“கேம் பிடிக்காது; வேகம் பிடிக்கும்!” மதுரையிலிருந்து ஒரு ஃபார்முலா வீரன் உருவாகிறான்!

மதுரையைச் சேர்ந்த அனுஜ்-க்கு இப்போது 10 வயது. ஆனால், கோ கார்ட் ட்ராக்கில் இந்தக் குட்டி ரேஸர் காரோட்டும் ஸ்டைல், `க்யூட்னெஸ் ஓவர்லோடட்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு 5 வயதுக் குழந்தை பொம்மை காரில் விளையாடிப் பார்த்திருப்பீர்கள். ஆனால், 5 வயதிலேயே பந்தயக் காரையே பொம்மை கார் மாதிரி ட்ரீட் செய்து ஓட்ட ஆரம்பித்திருக்கிறான் அனுஜ். அதன் விளைவு - இப்போது கோ கார்ட்டிங் ட்ராக்கில் பந்தயக் கார்களை ‘வ்வ்ர்ர்ரூம்’ என ஓட்டிக் கொண்டிருக்கிறான் அனுஜ். அட, பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் வந்து மதுரைக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளான். ஸாரி... சேர்த்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த அனுஜ்-க்கு இப்போது 10 வயது. ஆனால், கோ கார்ட் ட்ராக்கில் இந்தக் குட்டி ரேஸர் காரோட்டும் ஸ்டைல், `க்யூட்னெஸ் ஓவர்லோடட்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
மதுரை கே.கே.நகரில் வசிக்கும் இன்ஜினீயர் அருண்- சுகந்த திவ்யா தம்பதியின் மகன் அனுஜ். மதுரை ஜெயின் வித்யாலாவில் தற்போது 5-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிப் படிப்பில் ஒருபக்கம் கவனம் செலுத்திக் கொண்டே கார்ட்டிங் போட்டிகளிலும் சாதனை செய்து வருகிறார். எதிர்காலத்தில் பார்முலா -1 போட்டியில் கலந்துகொள்ளும் வகையில் அவருடைய திறமை வளர்ந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் அவரது பெற்றோர்.

மதுரையில் கார்ட்டிங் பயிற்சி செய்ய எந்தவொரு வாய்ப்புகளும் இல்லாத நிலையில், அனுஜின் கார் பந்தய ஆசையை நிறைவேற்ற பெங்களூரில் உள்ள பயிற்சி மையத்துக்கு மாதந்தோறும் அழைத்துச் சென்று, தன் வேலை நாட்களையும் பொருளாதாரத்தையும் அர்ப்பணித்து வருகிற தந்தை அருண் வேல்ராஜிடம், `எப்படி அனுஜுக்கு இந்த ஆர்வம் வந்தது’ என்று கேட்டேன்.
"நான் ஆட்டோமொபைல் சம்பந்தப்பட்ட பிசினஸ் பண்றேன். அனுஜ் ரெண்டு வயசுலயே சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சான். இங்கே இருக்குற குட்டிக் குட்டிச் சந்துகளில் இடிக்காம பெர்ஃபெக்டா ஓட்டி ஆச்சரியப்படுத்தினான். அப்போதான் வெளியூர்ல நடக்குற பைக், கார் ரேஸ்களைப் பார்க்க அழைச்சிட்டுப் போனோம். கோயமுத்தூரில் நடக்குற கார் ரேஸ், ராலிகளைக் காட்ட ஆரம்பிச்சோம். அதோட கார் ஓட்டணும்னு சொல்ல ஆரம்பிச்சான். அதைப் பற்றி விசாரிச்சப்போதான் ஒரு டீம்ல சேர்ந்து கோ கார்ட்டிங் மூலமா உள்ளே நுழைய முடியும்னு தெரிஞ்சுக்கிட்டோம்.

பல நகரங்களில் கார்ட்டிங் அகாடமி இருந்தாலும், பெங்களூரில்தான் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் உள்ளன. அனுஜுக்கு 6 வயது ஆனவுடன் சென்னையிலுள்ள ஒரு டீமில் சேர்த்தாலும், பயிற்சி அனைத்தும் பெங்களூரில்தான் எடுக்க முடியும். இதற்காக மாதந்தோறும் பெங்களூர் அழைத்துச் சென்று பயிற்சி கொடுத்தோம்.
பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அங்குதான் பயிற்சி எடுக்கிறார்கள். அனுஜின் ஆர்வத்துக்காக சிரமத்தைப் பார்க்காமல் பெங்களூர் சென்று வந்தோம். ஃபார்முலா பந்தயங்களில் கலந்து கொள்ளும் வகையில் டிராக் இங்குதான் உள்ளது. சர்வதேசப் பந்தயங்கள் அங்கீகரித்த டிராக் அது. இன்னும் நான்கு டிராக் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நரேன் கார்த்திகேயனும் ஒரு ட்ராக் உருவாக்கி வருகிறார். அதற்கான கோச்சுகள் உள்ளனர்.
ஃபார்முலாவில் கலந்து கொள்வதற்கான கேட் வேதான் இந்த கோ கார்ட்டிங். அசாம், டெல்லியில் இருந்தெல்லாம் பெங்களூருக்குப் பயிற்சிக்கு வரும்போது எங்களுக்கு மதுரையிலிருந்து போறது சிரமமாகத் தெரியல. இப்பவே கோயமுத்தூர்ல பல ரேஸ்கள் நடத்துறாங்க. தமிழ்நாட்டுலயும் டிராக்குகள் உருவாக்க வாய்ப்பிருக்கு. நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழக அரசின் விளையாட்டுத் துறை மோட்டார் ஸ்போர்ட்ஸை அங்கீகரிச்சிருக்காங்க.
இந்த ஸ்போர்ட்ஸ்ல பையன் இருக்கான்னு நாங்க பயப்பட்டதில்லை. காரணம், முழுக்க சேஃப்டியாக உள்ளது. ஃபிட்னஸ், ரிப்ளக்ஷன்ஸ், டைமிங் சென்ஸ் எல்லாமே இம்ப்ரூவ் ஆகும். ஸ்கூலைப் பொறுத்தவரை ஆவரேஜ் ஸ்டூடன்ட்தான். ஸ்கூல் நிர்வாகம் நல்ல சப்போர்ட் பண்றாங்க. பயிற்சிக்குப் போகும்போது லீவ் கொடுத்துடுவாங்க.
ஒவ்வொரு முறை பெங்களூர் போகும்போதும் அதிகமான செலவு ஆகும். சமீபகாலமா ஸ்பான்சர்கள் உதவுறாங்க. போன வருஷம் டிவிஎஸ் ஸ்பான்சர் பண்ணாங்க. இந்த வருஷம் எஸ்விஎஸ் நிறுவனம் சப்போர்ட் பண்ணாங்க.
வரிசையாக போட்டிகள்ல கலந்துட்டு வர்றதால இந்திய அளவிலான ஃபெடரேஷன்ல அனுஜோட பேர் எல்லோருக்கும் ஓரளவு தெரியுது.
கார்ட்டிங் போட்டிகளில் மைக்ரோ, ஜூனியர், சீனியர்னு 3 கேட்டகிரி இருக்கு. பயிற்சி எடுத்து முதன் முதலில் 2020-ல பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான ரோட்டாக்ஸ் பந்தயத்துல (ROTAX ROUND-2 ) கலந்துகொண்டு மூன்றாவது இடம் வந்து கப் வாங்கினார். அதுவே பெரிய அச்சீவ்மென்ட்.
2021-ல் (X30 NATIONAL CHAMPIONSHIP ROUND 5) மூன்றாவதாக வந்து கப் வாங்கினார். 2022 -ல் நடந்த (MERITUS-2022) போட்டியில வின்னரா வந்தார். இதுதான் முதல் சாம்பியன்ஷிப். இதையெல்லாம் பார்த்த சீனியர்கள், கோச்சுகள் பாராட்டினாங்க. மோஸ்ட் இம்ப்ரூவ்மென்ட்னு தனியா அவார்டும் கொடுத்தாங்க.
அனுஜோட கோச் சென்னையைச் சேர்ந்த விஷ்ணுபிரசாத். அவரும் நேஷனல் சாம்பியன். அனுஜ் இருக்குற யங் ஸ்போர்ட்ஸ் டீமோட கேப்டன் அக்பர் இப்ராஹீம். அவர் இந்தியாவோட மோட்டர் ஸ்போர்ட்ஸோட பிரசிடெண்ட். அவர் பையன் உலக அளவிலான கார்ட்டிங் ஃபெடரேஷனுக்குத் தலைவரா இருக்கிறார்.
இந்த ரோட்டாக்ஸ் போட்டியில் வெற்றி பெற்று வருகிறவர்களை மொத்தமாகச் சேர்த்து வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்துறாங்க. அந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெறுகிறவர்கள்தான் ஃபார்முலா பந்தயங்களில் நுழைய முடியும். அந்த இலக்கோடுதான் அனுஜ் இப்பொழுது சென்று கொண்டிருக்கிறார்!" என்றார்.
அனுஜிடம் பேசினேன், "ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுறது எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட். வேற கேம்ல ஆசை இல்லை. இன்னும் நிறைய கப் வாங்குவேன்!" என்று மழலை மாறாத மொழியில் பேசுகிறார் இந்த வேக வீரன்.