Published:Updated:

டாப் ஸ்பீடு 25 கீமீ; 5 ரூபாய்க்கு 65 கீமீ; "இது செம பட்ஜெட் எலெக்ட்ரிக் கார்!

ஆன்றணி ஜாண்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்றணி ஜாண்

வாசகரின் கண்டுபிடிப்பு!

டாப் ஸ்பீடு 25 கீமீ; 5 ரூபாய்க்கு 65 கீமீ; "இது செம பட்ஜெட் எலெக்ட்ரிக் கார்!

வாசகரின் கண்டுபிடிப்பு!

Published:Updated:
ஆன்றணி ஜாண்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்றணி ஜாண்

கேரள மாநிலம் கொல்லம் ராமன்குளங்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்றணி ஜாண். 67 வயது ஆன ஆன்றணி ஜாண், கொல்லம் பிஷப் ஜெறோம் நகரில் கேரியர் கன்சல்ட்டன்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் கொல்லம் நகரில் ஓட்டிச்செல்லும் எலெக்ட்ரிக் காரை அனைவரும் ஒரு நிமிடம் நின்று ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கிறார்கள்.

பைக் செல்லும் சிறிய சாலையிலும் பயணிக்கும்விதமாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் நிற காரில் கெத்தாக வலம் வருகிறார் ஆன்றணி ஜாண். 33 இன்ச் அகலம், 5 அடி நீளம், 5 அடி உயரத்தில் அமைந்துள்ளது அந்த கார். முன் சீட்டில் ஒருவர் பயணிக்கலாம்; பின் சீட்டை மடித்தால் பின் பக்கம் செல்லும் வழி உருவாகிறது. இரண்டு பேர் பின் சீட்டில் இருந்து பயணிக்கலாம். முன் பக்க, பின் பக்க கிளாஸ்களில் வைப்பர் உள்ளது. ஹெட் லைட், இண்டிகேட்டர், ரிவர்ஸ் செல்லும் வசதி என ஒரு காருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அந்த காரில் உள்ளது. அந்த காரின் மொத்த எடையே 150 கிலோ எடைதான். ஒரு பல்ஸர் பைக்கே இதைவிட எடை அதிகமாச்சே!

டாப் ஸ்பீடு 25 கீமீ; 5 ரூபாய்க்கு 65  கீமீ; "இது செம பட்ஜெட் எலெக்ட்ரிக் கார்!

‘‘இந்த கார் எந்த கம்பெனித் தயாரிப்பு?’’ என்றால், ‘‘இது நானே வடிவமைச்ச ஸ்பெஷல் எலெக்ட்ரிக் கார்!’’ என்று ஷாக்கடிக்க வைக்கிறார் ஆன்றணி ஜாண். இதை வடிவமைக்கும்போது, சில தோல்விகளைச் சந்தித்திருக்கிறார். ஆனாலும் காரை முழுமையாக வடிவமைக்க நான்கு லட்சம் ரூபாய் ஆகியுள்ளது. இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் 60 கிலோ மீட்டர் பயணிக்கலாம். ஒரு முறை சார்ஜ் செய்ய ஒரு யூனிட் மின்சாரம்தான் தேவைப்படுகிறதாம். கேரளாவில் ஒரு யூனிட் மின்சாரம் 5 ரூபாய் என்பதால் '5 ரூபாய்க்கு 60 கிலோ மீட்டர் பயணிக்கலாம்' என்கிறார் ஆன்றணி ஜாண்.

"கொல்லத்தில் எம்.காம் படித்துவிட்டு தேசிய வங்கி ஒன்றில் வேலை செய்தேன். பின்னர் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்றேன். அங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பைனான்ஸ் என இரண்டு எம்.பி.ஏ படித்தேன். அமெரிக்காவில் ஒரு வங்கியில் வேலை செய்துவிட்டு ஊர் திரும்பினேன். நான் இந்தக் காரை வடிவமைத்தது தனிக்கதை!" என எடுத்த எடுப்பிலேயே படபடவெனப் பேசுகிறார் ஆன்றணி ஜாண். எலெக்ட்ரிக் காரில் பேட்டரியில்தான் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஆன்றணி ஜாணுக்கும் பேட்டரியில் முதலில் ஃபெயிலியர் நடந்திருக்கிறது. என்னென்ன தவறுகள் நடந்தது, அதை எப்படிச் சரிசெய்தார் என அவரே விளக்கினார்.

"நான் இயற்கை ஆர்வலர் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன். வீட்டில் சோலார் சிஸ்டம் மூலம் மின்சாரம் தயாரிக்கிறேன். எக்கோ ஃப்ரெண்ட்லி என்பதால் 16 வருடங்களாக எலெக்ட்ரிக் பைக் பயன்படுத்தி வருகிறேன். கொல்லத்தில் முதன்முதலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியது நான்தான். இப்போது வயதாகிவிட்டதால் மழையில் நனையாமல், வெயில் படாமல் பயணம் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தேன். அதற்காக ஒருவர் மட்டும் பயணிக்கும் வகையில் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் ஆசை என் மனதில் எழுந்தது. ஆன்லைனில் தேடியபோது பிரான்ஸில் ஒரு இளைஞர் உருவாக்கிய கார் டிசைன் ஒன்றைப் பார்த்தேன். அதில் நிறைய மாற்றங்கள் செய்து இந்த கார் டிசைனை நானே உருவாக்கினேன். என் வீட்டுக்குப் பக்கத்தில் பஸ் பாடி பில்டிங் ஒர்க்‌ஷாப் இருக்கிறது. அதில் 50 ஆண்டுகளாக பாடி கட்டும் தொழில் செய்யும் ஒருவர் இருக்கிறார். இந்த டிசைனை அவரிடம் கொடுத்து, என் விருப்பத்தைக் கூறினேன். 'பாடி நான் தயாரிக்கிறேன், இன்ஜின் பகுதிகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என்றார் அவர். 2017-ல் வேலை தொடங்கி 2018-ல் பாடி வேலை முடிந்தது. ஜப்பான் ஷீட் என்ற துருப்பிடிக்காத மெட்டல் முழு பாடிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2018-ல் கார் தயாரித்து முடிக்க மூன்று லட்சம் ரூபாய் ஆனது.

ராமன்குளங்கரையில் உள்ள எனது வீட்டில் இருந்து பிஷப் ஜெறோம் நகரில் உள்ள எனது அலுவலகத்துக்குச் சென்று வர 15 கிமீ. ஆனால் ஆரம்பத்தில் 20 ஆம்பியர் ஹவர் (Ah) பேட்டரி பொருத்தியிருந்தேன். ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 கிலோ மீட்டர்தான் கிடைத்தது. பிறகு டெல்லியைச் சேர்ந்த ஒரு பேட்டரி கம்பெனியிடம் பேசினேன். அவர்கள் வண்டியின் எடை, தூரம் ஆகியவற்றைக் கணக்கிட்டு லித்தியம் ஃபெரோ பாஸ்பேட் பேட்டரி (lithium ferro phosphate battery)-ஐ பரிந்துரைத்தனர். அமெரிக்காவில் பயன்படுத்தும் லேட்டஸ்ட் டெக்னாலஜியில் தயாரானது இந்த பேட்டரி. 52 ஆம்பியர் ஹவர் பேட்டரி என்பதால், 60 கிலோமீட்டர் கிடைக்கிறது.

டாப் ஸ்பீடு 25 கீமீ; 5 ரூபாய்க்கு 65  கீமீ; "இது செம பட்ஜெட் எலெக்ட்ரிக் கார்!

ரேப்பிட் சார்ஜர் என ஒருவகை சார்ஜர் கொடுத்திருக்கிறார்கள். அதன்மூலம் சார்ஜ் செய்தால் 2 மணி நேரத்தில் ஃபுல் சார்ஜ் ஆகிவிடும். எனது எலெக்ட்ரிக் பைக் சார்ஜ் செய்யவே 8 மணி நேரம் ஆகும். ஆனால் காரில் சார்ஜ் செய்ய 2 மணிநேரம் என்பது சந்தோஷமான விஷயமாக உள்ளது. கேரளத்தில் ஒரு யூனிட் கரன்ட் 5 ரூபாய். ஒருமுறை சார்ஜ் செய்ய ஒரு யூனிட் பவர் ஆகும். 5 ரூபாயில் 60 கிமீ பயணிக்கலாம்.

காரின் பக்கவாட்டு கிளாஸ்கள் முன்பு சின்னதாக இருந்தன. அதனால் உள்பக்கம் வெளிச்சம், காற்று வரவில்லை. அதனால் பாடியைக் கட்டாக்கி பெரிய கிளாஸ் போட்டேன். முதலில் ஆக்டிவா ஸ்கூட்டரின் டயர்களை மாட்டியிருந்தேன். ரோட்டில் கிரிப் கிடைக்காததால், பஜாஜ் ஆட்டோ டயருக்கு மாறினேன்!" என்றவர் காரைச் சுற்றிக் காட்டியபடி அதன் சிறப்புகளை விவரித்தார்.

டாப் ஸ்பீடு 25 கீமீ; 5 ரூபாய்க்கு 65  கீமீ; "இது செம பட்ஜெட் எலெக்ட்ரிக் கார்!

"என் வீட்டின் பெயர் புல்கூடு. அதே பெயரை காருக்கும் வைத்திருக்கிறேன். காரின் முன்பக்கமும், பின் பக்கமும் வைப்பர் உண்டு. இண்டிகேட்டர், ஹெட்லைட் ஆகியவற்றுக்கு எல்இடி லைட் பயன்படுத்தியிருக்கிறேன். வெளிநாட்டு காரின் ஸ்டீயரிங் ஒன்றை வாங்கி, நானோ காரின் ஆப்பரேட்டர் சிஸ்டத்தை இதில் பொருத்தியிருக்கிறேன். மிகச் சிறிய ஸ்டீயரிங்கான இதை ஒரு விரலை வைத்தே ஆப்பரேட் செய்யும் அளவுக்கு எளிமையாக வடிவமைத்திருக்கிறேன். சாவியை ஆன் செய்தால் வண்டியும் ஆன் ஆகிவிடும். இதில் கியர், கிளட்ச் இல்லை. டிஜிட்டல் மீட்டரில் வண்டியின் வேகம், பேட்டரி சார்ஜ் அளவு, இண்டிகேட்டர் ஆகியவற்றைக் காட்டும். ஹேண்ட் பிரேக், ரிவர்ஸ் செல்லும் வசதி உண்டு. இணையதளத்தில் இந்த நிறத்தை எடுத்து பெயின்ட்டிங் செய்பவரிடம் கொடுத்தேன். அவர் நேரடியாக இதே கலர் கிடைக்காது எனக்கூறியதுடன், வேறு சில பெயின்ட்களை மிக்ஸ் செய்து அதே நிறத்தைக் கொண்டுவந்தார். ஆம்னி காரின் ஸ்லைடிங் கிளாஸைப் பக்கவாட்டிலும்; பாரத் பென்ஸ் காரின் டெய்ல் லேம்ப்பைப் பின்பக்கமும் பொருத்தியிருக்கிறேன். ரிவர்ஸ் சென்சார், கேமரா எல்லாமும் இருக்கிறது. பெட்ரோல் காருக்கு சுமார் 2,000 அசையும் உதிரிபாகங்கள் இருக்கும். இந்த காருக்கு மொத்தமே 18 மூவிங் பார்ட்ஸ்தான் உள்ளது.

சின்ன கார் என்பதால், ஒரு பைக்குக்குத் தேவையான இடம் இந்த காருக்கு போதும். பார்க்கிங் பிரச்னை, டிராஃபிக் நெருக்கடி இருக்காது. இந்தக் காருக்கான எரிபொருளுக்கு ஒரு மாசம் நூறு ரூபாய் மட்டுமே செலவு ஆகும்!" என்றவரிடம், ‘‘காரை ரோட்டில் ஓட்டுவதற்குப் போக்குவரத்துத் துறையிடம் எப்படி அனுமதி பெற்றீர்கள்?’’ எனக் கேட்டேன்.

டாப் ஸ்பீடு 25 கீமீ; 5 ரூபாய்க்கு 65  கீமீ; "இது செம பட்ஜெட் எலெக்ட்ரிக் கார்!

‘‘இந்தக் காரை ஓட்ட டிரைவிங் லைசென்ஸ் மட்டும் போதும். வேறு எந்த அனுமதியும் தேவை இல்லை. தயாரித்த பிறகு வீணாகி விடக்கூடாது என்பதால், வாகனச் சட்டங்களை முதலில் படித்துவிட்டுத்தான் இதைத் தயாரித்தேன். எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்கப்படுத்தும்விதமாக மத்திய அரசு ஒரு கெஸட் நோட்டிஃபிகேஷன் வெளியிட்டிருக்கிறது. எந்த எலெக்ட்ரிக் வாகனமாக இருந்தாலும், 25 கிமீ முதல் அதிகபட்சமாக 40 கிமீ வேகம் வரை செல்லும் வாகனங்களுக்கு, வாகனப் பதிவு போன்றவை வேண்டாம் என மத்திய அரசின் சி.எம்.வி.ஆர் நோட்டிஃபிகேஷன் 2005-ல் கூறியிருக்கிறார்கள். சைக்கிள் போன்று நமது பாதுகாப்பை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும். இந்த காரின் அதிகபட்ச வேகம் 25 கிமீதான். அதனால் இன்ஷூரன்ஸ்கூட வேண்டாம். ஒருவேளை யாராவது கேட்டால் காட்டலாம் என்பதற்காக சி.எம்.வி.ஆர் கெஸட் நோட்டிஃபிகேஷன் ப்ரின்ட் அவுட் எடுத்து காரில் வைத்திருக்கிறேன்!" என்றவர், 1 லட்சத்துக்குள் குறைந்த விலையில் எக்கோ ப்ரெண்ட்லியான ஒரு எலெக்ட்ரிக் காரை ரெடி செய்து கொண்டிருக்கிறாராம்.

‘‘அந்த காரின் பாதி பணி முடிந்துவிட்டது. விரைவில் காரை அறிமுகப்படுத்துவேன்" என்கிறார் நம்பிக்கையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism