Published:Updated:

எம்ஜிஆருக்கும் இந்த அம்பாஸடருக்கும் தொடர்பு இருக்கு!

‘தமிழ்’ ராஜேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
‘தமிழ்’ ராஜேந்திரன்

வின்டேஜ் கார்னர்: அம்பாஸடர்

எம்ஜிஆருக்கும் இந்த அம்பாஸடருக்கும் தொடர்பு இருக்கு!

வின்டேஜ் கார்னர்: அம்பாஸடர்

Published:Updated:
‘தமிழ்’ ராஜேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
‘தமிழ்’ ராஜேந்திரன்

“ஆடி, பிஎம்டபிள்யூ, ஜாகுவார்னு ஆயிரம் மாடர்ன் கார்கள் வரட்டுமே… அவை அத்தனையும் இந்த அம்பாஸடர் காருக்கு முன்னாடி நிக்கக்கூட முடியாது. பத்து பேர் வரை இதுல ‘அடைச்சுக்கிட்டு’ கட்டுசெட்டா போகலாம். முரண்டு பண்ணாம, அத்தனை ‘உருப்படி’களையும் இழுத்துக்கிட்டு, சும்மா ஜம்முனு நிக்காம ஓடும். மனுஷங்களை மட்டும்தான் இதுல ஏத்தணும்னு கணக்கு இல்லை. வயலுக்கு உரம், மருந்துகள் ஏத்திக்கிட்டுப் போகலாம். காடு கழனியில் விளையுற விளைபொருட்களை ஏத்திக்கிட்டு சந்தைக்கு ஒரு எட்டு ‘யாவாரம்’ செய்ய போய் வரலாம். எல்லாத்தையும்விட, இந்த அம்பாஸடர்ல இருக்கிற கம்பீரம், வேற எந்த காருலயும் வராது சார்..” என்று தனது வீட்டு முன்பு ‘ராயல் புளூ’ கலரில் நின்றிருக்கும் அம்பாஸடர் காரைத் தடவிக்கொடுத்தபடி, வார்த்தைக்கு வார்த்தை லயித்துப் பேசுகிறார், ‘தமிழ்’ ராஜேந்திரன்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையைச் சேர்ந்த ‘தமிழ்’ ராஜேந்திரன், ஒரு வழக்கறிஞர். டூவீலர்களை மட்டும் ஓட்டியவர், ‘கார் வாங்க வேண்டும்’ என்று ஆசை வந்தவுடன் வாங்கிய முதல் மற்றும் கடைசி கார் இந்த அம்பாஸடர்தான். கடந்த 23 வருடங்களாக, ‘தன்னையும், சமயத்தில் தனது குடும்ப அங்கத்தினர், நண்பர்களையும் சுமந்துகொண்டு, கரூர் சாலைகளில் ‘நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு ஓடு ராஜா...’ என்று மக்கர் பண்ணாமல், ஓடிக்கொண்டிருப்பதாகக் கூறிப் புளகாங்கிதப்படுகிறார் ‘தமிழ்’ ராஜேந்திரன்.

ஒரு ‘கார்’ காலத்தில்... ஸாரி, வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்திருக்கும் இந்த பிப்ரவரி மாதத்தின் ஒரு நல்ல நாளில், ‘தமிழ்’ ராஜேந்திரன் சாரையும், அவரது காரையும் பார்த்து வரப் பயணப்பட்டோம். அவரைவிட, அவரது காரைப் பற்றி கேட்க வந்திருக்கிறோம் என்பதே, அவருக்குள் ஆகப்பெரும் ‘குஷி’யை உண்டாக்கியது. அதே பரவசத்தோடு நம்மிடம், கார் குறித்துக் கதைக்கலானார்.

“எனக்குப் பூர்வீகம், கரூர் மாவட்டத்தில் இருக்கும் டி.கூடலூர். விவசாயக் குடும்பம்தான். ஆனா, எனக்கு வழக்கறிஞர் படிக்க ஆசை வந்துச்சு. கடந்த, 1988-ம் வருஷம் பி.எல் படிச்சு முடிச்சேன். ஆனா, அதுக்கு முன்னாடியே 1985-ம் வருஷமே எனக்குத் திருமணமாயிட்டு. என்னோட மனைவி மணிமொழி, ஈரோடு, திருச்சி, கோவை, பெங்களூர்னு டீச்சிங் லைன்ல வேலை பார்த்தாங்க. அதனால், நானும் அங்கெல்லாம் போனேன். இந்த நிலையில், நான் 1988-ம் வருஷம் சொந்தமா புதுசா டிவிஎஸ் 50 வண்டியை வாங்கி ஓட்டினேன். அதன்பிறகு, 1990-ம் வருஷம் லாம்பரட்டா ஸ்கூட்டரை செகண்ட் ஹாண்டுல வாங்கி ஓட்டினேன். இருந்தாலும், ‘சொந்த கார் வாங்கணும்’ங்கிற ஆசை இருந்துச்சு. 1999 - ம் வருஷம் கோவையில் இருந்தோம். நான் ஒரு தனியார் பொறியியல் டீம்டு பல்கலைக்கழகத்துக்கு லீகல் அட்வைஸராக இருந்தேன். அப்போ ஒரு தினநாளிதழ்ல, ‘கார் விற்பனைக்கு’னு ஒரு வரி விளம்பரம் வந்துச்சு. ‘அம்பாஸடர் கார். 1972 - ம் வருஷ மாடல். ஒரு லட்சம் விலை’னு சொன்னார் ஓனர். வண்டியை நேராக எடுத்து வந்து காட்டினார். பொள்ளாச்சி ரெஜிஸ்ட்ரேஷன். அவர் பெயர் சுப்ரமணி. விவசாயி. அவர், அந்த காரை, சென்னை அடையாரைச் சேர்ந்த வி.ஜெ.பிரசாத் என்பவர்கிட்ட வாங்கியதாகச் சொன்னார். அந்த பிரசாத், அதற்கு முன்பு மைலாப்பூரைச் சேர்ந்த மருத்துவர் எம்.எஸ்.ராமச்சந்திரன் என்பவர்கிட்ட இருந்து வாங்கியதாக, சுப்ரமணி சொன்னார். அந்த மருத்துவர் வேறு யாருமல்ல, முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் குடும்ப மருத்துவர். அவருக்காக, எம்ஜிஆர் அந்த காரை வாங்கிப் பரிசளித்ததாகவும், அந்த கார் அநேக நேரம், ராமாவரம் தோட்டத்திலேயே நிற்கும்னும் சொன்னார். அதனாலேயே, அந்த காரை சட்டுன்னு எனக்கு பிடிச்சுப் போச்சு. காரணம், நான் தீவிர, வெறி பிடித்த எம்ஜிஆர் ரசிகன்.

எம்ஜிஆருக்கும் இந்த அம்பாஸடருக்கும் 
தொடர்பு இருக்கு!
எம்ஜிஆருக்கும் இந்த அம்பாஸடருக்கும் 
தொடர்பு இருக்கு!
எம்ஜிஆருக்கும் இந்த அம்பாஸடருக்கும் 
தொடர்பு இருக்கு!

படிக்கிற காலத்துல எம்ஜிஆர் வேஷம் போட்டு மேடையில் நடிச்சுக் கைத்தட்டல் வாங்கியிருக்கிறேன். இரண்டுமுறை எம்ஜிஆரைத் தூரத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைச்சுச்சு. ஆனா, பக்கத்துல போய் பார்க்கும் பாக்கியம் கிடைக்கலை. ஆனாலும், அவரோடு தொடர்புடைய இந்த அம்பாஸடர் காரில் பயணிப்பது, அவரோடு சேர்ந்து பயணிப்பதற்குச் சமம்னு உடனே அந்த காரை மறுபேச்சுப் பேசாமல் வாங்கினேன். மறுவருஷமே என் பெயருக்கு மாத்திக்கிட்டேன். நான் வேலை பார்த்த பல்கலைக்கழகத்துல டிரைவரா இருந்த தியாகுங்கிறவரோட பையன் ஜான் என்பவர்கிட்ட டிரைவிங் கத்துக்கிட்டேன். அதனால, காருக்கு டிரைவர் வெச்சுக்கலை. நானே ஓட்ட ஆரம்பிச்சேன். மறுவருஷமே கரூர் வந்து செட்டிலாயிட்டோம். என் மகனும் இந்த காரை ஓட்டக் கத்துக்கிட்டான். ஆன்மிக ட்ரிப், ஜாலி டூர், சொந்தக்காரங்க வீடுனு எல்லாத்துக்குமே இந்த அம்பாஸடரில்தான் பயணம்.

இதோட சொகுசு ஜம்பமா இருந்ததால, ‘வேற கார் வாங்கணும்’ங்கிற எண்ணமே வரலை. வேற கார்ல போகும்போது, ஏதோ ஆட்டுக்குட்டி மேல போறமாதிரி தோணும். ஆனா, நம்ம அம்பாஸடர் கார்ல போறது, யானை மேல ராஜாக்கள் போற மாதிரி கம்பீரமாவும் சுகமாவும் இருக்கும்.

இது, மத்த கார் மாதிரி ‘லொட்டு லொசுக்கு’னு இருக்காது. இதுல பயணிக்கும்போது பயணக் களைப்பே வராது. விபத்துக்குள்ளானாலும், கார் அதிகம் டேமேஜ் ஆகாது. எஃகுவால் செஞ்ச பாறை உடம்புக்காரப் பய சார் இவன். தன்மேல மோதுன வாகனத்தைதான், இவன் டேமேஜ் பண்ணுவான். அதேபோல், எட்டுபேர் வரை இதுல ‘அடைச்சுக்கிட்டுப்’ போகலாம். அட, சொல்லப்போனா மினி லாரி மாதிரி இதைப் பயன்படுத்துவேன்.

சொந்த ஊருக்கு மேக்கால உள்ள புதுக்கோட்டைங்கிற ஊர்ல எனக்குப் பத்து ஏக்கர் விவசாய நிலமிருக்கு. வெள்ளாமைக்குத் தேவையான உரமூட்டைகள், மருந்து, விவசாய இடுபொருள்களை இந்த அம்பாஸடர் காரில் வைத்துத்தான் கரூரில் இருந்து எடுத்துப் போவேன். வயக்காட்டுலயும் வம்பு பண்ணாம, சும்மா ஜம்பமா போவும். அதேபோல் அங்க விளையுற தேங்காய், காய்கறிகள், கடலை, எள், உளுந்து உள்ளிட்ட விளைபொருட்களைக் காருக்குள்ள ஏத்திக்கிட்டு, வேகுவெரசா கரூர் மண்டிக்குக் கொண்டாந்து சேர்த்து, விற்பனை பண்ணுவேன். கடந்த, பதினைஞ்சு வருஷமா வயக்காட்டு வாழ்க்கைக்கும் என்னோட சேர்ந்து, இந்த அம்பாஸடரும், ‘கழுதைக்கு வாக்கப்பட்டா, உதைப்பட்டுதானே ஆகணும்’ங்கிற மாதிரி நல்லா பழகிட்டு!

அதேபோல, இந்தக் காரின் பதிவு எண்ணும், ஒரு கௌரவத்தை, தனி சுகத்தை நமக்குக் கொடுக்கும். இது TN ரெஜிஸ்ட்ரேஷன் இல்லை; மெட்ராஸைக் குறிக்கும்விதமா, இதுல டிஎம்பினு இருக்கிறதே ஒரு கெத்து! சிலர், ‘இன்னுமா இந்த ப்ளசர் கார் பயன்பாட்டுல இருக்கு’னு கேட்பாங்க. இன்னும் சிலர், ‘கரூர்ல இந்த மாதிரி காரைப் பார்க்கவே முடியலை’னு சொல்லிட்டு, காரைச் சுத்திப் பார்ப்பாங்க. இன்னும் சிலர், ‘அம்பாஸடர் வக்கீல்’னு செல்லமா பட்டப்பெயர் வச்சுக் கூப்புடுறாங்க.

‘பெரிய வி.ஐ.பி போலிருக்கு’னு என்னோட வாகனத்தை மறிக்காம, சல்யூட் வச்சு போலீஸ்காரங்க அனுப்புன சம்பவங்கள்லாம் நடந்திருக்கு. அப்போ, உள்ளுக்குள்ள ஆனந்தமா சிரிச்சுக்குவேன். ‘இந்த பவுசு எல்லாம், உன்னாலதான்டா செல்லக்குட்டி’னு இந்த காரைத் தட்டிக் கொடுப்பேன். அதேபோல், இந்த கார் 23 வருஷத்துல எங்கேயும் தவிக்க விட்டதில்லை. அதேபோல், 5,000 கிலோமீட்டர் ஓடியதும், கம்பல்சரியா ஆயில் சர்வீஸ் பண்ணிருவேன். மத்தபடி, பெருசா பிரச்னை பண்ணாது. டீசல் ட்யூப் கட் ஆவுறது, ஃபேன் பெல்ட் கட்டாகுறதுனு எப்போவாச்சும் மக்கர் பண்ணும். அதுக்காக, டீசல் ட்யூபும், ஃபேன் பெல்ட்டும் எக்ஸ்ட்ரா ஸ்பேர் கைவசம் எப்போதும் வாங்கி வச்சுக்குவேன். கடந்த அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வரை, இந்த காருக்கான எல்லா ஸ்பேர் பார்ட்ஸ்களும், கரூர்லேயே கிடைச்சுச்சு. ஆனால், அம்பாஸடர்கள் கரூர்ல வழக்கொழிஞ்சு போனதால, இங்க ஸ்பேர் கிடைக்கிறதில்லை. இருந்தாலும் மெக்கானிக், தேவையான ஸ்பேரைக் கேட்டு ஈரோடு, கோவைக்கு ஆர்டர் கொடுத்தா, இரண்டே நாள்ல கரூருக்குக் கொடுத்து விட்டுருவாங்க. அதனால், அதுக்கும் பிரச்னையில்லை. நானும் எத்தனையோ வாகனத்துல போயிருக்கிறேன். ஆனா, இந்த அம்பாஸடர்ல போன திருப்தி வேற எந்த வாகனத்துலயும் கிடைக்கலை சார்! என் காலத்துக்கு பிறகும், என் மகனும் இதைப் பயன்படுத்துறதா சொல்லியிருக்கான்! இதைவிட சந்தோஷம் வேற என்னங்க வேணும்!” என்று கூறிச் சிரிக்கிறார்.

அம்பாஸடர் காரும் வக்கீல் சாரும் - சீரும் சிறப்புமாக இருக்க மோட்டார் விகடனின் வாழ்த்துகள்!

எம்ஜிஆருக்கும் இந்த அம்பாஸடருக்கும் 
தொடர்பு இருக்கு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism