கார்ஸ்
Published:Updated:

போக்ஸ்வாகன் டைகூனின் உண்மையான நிறை - குறை!

 ஃபோக்ஸ்வாகன் டைகூன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபோக்ஸ்வாகன் டைகூன்

ஃபோக்ஸ்வாகன் டைகூன்: லாங் டெர்ம் ரிவ்யூ

போக்ஸ்வாகன் டைகூனின் உண்மையான நிறை - குறை!

‘Thunk’ – இப்படித்தான் கேட்கும் ஃபோக்ஸ்வாகன் கார்களின் கதவை மூடினால்! இந்த ஒலிதான் ஒரு காரின் பில்டு குவாலிட்டியைச் சொல்லும் விஷயம். டைகூன் காரைச் சில வாரங்களாக ஓட்ட வாய்ப்புக் கிடைத்ததில், எனக்கு இந்த ‘தங்க்’ சத்தம் அடிக்கடி பழகிப் போய் விட்டது.

ஃபோக்ஸ்வாகன் டைகூன் காரின் ரியல் ப்ளஸ் – மைனஸ்கள் என்னனு பார்க்கலாம்!

நான் ஓட்டியது ஃபோக்ஸ்வாகன் டைகூன் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடல். ஃபோக்ஸ்வாகன் என்றாலே பராமரிப்புதான் பர்ஸ் பழுக்கும். டைகூன் வாடிக்கையாளர்களும் இதில் விதிவிலக்கில்லை என்றுதான் நினைக்கிறேன். விசாரித்தவரை அப்படித்தான் தெரிகிறது.

எனக்குக் கிடைத்த இந்த மாடல் 15,000 கிமீ ஓடியிருந்தது. இருந்தாலும், ஓட்டுதலில் இந்த டைகூன், ஆஹாதான்! இந்த மேனுவல் கியர்பாக்ஸைச் சும்மா சொல்லக்கூடாது; வெண்ணெய் மாதிரி வழுக்கிக் கொண்டு வேலை பார்க்கிறது. க்ளட்ச்சும் செம லைட் வெயிட். GT என்றால், Grant Tourismo. பெர்ஃபாமன்ஸ் கார்களுக்குத்தான் இப்படிப் பெயர் வைப்பார்கள். இந்த ஜிடி–யும் பெர்ஃபாமன்ஸில் வெளுத்துக் கட்டுகிறது. கடலூர் வரை ஒரு டிரைவ் போனேன். 150 குதிரைகளும் ஒன்றாக ஓடுவதுபோல் ஹைவேஸில் ஓடுகிறது. லோ எண்டில் சிட்டிக்குள் ஓட்டவும் ஜாலி!

ஃபோக்ஸ்வாகன் என்பது ப்ரீமியம் கார். ஆனால், இதில் பல வசதிகளை நான் மிஸ் செய்தேன். முக்கியமாக, கீலெஸ் என்ட்ரி இல்லை. சாவியைப் போட்டுத் திருகுவது அவுட்டேட்டட் ஃபோக்ஸ்வாகன்! அதேபோல் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டனாச்சும் கொடுத்திருக்கலாம்.

இந்த வெயிலுக்கு கூல்டு சீட்கள், வின்ட்டருக்கு சன் ரூஃப் எல்லாமே மிஸ்ஸிங்தான்! மற்றபடி ஒயர்லெஸ் சார்ஜிங், ஆப்பிள் கார் ப்ளே வசதிகள் இருந்தன. அதைப் பயன்படுத்திப் பார்த்தேன். இத்தனை கிமீ–க்குப் பிறகும் வேலைப்பாட்டில் தொய்வு தெரியவில்லை. காரின் வெளிப்பக்கம் மாதிரி உள்பக்கமும் தரம் அருமை. Faux லெதர் மற்றும் டெக்ஸ்டைல் சீட்கள் நல்ல குவாலிட்டி. சிவப்பு நிற இன்டீரியர் ஸ்போர்ட்டியாக இருக்கிறது. இரட்டைத் தையல் வேலைப்பாடு கொண்ட ஆக்ஸென்ட்டும் இதைத் தூக்கலாகக் காட்டுகிறது.

கதவுகளில் பொருத்தப்பட்டுள்ள பவர் விண்டோ பட்டன்கள் ஓகேதான். ஆனால், டிரைவர் சைடு விண்டோ மட்டும் கொஞ்சம் மக்கர் பண்ணுவதுபோல் இருந்தது. மற்றபடி இந்த 5 சீட்டர் எஸ்யூவியில் இதன் பூட் ஸ்பேஸ் – நல்ல தாராளமாகவே இருந்தது.

நீங்கள் டைகூன் வாங்குவதாக இருந்தால், 1.5 போகலாம். காரணம், இதன் சஸ்பென்ஷன் 1.0–யை விட கொஞ்சம் Absorbent ஆகவும் Planted ஆகவும் இருக்கிறது. மோசமான சாலைகளை நன்றாகவே சமாளிக்கிறது டைகூன். கார் நிற்க வேண்டும் என்றால், பிரேக்கிங் ஃபீட்பேக் ஓவராகக் கேட்கிறது. ஓங்கி மிதித்தால் படாரென நிற்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் இன்னும் கொஞ்சம் அதிகரித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால், ஹைவேஸில் இதன் ஸ்டெபிலிட்டியைச் சும்மா சொல்லக் கூடாது!

மைலேஜுக்கு வருகிறேன். ஃபோக்ஸ்வாகன் சொன்னது 17.8 கிமீ. இதுதான் அராய் அளவு. ஆனால், நமக்கு டைகூன் கொடுத்தது – 11.08 கிமீ. இதை `ஆட்டோ கட்’ போட்டு பெட்ரோல் நிரப்பி சோதனை செய்து பார்த்தேன்.

இதன் ஆன்ரோடு விலை சுமார் 19 லட்சம் வருகிறது. இத்தனை லட்சத்துக்கு இந்த மைலேஜ் ஓகே என்றால், ஒரு கிண்ணென்ற எஸ்யூவியை உங்கள் வீட்டு கராஜில் நிறுத்திக் கொள்ளலாம். மேலும் டைகூன் பற்றிய உங்களின் கமென்ட்டுகளும் இருந்தால் சொல்லுங்கள்!

போக்ஸ்வாகன் டைகூனின் உண்மையான நிறை - குறை!