ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

பசுமையான வாகனப் போக்குவரத்து!

பசுமையான வாகனப் போக்குவரத்து!
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமையான வாகனப் போக்குவரத்து!

தொடர் # 20 : வேலை வாய்ப்பு -Mobility Engineer 2030 Future Skills for the Automotive Industry

பரத் சில வாரங்கள் முன் நடத்திய ஒரு கலந்துரையாடல் அவருக்குப் பலதரப்பட்ட யோசனைகளைத் தந்தது. அனைவரும் வியக்கும் வண்ண‌ம், ஒரு ப‌சுமையான, நிலைத்தன்மைக்கு (green) உதாரணமாக மின்சார வாகனத்தை (electric vehicle – EV) வடிவமைத்துத் தயாரிப்பது எப்படி என்று அவர் யோசிக்காத நாளே இல்லை. பரத் ஒரு பெரிய வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் EV பிரிவின் CTO.

புதிதாகத் தயாரிக்கவிருக்கும் EV-யின் முன்மாதிரியை வெற்றிகரமாகத் தயாரித்த பரத், அடுத்ததாக அவற்றைப் பெரிய எண்ணிக்கையில் தயாரிக்கும் முன் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தன் அணியுடன் திட்டமிட்டார். அவர் முடிவுசெய்திருந்த நான்கு வேலைகள் – 1) வாகனத்தை வடிவமைப்பது, 2) தயாரிப்பது, 3) பாகங்கள் கொள்முதல் செய்வது மற்றும் 4) வாகனத்தின் ஆயுள் முடிந்தபின் கையாள்வது. இந்த நான்கு வேலைகளும் பசுமையான வகையில் கையாளப்பட வேண்டும்.

உதாரணத்திற்கு BMW நிறுவனம் உலகிலேயே மிகவும் பசுமையான வாகனம் தயாரிப்பதை தன் இலக்காக எடுத்துள்ளது. அதனை அடைய அந்நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. அவற்றிலிருந்து சில யோசனைகளையும் பரத் குறித்துக் கொண்டார்.

கட்டணம் இல்லாத பொதுமக்கள் போக்குவரத்து!

பசுமையான போக்குவரத்து பற்றிப் பார்க்கும்போது, நம் பார்வை வாகனங்களையும் தாண்டி இருக்க வேண்டும். நகர்ப்புற மக்கள் போக்குவரத்து அதற்கு ஒரு உதாரணம். கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று இந்தப் போக்குவரத்து. அலுவலக‌ங்களில் வேலை செய்பவர்கள் பலர் வீட்டிலிருந்தே வேலை செய்ததால், அத்தியாவசிய சேவை செய்பவர்கள் மட்டும் போக்குவரத்தைப் பயன்ப‌டுத்தும் நிலை உருவானது. இதனால் போக்குவரத்து நிறுவனங்களுக்குப் பெரிய இழப்பு ஏற்பட்டது.

பசுமையான வாகனப் போக்குவரத்து!



இந்த நிலைமையைச் சமாளிக்க அமெரிக்காவில் பாஸ்டன் போன்ற நகரங்களில்அரசாங்கங்கள் தலையிட்டு, இந்த நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கும் அதேநேரத்தில் சொந்த, தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தாமல் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க கட்டணம் இல்லாத ஏற்பாட்டை செய்தன.

இதனை ஆதரிக்கும் நிலைத்தன்மை ஆர்வலர்கள் பலர் இருக்கின்றனர். அதே சமயம் இந்த ஏற்பாடு காலப்போக்கில் கட்டுப்படி ஆகாது என்று எதிர்க்கும் பலரும் இருக்கிறார்கள். வாஷிங்டன் நகர‌த்தில் இதனைப் பின்பற்றலாமா என்று கொள்கை வகுப்பாளர்கள் யோசிக்கின்றனர். தமிழ்நாட்டில் பெண்கள் இலவசமாக நகரப் பேருந்துகளை பயன்படுத்துவது இதற்கு நம் ஊரில் ஒரு எடுத்துக்காட்டு. பரத் தன்னால் முடிந்தபோதெல்லாம் அலுவலகம் சென்று வர தன் சொந்த வாகனத்தைப் பயன்படுத்தாமல், தன் நிறுவனத்தின் பேருந்தையோ அல்லது மெட்ரோ ரயிலையோ பயன்படுத்துவதை ஒரு பழக்கமாக வைத்திருந்தார்.

பசுமையான வாகனங்களின் வடிவமைப்பு!

BMW நிறுவனத்தின் நிலைத்தன்மையான வடிவமைப்பைப் பற்றி விளக்கும்போது, மேலே பார்த்த பகிர்ந்துகொள்ளும் போக்குவரத்தை ஏற்றுக்கொள்ள நம் சமுதாயம் தயாரில்லை என்று அந்தத் துறையின் தலைவர் கூறினார். முடிந்தவரை குறைவான பொருட்கள், வளங்களைப் பயன்படுத்தி வாகனங்கள் தயாரிப்பது முக்கியம். இதற்கு மறுபயன்பாடு (circularity) அவசியம். ஸ்டீல் போன்ற உலோகங்களை 100% மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால் மறுபடியும் பயன்படுத்தும்போது பண்புகள் மாறிவிடும் ப்ளாஸ்டிக் போன்ற பொருட்கள் ஒரு சவால்.

ஒரு வாகனத்தை வடிவமைத்தபின் நிலைத்தன்மை பற்றி யோசிக்கக்கூடாது. டொயோட்டாவில் பாகங்களின் வடிவமைப்பு புது வாகனத்தைச் சுலபமாக தயாரிப்பதற்கு மட்டும் உத‌வாமல், ஆயுள்காலம் முடிந்த பின் பிரித்து எடுக்கவும் (disassembly) சுலபமாக இருக்கும். இதனால் மறுபயன்பாட்டிற்கு ஏற்ற நல்ல பாகங்களை அடையாள‌ம் காணத் தேவைப்படும் முயற்சி மற்றும் நேரம் குறையும்.

டொயோட்டா மாற்றி யோசித்த மற்றொரு போக்கும் வாகனத்துறையின் எதிர்காலத்தைப் பற்றியது. பலரும் இன்ஜின் மூலம் ஓடும் வாகனங்களின் தயாரிப்பை ஒரு காலகட்டத்தில் நிறுத்திவிட்டு மின்சார வாகன‌ங்களுக்கு முற்றிலுமாக மாறுவதை தங்கள் யுக்தியாக அறிவித்துள்ளனர். ஆனால் இதுபோல ஒரேய‌டியாக EV-க்களுக்கு மாறுவது சாத்தியமில்லை என்பது டொயோட்டாவின் கருத்து. இன்ஜின் மற்றும் மின்சாரம் மூலம் மாற்றி மாற்றி ஓடக்கூடிய கலப்பு (hybrid) வாகனங்களிலும் டொயோட்டா முதலீடு செய்துள்ளது. பரத் கலப்பு வாகனங்கள் பற்றி பின்னர் யோசிக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்.

வாகன வடிவமைப்பில் பலரும் பின்பற்றும் ஒரு முயற்சி, முடிந்தவரை எடை குறைப்பது (light weighting). கணினிகள் பிரப‌லமடையாத, எரிபொருள் பயன்பாட்டைப் பற்றிக் கவலைப்படாத‌ காலகட்டங்களில் வாகனங்களின் எடை பற்றி யோசிக்காமல் அவை கனமாகத் தயாரிக்கப்பட்டன. ஆனால் இன்று ஒரு வாகனம் சந்திக்கப் போகும் அனைத்துச் சூழ்நிலைக‌ளையும் கணினிகள் மூலம் உருவகப்படுத்தி (simulate) அதற்கு ஏற்ற அளவில் பாகங்களை வடிவமைக்கலாம். ஜெனரல் மோட்டார்ஸில் இந்த முறை கையாளப்பட்டு, எட்டு பாகங்கள் ஒன்றாக வடிவமைப்பதோடு இல்லாமல், அதன் எடை 40% குறைவாகவும் அதே சமயத்தில் பலம் 20% அதிகமாகவும் செய்யப்பட்டது. வாகனங்களின் எடைக் குறைப்பிற்கு இது ஒரு உதாரணம்.

பசுமையான வாகனப் போக்குவரத்து!



பாகங்கள் கொள்முதல்!

வாகனம் தயாரிக்கத் தேவைப்படும் பாகங்கள், அவற்றிற்கான மூலப்பொருட்களை சப்ளையர்களிடமிருந்து வாங்க வேண்டும். அப்படி வாங்கும்போது அந்தப் பாகங்கள் சுற்றுப்புறச் சூழ‌லுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருந்தால் மட்டும் போதாது. அவை சமூகப்பொறுப்புடன், நெறிமுறைகளை (ethics) மீறாத, சரியான வழியில் தயாரிக்கப்பட்ட பொருட்களாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தியிருக்கக் கூடாது.

பொதுவாக, வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் முதல் நிலை, நேரடியான சப்ளையர்களிடம் செய்யும் பரிவர்த்தனைகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தனர். ஆனால் இன்று அதோடு நிறுத்த முடியாது. அவர்களையும் தாண்டி அவர்களின் சப்ளையர்கள், மூலப்பொருட்களின் சுரங்கங்கள் வரைகூட‌ நம் பார்வை செல்ல வேண்டும்.

ஒரு பாகம் எந்த நேரத்தில் எங்கே, என்ன நிலையில் இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் வசதி (visibility) முக்கியம். அது மட்டும் அல்லாமல், அதன் வாழ்நாளில் ஒவ்வொரு நிலையிலும் நடக்கும் முக்கியச் சம்பவங்கள் பதிவு செய்யப்படவேண்டும் (traceability). பின்னர் ஏதாவது தரக்கட்டுப்பாட்டுச் சிக்கல் வந்தால், அது எதனால் வந்தது என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க இந்த சரித்திரம் முக்கியமாக‌ இருக்கும். BMW நிறுவனத்தில் இந்தத் தகவலைச் சரியான வ‌ழியில் பாதுகாக்க ஒரு அமைப்பு இல்லாதது பற்றி ஒருவர் பேசினார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தச் சரித்திரத்தை எவரும் அழித்துவிடாதபடி பதிவு செய்ய ஒரு வழி ப்ளாக் செயின். ஆனால் தொழில்நுட்பம் இருந்தால் மட்டும், இந்த முயற்சி வெற்றி பெற்றுவிட முடியாது என்பதற்கு ஓர் உதாரணம், IBM மற்றும் Maersk நிறுவனங்கள் சேர்ந்து அமைத்த TradeLens என்னும் முயற்சி.

பசுமையான வாகனப் போக்குவரத்து!



Maersk ஒரு சப்ளை செயின் நிறுவனம். வாடிக்கையாளர்களின் பொருட்களின் போக்குவரத்தை நிர்வகிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். வெளிப்படையான, பாதுபாப்பான, திறமையான வழியில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் உலக வர்த்தகம் நடத்த Maersk-ம் IBM-ம் சேர்ந்து 2018-ல் தொடங்கிய ஒரு முயற்சி TradeLens. ஆனால் உலக அளவில் தொழில்துறையில் கூட்டுமுயற்சி இல்லாத காரணத்தால், TradeLens 2023-ல் மூடப்பட வேண்டிய நிலை உருவானது. பரத் இதுபோன்ற நடப்புகளைக் கூர்ந்து கவனித்து வந்தார். இவற்றில் நடக்கும் தவறுகளைத் தான் நடத்தக்கூடாது என்று கவனமாக இருந்தார்.

பசுமையான வாகனத் தயாரிப்பு

பிஎம்டபிள்யூ நிறுவனம் பசுமையான வ‌ழியில் வாகனம் தயாரிப்பது பற்றிப் பேசும்போது, தண்ணீர் போன்ற இயற்கை வளங்கள், மின்சாரம் போன்றவற்றைச் சிக்கனமாக பயன்படுத்துவது பற்றிக் கூறினர். குடிக்கும் தண்ணீரைப் பயன்படுத்தாமல் நிலத்தடி நீரை, அதையும் மறுபயன்பாடு செய்து பயன்படுத்துவது சிறந்தது. பசுமையான தயாரிப்பில் இருக்கும் ஒரு சிக்கல் அதில் கையாளப்படும் செயல்முறைகளின் கார்ப‌ன் உமிழ்வு (CO2 emission).

நிஸான் நிறுவனம் 2050-ம் ஆண்டில் வாகனங்கள் தயாரிக்க 70% மூலப்பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டதாக இருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்நிறுவனம் பயன்படுத்தும் ஸ்டீல் பசுமையானதாக, ஹைட்ரஜன் போன்ற‌ குறைவான கார்பன் உமிழ்வு செயல்முறைகளால் தயாரிக்கப்பட்டதாக இருக்குமாம்.

ஆயுள் முடிந்தபின் கையாள்வது!

BMW நிறுவனம் - வாகனங்களின் உற்பத்தி, விற்பனையில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஆயுள் முடிந்தபின் அவற்றை முடிந்தவரை மறுசுழற்சி செய்து இருவழிப் பாதையாகச் செய்வதில் கவனம் செலுத்துகிறது. அதற்கு முடிந்தவரை குறைந்த வளங்களை பயன்படுத்தவேண்டும். புது மூலப் பொருட்களைக் குறைத்து, கூடுமானவரை ஏற்கனவே பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யப்பட்ட பழைய பொருட்களைப் பயன்படுத்துவது ஒரு குறிக்கோள். சப்ளைசெயின்களை உருவாக்க வாகனங்களின் ஆயுள் முடிந்து கையாள மறுசுழற்சியாளர்கள் சப்ளையர்க‌ளாக மாற வேண்டும்.

BMWவின் நிலைத்தன்மை நிபுணர் ஒருவர், அந்நிறுவனத்தின் இலக்கை 4Rஆகக் கூறலாம் என்றார். அவை - மாற்றி யோசிப்பது (rethink), மீண்டும் பயன்படுத்துவது (reuse), குறைப்பது (reduce) மற்றும் மறுசுழற்சி (recycle) செய்வது. இதை டொயோட்டா போன்ற நிறுவனங்களும் கடைப்பிடிக்கின்றன. அந்த‌ நிபுணர் வாகனங்களில் பயன்படுத்தப்படும் லெதர் பற்றிய சில விஷயங்களைக் கூறினார். தோலிலிருந்து தயாரிக்கப்படும் லெதர் பொருட்களுக்கு ஆகும் தண்ணீர், மின்சாரப் பயன்பாடு அதிகம். இவற்றினால் ஏற்படும் கார்ப‌ன் உமிழ்வு, சுற்றுப்புறச் சூழலில் விடப்படும் இரசாயனங்களின் அளவு அதிகம் என்றார்.

பரத்திற்கு இது ஒரு நல்ல யோசனையாகப் பட்டது. கூடுமானவரை மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வாகனம் தயாரிப்பதை அவர் லட்சியமாகவே எடுத்துக்கொண்டார். ஒரு தொழில்துறையிலிருந்து மற்றொன்றுக்குக்கூட இந்த‌ச் சுழற்சி பொருந்தும். வாகனங்களுக்குச் சரிப்படாத பேட்டரிகளை வீடுகளில், அலுவலகங்களில் இன்வெர்ட்டராகப் பயன்படுத்தலாம்.

பசுமையான வாகனப் போக்குவரத்து!



உலகில் மற்ற நிறுவனங்கள் நிலைத்தன்மைக்காக எடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றிப் பார்த்த, படித்த பரத்திற்கு, தான் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிந்தது. இவை வாகனங்களோடு நின்றுவிடாமல் அவற்றைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு இயக்கத்தின் ஒத்துழைப்பையும் பொருத்து இருக்கும். சப்ளைய‌ர்கள், வாடிக்கையாளர்கள், தொழில்நுட்ப பார்ட்னர்கள், அரசு போன்ற அனைவருடனும் தொடர்பில் இருக்க வேண்டும். அதற்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியலைப் படமாக வரைந்து, அதற்கு ஒரு சுருக்கமான பெயரையும் வைத்தார் – RESET. தான் எடுக்கப் போகும் முயற்சிகள் அனைத்தும் இந்த RESET-ல் அடங்கிவிடும். நிலைத் தன்மை பற்றி மட்டும் யோசிக்காமல் பொறுப்பான, நெறிமுறையுடன், சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதகம் விளைவிக்காத, எந்நேரமும் தகவல் பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக அது இருக்கும்.

(தொடரும்)