ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

எர்டிகாவில் 73 ரூபாய்க்கு 22 கிமீ போலாமா?

எர்டிகா
பிரீமியம் ஸ்டோரி
News
எர்டிகா

டாகிள் ஸ்விட்ச்சைத் தட்டி பெட்ரோலுக்கு மாற்றிக் கொண்டு காரை ஓட்ட வேண்டியதுதான். இந்த எர்டிகா CNGயிலும் ஓடும். பெட்ரோலிலும் ஓடும்!

`பெட்ரோல், டீசல் விற்கும் விலைக்கு, இதற்கு மாற்றாக வேறு எரிபொருள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அந்த எரிபொருள் பெட்ரோல் டீசலை விட குறைவான விலையிலும் கிடைத்தால்...? அது பெட்ரோல் டீசலைவிட குறைவான புகையை வெளிப் படுத்தும் தன்மை கொண்டதாகவும் இருந்தால்....?’

இப்படி நீட்டி முழுக்கவெல்லாம் தேவையே இல்லை. CNG என்கிற Compressed Natural Gas நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. டெல்லி,குஜராத், மராட்டியம் போன்ற மாநிலங்களில் எல்லாம் மக்கள் அதை வெகுவாகப் பயன்படுத்த ஆரம்பித்து பல வருடங்கள் ஆகின்றன. பசுமை ஆர்வலர்கள் மட்டுமல்ல, `காற்று மாசுப்பாட்டை மட்டுப்படுத்த, CNGயால் இயங்கும் பஸ், ஆட்டோக்களைத்தான் டெல்லியில் பயன்படுத்த வேண்டும்’ என்று உச்சநீதிமன்றமே CNGக்கு வாதாடி உத்தரவும் போட்டது. பசுமை ஆர்வலர்களும் CNG - க்குத்தான் அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம்வரை குரல் கொடுக்கிறார்கள்.

இந்த CNG வெகு சமீபத்தில்தான் தமிழ்நாட்டில் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. இது தமிழகத்தில் விற்பனைக்கு வந்த அதே வேகத்தில் கார் உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் மாருதி சுஸூகி எர்டிகா, வேகன் ஆர், செலெரியோ என்று பல மாடல்களிலும் CNG வேரியன்ட்டை விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டது. இந்த நிலையில்தான் கலகலப்பான சின்னத்திரைக் கலைஞரும், திரைப்பட நடிகருமான ரியோ எதார்த்தமாக CNG வாகனங்கள் குறித்து அவருக்கு இருக்கும் சந்தேகங்களைக் கேள்விகளாக எழுப்பினார்.

அந்தக் கேள்விகளுக்கு விடை காண, ரியோவோடு சேர்ந்து மாருதி சூஸூகி எர்டிகாவின் CNG வேரியன்ட்டில் சென்னை யின் பரப்பரப்பான சாலைகள் துவங்கி, நெடுஞ்சாலைகள் வரை அனைத்து வகையான சாலைகளிலும் சுமார் 8 மணி நேரம் திகட்டத் திகட்டப் பயணம் மேற்கொண்டோம்.

ஈவேரா பெரியார் சாலையில் இருக்கும் சாய்பாலாஜி ஏஜென்ஸியில் CNG நிரப்பியதில் துவங்கி, ஹைவேஸில் எர்டிகாவைப் பறக்க விட்டுப் பார்த்ததுவரை அந்த டிரைவ் முழுவதுமே ரியோவுக்கு அனுபவ ஊற்றாகவே இருந்தது.

நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் பெட்ரோல் காரில் 15 அல்லது 16 கிமீ போக முடியும். அதுவே 73 ரூபாய்க்கு CNG போட்டா 20, 22 கிமீ போகலாம். விலையும் குறைவு, மைலேஜும் அதிகம். கூடுதல் நன்மை என்னவென்றால் இது சுற்றுச்சூழலுக்கும் சினேகிதமானது. அது மட்டுமில்லை. ``CNG கார்கள் புகையைக் குறைவாக வெளிப்படுத்துவதால் காரில் இருக்கும் லூப்ரிகேஷன் ஆயில் சீக்கிரமாக அசுத்தமடைவதில்லை. வாகனமும் பெட்ரோல் டீசல் வாகனங்களைப்போலவே நீடித்து உழைக்கும்!’’ என்று பெட்ரோல் நிலையத்தில் ரியோ சந்தித்த வேற்று மாநில CNG கார் உரிமையாளர்கள் தங்கள் அனுபவங்களைச் சொல்ல ரியோ, அதை ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டார்.

`அது சரி பாஸு, CNG-ன்னா வேகம் போகாதுன்னு சொல்றங்களே?’ என்று அவர் எழுப்பிய அடுத்த சந்தேகம் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடியிருந்த நெடுஞ்சாலையில் எர்டிகாவின் ஸ்பீடோ மீட்டர் முள் 120, 130, 140 என்று எகிறியபோது தீர்ந்து போனது. `அதெல்லாம் சரி, CNG எல்லா பெட்ரோல் நிலையங்களிலும் கிடைக்குமா?’ என்று ரியோ கேட்க, `சென்னை மற்றும் திருவள்ளூரில் மட்டும் 40 பெட்ரோல் நிலையங்களில் CNG கிடைக்கிறது. தமிழ்நாடு என்று எடுத்துக் கொண்டால் நூற்றுக்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் CNG கிடைக்கிறது. இதே வேகத்தில் போனால் CNG கிடைக்கக்கூடிய பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும்.’’ என்று கூறினோம்.

``எல்லாம் சரி. ஹைவேஸில் போகும்போது CNG தீர்ந்துபோய்விட்டால் என்ன செய்வது?’’ என்று ரியோ ஹைவேஸில் கேட்க, `இதோ இந்த டாகிள் ஸ்விட்ச்சைத் தட்டி பெட்ரோலுக்கு மாற்றிக் கொண்டு காரை ஓட்ட வேண்டியதுதான். இந்த எர்டிகா CNGயிலும் ஓடும். பெட்ரோலிலும் ஓடுமே!” என்று நாம் சொல்ல, டாகிள் ஸ்விட்ச்சைத் தட்டி ரியோ பெட்ரோலுக்கு மாறி எர்டிகாவை ஓட்டினார்.

காலையில் துவங்கி இந்தப் பயணம் மாலை வரை நீண்டு கொண்டே போனது. மாருதி சுஸூகி எர்டிகா CNG குறித்து ரியோவிடமிருந்த கேள்விகள் எல்லாம் தீர்ந்து போயின. ஆனால் எர்டிகாவில் CNG தீரவில்லை.