
ஃபேக்டரி விசிட்: பஜாஜ், புனே
1970-களில் வந்த பஜாஜின் Chetak ஸ்கூட்டர், இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. 2020-ல் மீண்டும் `சேட்டக்’ என்கிற பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது பஜாஜ். பஜாஜின் முன்னாள் சேர்மன் ராகுல் பஜாஜ் அவர்களின் 84-வது பிறந்த நாளன்று பஜாஜ் குழும கம்பெனியான சேட்டக் டெக்னாலஜி லிமிடட் (எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்) உற்பத்தித் தொழிற்சாலையை ஆரம்பித்து வைத்தார் ராஜீவ் பஜாஜ்.
Chetak டெக்னலாஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் பிளான்ட்டின் திறப்பு விழா Akurdi, புனேவில் நடைபெற்றது. இந்த பிளான்ட் ஒரு நாளில் 800 யூனிட்டுகளைத் தயாரிக்கும். முற்றிலும் புதியதாக உருவாக்கப்பட்ட இந்த பிளான்ட்டில் மேலும் சுமார் 750 கோடி முதலீடு செய்யவுள்ளது பஜாஜ். ஓர் ஆண்டில் சுமார் 5,00,000 ஸ்கூட்டர்களைத் தயாரிக்க இருக்கிறது பஜாஜ்.
2022-ல் மொத்த ஆட்டோமொபைல் விற்பனையில் 2% சதவிகிதம் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் விற்பனை ஆகின்றன. இது அடுத்த 5 வருடத்திற்குள் 5% ஆகவோ அல்லது 10% ஆகவோ மாறலாம் என எதிர்பார்க்கப்படுவதால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு என தனி பிளான்ட் ஒன்றை அமைத்திருக்கிறது பஜாஜ். இதில் இப்போதைக்கு 800 பேர் வேலை பார்க்கிறார்கள். மேலும் 11,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளதாம்.
ஆண்டுக்கு ஒன்று என்ற கணக்கில், அடுத்த 5 ஆண்டுகளில் புதிய எலக்ட்ரிக் மாடல் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை லாஞ்ச் செய்யும் திட்டத்தில் உள்ளது பஜாஜ். தற்போது விற்பனையில் இருக்கும் chetak ஸ்கூட்டர் இரண்டு வேரியன்ட்டில் வருகிறது. ஒன்று urban, மற்றொன்று ப்ரீமியம் மாடல். இதில் அதிகபட்சமாக 4.2kw பவர் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார், லித்தியம் ஐயன் பேட்டரி IP 67 ரேட்டிங் உடன், 3 வருடம் அல்லது 50,000 கி.மீ வாரன்டியுடன் வருகிறது. 5 மணிநேரத்தில் 100% முழு சார்ஜ் ஆகிவிடும். இது வரை 14,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியிருப்பதாகவும் மேலும் 16,000 ஸ்கூட்டர்களுக்கான புக்கிங் நிலுவையில் இருப்பதாகவும் பஜாஜ் தெரிவித்துள்ளது.
திறப்பு விழாவில் பஜாஜ் சேட்டக் தொழிற்சாலையில் தயாரான முதல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தார் ராஜீவ் பஜாஜ். வந்திருந்த அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் R&D சென்டரில் நடக்கும் அனைத்துவிதமான சோதனைகளையும் தொழில்நுட்பச் செயல்பாடுகளையும் நேரில் பார்க்கும் வாய்ப்பைக் கொடுத்திருந்தனர். எலெக்ட்ரிக் வாகனங்களின் சஸ்பென்ஷன், பாடி, பேட்டரி ஆகியவற்றின் அதிகபட்ச தாங்குதிறனைச் சோதிக்கும் முறைகளைத் தெளிவாக விளக்கினார்கள். வண்டியில் பொருத்தும் பேட்டரிகளைப் பிரத்யேக அறையில் வைத்து குளிரூட்டும் 5 டிகிரி முதல் சுட்டெரிக்கும் 50 டிகிரி வரையிலான தட்பவெப்பத்தில் வைத்து சோதனை செய்கின்றனர். இத்தகைய பல்வேறு துல்லியமான சோதனைகளுக்குப் பிறகு தான் Chetak பேட்டரிகள் தயாராகின்றன என்று பெருமையோடு கூறுகிறது பஜாஜ்.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிவது பற்றி ராஜீவ் பஜாஜிடம் கேட்ட போது அவர் கூறியது: “உலகில் இரண்டு வகை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. ஒன்று தீப் பிடித்து கொண்டது. மற்றொன்று இன்னும் தீப்பிடிக்காமல் இருப்பது. இதில் IC இன்ஜின்கள் மட்டும் விதிவிலக்கல்ல. IC இன்ஜின்கள் தீப்பிடிப்பதும் நாம் அறிந்ததே! இருப்பினும் சிறப்பான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் மூலம் இத்தகைய அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியும். அதிகளவில் R&D சோதனைகள் செய்யாமல் விற்பனைக்கு வரும் எலெக்ட்ரிக் வாகனங்களால்தான் தீப்பிடிக்கும் ஆபத்து அதிகம் ஏற்படுகிறது. அரசாங்கம் முறையான விதிமுறைகளை, அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களும் பின்பற்றுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்!” என்று கூறினார்.