கார்ஸ்
Published:Updated:

"அஞ்சு முதல்வர்கள் பயணிச்ச கார் இது!" - டாட்ஜ் கிங்ஸ்வே கார் பற்றி சிலாகிக்கும் இளங்கோ!

டாட்ஜ் கிங்ஸ்வே
பிரீமியம் ஸ்டோரி
News
டாட்ஜ் கிங்ஸ்வே

வின்டேஜ் கார்: டாட்ஜ் கிங்ஸ்வே

"அஞ்சு முதல்வர்கள் பயணிச்ச 
கார் இது!" -  டாட்ஜ்  கிங்ஸ்வே கார் பற்றி சிலாகிக்கும் இளங்கோ!

‘‘நாங்க இதுவரை 60 கார்கள் வரை பயன்படுத்தியிருப்போம். ஆனால், இந்த டாட்ஜ் கிங்ஸ்வே காரைப்போல ஒரு சொகுசான காரைப் பார்த்ததில்லை. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதானு அஞ்சு முதல்வர்கள் இந்த கார்ல விரும்பி பயணிச்சாங்கன்னா, சும்மா விளையாட்டு இல்லை. ரோட்டை அடைச்சுக்கிட்டு இது போற தினுசே அவ்வளவு அலாதியா இருக்கும். பார்க்குறவங்களுக்கு நாம ராஜா கணக்கா, தேர்ல பவனி வர்ற மாதிரி தெரியும். அது சொல்லி(ல்) புரியாது தம்பி. மனசு முழுக்க மத்தாப்பு பூக்குற மகத்தான தருணம் அது!’’ என்று தனது கராஜில் ராஜகுதிரை கணக்காக நிற்கும் 'டாட்ஜ் கிங்ஸ்வே' காரைப் பற்றி, வார்த்தைக்கு வார்த்தை, அங்குலம் அங்குலமாக ரசித்து விவரிக்கிறார் எஸ்.எஸ்.எம் இளங்கோ.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகர மக்களுக்கு இளங்கோ குடும்பத்தையும், இந்தக் காரையும் பிரித்துப் பார்த்துப் பழக்கமில்லை. `காரும், இளங்கோ சாரும்' என்றே விளிக்கிறார்கள். இப்போது இல்லை, கடந்த 1965–ல் இருந்து இந்த குடும்பத்தோடு ஒட்டி உறவாடி, இந்தக் குடும்பத்தின் ஓர் அங்கமாக மாறியதோடு, எஸ்.எஸ்.எம் இளங்கோ குடும்பத்துக்குப் பேர் சொல்லும் பிள்ளையாக இருக்கிறது இந்த கார்.

‘‘தி.மு.க தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, எங்கப்பா எஸ்.எஸ்.எம்.சுப்ரமணியம் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தோட அவைத் தலைவராக இருந்தார். 1965–ல் மாநிலம் முழுக்க இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துக்கிட்டு கோவையில் கேஸ் நடக்குது. அப்போ, எங்கப்பாவுக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்து, அதிர்ஷ்டவசமா அவர் உயிர் பிழைத்தார். கோயமுத்தூர்ல நடக்கும் கேஸை அட்டெண்ட் பண்ணப் போய்வரணும். வீட்டுல மூணு அம்பாசிடர் கார்கள் இருந்துச்சு. ஆனா, மருத்துவர்கள், 'கார்ல உக்காந்துகிட்டுப் போறது ஆகவே ஆகாது'னு கண்டிச்சு சொல்லிட்டாங்க. அதனால், படுத்துக்கிட்டே போறாப்புல பெரிய காரா இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சோம்.

அப்போதான், கோயமுத்தூர் பி.எஸ்.ஜி காலேஜ் முதலாளி வச்சுருந்த இந்த டாட்ஜ் கிங்ஸ்வே காரை ரூ.17,000 கொடுத்து வாங்கினோம். 1958–ம் வருஷ மாடல் கார், MDE 363 பதிவு எண், அமெரிக்காவில் இருந்து அவங்க நேரடியா இறக்குமதி செஞ்ச வண்டி, வெள்ளைக்கலர்னு இந்த கார பாக்குறப்பவே எங்க மனசுக்கு நெருக்கமாயிருச்சு. இந்த கார்ல அப்பா படுத்துக்கிட்டே கோயமுத்தூர் போய் வந்தார். இந்த நிலையில், அறிஞர் அண்ணா சேலம் மாவட்டத்துக்கு வரும்போதெல்லாம், எங்க வீட்டுலதான் 10 நாள், 15 நாள்னு தங்குவார். அப்போ, அவர் இந்த கார்ல போய்வர, இந்த காரோடு `சொகுசு' அவருக்கு(ம்) புடிச்சுப் போச்சு. கோவை, சேலம் மாவட்டங்கள்ல நடக்கும் தி.மு.க கூட்டங்களுக்கு இந்தக் கார்லதான் போய்வர ஆரம்பிச்சார்.

அதன்பிறகு, அவர் முதலமைச்சரானபிறகு, ஒருமுறை எங்களுக்கு போன் பண்ணி, 'கார் வேணும். பெங்களூர் போகணும்'னு கேட்டார். 'நீங்க இப்போ முதலமைச்சர். இந்த கார்லயா போறது?'னு கேட்டோம். ஆனா, இந்த கார்தான் வேணும்'னு சொன்னார். அண்ணாவோட வளர்ப்பு மகன் கௌதமனுக்கு பொண்ணுப் பாக்கப் போய்ட்டு வந்தாங்க. அதன்பிறகு, கலைஞரும் எங்க வீட்டுலதான் தங்குவார் என்பதால், இந்த காரோட ராசி பத்தி அவருக்குத் தெரியும். அதனால், இரண்டு தேர்தலுக்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை பிரசாரம் செய்ய இந்த காரைத்தான் அவரும் பயன்படுத்தினார். இரண்டு தேர்தல்லயும் ஜெயிச்சாங்க. `இந்த டாம்பீகம் வேற எந்த வண்டியிலயும் வராதுய்யா'னு அனுபவிச்சுச் சொல்லுவார்.

"அஞ்சு முதல்வர்கள் பயணிச்ச 
கார் இது!" -  டாட்ஜ்  கிங்ஸ்வே கார் பற்றி சிலாகிக்கும் இளங்கோ!

அவங்க ரெண்டு பேரைவிட அப்பா, எம்.ஜி.ஆருக்குத்தான் நெருக்கம். அதனால், எம்.ஜி.ஆர் அ.தி.மு.க ஆரம்பிச்சப்ப அப்பாவைக் கூப்புட்டதும், அவர் பக்கம் போயிட்டார். திண்டுக்கல் இடைத்தேர்தல்ல மாயத்தேவர் நின்னப்ப, அவருக்காக இந்த கார்ல போய்தான் பிரசாரம் பண்ணினார். அதன்பிறகு, பொதுத்தேர்தலைச் சந்திச்சப்ப, எங்க வீட்டுக்கு போன் பண்ணினார். போனை எடுத்த என்னிடம், 'உங்க வீட்டுல ராசியான ஒரு வண்டி இருக்காமே. அது, பிரசாரம் செய்ய வேணும்'னு கேட்டார். 'அண்ணே, இம்பாலா, பென்ஸ்னு உங்ககிட்ட இல்லாத வண்டியாண்ணே, அது ஏற்கனவே நீங்க திண்டுக்கல் இடைத்தேர்தல்ல பயன்படுத்திய வண்டிதான்'னு சொன்னேன். ‘இரவு பகலா 25 நாள் இடைவிடாம இந்த வண்டியில பயணிச்சுருக்கேன். சின்னதாகூட மக்கர் பண்ணலை'னு சொல்லி, எங்க கார்ல பயணிச்சு போய்த்தான், முதல்வர் பதவியை ஏத்துக்கிட்டார்.

அதன்பிறகு, இரண்டு மாசம் கழிச்சு, காரை ஊருக்கு அனுப்பிட்டார். அப்போ எங்க டிரைவர்கிட்ட, `இந்த கார் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு. யார் மெக்கானிக்'னு கேட்டதுக்கு, எங்களுக்கென்று தனியா மெக்கானிக் ஷாப் இருப்பதையும், சரியா மெக்கானிசம் செய்யும் என்னைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். உடனே, செவர்லே, டாட்ஜ் கிங்ஸ்வேனு தன்னோட நாலு காரை குமாரபாளையம் அனுப்பி, சர்வீஸ் பண்ணி கொடுக்கச் சொன்னார்.

அவர் இந்த கார்ல பயணிக்கும்போது, மற்ற பாதுகாப்பு வாகனங்கள் இந்த கார் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது. 'இந்த காரும், டிரைவர் கிருஷ்ணராஜும் இருந்தா போதும், வேற எந்த செக்யூரிட்டியும் தேவையில்லை’னு சொல்வார் எம்ஜிஆர்.

முன்சீட்டுல அவர் உட்காருவதற்காக மெத்மெத்னு இருக்க, வெல்வெட்டால சீட் அமைச்சோம். அதுல உட்கார்ந்துக்கிட்டு, முன்னே இருக்கும் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் பாதாம், பிஸ்தாவை எடுத்து சாப்பிட்டுக்கிட்டே பயணிப்பார். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிச்சத்துக்குப் பிறகு, தி.மு.க தோல்வியைத் தழுவியது. அதனால், எங்க வீட்டுக்கு அடிக்கடி வரும் கம்னியூஸ தோழர் கல்யாணசுந்தரம்கிட்ட கலைஞர், 'எஸ்.எஸ்.எம் காரை விட்டு இறங்கினேன், அன்னைக்குப் புடிச்சது சனியன்'னு சொன்னதா, கல்யாணசுந்தரம் எங்கப்பாகிட்ட சொன்னார்.

அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அ.தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிச்ச உடனே, அவரிடம் எம்.ஜி.ஆர், 'உடனே குமாரபாளையம் போய் எஸ்.எஸ்.எம் வீட்டுல தங்கு. அவரோட டாட்ஜ் கிங்ஸ்வே கார்ல பயணம் செய்'னு சொல்லியிருக்கார். 'என்னது பழைய கார்லயா?'னு ஜெயலலிதா தயங்கியிருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர், 'அந்த கார்ல நீ போய் பாரு. பின்னாடி நீ எந்த லெவலுக்குப் போறேன்னு மட்டும் பாரு'னு சொன்னார். அப்புறம், ஜெயலலிதாவுக்கும் இந்த கார் பிடிச்சுப் போச்சு!

எம்ஜிஆர் மனைவி ஜானகியும் இந்த வண்டியைப் பிரசாரத்துக்குக் கேட்டாங்க. ஆனா எங்ககிட்ட சொல்லாமலேயே கார் டாப்பை ஓபன் பண்ணி, மூடிபோட்டு டைட் பண்ணிட்டாங்க. அதுவழியா எழுந்து நின்னு, பிரசாரம் செஞ்சாங்க. ஆனால், 'அப்படி டாப்பைக் கழட்டியதால்தான், நான் அரசியலில் சோபிக்க முடியல'னு அவங்களே பிற்பாடு சொன்னாங்க.

சென்னையில் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வரை இந்த கார்ல பயணிச்சா, எம்.ஜி.ஆர் பயணிச்ச கார்னு தெரிஞ்ச பழைய போலீஸ்காரங்க, எழுந்து நின்னு சல்யூட் அடிப்பாங்க. அப்போ, அவ்வளவு போதையா இருக்கும்.

இப்போ, எங்க வீட்டுல 2 பென்ஸ், 1 இனோவா, 2 பார்ச்சூனர்னு கார்கள் இருக்கு. ஆனா, இந்த காராலதான் எங்களுக்குப் பெருமை. தகரம் மாதிரி இருக்காது. கார் முழுக்க எஃகு மாதிரி, அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கும். இதுக்கு உள்ள கதவுபோல எந்த கார்லயும் இருக்காது. இரண்டு லாக் கார் இது. சாவி போடாம காரை திறக்குறது யாராலயும் முடியாத காரியம்.

"அஞ்சு முதல்வர்கள் பயணிச்ச 
கார் இது!" -  டாட்ஜ்  கிங்ஸ்வே கார் பற்றி சிலாகிக்கும் இளங்கோ!

எனது தந்தைக்குப் பிறகு, இந்த காரை நான் எப்படி நேசிச்சோனோ, அதேபோல என்னோட ஈஷ்வர், புருஷோத்தமன்ங்கிற இரண்டு மகன்களும் வீட்டுப் பெருமையா இதை நினைக்குறாங்க. என்னோட பேரப்பிள்ளைகளும் இந்த கார் மேல காதல் கொள்வதுதான் எனக்கு இன்னும் புத்துணர்ச்சியை தருது!" என்றார்.

அடுத்துப் பேசிய, இவரது இரண்டாவது மகனான புருஷோத்தமன்,

‘‘நான் 1999–ல் இருந்து இந்த காரை ஓட்ட ஆரம்பிச்சேன். குமாரபாளையம் நகராட்சியில 22 வார்டுல நின்னு கவுன்சிலரா ஜெயிச்சு, அதுக்குப் பதவியேற்க இந்த கார்ல போய் இறங்கினேன். வாழ்த்து மழையில் நனைஞ்சுட்டேன்!

இந்த காருக்கு ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கிறதுதான் ரொம்ப கஷ்டமாயிருக்கு. பொள்ளாச்சி, அம்பாசமுத்தியம் வின்டேஜ் கார் வெச்சுருக்கிறவங்ககிட்ட, பெங்களூர், சென்னை, மும்பை மெக்கானிக்குகள்கிட்டனு சொல்லி வச்சு வாங்குவோம். சமயத்துல அமெரிக்காவுல இருந்தும் வரவழைப்போம். ஒரு பார்டஸ் கிடைக்கவே குறைஞ்சது நாலு மாசம் ஆயிரும். ஆனால், இன்ஜின் சம்பந்தப்பட்ட ஸ்பேர் பார்ட்ஸ்கள் கிடைப்பது ரொம்ப கஷ்டம். அதேபோல், பிரேக், டயர் வாங்க ரொம்பவே மெனக்கட வேண்டும். இதுக்குரிய சஸ்பென்ஷன் பார்ட்ஸ் கிடைக்கலன்னா. அம்பாசிடர் மாதிரியான கார்களோட பார்ட்ஸ்களை வாங்கி, அதை இந்த காருக்குத் தகுந்தமாதிரி ஆல்ட்டர் பண்ணிப் பயன்படுத்துவோம். வருஷத்துக்கு ஒருமுறை ஆயில் மாத்துவோம். அதுக்காக இந்த காரை விட்டுட முடியுமா! இது எங்கக் குடும்பப் பாரம்பரியச் சின்னம்!’’ என்றார் நெக்குருகிப் போய்!.