கார்ஸ்
Published:Updated:

மின்சார வாகனங்கள்... கவனிக்க வேண்டியவை!

Future Skills for the Automotive Industry
பிரீமியம் ஸ்டோரி
News
Future Skills for the Automotive Industry

Mobility Engineer 2030 Future Skills for the Automotive Industry

மின்சார வாகனங்கள்... கவனிக்க வேண்டியவை!

டாடா சன்ஸின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி சமீபத்தில் சந்தித்த விபத்து அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. பரத்தும் அந்த சம்பவத்தைப் பற்றிக் கேட்ட பின் தன் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் மின்சார வாகனங்களில் (Electric Vehicle – EV) எப்படியெல்லாம் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கலாம் என்று யோசித்தார். பரத் ஒரு பெரிய வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் EV பிரிவின் CTO.

மின்சார வாகனங்கள் சில வழிகளில் இன்ஜின் மூலம் ஓடும் வாகனங்களை விடப் பாதுகாப்பானவை என்று சொல்லலாம். ஆனால் அவற்றில் சில தனிப்பட்ட‌ ஆபத்துக்களும் இருக்கின்றன. மின்சாரமயமாக்கப்பட்ட‌, இணைக்கப்பட்ட‌, தானே இயங்கும் திறன் கொண்ட வாகனங்களில் பாதுகாப்பை மூன்று வகையாகப் பார்க்கலாம். அந்த மூன்று 1).சைபர் செக்யூரிட்டி (cybersecurity), 2).பேட்டரிக்களில் தீப் பிடிக்கும் ஆபத்து மற்றும் 3).விபத்து நடந்து வேறு ஒரு பொருளுடன் மோதும்போது தாங்கிக் கொள்ளும் சக்தி (crash worthiness).

இணைக்கப்பட்ட வாகனங்களில் ஸைபர் செக்யூரிட்டி!

இன்று புதிதாகத் தயாரிக்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் IoT (Internet of Things) மூலம் இணைக்கப்பட்டவை. இதில் உள்ள ஆபத்து அவற்றை ஹேக் செய்து தொலைவில் இருந்து வேறு ஒருவர் தவறான முறைகளில் கட்டுப்பாடு செய்யலாம்.

சில வருடங்களுக்கு முன் இரு ஹேக்கிங் நிபுணர்கள், சைபர் செக்யூரிட்டியில் உள்ள ஆபத்தை உலகத்திற்கு நிரூபிக்க ஒரு இணைக்கப்பட்ட ஃபியட் க்ரைஸ்லர் வாகனத்தை ஹேக் செய்தனர். ஹேக் செய்த பின் வாகனத்தை அவர்களால் தொலைவில் இருந்து இயக்க முடிந்தது. இணைக்கப்பட்ட வாகனங்களில் சாத்தியமான‌ இந்தப் பலவீனத்தைச் சரி செய்யாவிட்டால், இது ஆபத்தான‌ வழிகளில் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.

வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் வாகனத்தைத் தயாரித்த பின் பாதுகாப்பைப் பற்றி யோசிக்கக் கூடாது. வடிவமைக்கும் நிலையில் தொடங்கி ஒவ்வொரு கட்ட‌த்திலும் சைபர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்படுத்த வேண்டும். வாகனங்களில் பாதுகாப்பைச் செயல்படுத்த ஒரு வழித் தகவல் பறிமாற்றத்தை என்க்ரிப்ட் செய்வது. இதனால் வாகனத்திற்கு வரும் மற்றும் வெளியே செல்லும் தகவலை அங்கீகரிக்கப்படாத எவரும் படிக்க முடியாது. ஓட்டுநர்களும் கவனமாக இருந்து தெரியாத மென்பொருட்களைப் பதிவிறக்கிப் பயன்படுத்தக்கூடாது.

பேட்டரிகளில் தீப்பிடிக்கும் அபாயத்தின்  மூல‌ காரணங்கள்!
பேட்டரிகளில் தீப்பிடிக்கும் அபாயத்தின் மூல‌ காரணங்கள்!

பாதுகாப்பான பேட்டரிகள்!

பேட்டரிக்களில் தீப் பிடிக்கும் ஆபத்து பற்றி விரிவாக சில மாதங்கள் முன்னர் பார்த்தோம். ஜப்பானில் பிரபலமான இந்த மூல காரணத்தைக் காட்டும் வரைபடத்தில் (fish bone diagram) ஒரு குறிப்பிட்ட‌ நிகழ்வு நடக்கும்போது, அது எந்தெந்த‌ காரணங்களால் ஏற்பட்டது என்று காண்பிக்கலாம். ஒரு நிகழ்வு அல்லது விளைவிற்கான காரணத்தை ஆறு வகைகளாகப் பார்க்கலாம். அவை மனிதன், இயந்திரம், வழிமுறை, மூலப்பொருள், அளவீடு மற்றும் இயற்கை. பேட்டரிக்களின் தீ விபத்திற்கு இந்த ஆறு வகைகளிலும் காரணம் இருக்கிறது.

பரத், தன் நிறுவ‌னத்தின் வாகனங்களில் பொருத்தப்பட‌விருக்கும் பேட்டரிக்களில் இந்த ஆறு காரணங்களாலும் ஆபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக‌ ஏற்பாடு செய்திருந்தார். இயந்திரவியல், மின்சார / மின்னணு மற்றும் வெப்ப மேற்பார்வை (thermal management) சார்ந்த துறைகள் மூன்றிலும் கவனமாக இருந்தார்.

EV-க்களில் அதிக வோல்டேஜ் பாய்வதால் ஒரு விபத்து ஏற்படும்போது, மின்சாரப் பாய்ச்சலைத் துண்டிப்பது முக்கியம். பேட்டரி மற்ற‌ பாகங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் சில மாதங்கள் முன் நடந்த சில‌ EV தீ விபத்துக்கள் ஊடகங்களில் பரவலாக ஆராயப்பட்டன. அதனால் பேட்டரிகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புஉணர்வு வாகனம் தயாரிப்பவர்கள் மற்றும் பயன்படுத்தும் ஓட்டுநர்களிடமும் அதிகமாகிவிட்டது. பேட்டரிகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப் பொருட்களின் தரக்கட்டுப்பாடு, அவற்றின் பேக்கேஜிங், அவற்றை எந்நேரமும் கண்காணிக்கும் மென்பொருள் (battery management system) ஆகியவற்றில் தயாரிப்பாளர்கள் அதிக கவனம் செலுத்தும் நிலை உருவானது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி பேசியபோது, இந்த விபத்துக்கள் எதனால் நடந்தன என்று ஆராய்ச்சி செய்ய ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டதாகக் கூறினார். நிறுவனங்கள் பொறுப்பாக நடந்து கொண்டு பேட்டரிகளில் குறை இருந்தால் தாமதிக்காமல், அவற்றை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்ப அழைத்துச் சரி செய்யப்பட வேண்டும் என்று அறிவித்தார்.

ஓட்டுநர்களும் வாகனத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். சரியான அளவு சார்ஜ் செய்வது, வெப்பம் அதிகம் ஆகும்படி வெயிலில் நிறுத்தாமல் இருப்பது, நேரத்தில் பழுது பார்ப்பது போன்ற தயாரிப்பாளரின் நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது.

வாகனம் மோதும்போது பாதுகாப்பு!

மின்சார வாகனங்களில் சென்டர் ஆஃப் கிராவிட்டி (center of gravity) குறைந்த உயரத்தில் இருப்பதால், அவை இன்ஜின் மூலம் ஓடும் வண்டிகளைவிட நிலையாகவும் உருண்டு போகும் சாத்தியக்கூறு குறைவாகவும் இருக்கும். ஆனால் மற்றபடி ஒரு வண்டி மோதும்போது கடைப்பிடிக்க வேண்டிய தரக்கட்டுப்பாட்டுகளில் (crash worthiness) எந்தக் குறையும் இல்லை. நெடுஞ்சாலைகளில் ஓட்டாமல், வீட்டின் அருகில் குறைந்த‌ தூரம் மட்டும் ஓடும் வாகனங்களுக்குத் தரக்கட்டுப்பாடு சற்று தளர்த்தப்படலாம்.

ஒரு விபத்து நடக்கும்போது மின்சார வாகனங்களில் தீ, மின்சார அதிர்ச்சி, வெடிக்கும் அபாயங்கள் இருப்பதால் அவற்றுக்குச் செய்யப்படும் தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் இன்ஜின் வாகனங்களைவிட அதிகம். அதிக மின்சாரம் (60 Volts-ம் அதற்கு மேலும்) பாயும் வாகனங்கள் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் விப‌த்து நடக்கும்போது வாகனத்தில் என்ன நடந்தது என்பதைப் பதிவு செய்யும் கருவி (Event Data Recorder) கூடுதலாக பேட்டரி வாகனத்திலிருந்து துண்டிக்கப்பட்டதா என்பதையும் பதிவு செய்ய வேண்டும். பேட்டரிக்குள் இருக்கும் எலெக்ட்ரோலைட் போன்ற இரசாயனப் பொருட்கள் வெளியே சிந்தாமல் இருக்க வேண்டும். தீ பிடித்தாலும் வேகமாகப் பரவாமல் இருக்க வேண்டும். சுலபமாக அணைக்கும்படி இருக்க வேண்டும்.

மின்சார வாகனங்களில் மற்றொரு போக்கு - பேட்டரி, மோட்டார் போன்ற பாகங்களைத் தாங்கும் அடித்தளம் அல்லது ஸ்கேட்போர்ட் தயாரிப்பது. ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்களும் தரப்படுத்தப்பட்ட ஸ்கேட்போர்டு தயாரிக்க இறங்கியுள்ளனர். இதனால் EV தயாரிக்கும் நிறுவனங்கள் வண்டியின் கட்டமைப்பின் மேல் கவனம் செலுத்தி, பாதுகாப்பான வாகனங்கள் கொண்டு வரலாம். வாகனத்தின் அமைப்பு மாட்யூலராக மாறி வருகிற‌து. தனித்தனியாக பாகங்களை வாங்கி ஒன்றாகப் பொருத்தி ஒரு வாகனத்தைச் சுலபமாக உருவாக்கிவிட முடியும். இவ்வாறு செய்யும்போது பாதுகாப்பில் கவனம் குறையாமல் இருக்க வேண்டும்.

போக்குவரத்துப் பாதுகாப்பும் தானியங்கி வாகனமும்!

உலகிலுள்ள 199 நாடுகளில் சாலை விபத்து மூலம் உயிரிழக்கும் நாடுகளில் முதலிடம் இந்தியாவுக்கே! இந்த விப‌த்துக்களில் 75% வரை ஓட்டுநர்களால் ஏற்படுபவைதான் வரம்பை மீறிய வேகம், மன அழுத்தம், சரியாக ஓட்டத் தெரியாமல் ஓட்டுவது. இந்திய அரசாங்கம் உலகப் பொருளாதார மன்றத்துடன் (WEF – World Economic Forum) சேர்ந்து இத்தகைய உயிரிழப்பை 2025-ம் ஆண்டிற்குள் 50% குறைக்க ஒரு இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. அதற்காக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது – Road Safety 2.0. இந்தத் திட்டத்தில் போக்குவரத்துப் பாதுகாப்பின் நான்கு அம்ச‌ங்களிலும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். அந்த நான்கு அம்சங்கள் 4Es – கல்வி (Education), பொறியியல் (Engineering), அமலாக்கம் (Enforcement) மற்றும் அவசர கால சிகிச்சை (Emergency care).

தானே இயங்கும் வாகனங்களால் (autonomous vehicle) ஓட்டுநர்களால் ஏற்படும் தவறுகள் தவிர்க்கப்பட்டு, சாலை விபத்துக்களைக் குறைக்க முடியும். இந்த வாகனங்கள் மனிதர்களைப்போல் இல்லாமல் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விதிகளை எந்நேரமும் மீராமல் வாகனத்தை ஓட்டிச் செல்லக் கூடியவை.

மின்சார வாகனங்கள்... கவனிக்க வேண்டியவை!

பாதுகாப்பான ஓட்டுநர்களுக்கு ஊக்கம்

பாதுகாப்பாக ஓட்டும் பழக்கங்களை ஊக்கப்படுத்த ஒரு வழி `பயன்பாட்டைப் பொருத்த காப்பீடு’ (usage-based insurance). இணைக்கப்பட்ட வாகனங்களில் ஒருவர் எவ்வளவு பாதுகாப்பாக அல்லது ஆபத்தான வழிகளில் ஓட்டுகிறார் என்று தொலைவில் இருந்து தனியுரிமையை மீறாமல் கண்காணிக்கலாம். ஒருவர் வரம்பு மீறாத வேகத்தில் வாகனத்தை எப்பொழுதும் ஓட்டுகிறாரா, சரியானபடி மற்ற வாகனங்களை முந்திச் செல்கிறாரா, அடிக்கடி திடீரென்று பிரேக் அழுத்துகிறாரா, வாகனங்களுக்கு இடையே தகுந்த இடைவெளி விட்டு ஓட்டுகிறாரா என்று கண்காணிக்கலாம்.

இந்த அளவுகோல்களை வைத்து ஒருவரின் காப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்யலாம். இதனால் விதிகளை மீறாமல் பாதுகாப்பாக ஓட்டும் ஒருவருக்குச் சந்தா குறைவாக இருக்கும். காலப்போக்கில் அனைவரும் பாதுகாப்பாக ஓட்டும் நிலை உருவாகும்.

உதாரணத்திற்கு, டெஸ்லா தன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு மதிப்பெண் கொடுக்கிறது. போகப் போக அவர் ஓட்டும் விதத்தை வைத்து இது கூடும் அல்லது குறையும். இந்த மதிப்பெண் கூடினால் காப்பீட்டுச் சந்தா குறையும். டெஸ்லா ஐந்து அளவுகோல்களை வைத்து இந்தப் பாதுகாப்பு மதிப்பெண்ணைக் கணக்கிடுகிற‌து.

1).ஒவ்வொரு 1000 மைல்களுக்கும் முன்னே செல்லும் வாகனத்துடன் மோதும் அபாய எச்சரிக்கை; 2).வேகமாக பிரேக்கை அழுத்தி வாகனத்தை நிறுத்துவது; 3) முரட்டுத்தனமாக வாகனத்தைத் திருப்புவது; 4)தகுந்த இடைவெளி விடாமல் முன்னே செல்லும் வாகனத்தைப் பின்தொடர்வது மற்றும் 5) தானாக ஓடும் அம்சத்தை நிறுத்தி வைப்பது.

வாகனத் தயாரிப்பாளர்க‌ள் எவ்வளவுதான் கவனமாக வடிவமைத்து, பாதுகாப்பான வாகனங்களை உருவாக்கினாலும் சாலைகளில் பாதுகாப்பு ஓட்டுந‌ர்கள் கையில்தான் இருக்கும். வீட்டுக்குச் செல்லும்போது, இதனைப் பற்றி யோசித்த பரத் பின்னால் சீட்டில் உட்கார்ந்தாலும் மறக்காமல் சீட் பெல்ட்டை மாட்டிக் கொண்டார். மேலே பார்த்த EV பயன்படுத்தும் பாதுகாப்பான‌ வழிகளை அனைத்து வாடிக்கையாளர்கள் அறியும்வித‌மாக விழிப்புண‌ர்வை உருவாக்கி அவர்களுக்கு வாகனம் வாங்கும்போது பயிற்சி அளிக்க வேண்டும். காற்றுப்பைகளை வாகனத்தின் முன் சீட்களில் மட்டும் பொருத்தாமல் இரண்டு பக்கங்களிலும், பின்னால் இருக்கும் இருக்கைகளுக்கும் அதிகச் செலவில்லாமல் எப்படிப் பொருத்தலாம் என்று அவர் யோசித்துக் கொண்டே வாகனத்தை விட்டு இறங்கினார்.

- (தொடரும்)