கார்ஸ்
Published:Updated:

இது மஹிந்திராவின் சுட்டி யானை!

மஹிந்திரா ஜீட்டோ ப்ளஸ் CNG
பிரீமியம் ஸ்டோரி
News
மஹிந்திரா ஜீட்டோ ப்ளஸ் CNG

ஃபர்ஸ்ட் டிரைவ்: மஹிந்திரா ஜீட்டோ ப்ளஸ் CNG

இது மஹிந்திராவின் சுட்டி யானை!

மஹிந்திரா, பேசஞ்ஜர் காருக்குப் பிறகு… எல்சிவி செக்மென்ட்டில்தான் அதிக கவனம் செலுத்தும். இல்லை… பிறகு என்பதைவிட முதலில் LCV (Light Commercial Vehicle) செக்மென்ட்டுக்குத்தான் மஹிந்திரா முதலிடம் கொடுக்கும். SCV (Small Commercial Vehicles) என்றும் இதைச் சொல்லலாம். சொல்லப்போனால், இந்தச் சரக்கு வாகன செக்மென்ட்டின் டாப் லீடர்களில் டாடாவுக்கு அப்புறம் மஹிந்திராதான், டான்!

காரணம், சரக்கு வாகனம் என்றால் டீசலில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி, குறைந்த விலையில் பெட்ரோலிலும் சிவி–க்களைக் கொண்டு வந்தது மஹிந்திரா. இப்போது டிரைவர்களின் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு சிஎன்ஜி–யிலும் களம் புக ஆரம்பித்திருக்கிறது மஹிந்திரா. அப்படி ஒரு குட்டி சிஎன்ஜி ட்ரக்கை ஓட்ட வாய்ப்புக் கிடைத்தது. மஹிந்திரா ஜீட்டோ ப்ளஸ் எனும் லேட்டஸ்ட் மாடல் நம் அலுவலகத்தில் நின்றிருந்தது. சென்னை முழுக்க ஒரு குட்டி டிரைவ் அடித்தேன்.

டிசைன்

பார்க்கவே அழகாக, செல்லமாக இருந்தது ஜீட்டோ ப்ளஸ். இது ஒரு சப் காம்பேக்ட் மினி ட்ரக். 3.8 மீட்டர் நீளத்தில் காம்பேக்ட்டாக இருக்கிறது ஜீட்டோ ப்ளஸ். இது 12 இன்ச் வீல்களில் ஓடுகிறது. இதையும் குட்டியாகவே கொடுத்திருக்கிறது மஹிந்திரா. 13 இன்ச் கொடுத்திருக்கலாமோ? ஹெட்லைட்ஸ் வழக்கம்போல் ஹாலோஜன் பல்புகளில் ஒளிர்கின்றன. குட்டி ட்ரக்காக இருந்தாலும், விண்ட்ஷீல்டு பெரிதாக இருக்கிறது. ஆனால், இந்த விண்ட்ஷீல்டுக்கு சிங்கிள் வைப்பர்தான் கொடுத்திருக்கிறார்கள். டபுள் கொடுத்திருக்கலாம். மற்றபடி மஹிந்திராவின் டிரேட்மார்க் மஞ்சள் நிற பானெட் மற்றும் வழக்கமான பம்பர் டிசைன் என்று இருக்கிறது ஜீட்டோ ப்ளஸ்.

இதன் கீழே பின் பக்கம் ஸ்டெஃப்னி வீல் கொடுத்திருக்கிறார்கள். வண்டியின் கீழேதான் சிஎன்ஜிக்கான டேங்க்கும் இருந்தது. கிரவுண்ட் கிளியரன்ஸ் போதுமானதாகவே இருந்தது.

கார்கோ பெட் மற்றும் பே லோடு

பின் பக்கம் வந்தால், வண்டியின் முக்கால்வாசிப் பகுதியை அப்படியே கார்கோ பெட்டுக்காக ஒதுக்கி டிசைன் செய்திருக்கிறார்கள். இதை அளந்து பார்த்தால்.. 2,257 மிமீ இருந்தது. அதாவது, சுமார் ஏழே கால் அடி இருக்கும். இந்த கார்கோ பாக்ஸின் கதவின் உயரம் மட்டுமே 300 மிமீ இருந்தது. நல்ல கட்டுமானத்துடன் தடிமனாக இருந்தது கதவு. ஹூக் இருந்தது. ஒல்லி பார்ட்டிகள் கழட்டுவதற்குக் கஷ்டமாக இருக்கும். இந்த கார்கோ பாக்ஸ் வண்டியின் நீளத்தைவிட 5 மிமீ குறைவாக இருந்தது. அதனால், இடித்துவிடுமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை.

இது மினி ட்ரக் என்பதால், இதன் பே லோடு கொள்ளளவு சுமார் 650 கிலோ வரை க்ளெய்ம் செய்கிறது மஹிந்திரா. ஆனால், இதுபோன்ற மினி ட்ரக்குகளில் சுமார் 750 கிலோ வரை லோடு மேன்கள் லோடு அடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். சின்னச் சின்ன லாஜிஸ்டிக்ஸ்களுக்கு இது வசதியாக இருக்கும்.

இதில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தேன். இந்த இன்ஜினை கார்கோ பெட்டுக்குக் கீழே கொடுத்திருந்தார்கள். அதாவது, ரியர் இன்ஜின் செட்அப் இது. அதனாலேயே கொஞ்சம் குலுங்கியதுபோல் இருந்தது.

இது மஹிந்திராவின் சுட்டி யானை!
இது மஹிந்திராவின் சுட்டி யானை!
அனலாக் கன்சோல் ஸ்டைல்...
அனலாக் கன்சோல் ஸ்டைல்...

பெர்ஃபாமன்ஸ்

கதவைத் திறந்தால்… டிரைவர் சீட்டுக்கு அடியில் சிஎன்ஜி–க்கான ஃபில்லிங் இருந்தது. ஆனால், இதைக் கழற்றுவதற்குக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. பெட்ரோல் பங்க்குகளில் ஒவ்வொரு தடவை சிஎன்ஜி நிரப்பும்போதும், நேரம் எக்ஸ்ட்ரா ஆகலாம்.

650 கிலோ பே லோடு கொண்ட இதிலிருப்பது 625 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின். ஸ்டார்ட் செய்தால், பெரிய அதிர்வுகளுடன் கிளம்பியது ஜீட்டோ ப்ளஸ். இதன் டார்க் 44Nm. பிக் அப் நன்றாகவே இருக்கிறது. இதன் பவர் 20.1bhp. பெட்ரோல்/டீசலைவிட இது குறைவான பவர் மற்றும் டார்க் அம்சங்கள்தான். ஆனால், இது போதுமானதாகவே இருந்தது.

4 ஸ்பீடு மேனுவல் முதல் கியரில் 20 கிமீ வேகம் வரை போனேன். அற்புதமாக இருந்தது. கியர்பாக்ஸ், டேஷ்போர்டில் இல்லாமல்… கீழே இருந்தது. 20–யைத் தாண்டியவுடன்… திடீரென பவர் டெட் ஆனது போல் இருந்தது. ஆனால் 2–வது கியரைப் போட்ட அடுத்த நொடி… எகிறிக் கிளம்பியது ஜீட்டோ ப்ளஸ். பிக்அப் நன்றாகவே இருந்தது. அனலாக் மீட்டரில் டாப் ஸ்பீடு 60 கிமீ வரை காட்டியது.

சிட்டி டிராவலில், இதன் ஸ்டீயரிங் ஃபீட் பேக் சுமார் என்றுதான் சொல்ல வேண்டும். கொஞ்சம் இலகுவாக இருந்திருக்கலாம். இந்த எடை அதிகமான ஸ்டீயரிங், நெடுஞ்சாலைகளில் நன்றாக, கிச்சென இருக்கிறது. இதன் பிரேக்கிங் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், அதைவிட சுமார் என்றுதான் சொல்ல வேண்டும். நாம் இதை சில லோடு மேன்களிடம் ஓட்டிக் காண்பிக்கச் சொன்னபோது, ‘‘இது இவ்வளவு இருந்தா ஓகேதாங்க..’’ என்றும், ‘‘இவ்வளவு சுமாரா இருக்கே’’ என்றும் கலந்து கட்டிக் கருத்துச் சொன்னார்கள்.

டேஷ்போர்டில் கியர் லீவர்...
டேஷ்போர்டில் கியர் லீவர்...

சிஎன்ஜி ரேஞ்ச்… இவ்வளவு லாபம் வருதா?

இதில் பெட்ரோல்/டீசல் எதுவும் நிரப்ப முடியாது. இந்த சிஎன்ஜி டேங்க்கின் கொள்ளளவு 68 லிட்டர். அதாவது, கிலோக் கணக்கில்தான் சிஎன்ஜியைக் கணக்கிட வேண்டும் என்பதால், சுமார் 13 கிலோ வரை நிரப்பிக் கொள்ளலாம்.

இந்த ஜீட்டோ ப்ளஸ்ஸின் பெரிய ப்ளஸ் – இதன் மைலேஜ். சுமார் 35 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறது மஹிந்திரா. நாம் ஓட்டிப் பார்த்தவரை ரியல்டைமில் சுமார் 28 கிமீ தந்தாலே செம!

ஒரு கிலோ சிஎன்ஜி விலை 65 ரூபாய் என்று வைத்துக் கொண்டால்கூட எவ்வளவு சிக்கனமாகிறது என்று கணக்குப் போட்டுப் பார்த்தேன்.

இதன் ரியல் டைம் மைலேஜ் 28 என்று வைத்துக் கொண்டால்கூட, 13X65=845 ரூபாய். 65 ரூபாய்க்கு 28 கிமீ. ஒரு டேங்க் நிரப்பினால்… 845 ரூபாய் வருகிறது. 13 கிலோவுக்கு 364 கிமீ ஓடுகிறது இந்த ஜீட்டோ ப்ளஸ். 845 ரூபாய்க்கு 364 கிமீ என்பது மிகப் பெரிய லாபம்தான் லோடுமேன்களுக்கு!

ஜீட்டோ ப்ளஸ் முதல் தீர்ப்பு!

இதன் ஃபர்ஸ்ட் லுக்கில்… சட்டென இதன் விண்ட்ஷீல்டைப் பார்த்தபோது, CNG 400 என்று இருந்தது. இது ஏதோ வேரியன்ட் பெயர் என்று நினைத்தேன். ஆனால் 400 என்பது ஒரு ஃபுல் டேங்க்கின் சிஎன்ஜி ரேஞ்சைக் குறிக்கிறது. அதாவது, ஃபுல் டேங்க் சிஎன்ஜி நிரப்பினால்… 400 கிமீ வரை போகலாம் என்பது அர்த்தம். கிட்டத்தட்ட அதை நெருங்குகிறது இந்த ஜீட்டோ ப்ளஸ் சிஎன்ஜி.

இதன் சென்னை ஆன்ரோடு விலை சுமார் 5.55 லட்சம். ஐந்தரை லட்சத்துக்கு 650 கிலோ அடிக்க… ஃபுல் டேங்க்கில் 364 கிமீ பயணிக்க… சின்னச் சின்ன லோடுமேன்களுக்கு இது வரம் என்றுதான் சொல்ல வேண்டும். டாடாவுக்கு ஏஸ் ஒரு குட்டி யானை என்றால், மஹிந்திராவுக்கு இதைச் சுட்டி யானை என்றே சொல்லலாம்!

13 கிலோ வரை சிஎன்ஜி நிரப்பலாம்.
13 கிலோ வரை சிஎன்ஜி நிரப்பலாம்.