஸ் – டார்க் கன்வெர்ட்டர்தான். வேகத்துக்கேற்ப இது கியர் மாறும் தன்மை அளப்பறையாக இருக்கிறது. நீங்கள் மலைச்சாலை டிரைவிங் அடிக்கடி போவீர்கள் என்றால், இந்த டார்க் கன்வெர்ட்டர் செமையாக இருக்கும்.

பெட்ரோல்… டீசல்.. மைலேஜுக்கு எது?

அதேநேரம், டீசல் இன்ஜினில் அதிர்வுகளையும் கவனியுங்கள். ரொம்பவும் அதிர்ந்தால்… ஒருமுறை இன்ஜின் செக்–அப் செய்வது கொள்வது நல்லது. இதுவே ஸ்மூத்னெஸ்ஸான டிரைவிங்குக்கு பெட்ரோல் இன்ஜின்தான் கேரன்ட்டி. இதன் பெர்ஃபாமன்ஸும் வேற லெவலில் இருக்கும். ஆனால், இதில் டீசல் அளவுக்கு மைலேஜை எதிர்பார்க்க முடியாது என்பதும் உண்மை. டீசல் வெர்னா வாடிக்கையாளர்கள், நகத்தில் 14.5 கிமீ–யும் நெடுஞ்சாலையில்… வாவ்… 18 கிமீ–யும் மைலேஜைச் சொல்கிறார்கள். இதில் டீசல் ஆட்டோமேட்டிக் வெர்னாவின் மைலேஜ் நகரத்தில் 13.3 கிமீ – நெடுஞ்சாலையில் 16.2 கிமீ என்பது இந்த ப்ரீமியம் செடானுக்கு அம்சமான விஷயம்தானே!

இதுவே 1.6 லி பெட்ரோல் மேனுவல் வெர்னா – 9.5 கிமீ நகரத்துக்குள்ளும், 13.5 கிமீ ஹைவேஸிலும் கிடைக்கிறது என்கிறார்கள். ஆட்டோமேட்டிக் வெர்னா இன்னும் ஒருபடி கீழே இறங்குகிறது. இதன் ரியல் டைம் மைலேஜ் நகரத்துக்குள் 8.5 கிமீ; நெடுஞ்சாலையில் 12.5 கிமீ!

மைலேஜுக்காகவே 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வெர்னாவை 2018–ல் கொண்டு வந்தது ஹூண்டாய். நீங்கள் வாங்கும் மாடல் 2018 மாடல், 100bhp பவர் தரக்கூடிய 1.4லிட்டர் என்றால், அதன் ஸ்மூத்னெஸ் இன்னும் பக்காவாக இருக்கும். டெஸ்ட் டிரைவ் பார்த்து விடுங்கள்.

மைலேஜ் வேணுமா… பெர்ஃபாமன்ஸ் வேணுமா… எந்த வெர்னா என்பது உங்கள் சாய்ஸைப் பொருத்தது!

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்கில் முன்னேற்றமா?

பொதுவாக, வெர்னாவின் ஸ்டீயரிங் ஃபீட்பேக்கில் பெரிதாக ஒரு குறை உண்டு. முக்கியமாக, நெடுஞ்சாலை அதிவேகப் பயணங்களில் சாலையில் இருந்து இதன் ஸ்டீயரிங், தொடர்பற்றுப் போவதாக ஒரு குற்றச்சாட்டு காலங்காலமாக இருந்து வந்தது. இதனால் மூன்றிலக்க வேகங்களில் பறப்பவர்கள், வெர்னாவின் ஸ்டீயரிங்கைப் பயத்தோடே பிடித்து ஓட்டி வந்தார்கள். ஆனால், இந்த வெர்னாவின் ஸ்டீயரிங், நெடுஞ்சாலையில் நல்ல ஃபீட்பேக்கைத் தந்தது. சிட்டிக்குள் லகுவாகவும், ஹைவேஸில் கொஞ்சம் டைட் ஆகவும் மாறி இதன் ரைடு அண்ட் ஹேண்ட்லிங்கில் ஒரு நம்பிக்கையைத் தந்தது ஹூண்டாய். எனவே, நீங்கள் வாங்கப் போகும் வெர்னாவில் ஒரு ஹைவே டெஸ்ட் டிரைவ் பார்த்து விடுங்கள்.

எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் 
மோட்டார் வார்னிங் லைட்...
எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் மோட்டார் வார்னிங் லைட்...
கிளட்ச் வியரில் கவனம் தேவை...
கிளட்ச் வியரில் கவனம் தேவை...

எந்த வேரியன்ட்… என்ன வசதிகள்?

லாஞ்ச் ஆனபோது, மொத்தம் 5 ட்ரிம்களில் வந்தது வெர்னா. E, EX, SX, SX+ மற்றும் SX(O). இதில் கடைசி வேரியன்ட்டில்தான் எக்யூப்மென்ட் லிஸ்ட்டும் வசதிகளும் கொட்டிக் கிடக்கும். நீங்கள் டீசல் ஆட்டோமேட்டிக் பார்ப்பவர்கள் என்றால், SX(O) வேரியன்ட் தேடினாலும் கிடைக்காது. காரணம், டீசல் டார்க் கன்வெர்ட்டரில் SX(O) வை அறிமுகப்படுத்தவில்லை ஹூண்டாய். அதற்குப் பதிலாக SX(+) ட்ரிம்மில் கொண்டு வந்து, சில வசதிகளைக் காலி செய்தது.

அப்படி இந்த வெர்னா SX(O)–வில் என்னென்ன வசதிகள் இருக்கு? லெதர் சீட்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கொண்ட டச் ஸ்க்ரீன், கிரிட் லைன்களுடன் அருமையான ரியர்வியூ கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி கோ, தானாகத் திறக்கும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பூட் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்கள் என ஏகப்பட்ட வசதிகள்! சன்ரூஃப் மாடலும் கிடைக்கும். மேலும் ஆட்டோ லிங்க் கனெக்டிவிட்டி கொண்ட மாடல், உங்கள் ஸ்மார்ட்போனில் கனெக்ட் செய்து கொள்ளலாம். உங்கள் காரின் ஆரோக்கியத்தைத் தினசரி தெரிந்து கொள்ளலாம்.

அட சொல்ல மறந்தாச்சு! முதன் முதலாக இந்த செக்மென்ட்டில் வென்ட்டிலேட்டட் சீட் வசதி கொண்ட இந்த செக்மென்ட்டின் செடான், வெர்னா மட்டுமே! இவ்வளவு வசதிகள் போதாதா… 8 லட்சத்துக்கு!

ஆனால், ஸ்டாண்டர்டாகவே ஏபிஎஸ், இரட்டைக் காற்றுப்பைகள், ISOFIX குழந்தை சீட்கள் உண்டு. SX(O)–வில் பக்கவாட்டு மற்றும் கர்ட்டெய்ன் காற்றுப்பைகள் இரண்டு எக்ஸ்ட்ராவாக வரும்.

எது தேர்ந்தெடுக்கலாம்?

இரண்டு இன்ஜின்களுமே நன்றாக ஸ்மூத்தாகவே இருக்கின்றன. இருந்தாலும் டீசலைவிட பெட்ரோல் ஒரு படி மேலே! உங்கள் பயன்பாட்டையும் தேவையையும் பொருத்துத் தேர்ந்தெடுங்கள். வசதிகள் மொத்தமும் மைலேஜோடு உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால், டீசல் மேனுவல் கியர்பாக்ஸ்தான் ஒரே சாய்ஸ். பெர்ஃபாமன்ஸில் அடுத்த சாய்ஸ் – டீசல் ஆட்டோமேட்டிக். இதன் 0–100 கிமீ டீசல் மேனுவலைவிட வேகம். மைலேஜிலும் பெரிதாகக் கையைக் கடிக்காது. கியர் மாற்ற வேண்டிய தொல்லையும் இல்லை. பெட்ரோல் ஆட்டோமேட்டிக் என்றால், மைலேஜில் பயங்கரமாக காம்ப்ரமைஸ் செய்ய வேண்டி வரும். பெட்ரோல்தான் பிடிக்கும் என்பவர்கள், நல்ல விலைக்கு மேனுவலைத் தேடுங்கள்.

என்ன கவனிக்கணும்?

ஏற்கெனவே சொன்னதுபோல், எலெக்ட்ரானிக் பவர்ஸ்டீயரிங் மோட்டார் தான் வெர்னாவின் பெரும் பிரச்னையே! சில உரிமையாளர்கள் இதில் குறைபட்டுக் கொள்கிறார்கள். நீங்கள் வாங்கும்போது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் கண் வையுங்கள். EPS வார்னிங் சிக்னல் எரிந்தாலோ, ஸ்டீயரிங் பிடிக்கும்போதே எடை அதிகமாக இருந்தாலோ… கவனியுங்கள்!

அடுத்து, வெர்னாவின் கிளட்ச் வியர். சீக்கிரமாக இதன் க்ளட்ச் பிளேட்கள் தேய்ந்துவிடுவதாக ஒரு புகார். அதிலும் மலைச்சாலைகளில் அதிக கிமீ ஓடிய கார்கள் மீது கவனம். எதற்கும் வாங்கும்முன்பு கிளட்ச் மற்றும் ப்ரஷர் பிளேட்டைச் சோதனை போடுவது நல்லது. 50,000 கிமீ–க்கு மேல் ஓடியிருந்தால் நிச்சயம் இது அவசியம்!

அதேபோல், ஏசி சிஸ்டத்திலும் குறை சொல்கிறவர்கள் உண்டு. இதன் கம்ப்ரஸர் யூனிட் மற்றும் தெர்மிஸ்டர் போன்றவற்றில் கோளாறு இருப்பதாகச் சொல்கிறார்கள். இதன் கூலிங் காயில் விலை சுமார் ரூ.4,000 ரூபாய் வரும். கம்ப்ரஸர் யூனிட் என்றால் பல ஆயிரங்கள் பர்ஸ் பழுக்கும்.

மேலும், வெர்னாவில் பின் சீட் பயணிகள் அதிக திருப்தி அடைந்தவர்களைப் பார்த்திருக்க முடியாது. காரணம், இதன் தாழ்வான சீட்டிங் அமைப்பும், ஹெட்ரூம் மற்றும் முழங்கால் சப்போர்ட்டும் கொஞ்சம் திருப்தி அளிக்கவில்லை என்கிறார்கள். நீண்ட தூரப் பயணங்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தலாம். ஹோண்டா சிட்டி மற்றும் சியாஸை ஒப்பிடும்போது இதன் சொகுசு குறைவுதான்.

வெர்னாவுக்கு பழைய கார் மார்க்கெட்டில் அடக்கமான மதிப்பு உண்டு. எதற்கும் அடித்துப் பேசினால் வெர்னா, உங்கள் குடும்ப நண்பனாகலாம்!

மைலேஜ் வேணுமா… 
வசதிகள் வேணுமா…?
எந்த வெர்னா உங்கள் சாய்ஸ்?

கார் : ஹூண்டாய் வெர்னா

மாடல் ; 2017–2020

விலை : ரூ.8 – 10 லட்சம்

இன்ஜின்: 1.6லி பெட்ரோல்/ 1.6லி டர்போ டீசல்

பவர்: 123/128bhp

டார்க்: 15.1/26.1kgm

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 165 மிமீ

பூட் ஸ்பேஸ்: 480 லிட்டர்

ப்ளஸ் : ஸ்மூத்தான இன்ஜின்கள், எக்யூப்மென்ட் லிஸ்ட், வசதிகள்

மைனஸ் : EPS (எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்) மோட்டார், க்ளட்ச் வியர், பின் சீட் சொகுசு