
‘ஐக்யூப்தான் ஏற்கெனவே மார்க்கெட்டில் இருக்கே’ என்பவர்கள் நிற்க! இது ஐக்யூப்பின் லேட்டஸ்ட் அப்டேட் மாடல் ST.
டிவிஎஸ் - ஐக்யூப் ST (எலெக்ட்ரிக்)
ஐக்யூப் இப்போது அதிக தூரம் போகும்!
டிவிஎஸ் இந்த முறை ஆட்டோ எக்ஸ்போவில் பெரிதாக கெத்து காட்டவில்லை. ஆனால், ஒரு சின்ன அறையில், ஒரே ஒரு ஸ்கூட்டரை மட்டும் வைத்து கூட்டம் அள்ளச் செய்து விட்டது. அது டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். ‘ஐக்யூப்தான் ஏற்கெனவே மார்க்கெட்டில் இருக்கே’ என்பவர்கள் நிற்க! இது ஐக்யூப்பின் லேட்டஸ்ட் அப்டேட் மாடல் ST.

நீங்கள் ஐக்யூப் வாங்கும் ஐடியாவில் இருந்தால், இந்தப் பக்கத்தைப் படித்துவிட்டு முடிவெடுக்கவும். டிவிஎஸ் ஐக்யூப்பில் ஏற்கெனவே 2 மாடல்கள் இருப்பது தெரியும். ஒன்று – ஸ்டாண்டர்டு ஐக்யூப். மற்றொன்று – ஐக்யூப் S. டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தரம் பற்றி இப்போதெல்லாம் பாஸிட்டிவ் ஆகவே பேசிக் கொள்கிறார்கள். இருந்தாலும், ஐக்யூப்பில் பெரிய குறையாகச் சொல்லப்பட்டது அதன் குறையான ரேஞ்ச்தான். சிங்கிள் சார்ஜுக்கு 85 கிமீ–க்குள்ளாக ரேஞ்ச் கிடைப்பது என்பதுதான் அது. அந்தக் குறைக்கு இப்போது முடிவு கட்டிவிட்டது டிவிஎஸ்.
ஐக்யூபில் ST என்றொரு வேரியன்ட்டை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருந்தது. போன ஆண்டே இதைப் பற்றிய தகவல்கள் வெளிக்கசிந்தாலும், இப்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள், ஐக்யூப் வாடிக்கையாளர்களுக்கு வரமே!

ஐக்யூப் ST பற்றிப் பார்க்கலாம். ரெகுலர் மற்றும் S வேரியன்ட்டைவிட இதில் இடவசதி அதிகம். பழசில் 17 லிட்டர் என்றால், இதில் 2 ஹெல்மெட்கள் வைக்கும் அளவுக்கு 32 லிட்டர் இடவசதி அதிகரித்திருக்கிறது. அதே 7 இன்ச் TFT டிஸ்ப்ளே ஆக இருந்தாலும், இதன் UI (User Interface) மாறியிருக்கிறது. இதில் டிவிஎஸ்–ன் SmartXonnect ப்ளாட்ஃபார்ம் தவிர்த்து – அமேஸான் அலெக்ஸா கனெக்டிவிட்டி போன்றவை சேர்ந்திருக்கிறது. வீட்டிலேயே அலெக்ஸா மூலம் ‘என் ஸ்கூட்டருக்கு எவ்ளோ சார்ஜ் ஏறியிருக்கு’ என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நேவிகேஷன், புளூடூத் கனெக்டிவிட்டி, வாய்ஸ் அசிஸ்டன்ஸ், மியூசிக் போன்ற 41 வகையான கனெக்டட் வசதிகள் உண்டு.
மற்றபடி தோற்றத்தில் ST எனும் ஸ்டிக்கர் கலக்கலாக இருக்கிறது. கலர் ஆப்ஷன்களும் கூடியிருக்கிறது! ரெகுலர் வேரியன்ட்களில் கிளாஸி ஃபினிஷ்தான்; மேட் ஃபினிஷ் கிடைக்காது. ST–யில் மேட் ஃபினிஷ் அருமை.
பேட்டரி பேக்தான் இதில் விஷயமே! ரெகுலரைவிட இதன் டாப் ஸ்பீடு எகிறியிருக்கிறது. 82 கிமீ. இதன் பேட்டரி 5.1kWh பேட்டரிக்குப் பெரிதாகி இருக்கிறது. ரெகுலர் வேரியன்ட்கள் 85 கிமீ கூட தரவில்லை என்று குறைபட்டார்கள் வாடிக்கையாளர்கள். இந்த ஐக்யூப் ST – 140 கிமீ தரும் என்று க்ளெய்ம் செய்கிறது டிவிஎஸ். ரியல் டைமில் 100 கிமீ–க்கு மேல் தந்தாலே போதுமே! நாங்கள் இதைப் பார்த்தபோது 98% சார்ஜிங்குக்கு 138 கிமீ டிஸ்ப்ளேவில் காட்டியது.
கூடவே இதில் 950W மற்றும் 1350W சார்ஜிங் ஆப்ஷன்களும் உண்டு. வெறும் 4.5 மணி நேரத்தில் 0–80% சார்ஜிங் இதில் ஏற்றிக் கொள்ளலாம் என்கிறது டிவிஎஸ். இதுவே 1350-ல் சார்ஜ் ஏற்றினால், இரண்டரை மணி நேரம் என்கிறது.
இப்போதெல்லாம் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்றால், 1.75 லட்சம் எடுத்து வைக்க வேண்டும். ஆனால், 1.5 லட்சத்துக்குள் ஒரு தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேண்டும் என்றால், ஐக்யூப் செமையான சாய்ஸ்!
ஆம்பியர் ப்ரைமஸ் எலெக்ட்ரிக்
லோடு மேன்கள், கம்யூட்டர்கள்… எல்லோருக்கும் ஆம்பியரில் ஆப்ஷன் இருக்கு!
ஆம்பியர் ஸ்கூட்டர்களும் நம் தமிழ்நாட்டில் சத்தமில்லாமல் ஒரு மார்க்கெட்டைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. கிரீவ்ஸ் மொபிலிட்டி தான் ஆம்பியர் ஸ்கூட்டர்களைத் தயாரிக்கும் நிறுவனம்.
கிரீவ்ஸ் நிறுவனம், ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டு மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், ஒரு யுட்டிலிட்டி மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் காட்சிப்படுத்தி இருந்தது. ஆம்பியர் ப்ரைமஸ் என்றொரு புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், கொஞ்சம் சாதுவாக இருந்தது. இதில் 3kWh லித்தியம் அயன் பேட்டரி இருக்கிறது. இது சிங்கிள் சார்ஜுக்கு 120 கிமீ போகும் என்கிறது கிரீவ்ஸ்.
இதில் எலெக்ட்ரிக் மோட்டாரை ஸ்கூட்டரின் நடுவில் மவுன்ட் செய்திருக்கிறார்கள். இது 3.8kW பவர் அவுட்புட்டை ரியர் வீலுக்குக் கடத்துகிறது. இதில் பெல்ட் டிரைவ் இருப்பது பலருக்கும் பிடிக்கலாம் என்று நினைக்கிறேன்.
கூடவே இரண்டு கான்செப்ட் ஸ்கூட்டர்கள் இருந்தன. NXG மற்றும் NXU. இதில் NXG ஸ்கூட்டர் மில்லினியல் டிசைனில் கலக்கியது. இதன் யுட்டிலிட்டி மாடலைத்தான் NXU எனும் பெயரில் வைத்திருந்தார்கள். இதில் கிட்டத்தட்ட 200 கிலோ வரை பே லோடு அடிக்கலாம் என்கிறது கிரீவ்ஸ். நீங்கள் லோடு அடிப்பவர்கள் என்றால், இந்த NXU சரியான சாய்ஸாக இருக்கும். 120 கிமீ ரேஞ்சும், ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் எல்லா ஸ்கூட்டர்களுக்கும் உண்டு.
ஆம்பியரில் இருந்து ஒரு கான்செப்ட் 3 வீலரையும் காட்சிப்படுத்தி இருந்தார்கள். ஆனால், இது எப்போது வரும் என்று தெரியவில்லை.
F99 (Racing Electric Scooter)
இந்த எலெக்ட்ரிக் பைக்கின் டாப் ஸ்பீடு 200 கிமீ!
அல்ட்ரா வயலெட் என்பது பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் மொபிலிட்டி நிறுவனம். இது ஏற்கெனவே F77 எனும் ஓர் எலெக்ட்ரிக் பெர்ஃபாமன்ஸ் பைக்கை விற்பனை செய்து வருகிறது. இந்த F77 பைக்கே வெறித்தனமான பெர்ஃபாமன்ஸ் மற்றும் பேட்டரி பேக் கொண்டிருக்கும் நிலையில், இதன் அடுத்த வேகமான மாடலாக F99 எனும் ரேஸ் எலெக்ட்ரிக் பைக்கைக் காட்சிப்படுத்தி இருந்தார்கள். ஆம், இதன் டாப் ஸ்பீடு 200 கிமீ என்கிறது அல்ட்ரா வயலெட்.
F77 பைக்கில் இருந்து ஏகப்பட்ட அப்டேட்கள் இந்த F99–ல் இருக்கின்றன. அது என்னனு பார்க்கலாம்!
இதில் 120 வோல்ட் ஆர்க்கிடெக்ச்சர் ப்ளாட்ஃபார்ம் கொண்டு தயாரித்து இருக்கிறார்கள். இதுவே F77–ல் இருப்பது 60 வோல்ட் ஆர்க்கிடெக்ச்சர். அப்படியே இரண்டு மடங்கு. வெறித்தனம். இந்த எலெக்ட்ரிக் மோட்டாரைப் பாதுகாப்புக்கு எந்தப் பங்கமும் ஏற்படாத வகையில் ட்யூனும் செய்திருக்கிறார்களாம். இதன் விளைவாக இதன் 50kW அல்லது 60bhp பவர் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரின் டாப் ஸ்பீடு 200 கிமீ என்கிறார்கள். 200 கிமீ என்றால், ஒரு ரேஸ் பைக்குக்கு இணையான வேகம். அதுவும் ஒரு எலெக்ட்ரிக் எனும்போது கூஸ்பம்ப் ஏற்படுகிறது.
அப்படியென்றால், இதன் இனிஷியல் பிக்அப்பும் நன்றாக இருக்க வேண்டுமே! இதன் பிக்–அப் விவரங்களைப் பற்றிச் சொல்லவில்லை அல்ட்ரா வயலெட். ஆனால், F77–ன் 0–60 கிமீ 3.1 விநாடிகள் மற்றும் 0–100 கிமீ 8.1 விநாடிகள். வாவ்! அப்படியென்றால், இந்த F99 அதையும்விட விநாடிகள் குறைவாக… அதாவது வேகமாக இருக்கும்.
எலெக்ட்ரிக் மோட்டாரைத் தாண்டிப் பல வசதிகளிலும் இந்த F99–யை அப்டேட் செய்திருக்கிறது அல்ட்ரா வயலெட். பைக்கில் உட்கார்ந்து பார்த்தேன். வெறித்தனமான ரைடிங் பொசிஷன், அட்ஜஸ்டபிள் ரியர் ஃபுட் பெக்ஸ் – இதுவே ஒரு ரேஸ் பைக்கை ஓட்டும் ஃபீல் வந்து விடுகிறது. எடை குறைவாக இருந்தால்தான் பறக்க முடியும்; அதனால் இந்த பைக்கின் பாடி பேனல்களை கார்பன் ஃபைபரால் செய்திருக்கிறார்கள். பைக்கின் முன்பக்கம் இருக்கும் அந்த விங்லெட்ஸ், காற்றைக் கிழித்துக் கொண்டு பறப்பதற்கு இன்னும் உதவுகிறது.
‘பச்சக்’ எனச் சொன்ன இடத்தில் நிற்கும் பிரெம்போ மாஸ்டர் சிலிண்டர் பிரேக்குகள், சூப்பரான கிரிப் கொண்ட பிரெல்லி சூப்பர்கோர்ஸா டயர்கள் என்று ஹேண்ட்லிங்கும் F77–ல் இருந்து பல படிகள் முன்னேற்றம் அடைந்திருக்கிறது.
அல்ட்ரா வயலெட்டின் மிகப் பிடித்த விஷயம் – இதன் பேட்டரி வாரன்ட்டிதான். 8 ஆண்டுகள் கொடுக்கிறார்கள். அல்ட்ரா வயலெட்டின் CEO நாராயண் சுப்ரமணியனிடம், ‘‘எல்லாம் ஓகே. எப்போதான் இது எங்க ஊருக்கு வரும்’’ என்று கேட்டேன். ‘‘இந்த ஆண்டு மத்திக்குள் வந்துடும்!’’ என்று சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் இந்த ரேஸிங் மெஷின் பறப்பதைப் பார்க்க ஆசை! பார்க்கலாம்!
டார்க் க்ரேட்டோஸ் X எலெக்ட்ரிக்
தமிழ்நாட்டுக்கு வாங்க டார்க்!
புனேவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்டார்ட்–அப் நிறுவனம்தான் இந்த டார்க் மோட்டார்ஸ். ஏற்கெனவே க்ரேட்டோஸ் R எனும் எலெக்ட்ரிக் பைக்கை விற்று வரும் நிலையில், அதன் அப்டேட்டட் மாடலோடு க்ரேட்டோஸ் X எனும் புது வேரியன்ட்டை, தனது ஏரியாவில் காட்சிப்படுத்தி இருந்தது டார்க் மோட்டார்ஸ்.
க்ரேட்டோஸின் பழைய மாடலை ஒப்பிடும்போது, இதில் புதிய சைடு பேனல்கள், ஃபாஸ்ட் சார்ஜிங், 7.0 இன்ச் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் (எல்இடி இல்லையா டார்க்?)... அலுமினியம் ஸ்விங் ஆர்ம் என்று பல விஷயங்கள் பக்கா! இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்றால், இதில் FF என்றொரு ரைடிங் மோடு கொடுத்திருக்கிறார்கள். இது Fast and Furious மோடாம். வாவ்!

பைக்குடன் இன்டக்ரேட்டட் செய்யப்பட்ட பிளாக்டு–அவுட் பேட்டரி பேக் மற்றும் புது புளூ கலர் ஸ்கீமில் கலக்கலாக இருந்தது க்ரேட்டோஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் பைக்.
மற்றபடி இதன் பவர் மற்றும் எலெக்ட்ரிக் விவரங்கள் தெரியாத நிலையில், டார்க் க்ரேட்டோஸ் R பைக்கைவிட எப்படியும் அதிகமாகவே இருக்கும். இதன் டாப் ஸ்பெக் மாடலில் 9kW எலெக்ட்ரிக் மோட்டாரில் 12bhp பவர் மற்றும் 38Nm டார்க் இருக்கும் நிலையில், X மாடலில் அதிகமாகவே இருக்கும். இதன் டாப் ஸ்பீடும் 110 கிமீ–க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
FAME சப்ஸிடியுடன் சேர்த்து இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலை 1.69 லட்சத்துக்கு பொசிஷன் செய்திருக்கிறது டார்க். இதன் புக்கிங் மே 2023-க்குப் பிறகு தொடங்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இப்போதைக்கு டார்க்கும் புனே, பாட்னா, ஹைதராபாத், சூரத், மும்பை போன்ற நகரங்களில் மட்டும்தான் தனது பைக்குகளை விற்று வருகிறது. தமிழ்நாட்டுக்கு எப்போ வருவீங்க டார்க்?
SR250
ஹங்கேரி நாட்டு கீவேயின் 250 சிசி மாடர்ன் ரெட்ரோ பைக்!
பெனெல்லியுடன் பார்ட்னர்ஷிப் வைத்து, தனது பைக்குகளை விற்று வருகிறது கீவே மோட்டார்ஸ். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கீவே, ரெட்ரோ மாடல் பைக்குகளைத் தயாரிப்பதில் கில்லியான நிறுவனம். ஏற்கெனவே சிக்ஸ்ட்டீஸ் 300i, Vieste 300, K300 N, V302 C என்று ஸ்கூட்டர், மேக்ஸி ஸ்கூட்டர், பைக், சூப்பர் பைக் என்று எல்லா ஏரியாவிலும் கால் பதித்திருக்கிறது கீவே.
தனது லைன்அப்பில் முதல் ரெட்டோ நியோ மாடலான SR125 பைக்கின் அடுத்த வெர்ஷனாக SR250 மாடலை, இந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருந்தது கீவே. ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் SR125–ன் அண்ணன்தான் இந்த SR250.

உங்களுக்கு ரெட்ரோ பைக் மாடர்னாக இருந்தால் பிடிக்கும் என்றால், இந்த கீவே SR250–யைப் பார்த்ததும் பிடித்து விடும். உருண்டை வடிவ ஹெட்லைட், அதே உருண்டையில் கன்சோல், நீளமான சிங்கிள் சீட், பின் பக்கமும் கிராப் ரெயில் இல்லாமல் உருண்டை டெயில் லைட், டிஸ்க் பிரேக்ஸ் கொண்ட ஸ்போக் வீல்கள், ஆனால் தடிமனான வீல்கள் என்று இதன் லுக் அப்படியே மாடர்ன் ரெட்ரோதான்.
பவர் ட்ரெயின்களைப் பொருத்தவரை இதில் இருப்பது 223 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான். பெரிய இன்ஜின் என்றாலும் ஆயில் கூல்டு எல்லாம் இல்லை; ஏர்கூல்டுதான் கொடுத்திருக்கிறது கீவே. அதனால், பராமரிப்பில் பர்ஸ் பழுக்காது என்றே தோன்றுகிறது. இதன் பவர் மற்றும் டார்க் இரண்டுமே 16bhp மற்றும் 16Nm. இதில் 14.2 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருக்கிறது. 250 சிசியாக இருந்தாலும், இது ஒரு லைட் வெயிட் மாடர்ன் பைக். இதன் டிரை எடை வெறும் 120 கிலோதான். முன் பக்கம் 300 மிமீ டிஸ்க் மற்றும் 210 மிமீ பின் பக்க டிஸ்க் பிரேக்ஸ் கொண்டிருக்கிறது கீவே SR250. அட, டூயல் சேனல் ஏபிஎஸ்.
உங்களுக்கு ரெட்ரோ மாடர்ன் பைக்… 250 சிசியில் வேண்டுமென்றால்… இந்த கீவே ஷோரூமுக்குப் போங்கள். ஏப்ரலில் இருந்து புக்கிங் தொடங்குகிறது. கவாஸாகி W175 மற்றும் டிவிஎஸ் ரோனின் போன்ற ரெட்ரோ பைக்குகளுக்குப் போட்டியாக வருகிறது கீவே SR250.
மோட்டர் EXE மற்றும் UT எலெக்ட்ரிக்
எலெக்ட்ரிக் பைக்ஸ்தான்…. ஆனா கியர், லிக்விட் கூலிங் இருக்கு!
அதென்ன மேட்டர்… என்றுதான் Matter பைக்குகளைப் பார்த்ததுமே ஒரு புன்னகை புரிகிறார்கள் அனைவரும். ஆனால், இயற்பியல் மாணவர்களுக்கு மேட்டர் பற்றி நன்றாகத் தெரியும். ஒரு பிராண்டு நிறுவனத்தின் பெயரே இப்படி என்றால், அதன் மாடல்களை எப்படிப் பார்த்துப் பார்த்துத் தயார் செய்வார்கள். அப்படி ஒரு டெடிகேட்டட் ஆன பைக்குகளைத்தான் இந்த எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தி இருந்தது மேட்டர் நிறுவனம்.
EXE மற்றும் UT எனும் 2 கான்செப்ட் பைக்குகள் பலரையும் வியப்படைய வைத்து விட்டன. இரண்டு பற்றியும் ஒரு சின்ன டீட்டெய்லிங் பார்க்கலாம்!

மேட்டர் பற்றி ஒரு முக்கியமான மேட்டர் என்னவென்றால்… எலெக்ட்ரிக் டூ–வீலர்களில் ஏது கியர்? என்றால், உங்கள் நினைப்பைப் பொய்யாக்கி விடும் இந்த மேட்டர். ஏற்கெனவே `A 22-nd Century Bike’ எனும் ஹேஷ்டேக்கின் கீழ், ஒரு மேட்டர் இ–பைக் எனும் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனை செய்துவரும் மேட்டர், அதில் 4 ஸ்பீடு ஹைப்பர்ஷிஃப்ட் டிரான்ஸ்மிஷன் மேனுவல் கியர் கொடுத்திருந்தது. அட, இன்ஜினுக்கு லிக்விட் கூல்டு இன்ஜின் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் பேட்டரிக்கு லிக்விட் கூலிங் என்று எல்லோரையும் பேச வைக்கிறது மேட்டர் மோட்டார். அதாவது, இது தெர்மல் ரன்அவே எனும் பேட்டரி தீப்பிடிப்பதைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம்.
இந்த அம்சங்களை அப்படியே இந்த இரண்டு EXE மற்றும் UT கான்செப்ட் பைக்குகளிலும் வைத்திருந்தது மேட்டர்.
இந்த எலெக்ட்ரிக் மோட்டாரில் இருந்து உடனடி பவர் டெலிவரி கிடைக்கும்படி வடிவமைத்திருக்கிறது மேட்டர். EXE–வின் சீட் சிங்கிள் சீட் டிசைனில் பின் பக்கம் கொஞ்சம் மேல்நோக்கி உயர்த்தி வைக்கப்பட்டிருந்தது. முன் பக்கம் ஹெட்லைட், ஒரு ஜல்லிக்கட்டுக் காளையின் கண்களைப் போன்று இருந்தது. இதன் ஸ்விங் ஆர்ம் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் இருப்பதால், கிண்ணென்ற கட்டுமானமும், ஸ்போர்ட்டியான ரைடிங்கும் கிடைக்கலாம். ஆனால் மற்ற பைக்குகளில் இருப்பதுபோல் பின் பக்கம் மோனோஷாக்கும், முன் பக்கம் டெலிஸ்கோப்பிக்கும் இருந்தது. இரண்டிலுமே பெட்டல் முன் பக்கம் டிஸ்க் மற்றும் பின் பக்கம் ரவுண்ட் டிஸ்க் இருந்தது. இதில் பிரெல்லி ஏஞ்சல் ஜிடி டயர்கள் கொடுத்திருந்தார்கள். பக்கா! வெள்ளை மற்றும் புளூ நியான் கலர், பார்ப்பதற்கே பிரகாசமாக இருந்தது.
அடுத்து இதன் UT கான்செப்ட் பைக். இதை ஒரு அட்வென்ச்சர் டூரராக பொசிஷன் செய்ய இருக்கிறதுபோல மேட்டர். காரணம் – இதன் ஸ்டைலிங்கே இதைச் சொல்கிறது. பயணம் போனால் பொருட்கள் வைக்க சேடில் பைகள், டூயல் பர்ப்பஸ் டயர்கள், கைகளைப் பாதுகாக்க நக்கிள் கார்டுகள், முன் பக்கம் காற்று முகத்தில் அறையாமல் இருக்க வைஸர், கான்செப்ட் EXU–ல் பில்லியன் சீட் இருந்தால் இதில் பெரிய டாப் பாக்ஸ் இருப்பது என்று பல விஷயங்களைச் சொல்லலாம். இந்த கறுப்பு பைக்கில் நியான் மஞ்சள் மற்றும் வெள்ளை ஹைலட்கள்.. அற்புதம்!
டிட்டாச்சபிள் பேட்டரி வசதியுடன் வருவதால்… பேட்டரி ஸ்வாப்பிங்க்குக்கு இது பொருந்தும். மேலும், இதில் டூயல் பர்ப்பஸ் லித்தியம் அயன் பேட்டரிக்காக Home Dock Inverter ஆப்ஷனும் வழங்குகிறது மேட்டர். வீட்டிலியே எளிதாக பேட்டரியைக் கழற்றி சார்ஜ் செய்து கொள்ளலாம்.
மேட்டர் பல மேட்டர்களைக் கைவசம் வைத்திருக்கிறது!
லைகர் X மற்றும் X+
ஸ்டாண்ட் போடாமல் வீலிலேயே நிற்கும் ஸ்கூட்டர்!
மும்பையைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அப் நிறுவனமான லைகர் மொபிலிட்டி எனும் கம்பெனி, இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அனைவரையும் ஒரு விஷயம் மூலம் டாக் ஆஃப் தி ஏரியா ஆகி விட்டது. அது, செல்ஃப் பேலன்ஸிங் எனும் தொழில்நுட்பம்.
அதாவது, இந்த ஸ்கூட்டர்களுக்கு ஸ்டாண்ட் தேவைப்படாது. ஆம், இதன் டயர்களிலேயே இது செல்ஃப் பேலன்ஸ் ஆகி நின்று கொள்ளும் எனும் வகையான தொழில்நுட்பம். இதை Auto Balancing Technology என்கிறார்கள்.

இதற்குப் பின்னால் ஜப்பானின் Gyroscope எனும் தொழில்நுட்பம் அடங்கியிருக்கிறது. ஜப்பானைச் சேர்ந்த Shane Chan என்பவர்தான் முதன் முதலில் செல்ஃப் பேலன்சிங் ஒற்றைச் சக்கர சைக்கிள் ஒன்றைக் கண்டுபிடித்தவர். அவர் பயன்படுத்தியதுதான் இந்த கைரோஸ்கோப் தொழில்நுட்பமாம்.
எக்ஸ் மற்றும் எக்ஸ் ப்ளஸ் எனும் 2 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் காட்சிப்படுத்தி இருந்தது லைகர். குறைந்த வேகங்களில்கூட நம் காலைத் தேய்த்து பேலன்ஸ் செய்யத் தேவையில்லையாம் இந்த இரண்டு ஸ்கூட்டர்களுக்கும். ஸ்கூட்டர் ஓட்டப் பழகும் பெண்களுக்கு இது பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்! 7 கிமீ வேகம் பிடிக்கும் வரை இந்த ஆட்டோ பேலன்ஸிங் இயங்கும். இந்த ஆட்டோ பேலன்ஸிங் வசதி வேண்டாம் என்றால், குறிப்பிட்ட வேகத்துக்குப் பிறகு ஸ்விட்ச் மூலம் ஆஃப் செய்து கொள்ளலாம். இவற்றில் ரிவர்ஸ் மோடும் கொடுத்திருந்தார்கள்.
இவ்விரண்டிலுமே Learner Mode என்றொரு மோடு கொடுத்திருக்கிறார்கள். டாப் ஸ்பீடின்போது ஸ்கூட்டரின் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் ஆட்டோ பேலன்ஸிங் வசதியைச் சரியாகப் பயன்படுத்த இந்த மோடு. இதில் கனெக்டட் வசதிகள் இருப்பதால் OTA (Over The Air) அப்டேட்களுக்கும் தயாராகி வருகிறது லைகர். மற்றபடி டர்ன் பை டர்ன் நேவிகேஷன், TFT டேஷ்போர்டு டிஸ்ப்ளே, லைவ் லொக்கேஷன் ட்ராக்கிங், பேட்டரி டெம்பரேச்சர் இண்டிகேட்டர் போன்ற வசதிகள் உண்டு.

லைகர் எக்ஸில் லித்தியம் அயன் பேட்டரி பேக் கொடுத்திருக்கிறார்கள். இதைக் கழற்றி மாட்டிக் கொள்ளலாம். இது 3 மணி நேரத்தில் சார்ஜ் ஏறி விடுமாம். இதன் டாப் ஸ்பீடு 65 கிமீ. இதன் ரேஞ்சும் சுமார் 60 கிமீ என்கிறார்கள்.
இதுவே லைகர் எக்ஸ் ப்ளஸ்ஸில் இருப்பது கழற்ற முடியாத Non-Removable பேட்டரி. இதை சார்ஜ் போட 4.5 மணி நேரம் ஆகும். இதன் க்ளெய்ம்டு ரேஞ்ச் 100 கிமீ.
இந்த 2023 நடுவில் இதன் புக்கிங்கைத் தொடங்குகிறது லைகர். அப்படியே டைகர் மாதிரி தமிழ்நாட்டுப் பக்கமும் கொஞ்சம் உறுமுங்க லைகர்!