Published:Updated:

பழைய போலோ... கையைக் கடிக்குமா?

யூஸ்டு கார்: ஃபோக்ஸ்வாகன் போலோ

பிரீமியம் ஸ்டோரி
போலோ.... இது ஓட்டுவதற்குச் சிறப்பான கார் என்றாலும், இதிலிருந்த 1.2 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினின் பெர்ஃபாமன்ஸ் சுமார் ரகத்தில் இருந்தது தெரிந்ததே. இதற்கான தீர்வாக வெளிவந்த GT சீரிஸ் மாடல்களை, யூஸ்டு கார் மார்க்கெட்டில் தற்போது 5-7 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் வாங்க முடியும் என்பது செம.

2014 - 2019 வரையிலான காலத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்த ஸ்போர்ட்டியான ஹேட்ச்பேக்கை, யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்கும்போது, என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

போலோ GT சீரிஸ் வரலாறு

காம்பேக்ட்டான, அதே சமயம் பவர்ஃபுல்லான ஃபோக்ஸ்வாகன் தயாரிப்பு இது. கடந்த 2013-ம் ஆண்டில் GT சீரிஸ் (TSI, TDI) இந்தியாவில் அறிமுகமாகின. இருப்பினும் வழக்கமான போலோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல், 2014-ம் ஆண்டில் வெளியானது. இதில் மாற்றியமைக்கப்பட்ட பம்பர்கள், புதிய ஹெட்லைட்ஸ் & டெயில் லைட்ஸ், ஸ்டைலான அலாய் வீல்கள் பொருத்தப்பட்டன. கேபினில் Piano Black வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய 3 ஸ்போக் ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், சில்வர் வேலைப்பாடுகளுடன் கூடிய சென்டர் கன்சோல், கறுப்பு - பீஜ் ஃபினிஷ் கொண்ட டேஷ்போர்டு எனக் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களைக் கொண்டிருந்தது. இதுவே GT சீரிஸில் கூடுதலாக Gloss Black கலரில் ரியர் வியூ மிரர்கள் - பின்பக்க ஸ்பாய்லர், மாறுபட்ட தோற்றத்தைக் கொண்ட அலாய் வீல்கள், முன்பக்க கிரில் - Boot Lid - C பில்லர் ஆகியவற்றில் GT லோகோ இருந்தன. மேலும் கறுப்பு நிற இன்டீரியர், Gloss Black ஃபினிஷ் கொண்ட சென்டர் கன்சோல், அலுமினிய பெடல்கள், GT பேட்ஜிங் கொண்ட Scuff Plates ஆகியவை உட்புறத்தில் புதிது. மற்றபடி 10 ஆண்டுகளைக் கடந்த டிசைனாகவே இருந்தாலும், இன்றைக்கும் போலோ பார்ப்பதற்கு நச்சென இருக்கிறது.

பழைய போலோ... கையைக் கடிக்குமா?

இன்ஜின் - கியர்பாக்ஸ் மற்றும் வசதிகள்

GT TSI காரில் அதே 1.2 லிட்டர், 4 சிலிண்டர் TSI இன்ஜின் - 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் காம்போ இடம்பெற்றது (105bhp பவர் - 17.5kgm - 17.21கிமீ அராய் மைலேஜ்). ஆனால் GT TDI காரில் 1.6 லிட்டர் TDI இன்ஜினுக்குப் பதிலாக, ஃபோக்ஸ்வாகனின் புதிய 1.5 லிட்டர் TDI இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி பயன்படுத்தப்பட்டது. இது வழக்கமான போலோவில் 90bhp பவர் - 23kgm டார்க் தந்தால், GT TDI மாடலில் 105bhp பவர் - 25kgm டார்க்கை வெளிப்படுத்தியது. பின்னாளில் இதன் பவர் 110bhp ஆக அதிகரிக்கப்பட்டதும் தெரிந்ததே. 0-100 கிமீ வேகத்தை 10.9 விநாடிகளில் GT TSI எட்டிப் பிடித்தால் (S Mode), அதே வேகத்தை 11.52 விநாடிகளில் GT TDI தொட்டுவிடுகிறது. வசதிகளைப் பொறுத்தவரை புளூடுத் உடனான 2 Din ஆடியோ சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், EBD, ESP, பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், 15 இன்ச் அலாய் வீல்கள், எலெக்ட்ரிக் மிரர்கள் எனப் போதுமான வசதிகள் இருந்தன. போட்டி கார்களுடன் ஒப்பிடும்போது GT சீரிஸ் சிறப்பம்சங்களில் பின்தங்கினாலும், காரின் கட்டுமானத்தரம் & ஃபிட்-ஃபினிஷ் அசத்தலாக இருந்தன. கேபினிலும் இதே திறன் எதிரொலித்தது பெரிய ப்ளஸ்.

யாருக்கு எந்த மாடல் ஓகே?

உங்களுக்கு ஸ்மூத்தான பெட்ரோல் இன்ஜின் & துல்லியமான டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார் வேண்டும் என்றால், தயங்காமல் GT TSI காரை டிக் அடித்துவிடுங்கள். மற்றபடி அதிக டார்க் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆகிய குணாதிசியம் தேவை என்பவர்களை, GT TDI திருப்திபடுத்திவிடுகிறது. தவிர இது பெட்ரோல் இன்ஜினைவிட அதிக மைலேஜைத் தருவதும் வரவேற்கத்தக்க விஷயம் (அராய் மைலேஜ் - 19.91 கிமீ). தற்போது BS-6 அவதாரத்தில் GT TSI காரை வாங்க முடியும் என்றாலும், அதிலிருக்கும் இன்ஜின் - கியர்பாக்ஸ் முற்றிலும் புதிது. 1.0 லிட்டர், 3 சிலிண்டர் TSI இன்ஜின் - 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணை, 110bhp பவரை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் டீசல் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்திவிட்டதால், GT TDI இனி ஷோரும்களில் கிடைக்காது. Global NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், போலோ 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றது

பழைய போலோ... கையைக் கடிக்குமா?

என்ன கவனிக்க வேண்டும்?

ஃபோக்ஸ்வாகன் தயாரிப்பான போலோ GT சீரிஸின் பராமரிப்புச் செலவுகள், போட்டியாளர்களைவிட அதிகம்தான். ஆனால் ஒரு வருடம்/15 ஆயிரம் கிமீ எனும் நீண்ட சர்வீஸ் Interval இருப்பதால், பெரிய நெருக்கடியைத் தராது. பெட்ரோல்/டீசல் என எந்த மாடலாக இருந்தாலும், யூஸ்டு கார் மார்க்கெட்டில் காரின் பாடி பேனல்கள் சேதமில்லாமல் இருப்பது அவசியம். ஏனெனில் அவற்றை ரிப்பேர் செய்வது அல்லது புதிதாக மாற்றுவது என்பது கொஞ்சம் காஸ்ட்லி!

GT TDI காரின் கிளட்ச், Spongy ஆக இல்லாமல் இருக்க வேண்டும். ஒருவேளை அப்படி இருந்தால், கிளட்ச் காலி என அர்த்தம். எனவே புதிதாக கிளட்ச் ப்ளேட் & ப்ரஷர் ப்ளேட் ஆகியவற்றை மாற்றுவதற்குக் குறைந்தது 12 ஆயிரம் ரூபாய் செலவாகும். GT TSI காரில் இருக்கும் DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், கியர்களை ஸ்மூத்தாகவும் விரைவாகவும் மாற்ற வேண்டும். ஏனெனில் சில கார்களின் கியர்பாக்ஸில் இருந்த Mechatronics அமைப்பு கோளாறுமிக்கதாக இருந்தன. இதன் விலை அதிகம்; தவிர கியர்களைக் குறைக்கும்போதும் ஏற்றும்போதும் ஒருவிதமான ஜெர்க் தெரிந்ததாகவும், இந்த காரைப் பயன்படுத்தும் சிலர் கூறுகிறார்கள். இப்படி DSG கியர் பாக்ஸில் பல பிரச்னைகள் இருந்ததால், புதிய போலோ GT TSI-ல் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு ஃபோக்ஸ்வாகன் சென்றுவிட்டதோ என்னவோ!

டெஸ்ட் டிரைவ் செய்யும்போது, கரடுமுரடான சாலைகளில் ஓட்டிப் பாருங்கள். அப்போது காரின் சஸ்பென்ஷன் ஓவர்டைம் பார்ப்பதுபோலத் தெரிந்தால், அதன் Bushing மாற்ற வேண்டியிருக்கும். ஏசி ஸ்விட்ச்கள் சரியாக இருக்கிறதா என்று செக் செய்யவும். GT சீரிஸ் கார்கள் விரட்டி ஓட்டப்பட்டிருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்பதால், டயர்களின் கண்டிஷனை உறுதி செய்துகொள்ளவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பழைய போலோ... கையைக் கடிக்குமா?

என்ன விலைக்கு காரை வாங்கலாம்?

யூஸ்டு கார் மார்க்கெட்டில் GT சீரிஸ் கார்களுக்குப் பெரிய டிமாண்ட் இல்லாத காரணத்தால், காரின் உரிமையாளரிடம் நீங்கள் விலையைக் கொஞ்சம் பேரம் பேசி வாங்கலாம். டிரைவர்ஸ் காராக அறியப்படும் இவை, பெரும்பாலும் சரியான இடை வெளியில் சர்வீஸ் செய்யப்பட்டிருப் பதற்கான வாய்ப்புகளே அதிகம். இவற்றின் பராமரிப்புச் செலவுகள் கொஞ்சம் அதிகம் என்றாலும், அதனைக் குறைக்கும் நடவடிக்கையில் ஃபோக்ஸ்வாகன் நீண்ட நாள்களாக ஈடுபட்டிருக்கிறது. தவிர டீலர் நெட்வொர்க்கிலும் முன்னேற்றம் தெரிகிறது.

போலோவில் பொருள்களை வைக்க, 294 லிட்டர் பூட் ஸ்பேஸ் உண்டு. என்றாலும், பின்பக்க இடவசதியில் இது போட்டி கார்களைவிடக் குறைவான மதிப்பெண் களையே பெறுகிறது. சிறப்பம்சங்களில் கோட்டை விட்டதை, போலோ தனது ஓட்டுதல் அனுபவத்தால் சரிக்கட்டிவிடுகிறது. GT சீரிஸ் அறிமுகமான போது, அதன் ஆரம்ப விலை 7.99 லட்சமாக இருந்தது. எனவே சுமார் 5-7 லட்ச ரூபாய்க்கு, நல்ல கண்டிஷன் & கச்சிதமான ஆவணங்களுடன் இருக்கும் காரை, யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்குவது சிறப்பான முடிவுதான். முடிந்தால் காரை வாங்கிய பிறகு, வென் ட்டோவில் கிடைக்கும் LED ஹெட்லைட்ஸை இதில் மாட்டி விடுங்கள்; பக்கா போலோ ரெடி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு