Published:Updated:

டைகூன்... எஸ்யூவி பிரியர்களுக்குப் பிடிக்குமா?

ஃபோக்ஸ்வாகன் டைகூன்
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் டைகூன்

ஃபர்ஸ்ட் லுக்: ஃபோக்ஸ்வாகன் டைகூன்

டைகூன்... எஸ்யூவி பிரியர்களுக்குப் பிடிக்குமா?

ஃபர்ஸ்ட் லுக்: ஃபோக்ஸ்வாகன் டைகூன்

Published:Updated:
ஃபோக்ஸ்வாகன் டைகூன்
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் டைகூன்

ஸ்கோடாவின் குஷாக் தயாரிக்கப்பட்ட அதே MQB A0 IN ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டு மிட் சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில் குஷாக்குக்கே போட்டியாக வந்து நிற்கிறது ஃபோக்ஸ்வாகன் டைகூன். டைகூனில் 95 சதவிகிதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 115 bhp பவர் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் கொண்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் என்பதுதான் டைகூனின் அடிப்படை வேரியன்ட். ஆனால் நாம் பார்க்கப்போவது அதன் அதிகபட்ச பெர்ஃபாமன்ஸ் கொண்ட GT வேரியன்டைத்தான். டைகூனின் GT -யை ஓட்ட உதய்ப்பூர்க்கு அன்போடு அழைத்திருந்தது ஃபோக்ஸ்வாகன். ராஜஸ்தான் மாநிலம் ஆரவல்லி மலைத்தொடரில் டைகூனை ஆசைதீர ஓட்டினோம்.

தோற்றம்

மிட் சைஸ் எஸ்யூவிகளில் பெரியது என்று டைகூனைச் சொல்ல முடியாது. க்ரெட்டாவைவிட உயரம் குறைவாகவும், கொஞ்சம் குறுகலாகவும்தான் இருக்கிறது டைகூன். எஸ்யூவி என்று சொல்லுக்கேற்ற பிரம்மாண்டம் டைகூனிடம் இல்லைதான், எனினும் பார்ப்பவர்களைத் தன் தோற்றத்தால் நிச்சயம் வசீகரிக்கிறது. பாடி லைன் மற்றும் டிசைனைப் பார்த்தவுடனே சொல்லிவிடலாம் இது ஃபோக்ஸ்வாகன் தயாரிப்புதான் என்று. பெரிய ஃபோக்ஸ்வாகன் லோகோவைத் தாங்கி முன் பக்க முகப்பு விளக்குகளுடன் சேர்த்தே டிசைன் செய்யப்பட்டிருக்கும் மூன்று ஸ்லாட்களுடன் கூடிய க்ரோம் கிரில் மற்றும் கொஞ்சம் உயர்த்தி வைக்கப்பட்டது போல் இருக்கும் பானெட் ஆகியவை டிகுவானை நினைவுப்படுத்துகின்றன. இதில் அதிகமான க்ரோம் வேலைப்பாடுகளை டைகூனில் சேர்த்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.

டைகூன்
டைகூன்

2,651 மிமீ நீளமான வீல்பேஸைக் கொண்டிருக்கிறது டைகூன். பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது குஷாக்கைத்தான் பார்க்கிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒரே கதவுகள், கண்ணாடிகள், ரூஃப் ரெயில்கள், ஆன்ட்டெனா மற்றும் பாடி கிளாடிங் ஆகியவை அனைத்துமே குஷாக் மற்றும் டைகூன் இரண்டிலுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. டைகூன் GT ஆட்டோமேட்டிகில் இருக்கும் 17 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், மேனுவலில் இருந்து ஆட்டோமேட்டிக் வேரியன்டைத் தனித்துக் காட்டுகிறது. GT மேனுவல் வேரியன்ட்டில் இருப்பது 16 இன்ச் சிங்கிள் டோன் வீல்கள்தான்.

ஃபோக்ஸ்வாகனின் பின் பக்கமும் நீட் அண்ட் க்ளீன். நீளமான Infinity LED டெயில் லைட் டிசைன் அருமை.

இன் டீரியர் ப்ரீமியமாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. மேனுவல் என்றால், அனலாக் க்ளஸ்ட்டர்; ஆட்டோமேட்டிக் என்றால் டிஜிட்டல் க்ளஸ்ட்டர்.
இன் டீரியர் ப்ரீமியமாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. மேனுவல் என்றால், அனலாக் க்ளஸ்ட்டர்; ஆட்டோமேட்டிக் என்றால் டிஜிட்டல் க்ளஸ்ட்டர்.

உள்ளலங்காரம்

மாடர்னான ஒரு ஃபோக்ஸ்வாகன் கேபினுக்குள் நுழைவதுபோல் உணர வைக்கிறது டைகூனின் கேபின். சாஃப்ட் பிளாஸ்டிக்குகளுக்கு ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லி, ப்ரீமியமாக அதன் டேஷ்போர்டையும் கேபினையும் வடிவமைத்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். GT ஆட்டோமேட்டிக் வெர்ஷனுடன் வரும் 8.0 டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கலர்ஃபுல். மேனுவல் வேரியன்டில் சிம்பிளான அனலாக் டயல்களுடன், அடிப்படை மோனோக்ரோம் க்ளஸ்ட்டரையே கொடுத்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் ஸ்போர்ட்டி. தொடுதிரையைக் கொண்ட க்ளைமேட் கன்ட்ரோல் பேனல் ப்ரீமியம்.

சீட்டிங் பொசிஷனை நமக்கேற்ற வகையில் சொகுசாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையில் இருக்கிறது. வெளியிலிருந்து போதிய வெளிச்சம் கிடைக்கும் வகையிலேயே ஜன்னல்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பின் பக்கம் பேக்ரெஸ்ட்டும் அட்ஜஸ்டபிள் ஹெட் ரெஸ்ட்டும் நல்ல வசதி. முன்பே கூறியது போல் டைகூன் குறுகலான கார் என்பதால், மூன்று பேர் அமர வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் அமர வேண்டியிருக்கும். இரண்டு பேர் தாராளமாக உட்காரலாம். மற்றபடி பொருட்களை வைத்துக் கொள்ள ஏராளமான இடவசதியும் வழங்கியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.

5 பேர் தாராளமாகப் பயணிக்க முடியாது. 4 பேருக்கு வேண்டுமானால் சொகுசு கேரன்ட்டி
5 பேர் தாராளமாகப் பயணிக்க முடியாது. 4 பேருக்கு வேண்டுமானால் சொகுசு கேரன்ட்டி

பிற வசதிகள் என்னென்ன?

டைகூனின் அனைத்து வேரியன்ட்களிலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ஸ்டாண்டர்டாகவே வருகிறது. அதனுடன், EBD உடன் கூடிய ABS, டூயல் ஏர்பேக்ஸ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் ஆகியவையும் கட்டாய வசதிகள். 10 இன்ச் டச்ஸ்க்ரீன் உடன் வந்திருக்கக் கூடிய வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே புதுவரவு. முன்பே இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளுடனே வருவது ப்ளஸ். GT மேனுவல் வேரியன்ட்டில் வயர்லெஸ் சார்ஜிங் பேட், கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், 16 இன்ச் அலாய் மற்றும் ரிவர்ஸ் கேமரா ஆகியவை இருக்கின்றன. GT ஆட்டோமேட்டிக் வேரியன்டில் இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆட்டோ LED முகப்புவிளக்குகள், 17 இன்ச் அலாய், புஷ் பட்டன் ஸ்டார்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சன்ரூஃப் மற்றும் சைடு மற்றும் கர்ட்டெய்ன் ஏர்பேக் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1.5லி பெட்ரோல் இன்ஜின் 150bhp பவரைத் தருகிறது.
1.5லி பெட்ரோல் இன்ஜின் 150bhp பவரைத் தருகிறது.

ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது டைகூன்?

EA211 EVO இன்ஜின் வகையைச் சேர்ந்த GT-யின் 1,498 சிசி டர்போ பெட்ரோல் இன்ஜின், 5000-6000 rpm-ல் 150 bhp பவரையும், 1600 - 3,500 rpm-ல் அதிகபட்சமாக 25.0 Kgm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. ஸ்டார்ட் செய்ததில் இருந்தே எனர்ஜியாக இருக்கிறது டைகூனின் இன்ஜின். குறைவான ஆர்பிஎம்-லும் அதிகபட்ச டார்க்கைப் பெறுவதால் எந்த கியரில் ஓட்டுகிறோம் என்கிற கவலையில்லாமல், சிட்டிக்குள் சுற்றித் திரியலாம். கொஞ்சம் அதிகமாக ஆக்ஸிலரேஷன் கொடுத்தால் போதும்; சீராக வேகத்தை அழகாகக் கூட்டுகிறது டைகூன். ஒரேயொரு குறையென்றால், 3500 rpm-ஐத் தாண்டும்போது அதிகமான சத்தத்தை எழுப்புகிறது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது இது தொந்தரவாக இருக்கலாம்.

specification sheet
specification sheet

மைலேஜ் மிகவும் முக்கியம் என்பவர்களுக்கு, நான்கு சிலிண்டர்களில் இரண்டு சிலிண்டர்களை ஆஃப் செய்யும் வசதியும் டைகூனில் இருக்கிறது. இரண்டு சிலிண்டர்களுடன் வாகனத்தை இயக்கினாலும், அந்த மாற்றம் தெரியாத அளவிற்கு ஸ்மூத்தாக இயங்குகிறது இன்ஜின். DQ200 கியர்பாக்ஸின் அப்டேட்டான வெர்ஷனாக இருக்கிறது GT ஆட்டோமேட்டிக்கின் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ட்ரான்ஸ்மிஷன். பழைய போலோ GT TSI மற்றும் முந்தைய தலைமுறை ஆக்டேவியா 1.8 TSI-ல் இருந்தது போலவே ஸ்மூத்தான ட்ரான்ஸ்மிஷனை உணர முடிகிறது. ஸ்போர்ட் மோடில் டிரான்ஸ்மிஷன் இன்னும் கிரிஸ்ப் ஆகவும், ரென்பான்ஸ் இன்னும் நன்றாகவும் இருக்கிறது. அதற்கேற்ற வகையில் ட்ரான்ஸ்மிஷனும் ஈடுகொடுக்கிறது. மேனுவல் பார்ட்டிகளுக்கு பேடில் ஷிப்ட்டரும் உண்டு.

330 லிட்டர் பூட் ஸ்பேஸ். சீட்களை 60:40 விகிதத்திலும் மடித்துக் கொள்ளலாம்.
330 லிட்டர் பூட் ஸ்பேஸ். சீட்களை 60:40 விகிதத்திலும் மடித்துக் கொள்ளலாம்.

MQ281 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வருகிறது GT-யின் மேனுவல் வேரியன்ட். இதிலும் கியர்பாக்ஸை இயக்குவது ஸ்மூத்தாக இருக்கிறது. டிரைவிங் விரும்பிகளுக்குச் சிறப்பான எக்ஸ்பீரியன்ஸை இந்த GT மேனுவல் வேரியன்ட் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. DSG ஆட்டோமேட்டிக்கில் க்விக்காக இருக்கும் இன்ஜின், மேனுவல் வேரியன்ட்டில் இன்னும் எனர்ஜிட்டிக்காக இருக்கிறது. 6,500 rpm வரை இழுத்துச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆட்டோமேட்டிக்கில் 17 இன்ச் அலாய்; மேனுவலில் 16 இன்ச் அலாய் என பல வேறுபாடுகள் இருந்தாலும், ஓட்டுதல் தரத்தில் எந்தக் வேறுபாடும் தெரியவில்லை. நெடுஞ்சாலைகளிலும் நிலைத்தன்மையோடு இருக்கிறது இந்த டைகூன்.

போலோ ப்ளாட்ஃபார்மை விட MQB A0 IN ப்ளாட்பார்ம் கொஞ்சம் ஸ்டிஃப்பாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. அதை இந்த டைகூன் உறுதிப்படுத்துகிறது. கார்னரில் டைகூனை வளைக்கும்போதும் சமநிலையுடனே இருக்கிறது டைகூன். சிட்டிக்குள் ஓட்டும்போதும் எளிதாகவும், லேசாகவும் சிறப்பாகவும் இருக்கிறது டைகூனின் ஸ்டீயரிங். மொத்தத்தில் சிறப்பான ஓட்டுதல் தரத்திற்குக் கேரன்ட்டி கொடுக்கிறது இந்த டைகூன்.

டைகூன்
டைகூன்

வாங்கலாமா?

பெரிய தோற்றம் கொண்ட எஸ்யூவி வேண்டும் அல்லது தாராளமாக ஐந்து பேருக்கான ஒரு வாகனம் வேண்டும் என்றால் இந்த டைகூன் உங்களுக்கான சிறந்த சாய்ஸாக இருக்காது. குறுகலாக இருக்கும் இந்த டைகூனில், 4 பேர் அமர்ந்து சொகுசாகப் பயணிக்கலாம். விலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சில விலைக்குறைப்பு நடவடிக்கைகளையும் செய்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.

1.5லி இன்ஜினும் சரி, அதன் சிறிய வெர்ஷனான 1.0TSI-யை எடுத்துக் கொண்டாலும் சரி, சிறப்பாகவே இருக்கிறது டைகூனின் இன்ஜின். இதன் 1.0 வெர்ஷன் 10.5 - 14 லட்சம் விலை எக்ஸ்-ஷோரூம் விலையிலும், 1.5 MT வெர்ஷன் 15.5 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டாப் வேரியன்ட்டான DSG வெர்ஷன் 18 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டுவதற்குச் சிறந்த மிட் சைஸ் எஸ்யூவியாக இந்த டைகூன் இருந்தாலும், இதனை மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் இது எந்த இடத்தில் ஃபிட்டாகிறது எனக் கூற முடியும்.