கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

‘‘வேலைக்காரன், தாய்மாமன், குலசாமி… எல்லாமே இவன்தான்!’’ - பத்மினியும் வையாபுரியும்!

ஃபியட் ப்ரீமியர் பத்மினி
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபியட் ப்ரீமியர் பத்மினி

வின்டேஜ் கார்னர்: ஃபியட் ப்ரீமியர் பத்மினி

‘‘வேலைக்காரன், தாய்மாமன், குலசாமி… எல்லாமே இவன்தான்!’’
- பத்மினியும் வையாபுரியும்!

"பலருக்கு கார்ங்கிறது, சொகுசா போகவும், வெரசாப் போகவும்தான். ஆனால், நான் 28 வருஷமா வச்சுருக்கிற இந்த ஃபியட் ப்ரீமியர் பத்மினி கார், எங்க குலசாமி, பெத்த தாய் மாதிரினு சொல்லலாம். எங்கேயும் என்னைக் கைவிட்டதில்லை. எங்கப்பாவோட கடைசி ஆசை, தொழிலைக் காபந்து பண்ணியது, பல உயிர்களைக் காப்பாத்தியது, எங்க குடும்பத்து நல்லது கெட்டதுகள்ல முன்ன நின்னது, பேத்திகளோட பிரசவத்துக்குப் பயன்பட்டது, பொதுச் சேவை, பெண் பார்க்கும் படலம்னு இந்தக் கார் நிகழ்த்திய மகிமையைச் சொல்லிக்கிட்டே போகலாம்!" என்று 'வெள்ளை வெளேர்' என்று நின்றிருக்கும் தனது ஆஸ்தான காரைப் பற்றி அனுபவித்துப் பேசுகிறார் வையாபுரி. ஸாரி, `யோகா' வையாபுரி. அப்படிக் கேட்டால்தான், அவரைச் சட்டென்று அடையாளம் காட்டுகிறார்கள்.

கரூரை ஒட்டியுள்ள ராமாக் கவுண்டனூரைச் சேர்ந்தவர் `யோகா' வையாபுரி. 81 வயதான இவர், ஒரு விவசாயி. தொழிலதிபர். யோகா மாஸ்டர். லயன் மெஜஸ்டிக் கரூர் தலைவர். எல்லாவற்றுக்கும் மேலாக அபரிதமான வாகனப் பிரியர். குறிப்பாக, கார் காதலன். அதுவும், அவரது ஃபியட் காரைப் பற்றிப் பேசினால் போதும்… மனிதர் 80'ஸ்க்கே போய்விடுகிறார்.

``எங்க பூர்வீகத் தொழிலே விவசாயம்தான். எனக்கு 27 வயசு அப்பவே வாகனத்து மேல பிரியம் வந்துட்டு. அதுக்கு முன்னாடி வரை வீட்டுல கட்டை வண்டிதான் இருந்துச்சு. அப்ப லட்சுமி வண்டினு ஒண்ணு அறிமுகமாகி, ஃபேமஸா பேசிக்கிட்டாங்க. உடனே, பாண்டிச்சேரிக்குப் போய் புதுசா ஒண்ணை வாங்கிட்டு வந்து, ஊர்ல ஓட்டினேன். அதை அஞ்சு வருஷம் ஓட்டினேன். அதன்பிறகு, செகன்ட்ஸ்ல லூனா வண்டியை வாங்கி, மூணு வருஷம் ஓட்டிக்கிட்டுத் திரிஞ்சேன். பிறகு, லட்சுமி வண்டியையும், லூனாவையும் இரண்டு பேர்கிட்ட இலவசமா கொடுத்தேன்.

தொடர்ந்து, 380 சிசி புல்லட் ஒண்ணை வாங்கி, ஊருக்குள்ள டுபுடுபுனு டாம்பீகமா போய் வந்தேன். அதுக்கப்புறம், ராஜ்தூத், அம்பாஸடர், லாரிங்கனு வாங்கி தொழில் செஞ்சேன். 1994 கடைசியில எங்கப்பா சங்கர கவுண்டர் தனது கடைசிக் காலத்தை உணர்ந்து, '24 கோயில்களுக்குப் போகணும். அதுக்கு தோதா ஒரு கார் வாங்கு. இது என்னோட கடைசி ஆசை'னு என்கிட்ட சொன்னார்.

உடனே, அப்போ ஃபியட் ப்ரீமியர் பத்மினி டீசல்ல ஓடும் கார் அறிமுகமாகி இருந்துச்சு. அதை கரூர்ல முதலில் வாங்கிய `ஏ டெக்ஸ்' கணேசன் அய்யாவைப் பார்த்து, நானும் புத்தம் புதுசா இந்த காரை வாங்கினேன். கார் விலை ரூ.2,80,000. தவிர, பதிவு எண் TN 47 A 7447 வாங்க ரூ.2000, உடனே வண்டி கிடைக்க ரூ. 20,000னு எக்ஸ்ட்ரா செலவு பண்ணினேன். எங்கப்பா இந்த கார்ல ஆசை தீர 24 கோயில்களுக்குப் போய் வந்தார். அதன்பிறகு, நாலு நாள் கழிச்சு அவர் இறந்து போனார். `எங்கப் பாவோட கடைசி ஆசையை நிறைவேத்துன கார்'னு இது மேல தனிப்பிரியம் வந்துடுச்சு.

ஃபியட்ல ஜம்பமா பயணிக்க ஆரம்பிச் சேன். 1997–ம் வருஷம் தொடர்ச்சியா 48 நாள் லாரி ஸ்ட்ரைக். அதனால், எங்க கம்பெனி நூலை விருதுநகர் மாவட்டத்துல உள்ள வத்திராயிருப்புக்குக் கொண்டுபோய் நெய்து கொண்டு வர முடியாத சூழல். உடனே, டிரைவர் சீட்டை மட்டும் வச்சுட்டு, மத்த சீட்டெல்லாம் எடுத்துட்டு - காருக்குள்ளேயும், டிக்கியிலயும் 300 கிலோ நூலை எடுத்துட்டுப் போய் அங்க கொடுத்துட்டு, ஏற்கனவே கொடுத்த நூலைத் தறி ஓட்டி வைத்திருப்பதை ஏத்திக்கிட்டு எங்க கம்பெனிக்குக் கொண்டு வர ஆரம்பிச்சேன். இப்படியே 48 நாளும் என்னோட கார்ல லோடு அடிச்சேன். இதனால், தொழில்ல எந்த பாதிப்பும் வரலை. என் தொழிலைக் காத்த குலசாமியா இந்த கார் மாறியது.

பேரன், பேத்திகள், வரை இந்தக் கார்தான் தாய்மாமன் மாதிரி முன்ன நின்னது. நான் யோகாவுல ஆர்வம் உடையவன் என்பதால், எனக்கு யோகா சொல்லிக் கொடுத்த விவேகானந்தா யோகா மையத்துல யோகா பயிலும் மாணவர்களுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துல சான்றிதழ் பெற, இந்த கார்லதான் இலவசமா அழைச்சுட்டுப் போய் வருவேன்.

பலரோட உயிரை இந்தக் கார் காப்பாத்தியிருக்குனு சொன்னா நம்புவீங்களா? 20 வருஷத்துக்கு முன்னாடி கரூர், திருச்சி சாலையில் கேரளாவில் இருந்து வந்த கார் மோதி இரண்டு பைக்குகளில் தனித்தனியா வந்த ராஜீ என்ற ஒரே பெயரைக் கொண்ட இருவர் அடிப்பட்டு, ஆபத்தான நிலையில் கிடந்தாங்க. அந்த வழியா போன நான் உடனே என்னோட ப்ரீமியர் பத்மினி கார்லதான் தூக்கிப் போட்டுட்டு, மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தேன். 'இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தாலும், இவங்களைக் காப்பாத்தியிருக்க முடியாது. அவருக்கு நன்றி சொல்லுங்க'னு ராஜீகள்கிட்ட சினிமா ஸ்டைல்ல மருத்துவர்கள் சொன்னாங்க.

அதேபோல், சென்னை ஏர்போர்ட்டுக்கு என் பையனை ஃப்ளைட் ஏத்திவிடப் போனப்ப, ஜெமினி பாலத்துக்கிட்ட போனப்ப என் காரை சைடு வாங்க நினைத்த புல்லட்டில் வந்த இளைஞர் ஒருவரின் டாலர், காரோட சைடு மிரர்ல மாட்டி, கீழே விழுந்து விபத்துக்குள்ளாயிட்டார். உடனே, என் பையனை வாடகை கார்ல ஏத்தி அனுப்பிட்டு, என்னோட கார்ல அந்த இளைஞனைத் தூக்கிட்டுப் போய் ஆஸ்பத்திரியில சேர்த்து காப்பாத்தினேன். ஆனா அதற்குள் அவரோட உறவினர்கள் என்னோட கார் நம்பரை வச்சுக் கண்டுபிடிச்சு, என்னை அடிக்கப் பார்த்தாங்க. ஆனா அதற்குள் கண்விழித்த அந்த இளைஞர், `அய்யாவும், அவரோட காரும் இல்லைன்னா, நான் பொழச்சுருக்க மாட்டேன்'னு சொன்னதும், என்மேல் விழ இருந்த அடிகளை இந்த கார் தடுத்து நிறுத்தியது. பத்துக்கும் மேற்பட்டவர்களை இந்த ப்ரீமியர் பத்மினி காப்பாத்தியிருக்கு!

அதேபோல், எனக்குப் பரிச்சயம் இல்லாதவங்க, தெரிஞ்சவங்கனு 50–க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த கார்ல போய்தான் பெண் பார்த்து, ஜாம் ஜாம்னு திருமணம் பண்ணி வச்சுருக்கேன். அதுக்காக, `கார் டீசலுக்குனுகூட பணம் வாங்கியதில்லை. அதேபோல், தோப்பில் இருந்து தேங்காய் களை ஏத்திவர, வயலுக்கு உரம் ஏத்திப் போகனு எல்லாத்துக்கும் இவன்தான் நேரம் காலம் பார்க்காத வேலைக்காரன்.

‘‘வேலைக்காரன், தாய்மாமன், குலசாமி… எல்லாமே இவன்தான்!’’
- பத்மினியும் வையாபுரியும்!
‘‘வேலைக்காரன், தாய்மாமன், குலசாமி… எல்லாமே இவன்தான்!’’
- பத்மினியும் வையாபுரியும்!

இதைத் தவிர, நான் கடந்த 2009–ல் மாருதி ஆல்ட்டோ வாங்கினேன். என் பையன்கிட்ட பிரெஸ்ஸா, இண்டிகானு இரண்டு கார் இருக்கு. ஆனா, இந்த ஃபியட் காராலதான் எங்க குடும்பத்துக்குப் பெருமை.

தூரமா போறப்ப, இந்த கார் டிக்கியில மடக்கு கட்டில், சேர், சிலிண்டர், கொசுவலை, உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள்னு பலதை அடைச்சுக்கிட்டுப் போவேன். இந்த காரோட பாடி போல வேறெந்த கார் பாடியும் இருக்காது. ஸ்டீல் பாடி. எவ்வளவு வேகத்துல போனாலும், அலுங்காமக் குலுங்காம, ஆடாம, அசையாம சொகுசா போவும். அதேபோல், இன்ஜின் சத்தம் போடாது. என்ன ஒண்ணு டயரை மட்டும் அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை மாத்திடுவேன். இல்லைன்னா, பயணத்துல ஸ்மூத்னெஸ் குறைஞ்சுரும்.

கோடி ரூபாய் மதிப்புள்ள கார்ல போறவங்களும், பெட்ரோல் பங்குகள்ல நான் காரோட நிக்கிறதைப் பார்த்துட்டா, பக்கத்தில வந்து நிறுத்திட்டு, என்னோட காருக்குள்ள ஆச்சர்யத்தோட எட்டிப் பார்ப்பாங்க. அதோடு, 'எத்தனை கிமீ கொடுக்குது, இதற்குரிய ஸ்பேர் கிடைக்குதா, விலைக்குக் கொடுப்பீங்களா?'னு மூணு கேள்வியைக் கேட்பாங்க. அதேபோல், நான் இதை சர்வீஸ் பண்ற பட்டறைகளில் இந்த கார் நிக்கும்போது, பலர் இதை விலைக்குக் கேப்பாங்களாம். அப்போது பட்டறை உரிமையாளர்கள், `எத்தனை லட்சம் கொடுத்தாலும், வையாபுரி அய்யா இந்த காரை விக்கமாட்டார்'னு சொல்லிருவாங்க.

அதேநேரம், சமீபத்தில்தான் ரூ. 80,000 செலவு பண்ணி,. இதுக்கு எஃப்சி எடுத்தேன். ஆனா அதே பட்டறைக்காரர், `பழைய காருக்கு இவ்வளவு செலவு பண்றீங்களே?'னு அலுத்துக்கிட்டார். ஆனா, நான் கௌரவமாவே நினைச்சேன். ஆறு மாதத்துக்கு ஒருமுறை சர்வீஸ் பண்ணுவேன். 5,000 கிலோமீட்டருக்கு ஒருமுறை ஆயில் மாத்திருவேன். கிளட்ச், சென்டர் ஜாயின்ட்டுல உள்ள மவுண்ட் ரப்பர் மாதிரியான ஸ்பேர் கிடைக்கிறது கஷ்டம். ஆனா, பட்டறைக்காரங்க எந்த சாமான் போனாலும், அதிகபட்சம் தமிழகம் முழுக்க பீறாஞ்சு நாலே நாள்ல வாங்கி மாத்திக் கொடுத்துருவாங்க.

இந்த 28 வருஷத்துல ஒரு டிரிப்புலகூட என்னை எங்கேயும் கைவிட்டதில்லை. ஒரு சின்ன கோளாறாகிக்கூட, நட்டாத்துல விட்டதில்லை. பழைய கார்க் கண்காட்சியில என்னோட ப்ரீமியர் பத்மினி காரையும் கலந்துக்க வைக்கணும்னு எனக்கு ஆசை. அதுக்கான முயற்சியில் இருக்கேன். என் ஆயுசு இருக்கிற வரைக்கும் இந்த காரைப் பத்திரமா பாதுகாப்பேன்!" என்றார் நெக்குருகிப் போய்!