ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

ஆட்டோ எக்ஸ்போ 2023 - 360 டிகிரி ரவுண்ட்-அப்! - கார்ஸ் - MARUTI SUZUKI

ஆட்டோ எக்ஸ்போ 2023
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்டோ எக்ஸ்போ 2023

கிட்டத்தட்ட 8 டிகிரிக் குளிரில்… நொய்டாவில் உள்ள எக்ஸ்போ மார்ட்டில்… ஜனவரி மாதம் செம ஹாட்டாக நடந்தது இந்த 2023 ஆட்டோ எக்ஸ்போ. இத்தனைக்கும் இந்த எக்ஸ்போவில் பல நிறுவனங்கள் கடை விரிக்கவில்லை.

இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தோம். கிட்டத்தட்ட 8 டிகிரிக் குளிரில்… நொய்டாவில் உள்ள எக்ஸ்போ மார்ட்டில்… ஜனவரி மாதம் செம ஹாட்டாக நடந்தது இந்த 2023 ஆட்டோ எக்ஸ்போ. இத்தனைக்கும் இந்த எக்ஸ்போவில் பல நிறுவனங்கள் கடை விரிக்கவில்லை. கார்களில் மஹிந்திரா, ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன், சிட்ரன், ஃபோர்ஸ், ஜீப், லேண்ட்ரோவர், ஆடி, பிஎம்டபிள்யூ, ரெனோ, நிஸான் என்று பல ஜாம்பவான்கள் இந்த எக்ஸ்போவில் மிஸ்ஸிங். பைக்குகளில் ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ், டிவிஎஸ் போன்ற நிறுவனங்களும் எஸ்கேப் ஆகிவிட்டன.

இருந்தாலும், சூடு பறக்க நடந்த ஆட்டோ எக்ஸ்போவில்… கடுங்குளிரில் 4 நாட்கள் தங்கியிருந்து, நமது மோ.வி குழு 360 டிகிரியில் கவரேஜ் செய்யத் தவறவில்லை. வாங்க எக்ஸ்போவுக்குப் போகலாம்!

MARUTI SUZUKI

எலெக்ட்ரிக்கில் அடியெடுத்து வைக்கும் மாருதி! #eVX தாருக்குப் போட்டியாய்ப் பளபளக்கும் ஜிம்னி!

நொய்டாவின் காலைப் பனியில் எக்ஸ்போ மார்ட்டில் ஜில்லென்று ஆட்டோ எக்ஸ்போவைத் துவங்கியதே மாருதிதான். மாருதியின் பெவிலியனில் 8 மணியிலிருந்தே கூட்டம் அலைமோதியது. முக்கியமாக, ஜிம்னியைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள் மக்கள். ஆனால், மாருதி முதல் நாள் அசத்தலாக வேறு ஒரு எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது. அது என்னனு பார்க்கலாம். மறுநாள்தான் ஜிம்னி, பெலினோவின் அண்ணனான ஃப்ரான்க்ஸ் என்று மாருதி சுஸூகியின் அட்டகாசம் ஆரம்பித்தது.

eVX எஸ்யூவி எலெக்ட்ரிக்

மாருதியில் இருந்து எந்த கார் வந்தாலும் கொண்டாடுகிறார்கள். அப்படி இருக்க, ‘எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் ஏன் மாருதி நுழையவில்லை’ எனும் பலரது கேள்விக்கு விடையாய் இருந்தது அந்தப் பொழுது. ஆம், விடிகாலையிலேயே தனது முதல் எலெக்ட்ரிக் காரை அன்வீலிங் செய்து பரபரப்பை ஏற்படுத்தி விட்டது மாருதி. அதன் பெயர் eVX.

eVX எஸ்யூவி எலெக்ட்ரிக்
eVX எஸ்யூவி எலெக்ட்ரிக்


இதை ஒரு மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில் பொசிஷன் செய்ய இருக்கிறது மாருதி. இதற்கென ஒரு டெடிகேட்டட் ஆன எலெக்ட்ரிக் ப்ளாட்ஃபார்மை ரெடி செய்திருக்கிறதாம் மாருதி சுஸூகி. இதற்கு உறுதுணையாக டொயோட்டாவுடன் பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது. அந்த ப்ளாட்ஃபார்மில்தான் இது தயாராக இருக்கிறது. இனிமேல் மாருதியில் இருந்து வரும் இவி–க்கள் இதில்தான் ரெடியாகும். இதை ஒரு கான்செப்ட் மாடலாகத்தான் ரிவீல் செய்தார்கள். இதன் குறியீட்டுப் பெயர் YV8. ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், இது குஜராத்தில் உள்ள தொழிற்சாலையில்தான் தயாராக இருக்கிறது. அதாவது, இன்டர்நேஷனல் மார்க்கெட்டுக்கும் இந்தத் தயாரிப்புதான் என்பது நமக்குச் சிறப்புதானே!

மாருதியின் நடப்பு ICE இன்ஜின் கார்களின் டிசைனைப்போல் அல்லாமல், முற்றிலும் புதிய டிசைன் லாங்வேஜில் ரெடியாகி இருக்கிறது eVX. தட்டையான மூக்குப் பகுதியும், சதுர வடிவில் இருக்கும் உயரமான பானெட்டும், V வடிவ ஹெட்லாம்ப்ஸும், யூனிக்கான எல்இடி டிஆர்எல்களும், பிளாங்க்டு அவுட் கிரில்லும் நிச்சயம் ஃப்யூச்சரிஸ்டிக் டிசைன்தான்.

இதன் ஓவர்ஹேங்குகள் மிகவும் சின்னதாக இருக்கின்றன. ஆனால் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம். வீல் ஆர்ச்சுகள் நல்ல பல்க்கியாக இருந்தன. கரடுமுரடான கிளாடிங்குகள் முன் பக்கம், பின் பக்கம், பக்கவாட்டுப் பக்கம் என்று ஓடுவது இந்த எஸ்யூவியைப் பல்க்கியாகக் காட்டுகிறது. பின் பக்கம் சரிந்து விழும் கூரையில் ஸ்பாய்லர் இருப்பது, இதை ஒரு கூஃபே எஸ்யூவியாகக் காட்டுகிறது. இதன் அலாய் வீல்களை உற்றுக் கவனித்தால், ஒரு விஷயம் கண்டுபிடிக்கலாம். இது டெஸ்லா மாடல் கார்களின் ஏரோ–ஸ்டைல் வீல் டிசைனைக் கொண்டிருக்கிறது. ஆனால், இவையெல்லாம் இந்த கான்செப்ட்டில் இருப்பதுபோல், புரொடக்ஷனிலும் இருந்தால் நலம்!

eVX எஸ்யூவி எலெக்ட்ரிக்
eVX எஸ்யூவி எலெக்ட்ரிக்



இதன் பவர் ட்ரெயின்களைப் பற்றிப் பார்க்கலாம். இந்த eVX–ல் 60kWh பேட்டரி பேக் பொருத்தியிருக்கிறது மாருதி. இதன் சிங்கிள் சார்ஜ் ரேஞ்ச் 650 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறார்கள். ‘ஹலோ, இதுவும் கான்செப்ட்டுக்குத்தானா; புரொடக்ஷன் மாடலில் வருமா’ என்கிற எங்கள் சந்தேகத்துக்கு அப்போதே விடை சொல்லிவிட்டது மாருதி. இது கிட்டத்தட்ட தயாரிப்பு மாடலில் வரும் என்று சொல்லியிருக்கிறார்கள். பார்க்கலாம். அதாவது, கிட்டத்தட்ட 500 கிமீ ரேஞ்ச் கிடைக்கும்படியாவது புரொடக்ஷன் மாடல் இருக்கும் என்று உறுதி செய்திருக்கிறது மாருதி.

கூடவே, விலை மலிவாளர்களுக்காகச் சின்ன பேட்டரி பேக் ஆப்ஷனுடம் வருமாம் eVX. இதில் 48kWh பேட்டரி பேக் இருக்கலாம். இதன் ரேஞ்ச் சுமார் 400 கிமீ இருக்கலாம் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது. பேட்டரி தயாரிப்புக்கு… அதாவது எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டுக்காகவே சுமார் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வோம் என்று மாருதியிடம் உறுதியளித்து இருக்கிறதாம், மாருதியின் தாய் நிறுவனமான சுஸூகி மோட்டார் கார்ப்பரேஷன்.

ஹூண்டாயில் இருந்து க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி வந்தால், இந்த eVX சரியான போட்டியாக இருக்கும். அநேகமாக 2025–ல் குளோபலாகவும், நம் இந்திய மார்க்கெட்டுக்கும் வரலாம் eVX.எலெக்ட்ரிக்கில் அடியெடுத்து வைக்கும் மாருதி! #eVX

தாருக்குப் போட்டியாய்ப் பளபளக்கும் ஜிம்னி!


அடடா! ஜிம்னியை அன்வீலிங் செய்ததும் மாருதியின் பெவிலியனில்தான் எத்தனை கொண்டாட்டம்! கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள் மக்கள். சும்மாவா பின்னே… சுமார் 3 வருஷங்களுக்கும் மேலாக, ‘இந்தா அந்தா’ என்று கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த ஜிம்னி, பளபளவெனப் பச்சைக் கலரிலும், முரட்டுத்தனமான கிரே கலரிலும் மேடையில் இருந்து வந்தபோது, கைத்தட்டல் அதிர்ந்தது.

ஜிம்னி
ஜிம்னி



ஓகே! ஜிம்னியைப் பற்றிய ஷார்ட் ரிவ்யூ பார்க்கலாம்!

ஜிம்னி இந்தியாவுக்குத்தான் புதுசு. ஆனால், குளோபலாக 3 டோர் ஜிம்னி ரொம்பப் பிரசித்தம். சக்கைப் போடு போடும் மாருதியின் ஆஃப்ரோடர்களில் ஒன்று. அதன் 5 டோர் வெர்ஷனைத்தான் மாருதி இந்தியாவுக்கு இறக்கி இருக்கிறது. இது ஒரு சப் 4 மீட்டர் எஸ்யூவியாக வந்திருக்கிறது. குளோபல் 3 டோர் ஜிம்னியின் வீல்பேஸை அதிகரித்து, டோர்களை அதிகமாக்கி, பின் பக்கம் கால்வாசி ஏரியாவை ரீ–டிசைன் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அதனால் பார்ப்பதற்கு 3 டோர் ஜிம்னி போலவேதான் இருக்கிறது இந்த நம்மூர் 5 டோர் ஜிம்னி. ஆனால் எனக்கு இதன் 5 ஸ்லாட் கொண்ட கிரில்லின் முன் பக்கத்தைப் பார்க்கும்போது, அமெரிக்க ஹம்மர் மாதிரி கும்மென்று இருந்தது. (யாருக்கெல்லாம் ஹம்மர் நினைப்பு வருதுனு சொல்லுங்க!) உருண்டை வடிவ ஹெட்லைட்களும், அதே உருண்டை வடிவ இண்டிகேட்டர்களும்… கீழே அதே உருண்டைப் பனி விளக்குகளும்… அடடே… க்ளாஸிக் ரகம்.

ஜிம்னி
ஜிம்னி



இது ஒரு ஆஃப்ரோடர் என்பதால், பெவிலியனிலேயே ஆஃப்ரோடு அட்டகாசம் செய்திருந்தது மாருதி. சில கூழாங்கற்களை, குட்டிக் குட்டிப் பாறைகளைப் போட்டு அதன் மீது ஜிம்னியைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். வீல்களைச் சுற்றி பிளாஸ்டிக் ஆர்ச்சுகள் ஓகே! காரின் முன் பக்கத்திலும் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் கொடுத்திருந்தார்கள். ஆனால், இதன் 15 வீல்கள் இந்தக் காருக்குச் சிறுசுபோல் தெரிகிறது. இதன் செக்ஷன் 195/80 இருந்தது.



சப் 4 மீட்டர் எஸ்யூவி என்பதால் இதன் நீளம் 3,985 மிமீ; அகலம் 1,645 மிமீ; உயரம் அதிகம்தான் – 1,720 மிமீ. ஆனால் பக்கத்தில் நின்றால் எனக்கு இதன் கம்பீரம் இன்னும் கொஞ்சம் வேண்டுமோ என்று தோன்றியது. இதன் வீல்பேஸை குளோபல் 3 டோர் வெர்ஷனில் இருந்து 340 மிமீ அதிகரித்திருக்கிறார்கள், நம் ஊர் 5 டோரில். இதன் பாக்ஸியான ஸ்டைலுக்குப் பின் பக்கக் கதவு நன்கு பொருந்திப் போகிறது. அதாவது, வெளியே டிக்கிபோல் மேலே போகாது கதவு; Side Opening Door… பின்னால் இழுக்க வேண்டும். ஸ்பேர் வீல் கதவிலேயே மவுன்டட் செய்யப்பட்டிருந்தது. கதவுகளுக்கு புல் டைப் ஹேண்டில் பார் இல்லை. பழைய ஸ்டைலில் இருந்தது. இதில் சன்ரூஃப் இல்லை. காரின் ரூஃப் கான்ட்ராஸ்டாக கறுப்பு ஷேடில் ஸ்போர்ட்டியாக இருந்தது.

ஜிம்னி
ஜிம்னி



இதில் அந்த கிளாஸ் ஏரியா வேடிக்கைப் பார்ட்டிகளுக்குப் பிடிக்கலாம்; சில அட்வென்ச்சர் பார்ட்டிகளுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், நல்ல தடிமனான பில்லர்கள் இதைத் தாங்கியிருக்கின்றன. பின் பக்கம் பம்ப்பரிலேயே டெயில் லாம்ப்களை மவுன்ட் செய்திருக்கிறார்கள்.

இன்டீரியரைப் பொருத்தவரை – வெளிநாடுகளில் விற்கப்படும் மாடலின் டிசைன்தான் பெரிதாக வியாபித்திருக்கிறது. மினிமலிஸ்ட்டிக் டிசைன் என்று சொல்ல முடியாது; அவுட்டேடட் என்றும் சொல்ல முடியாது. டேஷ்போர்டு நல்ல எர்கானமிக் லெவலில் எந்தக் குறையும் வைக்காமல், ஆல் பிளாக் தீமில் நிறத்தில் கொஞ்சம் ரக்கட் ஆகவும் க்ளாஸிக் ஆகவும் இருந்தது. இதில் உயர்த்தி வைக்கப்பட்ட 9 இன்ச் டச் ஸ்க்ரீன் சென்டர் கன்சோலில் இருந்தது.

ஸ்டீயரிங் வீல், உருண்டை வடிவ டயல்கள், HVAC கன்ட்ரோல்கள் போன்றவை அப்படியே ஸ்விஃப்ட்டில் இருந்து எடுத்திருப்பார்கள்போல! முன் பக்கம் கோ டிரைவருக்கு டேஷ்போர்டில், ஒரு கைப்பிடி கொடுத்திருந்தார்கள். ஆஃப்ரோடர் ஆச்சே!

ஆட்டோ எக்ஸ்போவில் ஜிம்னி
ஆட்டோ எக்ஸ்போவில் ஜிம்னி
படம்: கே.ராஜசேகரன்


இதன் சதுர வடிவ அனலாக் கன்சோல் ஒரு மாதிரி வித்தியாசமாகவே இருந்தது. இதற்குள்ளே உருண்டை வடிவத்தில் அனலாக்கில் ஸ்பீடோ, டேக்கோ மீட்டர்கள் நிஜமாகவே பிடித்திருந்தது. நடுவே MID ஸ்க்ரீன். ஆஃப்ரோடர் கார் என்பதால், ஸ்டோரேஜுக்கு அதிக இடவசதி கொடுத்திருந்தார்கள். பவர் விண்டோ பட்டன்கள் சென்டர் கன்சோலில் மவுன்ட் செய்யப்பட்டிருந்தன. கூடவே டாகில் ஸ்விட்ச்கள், 4 வீல் கியர் லீவரும் இருந்தன. இது ஒரு 4 மீட்டர் மாடல். நடுவே இரண்டாவது வரிசைக்கு பென்ச் சீட் இருந்தது.

ஜிம்னி
ஜிம்னி



இதில் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருந்தது. மேலும் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆர்க்கமிஸ் சரவுண்ட் சிஸ்டம் போன்றவை உண்டு. 6 காற்றுப்பைகள், ESP உடன் ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ரியர்வியூ கேமரா மற்றும் ஏபிஎஸ் உடன் இபிடி போன்ற பாதுகாப்பு வசதிகள் ஜிம்னியில் உண்டு.

சுஸூகி ஜிம்னி
சுஸூகி ஜிம்னி



மஹிந்திரா தார், ஃபோர்ஸ் கூர்க்கா போன்றவர்களுக்குப் போட்டியாகக் கொண்டு வருவதால், இதை ஒரு முழுமையான ஆஃப்ரோடராகக் களமிறக்குகிறது இந்த மாருதி. கிராண்ட் விட்டாராவில் இருக்கும் 4வீல் டிரைவ் ஆல்வீல் கிரிப் தொழில்நுட்பத்தை இதில் புகுத்தியிருக்கிறது மாருதி. அட கூடவே லோ ரேஞ்ச் கியர்பாக்ஸான 2WD-High, 4WD-High, 4WD-Low ஆப்ஷன்களும் உண்டு. கரடுமுரடான லேடர் ஃப்ரேம் சேஸியில், 3 லிங்க் Rigid ஆக்ஸில் சஸ்பென்ஷன் செட்அப்புடன், எலெக்ட்ரானிக் ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டத்துடன் வருகிறது ஜிம்னி. ஆஃப்ரோடின் போது ஸ்லிப் ஆகும் வீல்களுக்கு பிரேக்கிங் அப்ளை செய்து, மற்ற வீல்களுக்கு டார்க்கைப் பகிர்ந்தளிக்கும் அம்சம் இது. இதன் அப்ரோச் – பிரேக்ஓவர் – டிப்பார்ச்சர் ஆங்கிள்கள் முறையே – 36 – 24 – 50 டிகிரியில் ஜிம்னி கலக்குகிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 210 மிமீ.

வெளிச்சாலை நல்ல விசிபிலிட்டி
வெளிச்சாலை நல்ல விசிபிலிட்டி



இன்ஜினைப் பொருத்தவரை – மற்ற மாருதி கார்கள் K15C சீரிஸ் இன்ஜின்களுக்கு மாறிக் கொண்டிருக்க, இந்த ஜிம்னி K15B சீரிஸ் பழைய இன்ஜினிலேயே வந்திருக்கிறது. இதில் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் இருக்கிறது இந்த இன்ஜின். இந்த பெட்ரோல் இன்ஜினின் பவர் 105bhp மற்றும் 134Nm டார்க் அளிக்கிறது. சின்ன கார், 1.5 லிட்டருக்குள் என்பதால் – சின்ன கார் வரிவிலக்கில் வருகிறது இந்த ஜிம்னி.

ஜிம்னி
ஜிம்னி



அதனாலேயே இதன் விலையை சுமார் 12 லட்சம் எக்ஸ் ஷோரூமில் பொசிஷன் செய்ய முடிந்திருக்கிறது மாருதியால். இப்போதைக்கு குறைந்த விலையில் ஒரு ஆஃப்ரோடர் வாங்க வேண்டுமென்றால், மாருதி ஷோரூமுக்கும் போகலாம்.


ஃப்ரான்க்ஸ் (Fronx)

ஃப்ரான்க்ஸ் (Fronx)
ஃப்ரான்க்ஸ் (Fronx)


மாருதியின் பெவிலியனில் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. ஃப்ரான்க்ஸ் (Fronx)ஃப்ரான்க்ஸ் என்றொரு எஸ்யூவியைத் தடாலடியாக இறக்கியது மாருதி. பார்ப்பதற்கு கூபே எஸ்யூவி டிசைனில் கலக்கியது ஃப்ரான்க்ஸ். ஆம், பெலினோவை அப்படியே பிடித்துச் செதுக்கி, ஒரு எஸ்யூவியாக்கினால் எப்படி இருக்கும்… அதேதான் ஃப்ரான்க்ஸ்.

நெக்ஸாவில் முதன் முறையாக ஒரு எஸ்யூவி கூபே கார் வரப் போகிறது. இது பெலினோவை அடிப்படையாகக் கொண்டுதான், அதே Heartect Monocoque ப்ளாட்ஃபார்மில்தான் ரெடியாகி இருக்கிறது. சில பாடி பேனல்கள், இதன் இடுப்பு வரி (Waist Line) இவற்றைத் தாண்டி, ஹெட்லைட் – உயர்த்தி வைக்கப்பட்ட பானெட் போன்றவை அப்படியே கிராண்ட் விட்டாராவைப் போல் இருக்கிறது. இதில் 17 இன்ச் அலாய் வீல்கள் கொடுத்திருந்தார்கள். எஸ்யூவி என்பதால், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகள் முன்/பின் பம்பர்களை ஆக்கிரமித்திருந்தன. க்ரோம் வேலைப்பாடுகளும்தான்! இதன் நீள/அகல/உயர அளவுகள் – 3,995 / 1,756 / 1,550 மிமீ.

ஃப்ரான்க்ஸ் (Fronx)
ஃப்ரான்க்ஸ் (Fronx)



டைமென்ஷன்கள் போலவே உள்பக்கமும் - டேஷ்போர்டு, சீட்டிங், எக்யூப்மென்ட் லிஸ்ட் எல்லாமே அப்படியே பெலினோதான். பெயின்ட்டிங் மற்றும் ஷேடுகள்தான் வித்தியாசம்.

அட, மாருதியின் முதல் கூபே எஸ்யூவி மட்டுமில்லை; முதல் பூஸ்டர் ஜெட் டர்போ இன்ஜின் கொண்ட எஸ்யூவியும் இந்த ஃப்ரான்க்ஸ்தான். இந்த 1.0லிட்டர் பூஸ்டர் ஜெட் இன்ஜின், 100bhp பவர் மற்றும் 147.6Nm டார்க் கொடுக்கிறது. இந்த இன்ஜின் பழைய பெலினோவில் RS என்றொரு வேரியன்ட்டில் இருந்ததே நினைவிருக்கிறதா… அதுதான் கம்பேக் கொடுத்திருக்கிறது ஃப்ரான்க்ஸ் மூலம். இதில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் உண்டு. ஜிம்னி, கிராண்ட் விட்டாரா போல இதில் ஆல்வீல் கிரிப் தொழில்நுட்பம் கொண்ட 4வீல் டிரைவ் மாடல் இல்லை.

ஃப்ரான்க்ஸ் (Fronx)
ஃப்ரான்க்ஸ் (Fronx)
ஃப்ரான்க்ஸ் (Fronx)
ஃப்ரான்க்ஸ் (Fronx)



இதை ஒரு ப்ரீமியம் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் மாருதி பொசிஷன் செய்திருப்பதால், நெக்ஸாவில் இது கிடைக்கும்.