
பர்ஸ்ட் லுக்: யமஹா ஃபஸினோ

யமஹா FZ சீரிஸின் புதிய மாடலான FZ-X பைக்கின் லாஞ்ச்சுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விர்ச்சுவல் விழாவிலேயே ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஃபஸினோவின் புதிய மாடலையும் அறிமுகப்படுத்தியது யமஹா. 125 சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டின் மைலேஜ் ஸ்கூட்டரில் ஒன்றான ஃபஸினோவில் என்னென்ன அப்கிரேடு செய்யப்பட்டிருக்கிறது? பார்க்கலாம்.
புதிய வசதிகள்:
ஃபஸினோவில் புதிய சிறப்பம்சமாக Smart Motor Generator சேர்க்கப்பட்டுள்ளது. அடிப்படையில் ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் போலவே செயல்படும் இதன் வேலை, தேவையான நேரங்களில் ‘பவர் அசிஸ்ட்’ செய்வதுதான். மேடான பகுதிகளில் ஸ்கூட்டரை ஓட்டும்போதோ, அல்லது ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தவுடனோ ஸ்கூட்டருக்குத் தேவையான எக்ஸ்ட்ரா பவரை அளிப்பதுதான் இந்தப் புதிய வசதியின் நோக்கம். பவர் அஸிஸ்ட் வசதி செயல்படுவதை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். நாம் த்ராட்டிலை முறுக்குவதை நிறுத்திவிட்டாலோ அல்லது குறிப்பிட்ட ஆர்பிஎம்-மை எட்டினாலோ பவர் அசிஸ்ட் செயல்பாடு நின்று விடும். எதுவும் செய்யவில்லை என்றாலும் மூன்று நொடிகளுக்கு மட்டுமே பவர் அசிஸ்ட் வசதி செயல்பாட்டில் இருக்கும்.
இதனை ஹைபிரிட் என்று சொல்வது எந்த வகையில் பொருத்தமாக இருக்கும் எனத் தெரியவில்லை. ஸ்கூட்டருக்குத் தேவையான எக்ஸ்ட்ரா பவரை மூன்று நொடிகளுக்கு அளிப்பதைத் தவிர இதில் வேறெந்த வசதியும் இல்லை. எனவே, இதனை முழுமையாக ஹைபிரிட் எனக் கூற முடியாது; மைல்டு-ஹைபிரிட் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.
இன்ஜினில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. அதே 125 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின்தான். பவர் மற்றும் டார்க்கிலும் மாற்றங்கள் இல்லை, 6,500 ஆர்பிஎம்-ல் 8.2 bhp பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 10.3 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. பீக் டார்க் மட்டும் 0.6 Nm வரை அதிகரித்திருக்கிறது புதிய அப்கிரேடட் ஃபஸினோவில்.
புதிய ஃபஸினோவில் வேறு வசதிகள் என யமஹா கூறுவது, சைலன்ட் ஸ்டார்ட் மற்றும் ஆட்டோ ஆன்/ஆஃப் வசதிதான். SMG-யினால் சத்தம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆட்டோ ஆன்/ஆஃப் வசதியினால் இன்னும் கொஞ்சம் மைலேஜ் கிடைக்கும் எனக் கூறுகிறது யமஹா. ஃபஸினோவின் முந்தைய மாடல் சிட்டிக்குள் 57 கிமீ, ஹைவேஸில் 64 கிமீ மைலேஜ் கொடுத்த நிலையில் (அராய்), புதிய ஃபஸினோ எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் எனச் சோதனை செய்தால்தான் தெரியும். ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் பர்ஃபாமன்ஸையும் சோதனை செய்து பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்கள்:
டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட புதிய ஃபஸினோ முன்பக்கம் எல்இடி ஹெட்லைட்டின் நடுவில் சின்னக் கட்டம் போல எல்இடி DRL ஒன்றைப் பெறுகிறது. பின்பக்கம் ஹாலோஜன் பல்புகளுக்குப் பதிலாக எல்இடி விளக்குகளைப் பெறுகின்றன. புளூடூத் வசதியுடன் கூடிய, முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட டேஷ்போர்டு இருக்கிறது புதிய ஃபஸினோவில். யமஹாவின் Motorcycle Connect X செயலியைப் பயன்படுத்தி போன் அழைப்புகளைப் பெறலாம், ஸ்கூட்டரை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் மற்றும் எங்கெல்லாம் ஸ்கூட்டரை நிறுத்தினோம் என்ற பார்க்கிங் ஹிஸ்டரியையும் தெரிந்து கொள்ளலாம்.
சேஸி மற்றும் பாடிவொர்க்கில் எந்த மாற்றமும் இல்லை. டிஸ்க் வேரியன்ட், மூன்று புதிய கலர்களில் - விவிட் ரெட் ஸ்பெஷல், மேட் ப்ளாக் ஸ்பெஷல் மற்றும் கூல் ப்ளூ மெட்டாலிக் எனக் கிடைக்கிறது ஃபஸினோ. டிரம் பிரேக் மாடல் மேற்கூறிய மூன்று கலர்களோடு, மஞ்சள் காக்டெயில் கலரிலும் கிடைக்கும்.
புதிய ஃபஸினோவை யமஹா அறிமுகப் படுத்தினாலும், இது எப்போது விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கவில்லை. கூடிய விரைவில் விற்பனைக்கு வரும் என்று மட்டும் தெரிவித்திருக்கிறது. யமஹாவுக்கு ஒரு ரிக்வொஸ்ட்...அப்படியே அந்த XSR பத்தியும் சொல்லிப்புட்டீங்கன்னா...!
