
ரேஸ்: ஃபார்முலா 1
2021 ஃபார்முலா ஒன் சீஸனின் ஒவ்வொரு ரேஸும் உச்சகட்டப் பரபரப்பை ரசிகர்களுக்கு விருந்தாகக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. கடந்த மாதம் நடந்த அஜெர்பெய்ஜான் கிராண்ட் ப்ரீ, பிரெஞ்சு கிராண்ட் ப்ரீ இரண்டிலும் ரெட்புல் வீரர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். சாம்பியன்ஷிப் யுத்தத்தில் லூயிஸ் ஹாமில்ட்டனை விட 12 புள்ளிகள் அதிகம் பெற்று தன் பிடியை இன்னும் இறுக்கியிருக்கிறார் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்.
அஜெர்பெய்ஜான் கிராண்ட் ப்ரீ
திருப்பங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் கொஞ்சம் கூடப் பஞ்சமே இல்லாமல் அரங்கேறியது அஜெர்பெய்ஜான் கிராண்ட் ப்ரீ. மொனாக்கோவில் போல் பொசிஷன் கிடைத்தும், காரில் ஏற்பட்ட கோளாறால் போட்டியிலிருந்து விலகியிருந்தார் ஃபெராரி வீரர் சார்ல் லெக்லர்க். இருந்தாலும் அஜெர்பெய்ஜானில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு மீண்டும் போல் பொசிஷனைத் தனதாக்கினார். மொனாக்கோவைப்போல் அஜெர்பெய்ஜானும் ஸ்ட்ரீட் சர்கியூட் என்பதாலும், அங்கு ரேஸுக்கு நடுவே ஓவர்டேக் செய்வது சிரமம் என்பதாலும், ஸ்டார்டிங் கிரிட்டிலேயே நல்ல இடம் பிடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு வீரருக்குமே முக்கியமானதாக இருந்தது. அதனால், பெரும்பாலான டிரைவர்கள் சாஃப்ட் டயரையே பயன்படுத்தினார்கள். அதனால் ரேஸின் தொடக்கத்திலேயே பல வீரர்கள் பிட் எடுக்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டது.


ஜார்ஜ் ரஸல் முதல் லேப் முடிவிலேயே பிட்டுக்குள் நுழைந்தார். இரண்டாவது லேப்பின் 15-வது திருப்பத்தில் லெக்லர்க்கை முந்தினார் நடப்பு சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டன். ஏழாவது லேப்பில் வெர்ஸ்டப்பனும் அவரை முந்த, மூன்றாவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டார் லெக்லர்க். ஆறாவதாக ரேஸைத் தொடங்கிய செர்ஜியோ பெரஸ் தொடக்கத்திலிருந்தே சிறப்பாகச் செயல்பட்டார். அடுத்தடுத்து பியர் கேஸ்லி, கார்லோஸ் சைன்ஸ் ஆகியோரை முந்தினார். எட்டாவது லேப்பில் லெக்லர்க்கையும் முந்தி மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். 10-வது லேப் வரை இப்படி சில ஓவர்டேக்குகளைச் சந்தித்துக்கொண்டிருந்த போட்டியின் 11-வது லேப்பில் முதல் ட்விஸ்ட் அரங்கேறியது.
10-வது லேப் முடியும்போது 9 வீரர்கள் பிட் எடுத்திருந்த நிலையில், 11-வது லேப்பில் பிட்டுக்குள் நுழைந்தார் முதலிடத்தில் இருந்த லூயிஸ் ஹாமில்ட்டன். டயர்கள் மாற்றப்பட்டு அவர் கிளம்பத் தயாரானபோது, அவரைக் கடந்தார் பிட்டுக்குள் நுழைந்த ஆல்ஃபா டௌரி வீரர் பியர் காஸ்லி. அதனால், அவர் சில நொடிகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அவரது பிட் ஸ்டாப் நேரம் 4.6 நொடிகள். கிட்டத்தட்ட 2 நொடிகள் அதிகமாக பிட்டுக்குள் இருக்க வேண்டியிருந்தது. 13-வது லேப்பில் வெர்ஸ்டப்பன் டயரை மாற்றி வெளியேறும்போது, வெற்றிகரமாக ஹாமில்ட்டனை முந்தியிருந்தார். 14-வது லேப்பில் பிட்டுக்குள் நுழைந்த பெரஸும் அதிக நேரம் உள்ளே இருந்தார் (4.3 நொடிகள்). ஆனால், பிட்டில் இருந்து வெளியேறியதும் சிறப்பாக ஹாமில்டனை டிஃபண்ட் செய்து அவருக்கு முன்னால் வந்துவிட்டார்.
இரண்டாவது பிட் 30-வது லேப்புக்குப் பிறகு எடுக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஒரு எதிர்பாராத அசம்பாவிதம் நடந்தது. மற்ற அணிகளெல்லாம் சாஃப்ட் டயரில் சென்றிருந்தாலும் ஆஸ்டன் மார்ட்டின் மட்டும் ஹார்டு டயரோடுதான் இரண்டாவது தகுதிச் சுற்றில் பங்கேற்றது. அதனால், ஒரே பிட்டில் ரேஸை முடித்து விடலாம் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அதனால், லான்ஸ் ஸ்ட்ரோல், செபாஸ்டியன் வெட்டல் இருவரும் அதுவரை பிட் எடுக்கவில்லை. 31-வது லேப்பின்போது பிட்டுக்குள் நுழைய நினைத்திருந்த ஸ்ட்ரோலுடைய காரின் இடது பின்புற டயர் பஞ்சராகி அவர் வெளியேற நேரிட்டது. அதுமட்டுமல்லாமல், அந்த விபத்து பிட் நுழைவின் முகப்பில் நடந்ததால், பிட் மூடப்பட்டது.

விபத்தின் காரணமாக safety car பயன்பாட்டுக்கு வர, ஹாமில்ட்டனைவிட 8 நொடிகள் முன்னிலையில் இருந்த வெர்ஸ்டப்பனின் முன்னிலை குறைந்தது. இருந்தாலும், ரீஸ்டார்ட்டின்போது சிறப்பாகச் செயல்பட்டு தன் முன்னிலையை ஓரளவு தக்கவைத்துக் கொண்டார். பிட் திறக்கப்பட்டதும் வீரர்கள் டயர் மாற்றுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், வெட்டல் ரூபத்தில் அடுத்த பிரச்னை வந்தது. ஆரம்பத்திலேயே ஹார்டு டயரில் தொடங்கியதால், சமீபத்தில்தான் டயரை மாற்றியிருந்தார் அவர். இருப்பவர்களிலேயே அவர் டயர்தான் குறைவாகப் பயன்படுத்தப்பட்டது. அதனால், கடைசி லேப் வரை இந்த டயர் தாங்கும். ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாகச் செயல்பட்டு ஆறாவது இடத்துக்கு வேறு முன்னேறிவிட்டார். அதனால், டாப் - 3 வீரர்களின் கூடுதல் பிட் திட்டம் மொத்தமாக முடிவுக்கு வந்தது.
தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த வெர்ஸ்டப்பன் மிகப்பெரிய முன்னிலை பெற்றிருந்தார். அதனால், நிச்சயம் அவருக்கு வெற்றி நிச்சயம் என்று கருதப்பட்டது. தொடர்ந்து தனக்குப் போட்டியளித்துக் கொண்டிருந்த ஹாமில்ட்டனை முந்தவிடாமல் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிந்த பெரஸ் இரண்டாவது இடம் பிடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல் இரண்டு இடங்களுக்கும் தங்களுக்குக் கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் ரெட்புல் அணியினர் திளைத்திருக்க, இன்னொரு அதிர்ச்சியைச் சந்திக்க நேரிட்டது.
ஸ்ட்ரோல் காரைப் போலவே வெர்ஸ்டப்பன் காரின் இடது பின்புற டயரும் பஞ்சர் ஆனது. வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நேரத்தில் ரேஸிலிருந்து வெளியேற நேரிட்டதால் விரக்தியில் காரை உதைத்துவிட்டு வெளியேறினார் அந்த 23 வயது இளம் நெதர்லாந்து வீரர். ஆனால், ட்விஸ்ட்கள் அந்த இடத்திலேயே முடிந்துவிடவில்லை. வெர்ஸ்டப்பன் காரின் பாகங்கள் டிராக்கில் சிதறியதால், கடைசி 2 லேப்கள் இருக்கும் நிலையில் ரேஸ் நிறுத்தப்பட்டது. மீண்டும் கிரிட்டில் இருந்து போட்டி தொடங்கியதால், இரண்டாவது இடத்தில் இருந்த ஹாமில்ட்டன் பெரஸை முந்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நினைத்தது போலவே பெரஸ் தொடக்கத்தில் சொதப்பினார். ஆனால், முதல் திருப்பத்தில் மேஜிக் பிரேக்கை ஹாமில்ட்டன் தெரியாமல் அழுத்திவிட, அவரால் சரியாகத் திருப்ப முடியாமல் நேராகச் சென்றுவிட்டார். அதனால், அவரால் 15-வதாகவே முடிக்க முடிந்தது.
தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் அதன் பிறகு சரியாகச் செயல்பட்டு ரேஸை வென்றார் பெரஸ். ரெட்புல் அணிக்காக முதல் முறையாகப் போடியம் ஏறினார் அவர். அதேபோல், இரண்டாம் இடம் பிடித்து ஆஸ்டன் மார்ட்டின் அணிக்காக முதல் போடியம் ஏறினார் முன்னாள் சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல். ஆல்ஃபா டௌரி வீரர் பியர் காஸ்லி மூன்றாவது இடம் பிடித்தார்.


பிரெஞ்சு கிராண்ட் ப்ரீ
பிரெஞ்சு கிராண்ட் ப்ரீயின் முதல் 4 கிரிட் பொசிஷன்களையும் ரெட்புல், மெர்சிடீஸ் வீரர்கள் பிடித்திருந்தனர். அதனால், நிச்சயம் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட பரபரப்பை இந்த ரேஸ் நிச்சயம் ரசிகர்களுக்குக் கொடுத்தது. ஆனால், பிரான்ஸில் நடந்த விஷயங்களை முழுமையாக உணர ஸ்பெயினுக்கும் பயணிக்க வேண்டும். மே மாதம் நடந்த ஸ்பானிஷ் கிராண்ட் ப்ரீ ரேஸையும் கொஞ்சம் உற்றுநோக்க வேண்டும்.
ஸ்பானிஷ் கிராண்ட் ப்ரீயில் போல் பொசிஷனில் இருந்து தொடங்கினார் நடப்பு சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டன். ஆனால், தொடக்கத்திலேயே அவரை முந்தினார் வெர்ஸ்டப்பன். தொடர்ந்து வெர்ஸ்டப்பன் முன்னிலையில் இருந்த நிலையில் ஒரு மாஸ்டர் கிளாஸ் முடிவை எடுத்தது மெர்சிடீஸ். 28-வது லேப்பில் தன் முதல் பிட் எடுத்திருந்த ஹாமில்ட்டனை 41-வது லேப்பிலேயே மீண்டும் பிட்டுக்கு அழைத்தனர். ஆனால், மீடியம் டயரோடு வெளியேறிய ஹாமில்ட்டன், ஒவ்வொரு லேப்பிலும் வெர்ஸ்டப்பனைவிட சுமார் 1.5 நொடிகள் வேகமாக முடித்து முன்னேறிக் கொண்டிருந்தார். தொடர்ந்து முன்னேறியவர், ஒரேயொரு பிட் மட்டுமே எடுத்த வெர்ஸ்டப்பனை 60-வது லேப்பில் முந்தி ரேஸை வென்றார்.
கூடுதல் பிட் எடுத்த மெர்சிடீஸின் முடிவு அந்த ரேஸை அவர்களுக்கு வென்று கொடுத்தது. பிரான்ஸில் அதே மருந்தை மெர்சிடீஸுக்கு ஊட்டியது ரெட்புல். சொல்லப்போனால், அப்படியே தலைகீழாக நடந்தது. இம்முறை வெர்ஸ்டப்பன், போல் பொசிஷனில் இருந்து தொடங்க, முதல் லேப்பிலேயே அவரை முந்தினார் இரண்டாவது இடத்தில் தொடங்கிய ஹாமில்ட்டன். ஆனால், ஹாமில்டனுக்கு முன்பாகவே பிட் எடுத்து (18-வது லேப்பில்) அவரை ‘அண்டர்கட்’ செய்தார் வெர்ஸ்டப்பன். ஹாமில்ட்டன் அடுத்த லேப்பில் பிட் எடுத்து வெளியேறியபோது, வெர்ஸ்டப்பன் அவரை முந்திவிட்டார். இருவருக்குமான இடைவெளி 1 நொடிக்கும் குறைவாக இருந்தபோதும், ஹாமில்ட்டனால் வெர்ஸ்டப்பனை முந்த முடியவில்லை.
இது ஒரு ஸ்டாப் ரேஸாக இருக்கப் போகிறதா, இல்லை இருவரும் மீண்டும் பிட் எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு வெகுநேரம் நிலவியது. இருவருமே ஹார்டு டயரில் இருந்ததால், பிட் எடுக்காமலேயே ரேஸை முடிக்கக்கூடும் என்றும் கருதப்பட்டது. ஆனால், வெர்ஸ்டப்பனால் தன் புதிய டயரில் நன்றாகச் செயல்பட முடியவில்லை. 29-வது லேப்பின்போது “என்னால் இந்த டயரை வைத்துக்கொண்டு முழு ரேஸையும் முடிக்க முடியாது” என்று தன் அணியினருக்கு ரேடியோ மூலம் தெரிவித்தார் மேக்ஸ். இது மெர்சிடீஸுக்குச் சாதகமாக அமையலாம் என்று நினைத்திருந்த நிலையில், அந்த அணியினர் சூழ்நிலையை ஹாமில்ட்டனுக்கு தெரியப்படுத்தினர். “வெர்ஸ்டப்பனால் இந்த டயரில் ரேஸ் முழுக்கச் சமாளிக்க முடியாது. அப்படியே நெருக்கடி கொடுப்போம்” என்று 30-வது லேப்பின்போது ஹாமில்ட்டனுக்கு மெசேஜ் சென்றுவிட்டது.
இம்முறை மிகவும் தைரியமான முடிவை எடுத்தது ரெட்புல். 32-வது லேப்பிலேயே வெர்ஸ்டப்பனை பிட் செய்யவைத்து மீடியம் டயருக்கு மாற்றினர். பிட்டிலிருந்து வெளியேறியதும் ஹாமில்ட்டனைவிட லேப்புக்கு சுமார் 2 நொடி வேகமாக முன்னேறினார். மெர்சிடீஸ் இரண்டாவது பிட்டுக்கு வீரர்களை அழைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இருவரையும் அதே டயரில் தொடர வைத்தது மெர்சிடீஸ். ஹாமில்ட்டனுக்குப் பின்னால் போட்டாஸும் இருந்ததால், அவரால் கூடுதல் நேரம் வெர்ஸ்டப்பனை பின்னால் வைத்திருக்க முடியும் என்று மெர்சிடீஸ் அணியினர் நம்பினர். ஆனால், தன்னால் அந்த டயரில் தொடர முடியாது என்றும், இன்னொரு பிட் எடுக்க வேண்டும் என்பதையும் அறிவுறித்தியிருந்தார் போட்டாஸ். மெர்சிடீஸ் அணி அதற்கு உடன்படவில்லை.
44-வது லேப்பில் போட்டாஸை முந்திய வெர்ஸ்டப்பன் அடுத்த 3 லேப்களில் ஹாமில்ட்டனுக்கு 5 நொடிகள் நெருக்கமாக வந்துவிட்டார். 48-வது லேப்பில், ஹாமில்ட்டன் டிராக்கிலிருந்து சற்று விலக, அந்த இடைவெளி 3 நொடிகளாகக் குறைந்தது. ஐந்து லேப்களே இருந்ததாலும், வெர்ஸ்டப்பனின் மீடியம் டயர்கள் சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதாலும், முன்னால் இருப்பது ஹாமில்ட்டன் என்பதாலும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. இருந்தாலும் கூலாக இருந்த வெர்ஸ்டப்பன் 52-வது லேப்பில் ஹாமில்ட்டனை முந்தினார். இந்த முறை எந்த அசம்பாவிதமும் நடக்காததால் வெற்றிகரமாக ரேஸை வென்று அசத்தினார். ஹாமில்ட்டன், பெரஸ் அடுத்த இரண்டு இடங்களில் முடித்தனர். இந்த சீஸனில் முதல் முறையாக இரண்டு ரெட்புல் வீரர்களும் போடியம் ஏறினர்.
இதுவரை 2021 சீசனில் 7 ரேஸ்கள் முடிவடைந்திருக்கின்றன. இந்த 7 ரேஸ்களிலும் பாயின்ட்கள் வென்ற ஒரே வீரர் லாண்டோ நாரிஸ் மட்டும்தான். ஸ்பானிஷ் கிராண்ட் ப்ரீ ரேஸில் எட்டாவது இடத்தில் முடித்தவர், மற்ற அனைத்து ரேஸ்களிலும் குறைந்தது ஐந்தாவதாகவாவது முடித்திருக்கிறார். இரண்டு முறை மூன்றாம் இடம் பிடித்திருக்கிறார். கூடிய விரைவில் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் இணையப் போகிறேன் என்பதை தன் செயல்பாடுகள் மூலம் அறிவித்திருக்கிறார் இந்த 21 வயது இங்கிலாந்து வீரர்.
டிரைவர்கள் பட்டியல்
மேக்ஸ் வெர்ஸ்டப்பன் ரெட்புல் 131 புள்ளிகள்
லூயிஸ் ஹாமில்ட்டன் மெர்சிடீஸ் 119 புள்ளிகள்
செர்ஜியோ பெரஸ் ரெட்புல் 84 புள்ளிகள்
லாண்டோ நாரிஸ் மெக்லாரன் 76 புள்ளிகள்
வால்டேரி போட்டாஸ் மெர்சிடீஸ் 59 புள்ளிகள்
அணிகள் பட்டியல்
ரெட்புல் 215 புள்ளிகள்
மெர்சிடீஸ் 178 புள்ளிகள்
மெக்லாரன் 110 புள்ளிகள்
ஃபெராரி 94 புள்ளிகள்
ஆல்ஃபா டௌரி 45 புள்ளிகள்