
FAME II மானியம்: எலெக்ட்ரிக் வாகனங்கள்
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்க, மத்திய அரசு FAME - (Faster Adoption & Manufacturing of Electric vehicles) எனும் திட்டம் மூலம் 2015 முதல் மானியம் வழங்கி வருகிறது. இதன் இரண்டாவது கட்டம் FAME II ஏப்ரல் 2019-ல் தொடங்கியபோது, 10,000 கோடி ருபாய் மதிப்பில் 10 லட்சம் டூவீலர்கள், 5 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள், 55,000 கார்கள் மற்றும் 7,090 எலெக்ட்ரிக் பஸ்களுக்கு மானியம் அளிக்க பட்ஜெட் போடப்பட்டது. திட்டம் நிறைவடைய ஒரு வருடமே மீதியிருக்கும் நிலையில், இருசக்கர வாகனங்களின் விற்பனை - டார்கெட்டில் இருந்து மிகவும் தங்கியுள்ளது.
இந்நிலையில் திட்டமிட்டபடி 10 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்களை எட்ட, சில நாட்களுக்கு முன்பு திட்டத்தில் ஒரு புதிய திருத்தத்தை அரசு கொண்டுவந்திருக்கிறது. இதன்படி, மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான FAME II மானியம் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கிலோவாட் ஒன்றுக்கு ரூ.15,000 ஆக உயர்த்தியது. இதன் விளைவாக, மின்சார இரு சக்கர வாகனங்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஏத்தர் எனெர்ஜியின் 450X மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஐக்யூப் ஆகியவற்றின் உடனடி விலைக் குறைப்புகளைத் தொடர்ந்து, மற்ற எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன நிறுவனங்களும் திருத்தப்பட்ட விலையை அறிவித்துள்ளன.


ஒகினாவா ஸ்கூட்டர்ஸ் அதன் மிக விலை உயர்ந்த ஸ்கூட்டரான iPraise+ ஸ்கூட்டருக்கு ரூ.17,892 விலை குறைந்ததன் மூலம், அதை இப்போது ரூ.99,708-க்கு வாங்கலாம். அதேபோல, மிட் ரேஞ்ச் மாடலான Praise Pro ரூ.7,947 வீழ்ச்சியைக் கண்டு, இப்போது ரூ.76,848-க்கு விற்கப்படுகிறது. பட்ஜெட் மாடலான ஒகினாவா ரிட்ஜ் ப்ளஸ்ஸுக்கான விலையும் ரூ. 7,209 குறைந்து, ரூ. 61,791 ஆக மாறியுள்ளது.
ரிவோல்ட் மோட்டார்ஸ் தனது ஃப்ளாக்ஷிப் RV400 எலெக்ட்ரிக் பைக்கின் விலையை, சுமார் 28,000 ரூபாய் குறைப்பதாக அறிவித்திருக்கிறது. இதன் விலை இப்போது ரூ. 90,799.
முன்பு ரூ.74,990 விலையில் இருந்த ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மேக்னஸ், இப்போது ரூ.65,990-க்கு இறங்கி இருக்கிறது. அதேபோல, இந்த நிறுவனத்தின் Zeal எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பழைய விலை ரூ.68,990 உடன் ஒப்பிடும்போது, ரூ.9,000 குறைந்து, இப்போது ரூ.59,990-க்குக் கிடைக்கும்.
ஜிதேந்திர EV டெக் நிறுவனம், தனது JMT 1000 HS எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை ரூ.12,082 குறைத்து, ரூ.61,995-க்கு இப்போது விற்பனை செய்கிறது.

மொத்தத்தில் FAME-ll கொள்கையில் சரியான நேரத்தில் கொண்டுவந்த மாற்றங்களினால், தேசிய டூவீலர் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் தடம் நிச்சயமாக அதிகரிக்கும் என்பதே இத்துறை தலைவர்களின் கருத்தாக உள்ளது.
