Published:Updated:

6 லட்சம் பட்ஜெட்... டாப்-5 பழைய எஸ்யூவிகள்!

பழைய கார்கள்
பிரீமியம் ஸ்டோரி
பழைய கார்கள்

பழைய கார்கள்: எது வாங்கலாம்?

6 லட்சம் பட்ஜெட்... டாப்-5 பழைய எஸ்யூவிகள்!

பழைய கார்கள்: எது வாங்கலாம்?

Published:Updated:
பழைய கார்கள்
பிரீமியம் ஸ்டோரி
பழைய கார்கள்

மூன்று முதல் ஐந்து லட்சம் உங்கள் பட்ஜெட் என்றால், பழைய கார் மார்க்கெட்டில் ஹேட்ச்பேக்கைத் தாண்டிப் போக முடியாது. செடான்கள் என்றால், ரொம்பப் பழைய மாடலாக இருக்கும். இதுவே 5 –6 லட்சம் என பழைய கார் வாங்க பட்ஜெட் வைத்திருப்பவர்கள்தான் டைலமாவில் அதிகம் சிக்கித் தவிப்பார்கள். காரணம், எக்ஸ்ட்ராவாக சில ஆயிரங்கள் போட்டால், ஒரு புது BS-6 ஹேட்ச்பேக்கே வாங்கிவிடலாம்! டைலமாவுக்கு இன்னொரு காரணம் - இந்த பட்ஜெட்டில் நல்ல செடான்களும் கிடைக்கும்… எஸ்யூவிகளும் கிடைக்கும். இந்த இதழில், 5–6 லட்சத்துக்குள் பழைய மார்க்கெட்டில் கிடைக்கும் டாப்–5 எஸ்யூவிகள் எவை என்று பார்க்கலாம்!

டஸ்ட்டர்
டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் (டீ)

டஸ்ட்டரைப் பொருத்தளவு, அதன் பில்டு குவாலிட்டிதான் பலருக்குப் பிடித்த விஷயம். இதன் கி.கிளியரன்ஸ் அதிகம் 200 மிமீ-க்கு மேல் என்பதால், சூப்பராக ஆஃப்ரோடும் செய்யலாம். ஆரம்பத்தில் டஸ்ட்டரில் பெட்ரோல் வேரியன்ட் இல்லாமல் இருந்தது. பிறகு டீசல் வந்தது. இப்போது புது மார்க்கெட்டில் டீசல் கிடையாது. பெட்ரோல் மட்டும்தான் விற்பனையில் இருக்கிறது. ஆனால், பழைய டஸ்ட்டர் வாங்குபவர்களுக்கு ஒரு டிப்ஸ்: தினசரி சிட்டி டிராஃபிக்காக இருந்தாலும் சரி; ஹைவேஸில் பறப்பவர்களாக இருந்தாலும் சரி – பெட்ரோலைவிட டீசல் டஸ்ட்டர்தான் பலவிதங்களில் நமக்கு மகிழ்ச்சி தரும். அதேபோல், டீசலில் 85bhp பவரைவிட 110 bhpதான் பெர்ஃபாமன்ஸ் பிரியர்களுக்குப் பிடிக்கும். 4 மீட்டருக்கு மேற்பட்ட இந்த மிட் சைஸ் காரில் 7 சீட்டர் இல்லாமல் வெறும் 5 சீட்டருக்கு ஏற்றபடி இதன் வீல்பேஸை 2,763 மிமீ–க்கு டிசைன் செய்திருப்பதால், இதில் இடவசதியும் அருமையாக இருக்கும். இதன் பூட் ஸ்பேஸும் தாராளம். 475 லிட்டர் என்பது ஒரு குடும்பத்துக்குத் தேவையான லக்கேஜைவிட எக்ஸ்ட்ராவாகவே ஏற்றலாம். ஆனால், பாட்டில் ஹோல்டர்களுக்குக்கூட இடம் அவ்வளவாக இல்லாதது நெருடல்.

ஓட்டுதலிலும் டஸ்ட்டர் ஓரளவு டிஸ்டிங்ஷன் வாங்குகிறது. இதில் உள்ள பெரிய 16 இன்ச் வீல்கள், நல்ல கிரிப். டஸ்ட்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இதன் மைலேஜை வெரைட்டியாகச் சொல்கிறார்கள். ஆனால், ஆவரேஜாக இது 11.5 கிமீ–ல் இருந்து 13 கிமீ வரை நகரத்துக்குள் மைலேஜ் கொடுக்கும். நெடுஞ்சாலையில் என்றால், 15 கிமீ தரலாம். பெட்ரோல் மாடல் இன்னும் குறையும்.

டஸ்ட்டர், ஓட்டுதலுக்குப் பெயர் பெற்ற கார் என்பதால், குறைந்தது 60,000 கிமீ–யாவது ஓட்டியிருப்பார்கள் அதன் ஓனர்கள். பழைய டஸ்ட்டர் வாங்கும்போது, இதை ஸ்டார்ட் செய்து பாருங்கள்; நீண்ட நேரம் உறுமிய பிறகு ஸ்டார்ட் ஆனால், டீசலின் ஹை ப்ரஷர் பம்ப் வேலை வைக்கப் போகிறது என்று அர்த்தம். புது டஸ்ட்டரிலேயே ஒரு பெரிய குறை என்னவென்றால், இதன் எடை அதிகமான க்ளட்ச். மற்ற கார்களைவிட இது கொஞ்சம் ஹெவி க்ளட்ச்தான். பழைய டஸ்ட்டரில் க்ளட்ச் விஷயத்தில் கவனமாக இருங்கள். அதேபோல் பழைய டஸ்ட்டரில் குறைகளாகச் சொல்லப்படுவது ஆட்டோமேட்டிக் பவர் விண்டோஸ், ஏசி கம்ப்ரஸர் போன்றவைதான். இதிலும் கண் வையுங்கள்.

RXZ எனும் டஸ்ட்டரின் டாப் வேரியன்ட் நல்ல டீலுக்கு வந்தால் விடாதீர்கள்.

ஃபோர்டு எக்கோஸ்போர்ட்
ஃபோர்டு எக்கோஸ்போர்ட்

ஃபோர்டு எக்கோஸ்போர்ட் (டீ)

ஃபோர்டு கார்கள், ஃபன் டு டிரைவுக்குப் பெயர் பெற்றவை. எக்கோஸ்போர்ட் அதில் வேற லெவல். இதன் டிரைவர் சீட்டில் அமர்ந்து ஸ்டீயரிங்கைப் பிடித்து ஹைவேஸில் பறந்தால்… அத்தனை ஜிவ்வென்று இருக்கும். பாறை போன்ற இதன் கட்டுமானமும், நெடுஞ்சாலைத் தன்மையும் அத்தனை பிரமாதம். எக்கோஸ்போர்ட்டில் நான் 182 கிமீ வரை டாப் ஸ்பீடு போன ஞாபகம் உண்டு. குறைந்த வேகங்களில் சட் சட் எனத் திருப்ப இதன் எடை குறைவான ஸ்டீயரிங்கும், அதிவேகங்களில் கடினமாக மாறும் இதன் ஃபீட்பேக்கும் அற்புதம். சர்வீஸ் அம்சங்களைப் பொருத்தவரை ஃபோர்டு என்றால், ரொம்ப காஸ்ட்லி என்றொரு பேச்சு நிலவிவந்தது. அதை உடைக்க ஃபோர்டு போராடி வருகிறது. நிஜம்தான்; எக்கோஸ்போர்ட் உரிமையாளர் ஒருவர், ‘80,000 கிமீ வரை ஆண்டுக்கு 5,000 ரூபாய் மட்டுமே சர்வீஸுக்குச் செலவழித்தேன்’ என்கிறார். இதன் டீசல் பெர்ஃபாமன்ஸும் பக்கா.

52 லிட்டர் டேங்க் என்பதால், 15 கிமீ மைலேஜ் தரும் எக்கோஸ்போர்ட்டுக்கு இது சூப்பர். பாதுகாப்பிலும் எக்கோஸ்போர்ட் அருமை. டாப் எண்டான டைட்டானியம் ப்ளஸ் வேரியன்ட்டில் 6 காற்றுப்பைகள், EPS, ABS, ஹில்ஹோல்டு என்று பல வசதிகள் இருக்கும். இதன் டேஷ்போர்டு ப்ரீமியம்தான். ஹைவேஸில் ஏரோ டைனமிக்ஸில் கலக்கும் நீளமான இதன் பானெட் டிசைன்தான், கார் எங்கே முடிகிறது என்பது தெரியாமல், புதிதாக கார் ஓட்டுபவர்களுக்குக் கொஞ்சம் பயத்தை வரவழைக்கும்.டஸ்ட்டரைவிட சின்ன காராக இருப்பதால், இதன் இடவசதியும் கவரவில்லை. இதன் 17 இன்ச் வீல்களில் சைடு வால் அடிக்கடி தேய்வதாகச் சொல்கிறார்கள். ஆகவே கவனம் தேவை.

ஜனவரி 2013– செப்.2014–க்குள் தயாரிக்கப்பட்ட மாடல்களில் ஏர்பேக் டெப்ளாய்மென்ட், நவ2013–ஏப்2014 மாடல்களில் ரியர் ட்விஸ்ட் பீம் ஆக்ஸிலில் பிரச்னை, மே–ஜூன்2017 மாடல்களில் சஸ்பென்ஷனில் பிரச்னை என்று பல விஷயங்களுக்காக எக்கோஸ்போர்ட், ரீ–்கால் செய்யப்பட்டது. நீங்கள் வாங்கப் போகும் மாடலில் இவை சரி செய்யப்பட்டு விட்டதா என்று பாருங்கள். யூஸ்டு கார் மார்க்கெட்டில் எக்கோஸ்போர்ட்டுக்குச் சரியான டிமாண்ட் உண்டு. ஆஃபர் வந்தால் விட வேண்டாம்.

6 லட்சம் பட்ஜெட்... டாப்-5 பழைய எஸ்யூவிகள்!

டாடா சஃபாரி ஸ்டார்ம் (டீ)

காட்டுத்தனமாக வேலை பார்ப்பதில் டாடா கார்கள் பெஸ்ட். சஃபாரி ஸ்டார்மும் அப்படித்தான். இதை ‘Work Horse’ என்பதைவிட ‘லைஃப் ஸ்டைல் கார்’ என்று சொல்லலாம். சஃபாரி வைத்திருப்பது ஒரு நம் லைஃப் ஸ்டைலை, அந்தஸ்த்தை உயர்த்தக் கூடிய விஷயம். சஃபாரியில் 2.2Varicor இன்ஜினை, ஒரு Beast என்றும் சொல்லலாம். டாடாவில் கொஞ்சம் டர்போ லேக் படுத்தி எடுக்கும்தான். ஆனால், இது 2,000rpm வரைக்கும்தான். அதற்கு மேல் இந்த இன்ஜினின் செயல்பாடு அருமையாக இருக்கும். ஹைவேஸில் இதன் ஏரோ டைனமிக்ஸ் பிரமாதம். பாடி ரோலும் பெரிதாகக் கிடையாது. கிட்டத்தட்ட 2.5 டன் எடை கொண்ட சஃபாரியை சிட்டிக்குள் ஓட்டி, பார்க் செய்வதற்குத் தனித்திறமை வேண்டும். இதன் டர்னிங் ரேடியஸ் மிக மிக அதிகம். இதை சட்டென யூ டர்ன் அடிப்பதும் மிகச் சிரமமாகவே இருக்கலாம். அதேபோல் இதன் எடை அதிகமான க்ளட்ச்சும், கியர்பாக்ஸும் சிட்டிக்குள் இன்னும் கொஞ்சம் ஃபன்னைக் குறைக்கின்றன.

கட்டுமானத்தில் புலியாக இருக்கிறது சஃபாரி. இரும்பு, ஸ்டீல் என்று பலவித உலோகங்கள், இந்த காரை ஒரு பீஸ்ட் மாதிரிதான் காட்டுகிறது. சஃபாரியில் பெரிய ப்ளஸ் – இது ஒரு 7 சீட்டர் கார் என்பதுதான். நாம் சொல்லியிருக்கும் இந்த 6 லட்சம் விலை என்பது, ஓனர்ஷிப்பைப் பொருத்து வேறுபடும்.

டாடா கார்கள், பராமரிப்பில் கையைக் கடிக்காது என்றாலும், பெரிய கார் என்பதால் இதன் உதிரி பாகங்கள் பர்ஸைப் பதம் பார்த்துவிடும். 60,000 கிமீ–க்கு மேல் ஓடிய கார்களில் சஸ்பென்ஷனிலும், ஸ்டீயரிங்கிலும் கொஞ்சம் வேலை பார்க்க வேண்டியிருக்கலாம். இதன் 5 லிங்க் சஸ்பென்ஷன் செட்–அப்புக்குக் கிட்டத்தட்ட 40,000 ரூபாய் சர்வீஸில் கட்ட வேண்டியிருக்கும். இதன் இன்னொரு மைனஸ் – இதன் மைலேஜ். சிங்கிள் டிஜிட்டில்கூட இதன் மைலேஜைப் பற்றிக் குறை சொல்பவர்கள் உண்டு. இது ஒவ்வொருவரின் ஓட்டுதலுக்கும் வேறுபடலாம். ஹைவேஸில் 14 கிமீ வரை மைலேஜ் தரலாம்.

மாடர்ன் உலகுக்கு ஏற்ற வசதிகள் இல்லையென்றாலும், நச்சென ஒரு இந்தியன் எஸ்யூவி வேண்டும் என்பவர்களுக்கு, டாடா சஃபாரி ஸ்டார்ம், செம ஆப்ஷன். பழைய கார் மார்க்கெட்டில் நல்ல விலைக்கு வந்தால் டீலை முடித்துவிடுங்கள்.

ஸ்கோடா யெட்டி
ஸ்கோடா யெட்டி

ஸ்கோடா யெட்டி (டீ)

ஸ்கோடா கார்கள், இன்டீரியர் முதல் எக்ஸ்டீரியர் வரை எல்லாமே ப்ரீமியமாகத்தான் இருக்கும். யெட்டியின் டிசைனில் ஆரம்பித்து டேஷ்போர்டு வரை, ப்ரீமியம் வாசம் அடிக்கிறது. யெட்டியை ஒரு மிட் சைஸ் எஸ்யூவி என்றால், யாரும் நம்பமாட்டார்கள். இதன் நீளம் 4 மீட்டருக்கு மேல் அதிகம் இருந்தாலும், பார்ப்பதற்குச் சிறிதாக இருப்பதால், ரோடு பிரசன்ஸில் ஆப்சென்ட் ஆகிறது யெட்டி. இதன் உயரம் (1,691மிமீ) / எடை (1,543கிலோ) என எல்லாமே ஒரு காம்பேக்ட் கார்களுக்கு உண்டான அளவுகள்.

ஆனால், இதன் கட்டுமானமும், ஹைவேஸ் ஸ்டெபிலிட்டியும் வேற லெவல். எனது தனிப்பட்ட அனுபவம் – யெட்டியில் கோவையில் இருந்து கோவா வரை எந்தவித அலுப்பும் இல்லாமல் சென்று வந்தது இன்றும் நினைவில் இருக்கிறது. சில கார்களில் பயணம் போய்விட்டுத் திரும்பினால், அலுப்புத் தட்டும். யெட்டியின் கம்ஃபர்ட்டும் ப்ரீமியமும் வேற லெவலில் இருக்கும். இதன் வீல் பேஸ் 2,578 மிமீ என்பதால், இடவசதி அற்புதமாக இருக்கும்.

5 ஸ்பீடு மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் என இரண்டு ஆப்ஷன்களில் வரும் யெட்டியில், 110bhp மற்றும் 140bhp என இரண்டு பவர் ஆப்ஷன்களும் கொடுத்திருக்கிறார்கள். யெட்டியை ஒரு ஆஃப்ரோடர் என்றும் சொல்லலாம்; சாஃப்ட்ரோடர் என்றும் சொல்லலாம். அட, இதில் 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் விற்பனைக்கு வந்தது. ஆனால், இதன் VAG TDI இன்ஜினில், க்ளட்ச் ரொம்பவும் எடை அதிகம் என்று புகார் வாசிக்கிறார்கள் இதன் உரிமையாளர்கள். எனவே, 4 வீல் டிரைவ் மாடல் சிட்டிக்குள் கொஞ்சம் கஷ்டம்தான்.

பராமரிப்பிலும் மைலேஜிலும்தான் யெட்டி ரொம்பவும் பின்தங்குகிறது. Active, Elegance, Ambience என்று பல வேரியன்ட்களில் வந்த யெட்டியில், எல்லாமே ஓகேதான். பழைய யெட்டி வாங்குகிறவர்கள் இதைக் கவனத்தில் கொள்ளுங்கள். 50,000 கிமீ–க்கு மேல் ஓடிய கார்களில் இதன் வாட்டர் பம்ப்பை செக் செய்ய வேண்டும். சரியாகக் கவனித்தால் 7,000–த்தில் முடிந்துவிடும். கொஞ்சம் அசட்டையாக இருந்தால், இதை மாற்றுவதற்கு 23,000 வரை செலவழியும். யெட்டி, லாரா போன்ற நாட்பட்ட கார்களில், இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் பேக்லிட் கொஞ்சம் டல் அடிக்கலாம். சஸ்பென்ஷனில் கொஞ்சம் வேண்டத்தகாத சத்தம் வந்தால்… வேலை இருக்கிறது என்று அர்த்தம். கியர்பாக்ஸ் மவுன்ட்டையும் கண் வையுங்கள். வீல் பேரிங்கும் ஸ்கோடா கார்களில் வேலை வைப்பதாகச் சொல்கிறார்கள். முக்கியமாக 4X4 வீல் மாடலாக இருந்தால், டிஃப்ரன்ஷியல் ஆயிலையும் சரியான இடைவேளையில் பயன்படுத்தி இருக்கிறார்களா என்று சர்வீஸ் ஹிஸ்டரியில் சோதனை இடுங்கள்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ (டீ)

நீங்கள் ஒரு ரஃப் அண்ட் டஃப் பிரியராக இருக்கிறீர்கள்; உங்களுக்கு ஒரு எஸ்யூவி தேவைப்படுகிறது என்றால், சட்டென ஸ்கார்ப்பியோவைத் தவிர வேறெந்த காரும் உங்கள் மூளையில் ஸ்பார்க் அடிக்காது. ஸ்கார்ப்பியோவுக்கு இப்போது வயது 19. 2002–ல்தான் முதன்முதலாக 2.6 டர்போ இன்ஜினுடன் 2 வேரியன்ட்களில் லாஞ்ச் ஆனது ஸ்கார்ப்பியோ. கூடவே பெட்ரோலைக் கொண்டு வந்த மஹிந்திரா, அதன் குறைவான மைலேஜைக் கருத்தில் கொண்டு அதை நிறுத்தியது. பிறகு 2006–ல் ஒரு ஃபேஸ்லிஃப்ட். 2007–ல் MHawk எனும் 2.2லிட்டர் இன்ஜினில் ஸ்கார்ப்பியோ வந்தது. இது பழசைவிட சிசியில் குறைவாக இருந்தாலும், பவரில் மிரட்டியது. பிறகு 2014–ல் ஒரு ஃபேஸ்லிஃப்ட் மற்றும் 2017–ல் ஜெனரேஷன் மாற்றம் என வந்தது. இங்கே உங்களுக்கு ரெக்கமண்ட் செய்வது MHawk 2.2லிட்டர் இன்ஜின்.

7 சீட்டர் என்பது ஸ்கார்ப்பியோவின் மிகப் பெரிய ப்ளஸ். 3–வது வரிசை, பெரியவர்களுக்கு சூட் ஆகாது. இருந்தாலும், ஓகே! உங்களுக்கு ஸ்கார்ப்பியோ விலை மலிவாகக் கிடைக்கிறது என்றால், அது 2.6 லி டர்போவாக இருக்கலாம். இதன் மைலேஜ் 10 கிமீ–க்குள்தான் இருக்கும். 2.5 லிட்டரும் மைலேஜில் பெரிதாகத் திருப்திப்படுத்தவில்லை. இவற்றில் கறுப்புப் புகை வருவதாகவும் புகார் உண்டு. அதனால்தான் MHawk–யை ரெஃபர் செய்கிறோம். இது 12–14 கிமீ தருவதாகச் சொல்கிறார்கள். 60 கிமீ டேங்க், ஓகே!

கி.கிளியரன்ஸ் நன்றாக இருப்பதால், மேடு பள்ளங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. கொஞ்சம் சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்–அப் என்பதால், ரைடு குவாலிட்டி கொஞ்சம் பம்ப்பியாகவே இருக்கும். மேடுகளில் தூக்கித் தூக்கிப் போடுவதையும், நெடுஞ்சாலை நிலைத்தன்மையிலும் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டும். ஏபிஎஸ்–ஸும் இல்லை.

இதில் மெக்கானிக்கல் பாகங்கள்தான் அதிகம். அதனால் எலெக்ட்ரிக்கலில் பெரிதாக வேலை இருக்காது. அப்படியே இருந்தாலும், இதன் பராமரிப்புச் செலவு குறைவுதான். ஆனால், இதன் சர்வீஸ் காஸ்ட்டைப் பற்றி பலருக்குப் பலவித கருத்துகள் உண்டு. பாகங்களின் ரீப்ளேஸ்மென்ட் கொஞ்சம் கையைக் கடிப்பதாகச் சொல்கிறார்கள். க்ளட்ச் மாவு போல் அரைத்தால், அசெம்பிளி மாற்ற வேண்டிய நேரம். சரியாகப் பராமரிக்கப்படாத ஸ்கார்ப்பியோக்களைத் தயவு தாட்சண்யம் இன்றி மறுதலித்து விடுங்கள். மே 2012–நவ 2013–க்குள்ளான தயாரிப்பு மாடல் என்றால், ப்ரஷர் ரெகுலேட்டிங் வால்வில் ரீகால் செய்தது மஹிந்திரா. அது சரி செய்யப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்த்து ஓகே செய்யுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism