Published:Updated:

இது ரயிலா… மினி பஸ்ஸா…? தண்டவாளம், ரோடு இரண்டிலும் போகும் DMV

DMV
News
DMV

இது ரயிலா… பஸ்ஸா…? தண்டவாளம், ரோடு இரண்டிலும் போகும் DMV | ரோட்டில் போகும் ரயில், அல்லது தண்டவாளத்தில் போகும் பஸ் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

கார்னா ரோட்ல போகணும்; படகுனா தண்ணியில போகணும்; விமானம்னா வானத்துல போகணும்… இந்த அறிவியலையெல்லாம் மீறிக் கொண்டிருக்கிறது ஆட்டோமொபைல் துறை. ஆம், தண்ணீரில் பயணிக்கும் கார்… வானத்தில் பறக்கும் கார்… என்று எல்லாவற்றிலும் வாகனங்களைக் கண்டுபிடித்து விட்டார்கள். லாஜிஸ்டிக்ஸில் தண்டவாளம் மட்டும்தான் மீதம் இருந்தது. இப்போது அதற்கும் ஒரு படி மேலே போய், ரோட்டில் போகும் ரயிலையும் கண்டுபிடித்து விட்டார்கள். அல்லது தண்டவாளத்தில் போகும் பஸ் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

வழக்கம்போல் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்ற ஜப்பான் தொழில்நுட்ப விஞ்ஞானிகள்தான் இப்படி ஒரு வாகனத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். தண்டவாளத்திலும் சாலையிலும் இயங்கக் கூடிய வாகனம் ஒன்றை, ஜப்பான் நாட்டின் டோஷிமா மாகாணத்தில் உள்ள கையோ எனும் சிறிய நகரில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு DMV (Dual Mode Vehicle) எனப் பெயர்.

ஒரு மினி பஸ் போலத் தோற்றமளிக்கும் இது தண்டவாளத்தில் செல்லும்போது, மெட்ரோ ரயில் மாதிரி இருக்கிறது. எஃகுச் சக்கரங்கள் மூலம் க்ரீச்சிட்டு வந்து நிற்கும் அந்த மெட்ரோ ரயில், திடீரெனத் தண்டவாளத்தில் இருந்து சாலைக்கு இறங்கும்போது, ஒரு பஸ்ஸாக மாறி அசத்தியது. சட்டெனப் பார்ப்பதற்கு அது, சுதந்திர காலத்துக்கு முன்பு பொதுப் போக்குவரத்துகளில் பயன்படுத்தப்பட்ட மினி ட்ராம் போலவே இருக்கிறது. சாலைக்கு மாறியதும் சடாரென சாதாரண ரப்பர் டயர்கள் வெளியே நீட்டிக் கொண்டு வருவதுபோல் டிசைன் செய்திருக்கிறார்கள். சாலைப் பயணத்தில் பேருந்தாக மாறிய அது, மறுபடியும் சாலையிலிருந்து ரயில் பாதைக்கு மாறும்போது, முன்பக்க டயர்கள் தண்டவாளத்திலிருந்து தூக்கப்பட்டு, பின் சக்கரங்கள் கீழே நிற்கின்றன.

DMV
DMV

இப்படி மாறுவதெல்லாம் ஓகே… ஆனால், இதற்கு நேரம் காலம்தானே முக்கியம். அதிலும் எந்தக் குறையில்லாமல் இதை டிசைன் செய்திருக்கிறது DMV டிசைன் குழு. இந்த மாற்றத்திற்கு வெறும் 15 விநாடிகள்தான் ஆகுமாம்.

இந்த DMV–யில் சுமார் 21 பயணிகள் பயணிக்கலாம். சாலைகளில்தான் இதன் வேகம் தெரிகிறது. ரயில் பாதையில் மணிக்கு சுமார் 60 கிமீ வேகத்தில் மெதுவாகப் பயணிக்கும் இந்த DMV, நெடுஞ்சாலைக்கு வந்து விட்டால், 100 கிமீ வேகத்தில் பறக்குமாம். டீசல் மூலம் இயக்கப்படும் இந்தச் சிறிய அளவிலான வாகனத்தை – நீலம், சிவப்பு, பச்சை என மூன்று வண்ணங்களில் விட்டிருக்கிறார்கள். பசிபிக் பெருங்கடலின் அலைகளைக் குறிப்பது நீலம். சிவப்பு வண்ணம் சூரியனின் கதிர்களைக் குறிக்கிறது. கையோவில் ஃபெமிலியரான சுராஜ் சிட்ரஸ் பழங்களைக் குறிப்பதற்காகப் பச்சைக் கலராம்.

வயதான மற்றும் சுருங்கி வரும் மக்கள் தொகை கொண்ட கையோ போன்ற சிறிய நகரங்களுக்குத்தான் இந்த வாகனம் நன்றாக எடுபடும் என்கிறார்கள்.. அங்கு உள்ளூர்ப் போக்குவரத்து நிறுவனங்கள் லாபம் ஈட்டப் போராடுவதைத் தடுக்கும் பொருட்டு, இதைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
DMV
DMV

கையோ நகரம் மட்டுமல்லாமல், தெற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு தீவின் கடற்கரை நகரங்கள் போன்றவற்றிலும் இந்த DMV ஓடுகிறது. பயணிகளுக்குக் கவர்ச்சிகரமான கடலோரக் காட்சிகளை இது வழங்குவதாகவும், கையோவைப் பார்வையிட வரும் சுற்றுலாவாசிகளையும், ஜப்பானியவாசிகளையும் இது ஈர்க்கும் என்றும் ஆசா கோஸ்ட் ரயில்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷிஜிகி மியுரா தெரிவித்துள்ளார்.

இனிமேல், ‘தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட ரயில்’ என்றெல்லாம் செய்திகள் வராது ஜப்பானில்!