
ஆசிரியர் பக்கம்

நமது நாட்காட்டியில் ஒரு புதிய தினம் சேர்ந்திருக்கிறது. `சேர்ந்திருக்கிறது', என்று சொல்வதைவிட `கவனம் ஈர்த்திருக்கிறது’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஆம்! நாம் குறிப்பிடுவது செப்டம்பர் 9. அன்றைய தினம் உலக EV தினம் என்ற புதிய அடையாளத்தைப் பெற்றிருக்கிறது. இந்த ஆண்டு பெரும்பாலான கார் மற்றும் பைக் உற்பத்தியாளர்கள் தங்கள் குறுகிய கால EV திட்டம் என்ன... தொலைநோக்கு EV திட்டம் என்ன என்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.
மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை, ஏற்கெனவே நம் நாட்டில் டாடா நெக்ஸான் EV, டாடா டிகோர் EV என இரண்டு மின்சார வாகனங்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து கொண்டிருக்கிறது. டியாகோ EV-யும் அறிமுகமாகிறது. அடுத்தடுத்து பத்து மின்சார வாகனங்களைக் களம் இறக்குவதற்கான திட்டங்களையும் டாடா மோட்டார்ஸ் அறிவித்துவிட்டது.
இன்னொருபுறம், மஹிந்திராவின் XUV400 EV அறிமுகமாகியிருக்கிறது. வெகுசில காலமாகவே `மஹிந்திரா எலெக்ட்ரிக்' செயல்பட்டு வந்தாலும், மின்சார வாகனங்கள் சந்தையில் தங்களுக்கு ஓர் இடம் உண்டு என்பதை உறுதி செய்யும் வகையில், ஐந்து மின்சார வாகனங்களை அடுத்து வரும் ஆண்டுகளில் விற்பனை செய்யவிருப்பதாக மஹிந்திரா அறிவித்திருக்கிறது. பெட்ரோல்/டீசல் கொண்ட கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றாமல், BORN ELECTRIC, அதாவது மின்சார வாகனமாகவே சில கார்களை உருவாக்கப் போகிறோம் என்ற மிகப் பெரிய அறிவிப்பை மஹிந்திரா கொடுத்திருக்கிறது. இந்த மின்சார வாகனங்களின் விற்பனை இந்தியாவைத் தாண்டியும் இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது அது!
இது தவிர ஹூண்டாய் கோனா மற்றும் MG ZS EV ஆகிய மின்சார கார்கள் ஏற்கனவே விற்பனையில் இருக்கின்றன.
`2030-ம் ஆண்டை அடையும்போது நம் நாட்டில் உற்பத்தியாகும் வாகனங்களில் 30 சதவிகிதம் மின்சாரக் கார்களாக இருக்க வேண்டும்' என்ற நம் அரசின் இலக்கினை நோக்கி நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது. மாருதி சுஸூகி போன்ற ஒரு சில கம்பெனிகள், இந்த இலக்கை 2030-ம் ஆண்டுக்குள் அடைவது கடினம் என்று கருதினாலும், மின்சார வாகனங்கள் உற்பத்தி குறித்தும், அதற்கு மிகப் பெரிய திட்டங்கள் உண்டு என்பதையும் அதன் தலைவர் சமீபத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நான்கு சக்கர மின்சார வாகனங்களைவிட இரு சக்கர மின்சார வாகனங்களின் வருகை வேகமானதாக இருக்கும் என்பதற்கு ஹீரோ எலெக்ட்ரிக், ஓலா, ஏத்தர், ஆம்பியர், ஒக்கினாவா என்று பல கம்பெனிகள் முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம், கமர்ஷியல் வாகனங்கள் துறையும் மின்சாரத்துக்கு மாறத் துவங்கிவிட்டது.
இந்தப் புதிய துவக்கம், வாடிக்கையாளர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நல்ல மாற்றமாக அமையட்டும்.
- ஆசிரியர்