தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் ரோந்து வாகனங்களை அந்தந்த மாவட்ட காவல்துறையினர் இயக்கி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மார்க்கமாக வி.ஐ.பி-கள் பயணம் செய்யும்போது பாதுகாப்பு அளிக்கும் பணியிலும் இந்த வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதுவரையிலும் இந்த ரோந்து வாகனங்களில் சோலார் கேமரா அமைக்கப்படவில்லை.

வாகனங்களில் உள்ள சிசிடிவி கேமராவுக்குத் தனியாக சார்ஜ் போட வேண்டும். இல்லாவிட்டால் சாலைகளில் நடந்த சம்பவங்களைப் பதிவு செய்ய இயலாத சூழல் உருவாகும். அதனால் தமிழகத்திலேயே முதல் முறையாக நெல்லையில் உள்ள இரு ரோந்து வாகனங்களில், சூரிய மின்சக்தி மூலம் இயங்கக்கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சூரிய சக்தியுடன் இயங்கும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட வாகனங்களை இயக்கி வைத்த நெல்லை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சரவணனிடம் பேசியபோது, ”தேசிய நெடுஞ்சாலைகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் ரோந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வி.ஐ.பி பயணத்தின்போதும் இந்த வாகனங்களின் பங்களிப்பு முக்கியமானது.

ஆனால், இதில் இருந்த சிசிடிவி-களுக்கு தினமும் 5 முதல் 7 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டியதிருந்தது. அதனால் ரோந்துப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அந்தக் குறையைப் போக்கும் வகையில் சோலார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் சிசிடிவி கேமரா இருப்பதால் இனிமேல் பாதுகாப்புப் பணிகளில் எந்தத் தொய்வும் ஏற்படாது.
முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு, குற்றச் செயல் தடுப்பு, அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களைக் கண்காணித்தல் ஆகியவற்றுக்கு சோலார் கேமரா பொருத்தப்பட்ட வாகனம் உதவியாக இருக்கும் நெல்லையில் தற்போது இரு வாகனங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜி.பி.எஸ் வசதியும் இருப்பதால் இந்த வாகனங்களின் இருப்பிடத்தையும் அறிய முடியும். இந்த வாகனங்கள் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு செயல்படும்” என்றார்.