
டிப்ஸ்: ஹெவி வெஹிக்கிள்ஸ் - 2
சிரஞ்சீவி ராஜமோகன்
(அசோக் லேலாண்ட் சர்வீஸ் இன்ஜீனியர், கும்பகோணம்)
லாரி/ட்ரக்குகளை பழைய மார்க்கெட்டில் வாங்கும்போது, இன்ஜின் சமாச்சாரங்களைப் பற்றிப் போன மாதம் பார்த்தோம். இன்ஜின் மட்டுமே வண்டி ஆகுமா? இதை மட்டும் நன்கு பார்த்து வாங்கினால் போதுமா என்றால், 200% இல்லை.
லாரியை வெளிப்பக்கம் நன்கு நோட் செய்ய வேண்டும். அவுட்லுக்கில் வண்டி பளபளவென இருந்தாலும், பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அது என்ன?
முன் பக்க பம்ப்பர்…
முன் பக்கம் தடுப்பு… அதாவது பம்ப்பர் பார்க்க பளிச்சென்று இருக்கிறது. இதெல்லாம் ஓகேதான்!. அப்படியே ஒரு அட்டையைக் கீழே போட்டு, கால் வெளியே தெரியும்படி தலையை அண்டர்பாடியில் உள்ளே விட்டு, ஒரு மெக்கானிக்காகி விடுங்கள். வாகனங்களுக்கு அண்டர்பாடிதான் மிக முக்கியம். பம்ப்பரின் பின்புறம், அரித்துப் போய் துருப்பிடித்து, கட்டுக் கம்பி போட்டு கட்டி வெல்டிங் செய்து அனைத்து வேலையும் வெளியே தெரியாதவாறு பார்த்திருந்தால், நீங்கள் ஏமாறவில்லை. வண்டி எடுத்த இரண்டே நாளில் பம்பர் கழன்று, சாலையில் விழுந்த சம்பவம் எல்லாம் உள்ளது. கவனம் முக்கியம்!
முன் பக்க விண்ட்ஷீல்டு…
காருக்கும் சரி; லாரிக்கும் சரி – முகப்புக் கண்ணாடி… அதாவது விண்ட்ஷீல்டுதான் வண்டியின் அழகே! எனவே விற்பனையாளர்கள் இதில் அதிக கவனம் செலுத்தி மேன்மைப்படுத்துவார்கள். கண்ணாடியில் உள்ள பிராண்ட் ஸ்டிக்கர் தேயாமல், உறையாமல் மங்கிப் போகாமல் இருந்தால், அந்தக் கண்ணாடி புதியது. இல்லையென்றால், புதியது என்று அவர்கள் சொல்வது பொய்! மொபைலில் டார்ச் அடித்து நன்றாகக் கவனியுங்கள். வெளிப்பக்கம் பிடிக்கச் சொல்லி உள்பக்கம் பார்த்தால் தெரிந்துவிடும். சிறு சிறு கீறல்கள் இருந்தால் நோட் செய்து கொள்ளுங்கள். கண்ணாடி பார்க்க பளிச்சென்று இருந்தாலும், கண்ணாடி அமர்ந்திருக்கும் ரப்பர் பீடிங்கைச் சோதனை இடுங்கள். பீடிங்கைக் கையால் நெம்பினால் வெளியே வரும். உட்பக்கம் அரித்துப் போய் பேஸ்ட் போட்டு வெல்டிங் செய்து இருந்தால், வண்டி சற்றே பழையது என்றெண்ணிக் கொள்ள வேண்டும். விலையை அடித்துப் பேசலாம் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
அப்படியே பக்கவாட்டு மிரர்களையும் கவனியுங்கள். இதைப் பொருத்தவரை பெரிதாக யோசிக்க ஒன்றும் இல்லை. நாலா பக்கமும் கையால் திருப்பிப் பாருங்கள்; கையோடு வராமல் இருந்தால் ஓகே!
அடுத்து அப்படியே இன்டீரியரில் ஏறுங்கள்.
முன் பக்க ஃப்ளோரிங்!
லாரியில் ஏறும்போது, நாம் கால் வைக்கும் இடம்; அதில் ஒரு ஃப்ளோர் மேட் இருக்கும். அதைத் தூக்கிவிட்டுப் பார்த்தால் வண்டி ஃப்ளோர் பேனலின் வண்டவாளத்தைத் தெரிந்து கொள்ளலாம். அதில் எந்தவிதத் துரு அரித்தலோ, டிங்க்கரிங் வேலைகளோ இல்லாமல் இருந்தால் செம! அப்படித் தென்பட்டால், இருந்தால் விலை குறைத்துப் பேசுங்கள்.
க்ளட்ச், பிரேக், ஆக்ஸிலரேட்டர் மூன்று பெடல்களையும் முறையே நிறைய முறை அழுத்திவிட்டுப் பாருங்கள். எந்தவித சப்தமும், அழுத்தமும் ‘கடார் முடார்’ என்று இடித்தலும் இருக்கக் கூடாது. இருந்தால் பேனலில் ஏதோ வேலை நடந்துள்ளது என்று அர்த்தம். நான் சொல்வது கமர்ஷியல் லாரிக்கு மட்டும் பொருந்தும். மேல் பம்பரை உள்ளே படுத்து செக் செய்ததுபோல், பேனல் பக்கவாட்டிலும் படுத்துச் சோதனை செய்யலாம் .
DOOR WINDERS
நான்கு பக்கமும் கண்ணாடியை ஏற்றி இறக்கிப் பாருங்கள். ஸ்மூத்தாக கண்ணாடி உள்ளே சென்று வெளியே வர வேண்டும். எலெக்ட்ரானிக் டோர் என்றாலும் இது பொருந்தும். விட்டு விட்டு இறங்கினாலோ, பாதியில் நின்றாலோ கண்டிப்பாக உள்ளே உள்ள Winding Mechanism வீணாகியுள்ளது. இது பின்பக்க டோர்களுக்கும் பொருந்தும். டோர் லாக் நாப் அனைத்தும் ஒரு முறை லாக் செய்து பார்த்துக் கொள்வது சாலச்சிறந்தது. மேலும், கண்ணாடியைப் பாதி ஏற்றி விட்டுக் கையால் ஆட்டிப் பாருங்கள். ‘லொட லொட’வென சத்தம் வரக்கூடாது. கண்ணாடியில் கீறல்கள் உங்கள் பார்வைக்கே தெரியும் என்பதால் பிரச்சனை இல்லை.
அண்டர் சேஸி…
வண்டியின் முழு கீழ்ப்புறமும் தரையில் வைத்துப் பார்ப்பது சற்றுச் சிரமான காரியம். லாரியை ராம்ப், ஜாக்கி மூலம் ஏற்றி விட்டுப் பார்த்தால் மிகவும் நல்லது. எந்த இடத்திலும் ஆயில் கசிவு இருக்கக் கூடாது. இது சில நேரங்களில் பெரிய பிரச்னையாகவும் இருக்கலாம். சில நேரங்களில் ஆயில் கசிவு செய்யக்கூடிய ஒன்றாகவே இருக்கும். ஸ்ப்ரிங் பட்டைகளையும் கவனியுங்கள். எதிலும் வெட்டிங் துரு இருத்தல் கூடாது.
டயர்கள்…
பெரிய வாகனங்களைத் தாங்குவதே இந்த டயர்கள்தான். டயரைப் பார்த்தே நாம் சொல்லி விடலாம்; இது வேலைக்கு ஆகும் ஆகாது என்று. டயரை வைத்துக் கூடுமானவரை வண்டி விலையை உடைத்துப் பேசலாம். டயர் நல்ல பிராண்டட் நிறுவனமா என்று பார்த்துக் கொள்ளுங்கள். தெரியாதவர்கள், வீல் அலைன்மென்ட் – வீல் பேலன்ஸிங் போனவற்றைக் கடைசியாகப் பார்த்த தேதி, கிலோமீட்டர், நாள் போன்றவற்றை செக் செய்யுங்கள். இது வண்டியின் டிரைவர் சன் வைஸரில் ஒட்டப்பட்டிருக்கும். வீல் கப் மாட்டி இருந்தால், அதனைக் கழட்டி விட்டு வீல் டிஸ்க் துரு இல்லாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். கூடவே பிரேக் பேடு, பிரேக் லைனிங் போன்றவற்றையும் பார்த்துக் கொள்ளலாம்.
(தொடரும்)