
ஸ்கூப் நியூஸ்: சிட்ரன் C3

ப்ரீமியம் SUV C5 ஏர் க்ராஸ் மூலம் இந்தியாவில் கால் பதித்த பிரெஞ்சு பிராண்டு சிட்ரன், இந்தியாவுக்காக இந்தியாவில் தயாரிக்கும் முதல் காரின் டிசைன் அம்சங்கள் வெளியாகி உள்ளன.
வித்தியாசமான டிசைன் அம்சங்கள் கொண்ட சிட்ரன் கார்களைப்போலவே, இணையத்தில் லீக் ஆன இந்தப் படங்களும் வித்தியாசமானவை. வரவிருக்கும் கார்களை கம்பெனிகள் டெஸ்ட்டிங் செய்யும்போது கிடைக்கும் ஸ்பை ஷாட்களுக்குப் பதிலாக, இம்முறை ஸ்கேல் மாடல் மூலமாக சிட்ரன் C3 - ன் ஒட்டு மொத்த வெளிப்புறத் தோற்றமும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
C3 ஸ்கேல் மாதிரியில் பார்க்க எப்படி இருக்கு?
பிரெஞ்சு கார்களுக்கே உண்டான கலாட்டா தோற்றத்தில் இருந்தாலும், வழக்கமான காம்பேக்ட் SUV-களில் இருந்து ஸ்டைலாகத் தனித்து நிற்கும் புதிய C3. முன்பக்கம் C5 போலவே இரட்டை அடுக்கு ஹெட்லேம்ப்களால் சூழப்பட்ட அகலமான கிரில்லைப் பெறுகிறது சிட்ரன் C3. குறிப்பாக கிரில் மற்றும் லோகோவைச் சுற்றி விளக்குகள் இணையும் இடத்தில் நுட்பமாகச் செய்யப்பட்டிருக்கும் க்ரோம் வேலைப்பாடு நைஸ்.
தட்டையான பானெட், கூரையுடன் ரூஃப் ரெயில்கள் கொடுக்கப்பட்டிருப்பது, புதிய C3-க்கு ஒரு எஸ்யூவி லுக்கைக் கொடுக்கிறது. கருப்பு பில்லர்களுக்கு மேலே உள்ள ஆரஞ்சு கூரை, முன் பம்பரில் உள்ள ஆரஞ்சு கிளாடிங் என டூயல் டோன் பினிஷ் அருமை. டைமண்ட் கட் அலாய் வீல்கள் நச்!

டெயில் கேட்டில் நடுவே வியாபித்திருக்கும் அம்பு போன்ற சிட்ரன் லோகோ கண்களைக் கவர்கிறது. செவ்வக வடிவில் உள்ள டெயில் லேம்ப் மற்றும் பின்புறம் தொடரும் டூயல் டோன் பினிஷ், C5 ஏர்க்ராஸ் எஸ்யூவி போன்றே உள்ளது. மொத்தத்தில், C5 ஏர்க்ராஸை ஹூண்டாய் வென்யூவின் பாடி சைஸுக்குக் கொண்டுவந்ததுபோல உள்ளது புதிய C3.
சிட்ரன் C3-ல் வேறு என்ன எதிர்பார்க்கலாம்?
ஸ்கேல் மாடல் மாதிரி என்பதாலும், இன்டீரியரின் தனிப் புகைப்படங்கள் வெளியாகவில்லை என்பதாலும், இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் மற்றும் மற்ற உட்புறச் சிறப்பம்சங்களைக் கணிக்க முடியவில்லை.
C 21 என்கிற குறியீட்டுப் பெயருடன், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சாலைகளில் சோதனை செய்யப்படும் இந்த காம்பேக்ட் எஸ்யூவிதான் இந்தியா மற்றும் வளரும் சந்தைகளுக்காக சிட்ரன் உருவாக்கி வரும் C Cubed ப்ரோக்ராமில் இருந்து வெளிவரும் முதல் காராக இருக்கும். சிட்ரனின் வெளிநாட்டு மாடல்கள் அசெம்பிள் செய்யப்படும் காமன் மாடுலர் பிளாட்பாரம் (CMF) -ல் தான் C3-ம் அசெம்பிள் செய்யப்படும்.
சிட்ரன், தனது C5 ஏர்க்ராஸை CKD முறையில் இறக்குமதி செய்து அசெம்பிள் செய்து விற்பனை செய்து வரும் நிலையில், C3 முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கிறது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், மேனுவல் மற்றும் DCT ஆட்டோமேட்டிக் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும். ஆனால், டீசல் வேரியன்ட் வராது. 1.2 லி பெட்ரோல் இன்ஜின் மற்றும் நான்கு மீட்டர் நீளம் என்பதால், வரிச் சலுகைகளைப் பெறும் C3 - கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, நிஸான் மேக்னைட் போன்றவற்றுடன் போட்டி போடும்.