Published:Updated:

"வின்டேஜ் வாகனங்கள் ஓட்டுவது ஒரு போதை!"

வின்டேஜ் கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
வின்டேஜ் கார்னர்

வின்டேஜ் கார்னர்: 1967 மாடல் வில்லீஸ் கெய்சர் ஜீப்

"வின்டேஜ் வாகனங்கள் ஓட்டுவது ஒரு போதை!"

வின்டேஜ் கார்னர்: 1967 மாடல் வில்லீஸ் கெய்சர் ஜீப்

Published:Updated:
வின்டேஜ் கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
வின்டேஜ் கார்னர்

"நான் இதுங்களை வெறும் வாகனங்களா பாக்குறதில்லை. ஒவ்வொண்ணும் என்னை ஜிவ்வெனப் பறக்க வைக்கும் மாயக்கம்பளங்கள். காலையில், அந்தியில சுத்துப்பட்டு கிராமங்கள்ல வில்லீஸ் கெய்சர் ஜீப்புல போய் வர்றது, மனசுக்குச் சொல்லொண்ணா சில்லிப்பை வாரி வழங்கும். `பழசுப்பட்ட வாகனங்களை வச்சுக்கிட்டு, இந்தச் சிலுப்பு சிலுப்புறியே. இது வேண்டாத வேலை'னு பலரும் சொல்வாங்க. ஆனா, என்னோட வாழ்க்கையை உயிர்ப்பா வச்சுக்குறதுக்கு, இது எனக்கு வேண்டிய வேலைதான்!" - வின்டேஜ் வாகனங்களோடு `குடித்தனம்' நடத்தும் தனது அன்றாடங்கள் குறித்து சிலாகித்துப் பேசுகிறார், வீரா வரதராஜன்.

நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி ஒன்றியத்தில் உள்ள எம்.மேட்டுப்பட்டியில் இருக்கும் ஊத்துவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரா வரதராஜன். சட்டம் படித்திருந்தாலும், விவசாயத்தைப் பிரதானமான தொழிலாகப் பார்க்கிறார்.

அந்தக் கிராமத்தில் இருக்கும் `வக்கீல் தோட்டத்தில்' உள்ள அவரது வீட்டின் அருகில் அமைக்கப்பட்ட ஷெட்டில், அவரின் ஆஸ்தான 1967–ம் வருட மாடலான வில்லீஸ் கெய்சர் ஜீப், இரவைத் துண்டித்தது மாதிரியான கருப்பு கலரில் நிற்கிறது. அருகிலேயே நிறுத்தப்பட்டிருக்கும் ப்ரீமியர் பத்மினி தங்க நிறத்தில் தகதகக்கிறது. இதைத் தவிர ஸ்கோடா ரேபிட் 2011 மாடல் கார், ஸ்கோடா ஆக்டேவியா, லேன்சர், ஸ்கார்ப்பியோ என கார்கள் மயம். அதைத் தவிர, 2012 ம் வருட மாடலான 500 சிசி புல்லட், வெஸ்பா ஸ்கூட்டர் என்று தினுசு தினுசான வாகனங்கள் நம்மை ஈர்க்கின்றன. தனக்குப் பிடித்த ஜீப்பில் மகள் இனியாவோடு ஒரு `இனிய' ரெய்டு போய் வந்த வீரா வரதராஜனைச் சந்தித்துப் பேசினோம்.

"வின்டேஜ் வாகனங்கள் ஓட்டுவது ஒரு போதை!"

``சின்ன வயசில் இருந்தே, எனக்கு வாகனங்களை ஓட்டுறதுலயும், அதுங்களோட பழகுறதுலயும் அதிக ஆர்வம். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே, அப்பாகிட்ட அடம்பிடிச்சு டிவிஎஸ் 50 வண்டியை பழைய விலையில வாங்கி, அதை இரண்டு டேங்க் உள்ள வண்டியா மாத்தினேன். வண்டியை ஸ்டார்ட் பண்றது பெட்ரோல்லயும், வண்டி ஓடுறது மண்ணெண்ணெய்லயும் என்பது மாதிரி வண்டியை சேஞ்ச் பண்ணி ஓட்டினேன். கல்லூரி படிக்கும்போது, யமஹா ஆர்எக்ஸ் 100, பல்ஸர் வாங்கி, அதை அலாய் வீல்லாம் போட்டு செமையா மாத்தினேன். அதை ஊர்ப் பக்கம் ஓட்டிட்டுப் போகும்போது, எல்லார் கண்களும் என் பைக் மேலேயே இருக்கும். அது, தனி கெத்தாகவும், சுகமாகவும் இருக்கும். படிப்பை முடிச்சுட்டு, அதன்பிறகு விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். சேலம் சட்டக்கல்லூரியில் என்னோடு படிச்ச ரோஜாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவங்க இப்போ சேலம் மாவட்டத்துல அரசு வழக்கறிஞரா இருக்காங்க.

அதன்பிறகு, கார்கள் மீது ஆர்வம் வந்துச்சு. 2006 -ம் ஆண்டு ஃபோர்டு ஐகான் காரை பழைய விலைக்கு வாங்கி, புதுசு மாதிரி மாத்தினேன். அதை ஒரு வருடம் வரை வச்சுருந்தேன். அடுத்து ஸ்கார்ப்பியோ கேரள ரெஜிஸ்ட்ரேஷன் வண்டியை ரூ.1.95 லட்சத்துக்கு வாங்கி, மேற்கொண்டு இரண்டரை லட்சம் செலவு பண்ணி, சும்மா புதுசு கண்ணா புதுசுங்கிற மாதிரி பளபளனு மாத்தினேன். குடும்பத்தோடு உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கு அதுல போயிட்டு வந்தப்ப, அவ்வளவு கெத்தா இருந்துச்சு. அதைத் தொடர்ந்து, 2011 - ம் வருஷம் மிட்சுபிஷி லேன்சரை செகன்ட்ஸ்ல வாங்கி, அதையும் மாத்தி கொஞ்ச காலம் ஓட்டினேன். தொடர்ந்து, 2012 - ம் வருஷம் வெர்னா, ஸ்கோடா ரேபிட் செகன்ட்ஸ்ல வாங்கி, அதையும் மாத்தி ஓட்டினேன். இருந்தாலும், மனசுல நிறைவடையலை. அடுத்தடுத்து, கார்களை வாங்கி ஓட்டணும்ங்கிற எண்ணமே என்னை ஆக்ரமிச்சது. அடுத்து, சிகப்பு கலர் ஸ்கோடா, ரேபிட் காரை வாங்கி, லட்சக்கணக்கில் செலவழிச்சு மாத்தி, ஓட்டினேன்.

"வின்டேஜ் வாகனங்கள் ஓட்டுவது ஒரு போதை!"

அதைத் தொடர்ந்து, 2013 - ம் வருஷம் 1986 ப்ரீமியர் பத்மினி காரை ரூ. 60,000 க்கு வாங்கினேன். மேற்கொண்டு ஒரு லட்சம் வரை செலவு பண்ணி, முழு காரையும் மஞ்சள் கலருக்கு மாத்தினேன். அதுல போய் வர்றப்பயும் உள்ளுக்குள் ஒரு ராஜபோதை ஏற்படும். அதைத் தொடர்ந்துதான், 1967-ம் வருஷ மாடலான இந்த வில்லீஸ் கெய்சர் ஜீப்பை வாங்கினேன். இந்தியா சிமென்ட் கம்பெனியில வாங்கினேன். அவங்க உடைக்குறதுக்கு வச்சுருந்தாங்க. நண்பர் ஒருவர் மூலமா கேள்விப்பட்டு, கோவையில் ரூ.1.40 லட்சம் கொடுத்து அதைப் போய் வாங்கிட்டு வந்தேன். அதைப் பலமுறை மாடிஃபைடு பண்ணி, ஓட்ட ஆரம்பித்தேன்.

ட்ராக்டர் இன்ஜின்தான் இந்த ஜீப்புக்கும் இருக்கும். ஜீப் முழுக்க கன்னங்கரேலென்று கருப்பு கலர்ல இருக்கும். அந்த ஜீப்பின் பதிவு எண், அந்தக் காலத்து ஃபேன்ஸி எழுத்தான MSL ல இருக்கு. அது, இப்போ இருக்கிற TN மாதிரியான நம்பர். அதுவே, தனி போதை. இந்த ஜீப்புல, பக்கத்து ஊர்களுக்கும் டவுனுக்கும் போயிட்டு வருவேன். மனைவி, மகளோடு அப்பப்ப டிரிப் போவேன். மொத்த கண்களும் எங்களையே மொய்க்கும். ஆனால், ஊர்ல பலரும், `தேவையில்லாத வேலை பார்க்குறான். லட்சங்களைப் போட்டு இந்த காயலாங்கடை வாகனங்களை வாங்கி இப்படி ஓட்டிக்கிட்டுத் திரியிறான். அதுக்கு, இன்னும் நாலு ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டு, வெள்ளாமை பார்க்கலாமே'னு என் காது படவே பேசுவாங்க. இதோட மதிப்பு தெரியாதவங்ககிட்ட என்ன பேசுறதுனு அமைதியா சிரிச்சுக்கிட்டே போயிருவேன்.

1967 வில்லீஸ் முதல் புல்லட் வரை வின்டேஜ் வாகனங்களுடனேயே புழங்குகிறார் நாமக்கல்லைச் சேர்ந்த வீரா வரதராஜன்.
1967 வில்லீஸ் முதல் புல்லட் வரை வின்டேஜ் வாகனங்களுடனேயே புழங்குகிறார் நாமக்கல்லைச் சேர்ந்த வீரா வரதராஜன்.

ஆனால், இந்த ஜீப்போட அருமை தெரிஞ்சவங்க, 'இதை விலைக்குத் தர்றீங்களா'னு ஆர்வமா கேட்பாங்க. 1 கோடி மதிப்புள்ள ஜாகுவார் கார்ல வர்றவங்ககூட, நான் டீசல் போட நிறுத்தியிருக்கும் இந்த ஜீப் முன்னாடி நின்னு போட்டோ எடுத்துக்குவாங்க. ஏதோ சாதிச்ச மாதிரி உள்ளுக்குள் ஜிவ்வுன்னு ஒரு உணர்வு வரும்.

இதைத் தவிர, 2012 - ம் வருஷ மாடல் புல்லட், வெஸ்பா ஸ்கூட்டர் ஒண்ணு புதுசா வாங்கியிருக்கிறேன். இந்த வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காக, ரூ. 3 லட்சம் செலவு பண்ணி ஷெட் அமைச்சுருக்கேன். அடுத்து, முட்டை வடிவுல இருக்கும் பழைய அம்பாஸடர் கார் கிடைக்குமானு தேடிக்கிட்டு இருக்கிறேன். அந்த காரையும் வாங்கி ஓட்டிப் பார்த்துடணும்னு ஓர் ஆசை. இதுவரை, ரூ.25 லட்சம் வரை இந்த வாகனங்களுக்காகச் செலவு பண்ணியிருப்பேன். அந்தப் பணத்தை பேங்க்ல போட்டிருந்தா, அது வெறும் பணமாதான் இருந்திருக்கும். வேறெந்த உணர்வையும் எனக்குத் தந்திருக்காது. ஆனால், இப்படி மனசுக்குப் புடிச்ச வாகனங்களை வாங்கி அதுல பயணிக்குறது, அவ்வளவு ஆனந்தத்தைத் தருது. இதெல்லாம் அனுபவிக்கணும்; ஆராயக்கூடாதுனு சொல்லிட்டு, என் பாதையில நான் போய்க்கிட்டே இருக்கிறேன். நாலு பேரு நாலுவிதமாதான் பேசுவாங்க. ஆனா, நமக்குப் புடிச்ச வாழ்க்கையை நாமதான் வாழணும். இருக்கிற ஒரு வாழ்க்கையை இப்படி என் குடும்பம்கூடவும், இந்த வாகனங்கள் கூடவும் வாழுறதுல தனி சுகம்!" என்றுகூறி, கெக்கேபிக்கேவென சிரிக்கிறார்.

அந்தச் சிரிப்பில், நினைத்த வாழ்க்கையை வாழ்வதற்கான நிறைவு கலந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism