
நம்ம ஊரு மெக்கானிக்: திருவண்ணாமலை
- சாயி பிரியதர்ஷினி
பக்தர்கள் இடையே திருவண்ணாமலை ஜோதி பிரபலம். புல்லட் ஆர்வலர்கள் இடையே ஜோதி ராமலிங்கம் பிரபலம். திருவண்ணாமலையில் கடந்த 25 ஆண்டுகளாக மெக்கானிக் தொழில் செய்துவருகிறார் ஜோதி.
பைக் மெக்கானிக்கான தன் தந்தை இறந்த பிறகு அவர் வெற்றிடத்தைப் பிடிக்க ஸ்பானர் பிடித்தவருக்கு, 25 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பறிவும் இல்லை; பைக்குகளைப் பற்றிப் பெரிய பரிச்சயமும் இல்லை. ஆனால் இப்போது ஜோதியின் லெவலே வேற!
``ரியர் டிஸ்க், ஹைட்ராலிக் கிளட்ச் போன்றவை சமீபகால வரவுகள். ஆனால், இந்தத் தொழில்நுட்பங்களை எல்லாம் நான் என்னைக்கோ என் கஸ்டமர்களுக்கு புல்லட்டில் கஸ்டமைஸ் செய்து கொடுத்திருக்கேன். BS-4 புல்லட்டாக இருந்தாலும் சரி; BS-6 ஆக இருந்தாலும் சரி.. எல்லாமே எனக்கு அத்துப்படி!’’ என்று நம்பிக்கை தெறிக்கப் பேசுகிறார் ஜோதி ராமலிங்கம்.
ஜோதியிடம் பேசினால் நாமே ஒரு குட்டி பைக் மெக்கானிக் ஆகி விடுவோம்போல. அந்தளவு பராமரிப்பு விஷயங்களை, ரைடிங் டிப்ஸ்களை அள்ளித் தெளிக்கிறார்.
“நிறைய பேர் பைக்கோட டயர் ப்ரஷர் அதிகமாக வைக்கறாங்க. இது ரொம்பத் தப்பு.. பரிந்துரைக்கப்பட்ட பிரஷர் வைத்தால்தான், ரோடு கிரிப் நல்லா கிடைக்கும். இரண்டுமே பைக் ஸ்கிட் ஆகறதுக்குத்தான் ரொம்ப ஹெல்ப் பண்ணும்!” என்றார்.
அதேபோல், மலைப் பிரதேசங்களில் பைக் ஓட்டுபவர்களுக்கும் நல்ல டிப்ஸ் தருகிறார்.
``நீங்க பைக் வாங்கும்போது இத்தனை ஆயிரம் கிமீ (உதாரணம் 10,000 கிமீ) ஓட்டின பிறகு ஏர் ஃபில்டர் மாத்தணும்னு பரிந்துரை இருக்கும். ஆனால், சில இடங்களில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே மாற்ற வேண்டி வரலாம். முதலில், மாசு அதிகமா இருக்கும் இடங்களில் இதை அதிகமா கவனிக்கணும். அதேமாதிரி ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகள்ல காற்றில் எந்நேரமும் ஈரப்பதம் அதிகமா இருக்கும். அதனால, சீக்கிரமாகவே ஏர் ஃபில்டர் பிளாக் ஆகிடும். இந்த மாதிரியான இடங்களில் 7 அல்லது 8 ஆயிரம் கிலோமீட்டர் வரும்போதே, ஏர் ஃபில்டர் கண்டிப்பா மாத்திடுங்க. அதேபோல், மலைப் பகுதிகளில் அதிகமா ரைடு போறவங்களுக்குத் தேய்மானம் நிச்சயமா அதிகமா இருக்கும். சிலர் மலை இறக்கங்களில் இறங்கும்போது, பிரேக்கில் கால் வெச்சுக்கிட்டே இறங்குவாங்க. இது ரொம்பத் தப்பு. இதனால் பிரேக் பெட்டல்/டிரம் சூடாகி, பிரேக் பிடிக்காத சூழலும் வரும். எனவே, ரிலாக்ஸ்டா பைக் ஓட்டுங்க!’’ என்கிறார் ஜோதி.
வேறு வழியில்லாமல் ஸ்பானர் பிடித்த ஜோதி, இப்போது புல்லட்டுகளுடன்தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். ``கட்டாயத்தின் பேரில்தான் ஸ்பானர் பிடிச்சேன். இப்போ புல்லட் சத்தம் கேக்கலைன்னா தூக்கம் வரமாட்டேங்குது!’’ என்று உருக்கமாகப் பேசுகிறார்.

பைக்கில் இதெல்லாம் கவனிங்க!
பைக் சைலன்ஸரில் வெள்ளைப் புகை வந்தால், பைக் அதிகமாக ஆயில் குடிக்கிறது என்று அர்த்தம். சர்வீஸ் அவசியம்.
இதுவே கறுப்புப் புகை வந்தால், மைலேஜ் குறையும். ஏர் ஃபில்டர் நிச்சயம் மாற்ற வேண்டும்.
பைக்குகளின் டயரில் ஏர் ப்ரஷர் அதிகம் இருந்தாலும் ஸ்கிட் ஆகும். குறைவாக இருந்தால் டயர் தேயும். மைலேஜ் அடி வாங்கும். எனவே ஏர் ப்ரஷர் சரியாக இருக்க வேண்டியது முக்கியம்.
நிறைய பேர், முதலுதவி கிட்டை (First Aid Kit) மாற்றவே மாட்டார்கள். இன்ஜின் ஆயில் மாற்றுவதுபோல, சரியான நேரத்தில் முதலுதவி கிட்டையும் மாற்ற வேண்டும்.
மழைக் காலங்களில் மட்டும் பிரீமியம் பெட்ரோல் பயன்படுத்தலாம். சாதாரண பெட்ரோல்விட இதில் ஆக்டேன் அளவு அதிகமா இருப்பதால், ஏர் - ஃப்யூல் மிக்சர் சரியா இருக்கும். ஸ்டார்ட் செய்து `டர்ர்புர்ர்’ என முறுக்கத் தேவையில்லை.
பிரேக் லீவரை இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை மாற்றவேண்டும். `பிரேக்கில் பிரச்சனை வந்தபின் பார்த்துக்கலாம்’ என்று நினைப்பது தவறு
ஸ்கூட்டர் வாங்கும்போது, உயரமாக இருப்பவர்கள், கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் சீட் உயரம் அதிகம் இருக்கும் ஸ்கூட்டர்களைத் தேர்வு செய்தால், ஓட்டுதல் எளிமையாக இருக்கும்.