
மதுரையைக் கலக்கிய கலர்ஃபுல் வின்டேஜ் கண்காட்சி!

‘‘இன்று வின்டேஜ் கார் அண்ட் பைக் கண்காட்சி; ப்ளீஸ் கலர்ஃபுல்லா கவர் பண்ணுங்க’’ என்று எடிட்டரிடம் இருந்து மெயில். ‘நீங்க அவுட்’ என்பதுபோல் பெப்பே ஸ்மைலி அனுப்பிவிட்டேன்.
காரணம், மெயில் வரும் முன்னரே நான் புகைப்பட நிபுணருடன் அங்குதான் கலர் கலர் கார்/பைக்குகளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தேன். மதுரை அவுட்போஸ்ட் அருகில் உள்ள பாண்டியன் ஹோட்டல் ஏரியாவே வண்ணமயமாகக் காட்சியளித்தது. எல்லா கார்/பைக்குகளுக்கும் கிட்டத்தட்ட எலிசபெத் ராணியின் வயது இருக்கும். ஆனால், எலிசபெத் ஓல்சென் மாதிரி (`Avengers’ ஹீரோயின்) எல்லாமே யூத்தாக இருந்தன.
1930–ல் இருந்து இப்போது வரை உள்ள ஏகப்பட்ட கார்/பைக்ஸையும் எக்ஸ்போவில் வைத்திருந்தார்கள். 1974 ஃபோக்ஸ்வாகன், 1937 மாடல் டாட்ஜ், 1968 மாடல் ஃ பியட் 1100 R என்று எல்லாமே இருந்தன. இவற்றையெல்லாம் ரசிப்பது என் போன்ற ஜென்நிலைப் பார்ட்டிகளுக்குத்தான் அந்தப் பரவசம் புரியும்.
மஞ்சள் நிறத்தில் ரொம்பச் செல்லமாக ஒரு கார் இருந்தது. ‘சட்டென’ எனக்கு ‘டோரா’ நயன்தாரா கார்தான் ஞாபகம் வந்தது. ஆம், இதை ஏதாவது த்ரில்லர்/ஹாரர் படங்களுக்கு இந்த காரை ரெக்கமண்ட் செய்வேன். டைரக்டர்ஸ்.. நோட் ப்ளீஸ்!
அடுத்ததாக இருந்தது ஓல்டு வெர்ஷன் மட்டும் இல்லை; இப்போதும் கல்யாண ஊர்வலத்தில் பொண்ணும் மாப்பிள்ளையும் அழைச்சுட்டு ஊர்வலமாக ஒரு கார்ல கூட்டிட்டுப் போவாங்களே.. அந்த மாதிரி ஒரு மாடல். எம்ஜிஆர்தான் நினைவுக்கு வந்தார்.
சிவாஜிக்கும் ஃப்ளாஷ்பேக் இருந்தது. ‘ஆண்டவன் படைச்சான்; என்கிட்டக் கொடுத்தான்’ என்று சிவாஜி ஒரு ஜீப்பில் வருவாரே… அதே மாடல் ஜீப்தான் என்றார்கள்.
இப்படி ஒவ்வொரு கார் மாடல்ளையும் பார்த்துக் கொண்டே வரும்போது, கூட்டமும் கூடிக் கொண்டே இருந்தது. அங்கு பெரியவர்கள் மட்டுமில்லை; என் (!) போன்ற குழந்தைகளும் வந்திருந்தார்கள். ‘இந்த கார் வாங்கலாம்ப்பா’ என்று அதில் ‘பாபநாசம்’ சிறுமி மாதிரி ஒரு குழந்தை அடம்பிடிக்க… ‘கமல்’ மாதிரியே சமாளித்தார் ஒரு தந்தை.
அப்படியே பைக் ஏரியாவுக்கு ஆக்ஸிலரேட்டர் முறுக்கினேன். இந்தக் கால இளைஞர்களுக்கு, புது பைக்ஸ் மட்டுமில்லை; பழைய பைக்ஸ் என்றாலும் ஒரு போதைதான் போல! ‘பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதுபோல்’ பார்த்தார்கள் சில இளசுகள்.
ஏதோ ஒரு 1960 பழைய மாடல் பைக் ஒன்றைப் பார்த்து, ஓர் இளைஞர் விலை விசாரித்தார். ‘‘விற்பனைக்கு இல்லை தம்பி. ஆனா 4 லட்சம் இதோட மதிப்பு’’ என்று ஒரு அப்போதைய சவரன் ரேட்டைச் சொல்லும் நகைக்கடை ஓனர் போல் விலை சொன்னார் அந்த உரிமையாளர். ‘‘ஓ… ஓல்டு இஸ் கோல்டு’ங்கிறது இதுதானா’’ என்று நகர்ந்து போனேன்.
திடீரென ஒரு ‘டுர் டுர்’ சத்தம். வின்டேஜ் சத்தம் அதன் எக்ஸாஸ்ட்டிலேயே தெரிந்தது. இளைஞர்களுக்கு உற்சாகம் பிடிகொள்ளவில்லை. விசாரித்தால்… ‘விஐபி’ படத்தில் தனுஷ் பயன்படுத்துவாரே.. அதே மொபெட் என்றார்கள். ‘என் பைக் லிட்டருக்கு 60 கிமீ கொடுக்கும்; பஞ்சரானா தள்ளிக்கிட்டே போயிடுவேன்’ என்று கெத்தாக வசனம் பேசுவாரே! நிச்சயம் பில்ட்அப் கொடுக்கலாம்.
1948 மாடல் பிஎஸ்ஏ 500சிசி, 1969 மாடல் லாம்ப்ரெட்டா எல்டி, மோஃபா சைக்கிள், யெஸ்டி, யமஹா என்று எல்லா பைக்குகளையும் தரிசித்து விட்டேன்.
காந்தி ஸ்டைலில் வந்திருந்த ஒரு வின்டேஜ் மனிதரைப் பிடித்தேன்.
‘‘என் பெயர் மோகன்தாஸ். நான் திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி ஆட்டோமொபைல்ஸ் என்ற ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறேன். (ஓ.. அதான் காந்தி மேக்அப்பா!) இது 1940 மாடல் வண்டி. இந்த வண்டியின் ஓனர் பெயரும் காந்தி. (அட!) இந்த வண்டியைச் சரிபார்த்துக் கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன், அதனை ரெடி பண்ணி இந்த கண்காட்சிக்கு எடுத்து வந்திருக்கிறோம். இந்த கார் மோரிஸ் 1952 மாடல். இதைத்தான் கம்ப்ளீட்டா பிரிச்சு இப்போ ரெடி பண்ணி வச்சிருக்கோம். எவ்ளோ ஒரிஜினாலிட்டிக்குக் கொண்டு வர முடியுமோ, அப்படிக் கொண்டு வந்துடுவேன்.
பழைய காலத்து வண்டிகளில் கம்பிகளை வைத்து வெல்டிங் பண்ண மாட்டாங்க. ஈயத்தை வைத்துக் காய்ச்சி அதைப் பயன்படுத்தி வெல்டிங் வைப்போம். அந்தக் காலத்தில் இதை 10,000 ரூபாய்க்கு வாங்கி இருப்பார்கள். இப்போ 10 லட்சம் கொடுக்க ரெடியா இருந்தாலும், இது மாதிரி வண்டிகள் கிடைக்காது! இதைப் பிரிச்சு ஒர்க் பண்றப்போ செம ஜாலியா இருக்கும்.என்ன, ஸ்பேர்ஸ் கிடைக்கிறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்!’’ என்றார் ‘காந்தி’ மோகன்தாஸ்.





காந்தி போனவுடன் ராகுல் என்பவர், ஒரு ஸ்போக் வீல் வின்டேஜ் காருடன் வந்தார். நல்லவேளை – ராகுல் காந்தி இல்லை.
‘‘என்னோட பேரு ராகுல் சிதம்பரம். (!)இந்த கார் மாடல் ஆஸ்ட்ரின். இந்த காரை காரைக்குளம் ஊரில் இருந்து எடுத்து வந்திருக்கிறோம். இது 1933 மாடல். இது ஒரு ராஜஸ்தான் மஹாராஜாவின் கார். அவருடைய 15–வது காராம் இது. அதனால்தான் இந்த வண்டிக்கு RJ 15–ன்னு சொல்வாங்க. நார்த் இந்தியாவில்தான் பார்ட்ஸ் தேட வேண்டும். அதனால் என்ன, ஒரு மஹாராஜா வெச்சிருந்த கார் இப்போ எங்ககிட்ட… இதைவிடப் பெருமை என்ன வேணும்!’’ என்ற ராகுலிடம், ‘‘இந்த RJ 15–ன் மைலேஜ் என்ன’’ என்றேன் விளையாட்டாக.
15 கிமீ கிடைப்பதாகச் சொன்னார். (மாருதி, ஹூண்டாய் உரிமையாளர்கள் கவனிக்கவும்!)
"நாங்க மதுரை பிள்ளையார்பட்டில இருந்து வந்துருக்கோம். இது பிளைமவுத் 1956 மாடல். இந்த காரில் ஏறி[ பயணம் செய்யாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இது கவியரசர் கண்ணதாசன் அவர்கள் பயன்படுத்திய கார். அவர் ஞாபகமா இதை வெச்சிருக்கோம். 35 வருஷமா இந்த கார் ஓடலையாம். நான் வாங்கி ரெடி பண்ணிட்டேன். ஆர்டிஓ அப்ரூவல் இருக்கு இந்த காருக்கு! எங்ககிட்ட இந்த கார் மட்டுமில்ல; ஒரு 15 மாடல் கார் இருக்கு!’’ என்றார் ஒருவர்.
‘'என்னோட பேரு அப்ஸர்பே. நான் ஒரு மெக்கானிக். பெங்களூர்ல இருந்து வந்துருக்கேன். இந்த பைக் மாடல் 1983. இதில் இருக்கும் எல்லா பார்ட்ஸ்களும் ஒரிஜினல் பார்ட்ஸ்தான். இந்த வண்டி என்கிட்ட வரும்போது, ஸ்க்ராப் கண்டிஷன்லதான் இருந்துச்சு. ஃபுல்லா ரீஸ்டோர்தான் பண்ணோம். இந்த வண்டிய ரெடி பண்றதுக்குக் கிட்டத்தட்ட 2 லட்சம் மேல ஆயிடுச்சு!" என்றார் அப்ஸர்பே.
‘‘ஹாய், என்னுடைய பேரு ராம். நாங்க திருச்சில இருந்து வந்துருக்கோம். வெங்கடேஷ் துரை என்பவர்தான் இந்த கார்/பைக்கோட ஓனர்!’’ என்று ஒரு காரைக் காட்டினார்.
‘‘இது டாட்ஜ் (dodge) மாடல் 1937. இது எங்க கைக்கு வந்து மூணு வருஷம் ஆயிருக்கு. இந்த வண்டியலாம் அவரோட கொழந்த மாதிரி பாத்துப்பாங்க. இது எங்ககிட்ட வரும்போது அன்கண்டிஷன்ல இருந்துச்சு. இதோட ஒவ்வொரு உதிரி பாகமும் எந்தெந்த நாடுகள்ல கிடைக்கும்னு ஆட்கள் வச்சு, அதுக்கான மெக்கானிக்கையும் தேடிக் கண்டுபிடிச்சு இப்போ ரன்னிங் கண்டிஷன்ல கொண்டு வந்துருக்காங்க. இது 30 – 45 கிமீ வரைக்கும் ஸ்பீடு போகும்!’’ என்றார் ராம்.
வின்டேஜ் ஷோ முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், எனது செல்போன் கேலரியில் அந்த கார்/பைக்குகளையே ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்ததை யாராவது பார்த்தால், எனக்கு என்னமோ ஆகிவிட்டது என்றுதான் நினைப்பார்கள்!
ஆம், 3–வது பாரா கடைசி வரியைப் படியுங்கள்!
